Chapter 14
வந்தனாவுக்குத் தலை சுழல்வதைப் போல இருந்தது.. அடுத்து அவன் கேட்ட கேள்வி அவளை நிலைகுலையச் செய்தது..
“ஏன் அப்படிச் செய்த..?” என்றவன் அவளது விழிகளுக்குள் உற்றுப் பார்த்து..
“என்மேலே இருக்கிற ஆசையினால்தானே அப்படிச் செய்த..?” என்று கேட்டு வைத்தான்..
“ஆசையா..? உங்க மேலேயா..?” விளக்கெண்ணையைக் குடித்ததைப் போல அவள் முகத்தை வைத்துக் கொண்டு அவனை ஓர் பார்வை பார்த்து வைத்தாள்..
அவனாவது.. அந்தப் பார்வைக்கு அலட்டிக் கொள்வதாவது..
“அட.. இந்தப் பார்வையை நான் பார்க்கனும்..” குமட்டுவதைப் போல அவன் பாவனை செய்தததில் வந்தனாவுக்கு ஆவேசம் வந்து விட்டது..
‘இவன் தலையைப் பிளந்தாத்தான் என் ஆத்திரம் அடங்கும்..’
பக்கத்தில் கனமான கல் எதுவும் கிடைக்கிறதா என்று தேடினாள்.. வசதியானவர்கள் வசிக்கும் பகுதி அது.. தார் ரோடும்.. சாலையோர மரங்களுமாக தெரு படு சுத்தமாக இருந்தது.. எதுவும் அகப்படவில்லை என்பதில் காண்டாகிப் போனவள்.. கையிலிருந்த ஹேண்ட் பேகை சுழற்றி அவனை அடிக்க வீசினாள்.. அவனோ வெகு எளிதாக அதைக் கைப்பற்றி அவள் பக்கம் சுழற்றியடித்து திணற வைத்தான்..
“செய்வதையும் செய்து விட்டு எண்ணையில் போட்ட அப்பம் போல எகிறி குதிக்கிற.. என்ன..?”
“ஹலோ.. உங்க மூஞ்சி மேல ஆசைப்படற அளவுக்கு எனக்கொன்னும் மட்டமான டேஸ்ட்டில்ல..”
“இங்கேயும் அப்படித்தான்.. நீ என்ன திருகுதாளம் பண்ணினாலும் நான் உனக்குக் கிடைக்க மாட்டேன்.. மைண்ட் இட்..”
“அடப்பாவி..! உன்னைக் கண்டாலே ஆகாதுங்கறேன்.. நீ மைண்ட் இட்டுன்னு டயலாக் விடற.. இதுமேல நான் ஆசைப்படறேனாம்.. நினைப்புத்தான்..”
“உனக்குத்தானே..”
“எனக்குத்தான்னா..?”
“நினைப்புத்தான்னு நீயே ஒப்புக்கிட்டியே..”
அவள் எரிச்சலுடன் அவனை இமைக்காமல் முறைத்துப் பார்த்தாள்.. அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவன் பேசித் தள்ளிக் கொண்டிருந்தான்..
“என்னைப் பத்தின நினைப்பு உன் மனசில இருக்கப் போய்த்தானே எனக்குக் கிடைக்க இருந்த பெரிய வீட்டுப் பெண்ணைத் தூண்டி விட்டு என் கல்யாணத்தை நிப்பாட்டின..? என்ன..? என்மேல அவ்வளவு ஆசையா உனக்கு..”
“டேய்ய்…”
வந்தனா கடைசி பட்ச மரியாதையையும் கைவிட்டாள்.. கனவில்கூட அவனைக் கத்தியோடு அவள் துரத்தும் கனவுதான் வந்து தொலைக்கும்.. விழித்து எழும்போதே அவனை ஏதாவது ஒரு வகையில் காண்டாக்க வேண்டும் என்ற வெறியோடுதான் எழுவாள்.. அவனை ஜாடை பேச வேண்டும் என்பதற்காகவே வாசல் தெளித்துக் கோலம் போடும் வேலையை வலிய இழுத்துத் தலையில் போட்டுக் கொண்டிருக்கிறாள்.. இல்லாவிட்டால், வீட்டில் ஒரு துரும்பைக் கிள்ளிப் போடக்கூட யோசிப்பவள் எதற்காக காலைத் தூக்கத்தைத் தியாகம் செய்து விட்டு வாசல் தெளித்துக் கோலம் போட ஓட வேண்டும்..? தண்ணீரைத் தெளிக்கும் போதே அவன் மீதான ஜாடைப் பேச்சையும் சேர்ந்து தெளிப்பாள்.. எதிர்வீட்டு வாசலில் நிற்பவன் மட்டும் சும்மா நிற்பானா..? பதிலுக்கு பால்கார கோபாலை நிறுத்தி வைத்து சகட்டு மேனிக்கு ஜாடை பேசுவான்.. இப்படி தினந்தோறும் வாசலை போர்க்களமாக்கி ஜாடை பேசித் தாக்குதல் தொடுப்பவள் அவன்மீது ஆசைப்படுகிறாளாம்.. அவன் அதைக் கண்டு விட்டானாம்..
“உங்கம்மாகூடச் சேர்ந்து பழைய சினிமாவா பார்ப்பியா..? எம்.ஜி.ஆர் சரோஜாதேவி கதையைச் சொல்ற.. நீ ‘அன்று வந்ததும் இதே நிலா’ன்னு பாட்டுப் பாடறதுக்கு நான் ஆளில்ல..”
“நீயெல்லாம் ஒரு ஆளு.. உன்னைப் பார்த்து ‘காதல் ரோமியோ கண்ட நிலா, கன்னி ஜீலியட் என்ற நிலா’ன்னு பாட்டுப் பாடப் போறேன்.. நிலாப் பாட்டுப் பாடறதுக்கு நிலவு போல மூஞ்சி இருக்கனும்.. உன் மூஞ்சியே நசுங்கிப் போன தகரடப்பா மாதிரி இருக்கு.. இதுல இவுக சரோஜாதேவியாம்.. அடச்சீ.. போ..”
“விவேகானந்தன்..”
தன்னையும் மீறி வந்தனா கத்தி விட்டாள்.. அவளது மனம் ரணமாகி வலித்தது.. அன்று அவளுக்கு காதல் கடிதம் கொடுக்க வந்த சொந்தில்நாதனைத் தடுத்து அவளைப் பற்றி அவனிடம் என்ன வர்ணனை செய்தானோ.. அதே வர்ணனையை நேரடியாக அவளது முகம் பார்த்துச் சொல்கிறான்.. வந்தனாவால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
“என் பெயரைச் சொல்லாதேன்னு சொல்கிறேனில்ல..”
“ஆயிரம் தடவை சொல்வேண்டா.. என்ன செய்வ..?”
“பல்லைத் தட்டிக் கையில் கொடுப்பேன்..”
“எங்கே.. தட்டு பார்க்கலாம்..”
வந்தனா கோபத்தோடு அவனை நெருங்கினாள்.. இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும் என்ற ஆங்காரம் அவளுக்கு.. அங்கே தொட்டு, இங்கே தொட்டு, கடைசியில் அவன்மீது அவளுக்கு ஆசை என்று பட்டம் கட்டிவிட வந்து விட்டான்.. இனியும் இவனை சும்மா விடக் கூடாது..
“இங்கே என்னம்மா பண்ற..?”
நாராயணனின் குரல் அவளது கால்களுக்குத் தளையிட்டு நிறுத்தி வைத்தது.. அவள் அடி வயற்றிலிருந்து குரல் எழுப்பி ‘விவேகானந்தன்’ என்று அலறிய அலறலில் அவளது அப்பா தெருவுக்கே வந்துவிட்டார்..
“ஒன்றுமில்லைப்பா..”
வந்தனா தன் கோபத்தை அடக்கிக் கொண்டு சாதுப் பெண்ணாக நின்றாள்.. நாராயணனைத் தொடர்ந்து வந்த வருண் வந்தனாவை கண்டு கொள்ளாமல் விவேகானந்தனிடம்..
“குரு..!” என்றான்..
வந்தனாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.. அவளைக் குற்றுயிரும் கொலையுயிருமாக ஆக்கிக் கொண்டிருப்பவனிடம் அவளது தம்பி பக்தியுடன் கூடிய விசுவாசத்தைக் காட்டுகிறான்.. இதை எங்கே போய் சொல்வது..?
“ஏண்டா.. காலையிலதானே இந்த ஆளோட நீ அரட்டையடிச்சுக்கிட்டு இருந்த..? இப்ப என்னடான்னா பல வருசம் கழிச்சு பார்த்ததைப்போல.. ‘குரு’ன்னு பாயற.. உனக்கே இது ஓவராத் தோணலையா..?” தம்பியிடம் கடுகடுத்தாள்..
“தோணலை..” என்றான் அவளது அன்புத் தம்பி..
“எப்படித் தோணும்..? வசியம் பண்ணிக் கைக்குள்ள வைச்சிருந்தா இப்படித்தான் பித்துப் பிடித்து பின்னாலே அலையத் தோணும்..” வெறுப்புடன் விவேகானந்தனை முறைத்தாள் வந்தனா.
“இப்ப என்னத்துக்கும்மா விவேக்கிடம் சண்டை போடற..?” மகளைக் கண்டித்த நாராயணன் விவேகானந்தனிடம்..
“அவசரமாக் குடும்பத்தோடு கிளம்பிப் போனாப்பல இருந்தது..? போகிறப்ப எங்கே போகிறீங்கன்னு கேட்கக் கூடாதுன்னு இருந்துட்டேன்.. எனிதிங் சீரியஸ்..?” என்று விசாரித்தார்..
“நத்திங் சீரியஸ்ப்பா.. இந்த மூஞ்சிக்கும் பொண்ணு தர்றேன்னு ஏமாந்த பணக்காரர் ஒருத்தர் சொல்லிட்டாருன்னு, குடும்பத்தோட பொண்ணுப் பார்க்கப் போனாங்க..” எகத்தாளமாகச் சொன்னாள் வந்தனா..
“அப்படியா..? என்னிடம் ருக்மினி சொல்லவேயில்லையே..” நாராயணன் குறைபட..
“உங்க பெண்டாட்டியிடம் இவங்கம்மா சொன்னாத்தானே.. அவங்க உங்களிடம் சொல்வாங்க..?” என்று போட்டுக் கொடுத்தாள் வந்தனா..
“அப்படியா..? மீனாட்சி ருக்மிணியிடம் சொல்லலையா..? அதுக்கு ஏதாவது காரணமிருக்கும்.. போகுது விடு.. பொண்ணுப் பார்க்கப் போனது என்ன ஆச்சு..?” நாராயணன் கேட்க..
“ஊத்திக்கிச்சு..” என்று வந்தனா நான்கு விரல்களையும் மடக்கி.. கட்டைவிரலை நிலம் பார்த்து நீட்டிக் காட்டினாள்..
“திஸ் இஸ் டூ பேட் வந்தனா.. நீ உள்ளே போ.. பிரண்ட் வீட்டுக்குப் போனா விளக்கு வைக்கிறதுக்குள்ள வீட்டுக்கு வந்து சேர வேண்டாமா..? இவ்வளவு லேட்டா வந்து நிற்கிற.. அதுவும் அவங்க வீட்டுக் காரில வந்து இறங்கியிருக்கிற.. வந்த பெண் வீட்டுக்குள்ள வராம வாசலில நின்னு விவேக்கோட சண்டை போட்டுக்கிட்டு இருக்கிற..”
“நானாப்பா சண்டைக்குப் போனேன்..? இங்கே மட்டும் விளாச வேணாம்.. அங்கேயும் கேட்கலாம்..”
வந்தனா மூக்கை உறிஞ்சியபடி விவேகானந்தனின் பக்கம் கை காட்டினாள்.. நாராயணன் விவேகானந்தனை விட்டுவிட்டு அவன் கையிலிருந்த வந்தனாவின் ஹேண்ட்பேக்கை பார்த்தார்.. புருவங்களை உயர்த்தினார்..
“உன் ஹேண்ட் பேக் எப்படி விவேக் கைக்கு போச்சு.. வந்தனா..?” மகளை முறைத்தார்..
“ம்ம்ம்.. கால் முளைச்சுப் போச்சு.. அங்கே கேளுங்கப்பான்னு சொன்னா என்கிட்டேயே கேள்வி கேட்கறிங்க..”
வந்தனா விவேகானந்தனின் கையிலிருந்த ஹேண்ட் பேக்கை பறித்துக் கொண்டு வீட்டுக்குள் போய் விட்டாள்.. நாராயணன் மகளுக்கும் விவோகனந்தனுக்கும் எதற்காக வாக்குவாதம் நடந்தது என்று கேட்காமல் விவேகானந்தனின் தோளில் தட்டிக் கொடுத்தார்.. இதுபோன்ற சண்டைகளை அவர் பார்த்துப் பழக்கப்பட்டவர்.. இருவரும் போன பிறவியில் எலியும் பூனையுமாக பிறந்திருப்பார்களோ என்று அவர் சகதர்மிணியிடம் கேட்டுக் கொண்டிருந்த போது.. சந்தேகமே வேண்டாம்.. அப்படித்தான் பிறந்திருப்பார்கள் என்று ஆணித்தரமாகச் சொன்னான் வருண்..
“போகுது விடுங்க.. இந்தப் பெண் இல்லைன்னா வேறொன்று.. உங்க தங்கமான குணத்துக்கு நல்ல பெண்தான் அமையும்..” நாராயணன் ஆறதல் சொல்ல..
“அப்பா.. இப்ப குரு, சோகமா இருக்கிறதா உங்க கிட்டச் சொன்னாரா..?” என்று தலையில் அடித்துக் கொண்டு தன் தந்தையை இழுத்துக் கொண்டு போய்விட்டான் வருண்..
விவேகானந்தன் வாசல் கேட்டை இழுத்து மூடி விட்டு வீட்டுக்குள் போனான்.. மறுநாள் காலையில் வாசலில் நின்று எதிர்வீட்டு வாசலில் இருந்த வந்தனாவைப் பார்த்து..
“உன் மேல கொண்ட ஆசை..” என்று பாடினான்..
Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.