Chapter 18
தமக்கையின் தவிப்பை உணராத மக்குத் தம்பியாக இருந்தான் வருண்.. அவனுடைய ஆதர்ச நாயகன்.. அளவளாவத் தகுதி வாய்ந்த குரு.. அவனுடன் இருக்கிறான் என்பது மட்டுமே மகிழ்வைக் கொடுக்க.. அவன் வாய் வலிக்கப் பேசித் தள்ளிக் கொண்டிருந்தான்..
“அதெல்லாம் நானும் ஆக்டிங் கொடுப்பேன் குரு..”
“ஓவரா ஆக்டிங் கொடுத்துராதே.. உடம்பு தாங்காது..”
“அந்த லெவலுக்கே போக மாட்டேன் குரு.. வார பஞ்சாயத்தையெல்லாம் கெத்தாப் பேசியே முடிச்சுட்டு அப்ளாஸை அள்ளிருவேனில்ல.. யாரு நானு..?”
“பாருடா.. என் சிஷ்யன் தேறிட்டான்..”
“இதை விடுங்க குரு.. உங்க கதையை கண்டினியூ பண்ணுங்க..”
“நீ டேஸ்காலர்.. நான் ஹாஸ்டல் வாசி..”
“அதைச் சொல்லுங்க.. இன்னும் அதிகமாக உழைத்திருக்கனுமே..”
“அதேதாண்டா.. ஹாஸ்டலில் ராத்திரியானா மத்த பசங்க தூங்குவாங்க..”
“அதை என்னவோ.. குத்தம் போலச் சொல்றீங்க.. ராத்திரியானா மனுசனுக்குத் தூக்கம் வர்றது சகஜம்தான குரு..”
“மத்தவங்களுக்கு வரலாம்டா.. தலைவனுக்கு வரக்கூடாது..”
“அச்சச்சோ.. நீங்க தூங்க மாட்டிங்களா..?”
“ஊஹீம்..”
தலையசைத்தபடி வந்தனாவைப் பார்த்தான் விவேகானந்தன்.. ரோஜா வண்ண நைட்டியில் அவள் இருந்தாள்.. தலைமுடியை தளர்வாகப் பின்னலிட்டு மல்லிகைச் சரம் வைத்திருந்தாள்.. காதுகளில் ஜிமிக்கி.. அவள் தலையை ஆட்டும் போதெல்லாம் ஜிமிக்கிகளும் ஆடியது புதுவித சோபையைக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது.. அவன் மனது ஆடியது..
‘எதிர் வீட்டுக்காரி ஜிமிக்கி கம்மல்..
எண்ட மனசைத் திருடிப்போயி..’
ஆடிய மனது பாடியது.. தற்செயலாக நிமிர்ந்து பார்த்த வந்தனா, வருணின் பக்கம் திரும்புமாறு சைகை செய்தாள்.. விவேகானந்தன் ஊன்றிப் பார்த்த பார்வையில் அவசரமாக தலையைக் கவிழ்ந்தாள்.. மெலிதாக சிரித்துக் கொண்டான் விவேகானந்தன்.. காதல்வயப் பட்டவனைப் போல அவனது நடவடிக்கைகள் இருந்ததில் அவள் குழம்பிப் போனாள்.. இந்தப் பொறுக்கிக்காவது.. காதல் வருவதாவது.. அப்படியே காதல் வந்தாலும் அவள் மீது எப்படி வரும்..?
‘போடா..’
அவள் மனதுக்குள் சலித்துக் கொண்டது அவனுக்கு எப்படித் தெரியும்..? இவள் பார்த்தால் அவன் கண்களில் பல்ப் ஒளிர்கிறதே.. இவனை என்னவென்று கணக்கில் எடுத்துக் கொள்வது..? தோழனிடம் அவளை ‘அட்டு பிகர்’ என்று வர்ணித்தான்.. அவனுக்கு கிடைக்கவிருந்த கோடிஸ்வர
அழகியின் மனதை அவள் கலைத்து விட்டாளென குற்றம் சாட்டினான்.. அதைக்கூட உண்மையைத்தானே சொல்கிறான் என்று பொறுத்துப் போய் விடலாம்.. அவன்மீது அவளுக்கு இருக்கும் ஆசையினால்தான் அப்படிச் செய்தாள் என்று குண்டைத் தூக்கிப் போடுவதுதானே நெஞ்சை வலிக்க வைக்கிறது..
“தூக்கமெல்லாம் மத்தவங்களுக்குத்தாண்டா வருண்.. எனக்கும் தூக்கம் வருதுன்னு நான் தூங்கிப் போயிட்டேன்னா அவ்வளவுதான்.. தலைவன் பதவி ஆட்டம் கண்டிரும்..”
“அதுக்கு..?”
“கொட்டக் கொட்ட முழிச்சுக்கிட்டே ரோந்து சுற்றிக்கிட்டு இருப்பேன்..”
வருண் படு தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு பாடம் கேட்பதைப் போலக் கேட்டுக் கொண்டே இருக்க.. வந்தனா குரல் கொடுத்தாள்..
“ஏண்டா வருண்.. உன்னோட குருவோட ஹாஸ்டலில நைட் வாட்ச்மேன் இல்லையா..? அந்த வேலையை உன் குரு பார்க்கிறதுக்குப் பேர்தான் வெயிட்டான பார்ட்டியா..?”
“ஓங்கி விட்டேன்னா பாரு.. உன்னை யாரு எங்க பேச்சைக் கவனிக்கச் சொன்னது..?”
“கவனிக்கனும்னு ஆசைப்பட்டாக் கவனிக்கட்டும் வருண்..”
விசமமாகச் சொன்னான் விவேகானந்தன்.. மறுபடியும்.. ‘ஆசை..’ என்ற சொல்.. வந்தனாவைத் தாக்கியது.. போய் விடலாமா என்று யோசித்தாள்.. அதைத்தான் அவன் எதிர்பார்க்கிறானோ என்ற நினைவில் வீம்பாக அங்கேயே உட்கார்ந்து விட்டாள்..
“ஹாஸ்டலில் தூங்காமல் விழித்திருத்தல்.. கலை நிகழ்ச்சிகளில் விசிலடித்தல்.. ராக்கெட் விடுதல்ன்னு எக்கச்சக்கமான கலைகளைக் கற்றுக் கையில் வைத்திருக்கனும் வருண்..”
“ஏன் சொல்கிறீங்க.. எனக்கும் இதே இம்சைதான்.. எல்லாம் வருது.. இந்த விசிலடிக்க மட்டும் வரவே மாட்டேங்குது குரு..”
“விசிலடிக்கிறது பெரிய தொழில்நுட்ப ரகசியம்டா வருண்..”
“ஆமாண்டா வருண்.. கற்று வைச்சுக்க.. கற்ற வித்தை காலத்துக்கும் உதவும்.. நாளைக்கே நீ பெரிய தொழில் நுட்ப வல்லுனன் ஆகப் போற பாரேன்..”
வந்தனா குரல் கொடுத்தாள்.. வருண் கோபத்துடன் எழுந்து வந்து அவளிடம் கையைக் குவித்து ஆட்டியாட்டி சண்டை போட்டான்.. பதிலுக்கு அவளும் கொடுத்துக் கட்டிவிட்டு.. அது போதாது என்று கையில் இருந்த புத்தகத்தினால் அவன் தலையில் ஓங்கி ஒரு போடு போட்டாள்.. அவன்..
“ராட்சசி..” என்று அவள் தலையில் குட்டு வைத்தான்..
“படவா ராஸ்கல்.. கொட்டவா செய்கிற..?” அவள் பதிலுக்கு அவனைக் கிள்ளி வைத்தாள்..
அக்காவுக்கும் தம்பிக்கும் இடையே சண்டை முற்றிப் போனது.. இவளது பின்னலை அவன் இழுத்தான்.. அவன் முடியை இவள் கலைத்தாள்.. இருவரும் கட்டி உருளாத குறைதான்.. திடிர் என்று விசில் சப்தம் காதைத் துளைக்க இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்..
“சபாஷ்.. சரியான போட்டி..” விவேகானந்தன்தான் விசிலடித்துக் கொண்டிருந்தான்..
வந்தனாவுக்கு வெட்கமாகி விட்டது.. இவன் இருப்பதை மறந்து போனாளே.. வருணின் தலைமுடியை விட்டு விட்டாள்..
“எப்படி அடிக்கிறா பாருங்க குரு..”
“பார்த்துக்கிட்டுத்தானே இருக்கேன்..”
பூடகமாக ஒலித்த அவனது குரலில் தலை நிமிர்ந்தாள்.. வருணின் செல்போன் ஒலித்தது.. அவன் அதைத் காதுக்குக் கொடுத்து ஓரமாக ஒதுங்கிப் போய் பேச ஆரம்பித்தான்..
“இந்த பிரபஞ்சத்தின் பேரழகி நீ..”
வெகு சுவாதீனமாக அவன் பறக்கும் முத்தங்களை அவள் பக்கம் பறக்க விட்டான்.. அவள் திக்பிரமை அடைந்தவளாக உறைந்து போய் நின்றாள்.. அவளருகில் வந்தவன் அவளது கரம் பிடித்து மடிக்கப்பட்ட காகிதத்தைத் திணித்துவிட்டு வருணிடம் போய் விட்டான்..
‘என்ன செய்வது..?’
வந்தனா திடுதிடுத்த இதயத்துடன் சுவரில் சாய்ந்து நின்றாள்.. வருணும் விவேகானந்தனும் பேசியபடி மாடிப் படிகளில் இறங்கிப் போய் விட்டார்கள்.. சரிந்து அமர்ந்த வந்தனாவின் உடல் நடுங்கியது.. விவேகானந்தனின் விளையாட்டு விபரீதமாகப் போய் கொண்டிருப்பதில் அவளுக்கு பயம் வந்தது.. மொட்டைமாடி முழுவதும் அவன் பறக்க விட்ட பறக்கும் முத்தங்களே நிறைந்திருப்பதைப் போல ஓர் பிரமை வந்தது.. அவன் கையில் திணித்திருந்த கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்..
‘என் மீது உனக்கு ஆசையா..? அதை என்னிடம் சொல்லாமல் உன் ஊமை இதயத்தில் ஒளித்து வைத்திருந்தாயா..?’
கடிதத்தின் ஆரம்பவரிகள் அவளைக் கலவரப் படுத்தின..
‘பேரே கட்டிட்டானே..’ கண்ணீர் அரும்பி விட்டது..
‘ஒற்றைச் சொல்லில் உயிர் கொடுக்கும் வித்தையை எங்கே கற்றாய்..?’
‘அடி வாங்கப் போறடா.. என் தம்பி வேணும்னா விசிலடிக்கிற வித்தையை உன்னிடம் கற்றிருப்பான்.. நான் எந்த வித்தையையும் எங்கேயும் கத்துக்கலை… எதுக்கெடுத்தாலும் வித்தை, வித்தைங்கிறானே.. போனபிறவியிலே இவன் வித்தை காட்டறவனா பிறந்திருப்பானோ..?’
அவள் மனதில் சந்தேகம் வந்தது.. அந்த வித்தைக்காரனின் உருவம் அவளது மனதுக்குள் குட்டிக்கரணம் அடித்துக் குப்புறக் கவிழ்த்தியது..
‘உன் பெயரே எனக்குக் கிறக்கம் தரும் மயக்க மருந்து..’
‘உன் பெயர் எனக்குக் கசப்பைக் கொடுக்கும் எட்டிக்காய்டா..’
‘காலையில் வாசலில் நீ போடும் கோலம் என் மனதில் அழியாத கோலமாய் பதிந்திருக்கிறது..’
‘இதை நீயெழுத நான் படிக்கிறது காலத்தின் கோலம்டா..’
‘நீ சொன்ன வார்த்தைகள் தேனாக என் காதில் பாய்கின்றன..’
‘உன்கிட்ட எப்போ.. எங்கே.. என்னடா சொன்னேன்..?’
‘என் சாம்ராஜ்யத்தின் மகாராணி நீதான்..’
‘சேடிப் பொண்ணாக்கூட வர மாட்டேன்.. போடா..’
‘உன்னைப் பற்றிய நினைவுகளால் நெய்யப் படுகின்றன எனது பொழுதுகள்..’
‘பொழுது போகலைன்னா ஊரைச் சுத்துடா.. அதை விட்டுட்டு நெசவாளி போல ஏண்டா நெய்துக்கிட்டு இருக்கிற..?’
‘இந்த வாழ்க்கையானது பிருந்தாவனம்.. அதில் நீ எனது வரம்..’
‘நீ எனக்கு சாபம்டா வில்லா..’
‘உன் திருவாய்மொழி.. அமிழ்தாய் அதில் நீ..’
‘எப்படிடா இப்படியெல்லாம் எழுதித்தள்ளர..?’
கவித்துவமாய் அவனது காதலை உரைக்காமல்.. அவன் மீது அவள் கொண்டிருக்கும் காதலை வரைந்திருந்தான் விவேகானந்தன்.. அவளை ரவிவர்மாவின் தூரிகை வரையாத ஓவியம் என்று சொல்லியிருந்தான்.. அவன் மீது அவள் கொண்ட ஆசைக்காக அவனையே அவளுக்குத் தரப் போவதாக அறிவித்திருந்தான்..
‘உன்னிடம் என்ன பிச்சையாடா கேட்டேன்..?’
வந்தனாவுக்கு அழுகை வந்தது.. முழங்காலில் தலையைக் கவிழ்த்து சப்தமின்றி அழுதாள்.. திடிரென்று விளக்கு அணைந்து விட்டது..
‘கரண்ட் போயிருச்சா..?’
திகிலுடன் எழுந்தவள் கோட்டோவியம் போல அருகில் நின்ற விவேகானந்தனைப் பார்த்தாள்.. ‘இவன் எப்படி இங்கே..’ என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டு விட்டான்.. வந்தனா பேச்சற்று உறைந்தாள்..
“என்மேல ஆசைப்பட்டுட்ட.. அதான்.. முத்தம் கொடுக்கலாம்ன்னு வந்தேன்..” விளக்கம் சொல்லி விட்டு விரைந்து விட்டான் அவன்..
‘இதுவும் தானம்தானா..?’
வந்தனாவின் கன்னம் எரிந்தது.. அசைவற்று நின்று விட்டவளின் விழிகளில் வழிந்த கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை..
Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.