Chapter 09
விவேகானந்தனுடன் சத்தியசீலன் வீட்டுக்குள் நுழைந்த போது மீனாட்சி அழுத கண்ணும், சிந்திய மூக்குமாக உட்கார்ந்திருந்தாள்.. சத்தியசீலனைக் கண்டதும் நின்றிருந்த கண்ணீர் பெருக்கெடுக்க..
“சத்யா..” என்று பிலாக்கணம் வைத்தாள்..
விவேகானந்தன் அவனுக்கும் மீனாட்சியின் கண்ணீருக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதைப்போல ஒட்டாமல் பார்த்தபடி ஓரம்கட்டி சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான்..
“பார்த்தியா சத்யா.. அங்கே பொண்ணு வீட்டில நம்மளக் காணோம்ன்னு தவியாய் தவிச்சுக்கிட்டு உட்கார்ந்திருப்பாங்க.. இம்புட்டு நேரம் கழிச்சு வர்றவன் சோபாவில சாயறானே.. இதக் கேட்பாரில்லையா..?” மீனாட்சி புலம்பினாள்..
“ஏன் இல்லை..? நானிருக்கேன்ம்மா.. இவனை என்னடான்னு கேட்கிறேன்…” உத்திரவாதம் கொடுத்த சத்திசீலன் விவேகானந்தனிடம்..
“என்ன்ன்ன.. டா..” என்று கேட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றினான்..
“முடியலை..” தலையில் அடித்துக் கொண்ட விவேகானந்தன்.
“போடா டேய்..” என்று நண்பனின் கேள்வியைப் புறம் தள்ளிவிட்டு மீனாட்சியின் பக்கமாகத் திரும்பி அமர்ந்து..
“இம்புட்டு நேரம் கழிச்சு வர்றவன் என்ன ஊஞ்சலா ஆடிட்டு வர்றேன்..? முதுகொடிய வேலை பார்த்துட்டு வர்றேன்ம்மா.. அதை மனசில வைச்சு காபி, டிபனைக் கண்ணில காட்டுவீங்களா.. அதை விட்டுட்டு புலம்பிக்கிட்டு இருக்கிறிங்க..” என்று சலித்துக் கொண்டான்..
“அதெல்லாம் ஒன்னும் கிடையாது.. எல்லாம் பொண்ணு வீட்டில பஜ்ஜியும் சொஜ்ஜியும் செஞ்சு வைச்சுக்கிட்டு காத்துக்கிட்டு இருக்காங்க.. அங்க மொக்கிக்கலாம்.. நீ முகத்தைக் கழுவறதா இருந்து கழுவிக்கிட்டு டிரஸ்ஸை மாத்தறதா இருந்தா மாத்திக்கிட்டு வா..” மீனாட்சி விரட்டினாள்..
“பஜ்ஜியா..?” சத்தியசீலனைப் பார்த்த விவேகானந்தன்..
“அதுக்கு எதுக்குடா அங்க போகனும்.. ஆல்ரெடி பேங்கிலயே மொக்கிட்டு வந்துட்டமே..” என்று கேட்டான்..
“சொஜ்ஜிய மொக்கலயில்ல..?” பதிலுக்கு கேட்டான் சத்தியசீலன்..
“எனக்கு சொஜ்ஜி பிடிக்காதுடா..” விவேகானந்தன் அறிவித்தான்..
“அதுக்கு..?”
“அதுக்காக மெனக்கெட்டு பெண் பார்க்கப் போகனுமா..?”
“இப்படியொரு கேள்வியை இப்பத்தாண்டா கேட்கிறேன்.. இவனை என்ன நேரத்திலம்மா பெத்தீங்க..?”
சத்தியசீலன் விவேகானந்தனிடம் ஆரம்பித்து மீனாட்சியிடம் கேள்வியை முடிக்க.. அவள்..
“தெரியலையே.. இந்தப் பாடு படுத்தறானே..” என்று அழுக ஆரம்பித்தாள்..
சத்தியசீலனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. விசுவநாதனைப் பார்த்தான்.. அவர் மனைவியின் கண்ணீரையும் புலம்பலையும் மகா திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது..
‘மதுரை ராணி மங்கம்மாவை மகன் உண்டு, இல்லைன்னு ஆக்கி மண்ணைக் கவ்வ வைக்கிறதில இவருக்கு இவ்வளவு சந்தோசமா..?’
விவேகானந்தன் அசையாமல் சிலை போல உட்கார்ந்திருந்தான்.. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள்.. இவன் அசைய மாட்டேங்கிறானே..
தாள முடியாமல் சத்தியசீலன் விவேகானந்தனின் முதுகில் ஒரு மொத்து வைத்து எழுப்பினான்..
“போடா..”
“எங்கேடா..?”
“அம்மா சொன்னாங்களே.. அதை செய்துட்டு வா.”
“என்னத்தைச் சொன்னாங்க..? முகம் கழுவறதா இருந்தா கழுவு.. டிரஸ் மாத்தறதா இருந்தா மாத்து.. இதத்தான சொன்னாங்க.. எனக்கு எதுவும் தோணலை.. வா.. இப்படியே போகலாம்..”
“இப்படியொரு அத்தச் சோம்பேறியாடா நீ..? இப்படி வியர்வை வழிந்த முகமும், கசங்கின சட்டையுமா பொண்ணு பார்க்கப் போனா அந்தப் பொண்ணு மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு ஓடிரும்ன்னுதான பிளான் பண்ணியிருக்க..?”
“அடடே.. சரியாக் கண்டு பிடிச்சுட்டியே.. யாரு நீ..”
“உன் நண்பேன்டா.. அதனாலதான் இந்தப் பாடு..”
“இந்தாப் பாரு.. எவளோ ஒருத்திக்காக சோப்புப் போட்டு முகத்தை பளிச்சுன்னு ஆக்கி.. பவுடர், கிரிம் போட்டு.. அயர்ன் பண்ணின பேண்ட் சர்ட்டை மாட்டி மினுக்கிக்கிட்டு வர என்னால் முடியாது.. நான் இப்படியேதான் வருவேன்.. இஷ்டம்ன்னா பொண்ணு பார்க்கப் போகலாம்..”
“இல்லேன்னா..?”
“தலப்பாக்கட்டு பிரியாணி வெட்டப் போகலாம்.. வீட்டில ஒன்னும் கிடைக்காது போல இருக்கு..”
சத்தியசீலனுக்கு இரண்டாவது வழியை மிகவும் பிடித்திருந்தது.. அந்த வாரம் ஏதோ விரதம் என்று வீட்டில் அசைவத்தை தள்ளி வைத்திருந்தார்கள்.. ஹோட்டலுக்கப் போக அவனுக்கு தோதில்லாமல் இருந்தது.. விவேகானந்தன் தலப்பாக்கட்டு பிரியாணியை நினைவு படுத்தியதும்.. ‘ஆஹா.. வாடா போகலாம்..’ என்று கிளம்பிவிட நாவு துடித்தது.. மீனாட்சியின் அழுத முகம் அந்த ஆசையைத் தடுத்தது.. சத்தியசீலன் நாவைக் கட்டுப்படுத்திக்கொண்டான்..
“அடிச்சேன்னா பாரு.. எந்த மாதரி நேரத்தில எதைப் பத்திப் பேசற..? தலப்பாக்கட்டு பிரியாணியைப் பத்திப் பேசற நேரமாடா இது..?”
“ஏண்டா.. நாக்கில எச்சில் ஊறுதா..?”
இல்லையென்று எப்படிச் சொல்வான்..? அவனே சத்தியசீலன்.. பொய்யுரைப்பதா..? அன்பைக்கட்டி, ஆசை காட்டி, அழைத்தது அவனைத் திண்டுக்கல் தலப்பாகட்டி.. அதை எடுத்துரைக்க முடியாமல்..
“இந்த முகரையை ஒன்னும் கழுவ வேண்டாம்.. இப்படியே வந்து தொலை..” என்று நண்பனை இழுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தான்..
“என்னப்பா சத்யா..” மீனாட்சி முறையிட்டாள்..
“அம்மா.. இவனை இப்படியே இழுத்துக்கிட்டுப் போனாத் தப்பிச்சோம்.. இல்லைன்னா முகம் கழுவ மூணு மணிநேரம்.. டிரஸ் மாத்த ஆறுமணி நேரம்ன்னு விடிய வைச்சிருவான்.. நாம பொண்ணு பாக்கப் போகனுமா.. வேண்டாமா..?”
“போகனும்.. போகனும்..”
“அப்ப.. அப்பாவை இழுத்துக்கிட்டு ஓடி வந்து காரில ஏறுங்க.. இல்லேன்னா இவன் பிய்ச்சுக்கிட்டு ஓடிப் போயிருவான்..”
“இந்தா.. ஒரே நிமிசத்தில காருக்குள்ள இருப்போம் பாரு..”
மீனாட்சி விசுவநாதனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடிய வேகத்தைப் பார்த்த விவேகானந்தன்..
“அரேன்ஜீடு மேரேஜ் பண்ணிக்கிட்ட என் அப்பாவையும் அம்மாவையும் இழுத்துக்கிட்டு ஓட வைச்சிட்டியேடா சத்யா..” என்றான்..
“உன்னைப் பிள்ளையாப் பெத்திருக்காங்கள்ல.. அவங்க இதையும் செய்யனும்.. இதுக்கு மேலேயும் செய்தாகனும்.. அத்தனை புண்ணியமும் உனக்குத்தான்…” சத்தியசீலன் இடித்துரைத்தான்..
விவேகானந்தன் எதுவும் எனக்கு உறைக்கவில்லை என்பதைப் போல முகத்தை வைத்துக் கொண்டு காரில் ஏறி டிரைவிங் சீட்டில் உட்கார்ந்தான்.. பக்கத்தில் சத்தியசீலன் உட்கார.. பின் சீட்டில் மீனாட்சியும் விசுவநாதனும் உட்கார்ந்தார்கள்..
“உன் டூவீலர் இங்கேயிருக்கேடா சத்யா..”
“உன்னை வீட்டில கொண்டு வந்து சேர்த்த பின்னாலே அதைக் கைப்பற்றிக்கிட்டு என் வீட்டைப் பார்த்துப் போய்க்கிறேன்..”
“உன் டூட்டி ஓவர் டூட்டியாத்தான் இருக்கு..”
“உனக்குப் பிரண்டாகித் தொலைச்சிட்டேனில்ல.. ஆர்.டி.ஓ டூட்டியை விட உன்கூட மல்லுக்கட்டற டூட்டிதான் மண்டையிடியா இருக்கு..”
“அப்படிங்கற..?”
“ஆமாங்கறேன்.. நீ ரோட்டைப் பார்த்து காரை ஓட்டு ராசா.. இப்பத்தான் எனக்குக் கல்யாணமாகியிருக்கு..”
சத்தியசீலன் சொல்லி வாய் மூடவில்லை.. மீனாட்சி ஆரம்பித்து விட்டாள்.. அங்கே அவனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது.. இங்கே இவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது..
என்று விவேகானந்தனின் நண்பர்கள் முதல் உறவினர் வீட்டு இளைஞர்கள் வரை பட்டியலிட்டுப் புலம்பித் தள்ளியதில் சத்தியசீலனுக்கு வாழ்க்கை வெறுத்தது.. இந்தக் கொடுமைக்காகவே விவேகானந்தனை இழுத்துக் கொண்டு போய் எவள் தலையிலாவது கட்டிவிட வேண்டும் என்று ஆவேசம் கொண்டான்..
அவனுக்குத்தான் தலைவலி.. விவேகானந்தன் மீனாட்சியின் புலம்பல்களைக் காதுகளில் போட்டுக் கொள்ளவே இல்லை.. சலனமில்லாமல் யாரோ, யாரைப் பற்றியோ சொல்லிக் கொண்டிருப்பதைப் போலக் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்..
“எப்புடிடா இப்புடியிருக்கே..?”
ஆற்றாற்றுப் போனவனைப் பார்த்துக ‘ஜென்’ துறவியைப் போலப் புன்னகை புரிந்தான் விவேகானந்தன்..
“அப்பப்ப இப்படித்தான் ஓடும்..”
‘எதுடா ஓடும்..?’
“எதையும் காதில போட்டுக்கக் கூடாது..”
‘இப்ப ஜென் தத்துவம் சொல்ன்னு நான் கேட்டேனா ராசா..?’
ஒருவழியாகப் பெண் வீட்டின் முன்னால் கார் நின்றது.. மீனாட்சியின் முகத்தில் நிம்மதி வந்தது.. சத்தியசீலனுக்கு அவளைப் பார்க்கப் பார்க்கப் பாவமாக இருந்தது.. எவருக்கும் அஞ்சாத போர்குணம் கொண்டவள்.. மகனிடம் கொண்டிருக்கும் பாசத்தில் மண்டியிடுகிறாள்.. இந்த விவேகானந்தனும் தாயை இந்தப் பாடு படுத்தக்கூடாது.. அவள் என்ன கேட்கிறாள்.. மகனைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு நிம்மதியைத் தரச் சொல்லிக் கேட்கிறாள்.. அதைச் செய்வதில் அவனுக்கு என்ன வருத்தம்..?
“நீ சாமியாராக் கீமியாராப் போகப் போறியாடா விவேக்..”
“எந்தச் சாமியார்.. டை கட்டிக்கிட்டு போங்க் மேனேஜரா உத்தியோகம் பார்க்கிறான்..?”
“அப்புறமும் ஏண்டாக் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேங்கிற..?”
விவேகானந்தன் பதில் சொல்லவில்லை.. பெண் வீட்டில் தடபுடலாக வரவேற்றார்கள்.. மேள தாளம்தான் இல்லை.. கட்டியம் சொல்லாத குறையாக வரவேற்று சோபாக்களில் உட்கார வைத்தார்கள்.. இயல்பான நிமிர்வுடன் உட்கார்ந்த விவேகானந்தன் யதேச்சையாகத் திரும்பிய போது அவளைப் பார்த்து விட்டான்.. அவனது புருவங்கள் சுருங்கின..
‘இவ.. இங்கே எங்கே வந்தா..?’
அவள்.. வந்தனா.. பெண் வீட்டாரிடம் உறவுக்காரி போல சொந்தம் கொண்டாடி பேசியபடி அவனை இகழ்ச்சியாகப் பார்த்தாள்.. அவளது விழிகளில் இருந்த குரோதம் சொல்லிய செய்தியில் அவனது முகம் மாறியது..
Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.