Chapter 24
கடற்கரைச் சாலையில் கார் திரும்பியது.. நீலக் கடல் அலைகளோடு ஆர்ப்பரித்ததைப் பார்க்க அழகாக இருந்தது.. வந்தனா ஜன்னலோரமாக சரிந்து ஆவலுடன் கடலை வேடிக்கை பார்த்தாள்..
“அப்படியே பட்டிக்காடு மிட்டாய்கடையை பார்க்கிறதைப் போலவே இருக்கு.. அம்மணி சென்னைப் பக்கம் வந்ததே இல்லை போல.. இதில வாயைக் கேளு.. எட்டூருக்குக் கிழியும்..” காரை ஓட்டியபடியே சொன்னான் விவேகானந்தன்..
வந்தனா ரோசத்துடன் அவனை முறைத்தாள்.. கிரிம் கலர் ஜீன்ஸீம் காபிக்கொட்டைக் கலர் சட்டையுமாக அவன் இருந்த அழகில் கிறக்கம் வந்தது.. முன்னுச்சியில் படியும் முடி.. அடங்க மறுக்கும் குணம் என்று ஆளை ஈர்த்தான்.. வந்தனாவுக்கு அவன்மீது வெறுப்பு வர மறுத்தது.. பதில் சொல்லாமல் கார் கதவில் சாய்ந்தாள்.
“பார்த்துடி.. விழுந்து வைக்கப் போற..”
“வாடி, போடின்னு சொல்கிற வேலையெல்லாம் வேணாம்..”
“சொன்னா..? என்னடி பண்ணுவ..?”
புருவங்களை மேலே உயர்த்தி அவளை வசிகரித்தபடி உழைப்பாளர் சிலையருகே காரை நிறுத்தினான் விவேகானந்தன்.. காரை விட்டு இறங்கி, மணலில் கால்கள் புதைய கடற்கரையில் நடந்தபோது..
“புருசன், பெண்டாட்டின்னு ஆனதுக்கு.. இது ஒன்னுதான் மிச்சம்.. இதையும் தூக்கித் தூரப் போட்டுட்டு உனக்கு வாங்க, போங்கன்னு மரியாதை கொடுத்துக் கொஞ்சனுமாக்கும்..” என்று வெடித்தான்..
வந்தனா பதில் சொல்லாமல் விலகி நடந்தாள்.. கடற்காற்றின் வேகத்தில் அவளது சேலை முந்தானை பறந்து அவன் தோள்மீது படிய.. அவசரமாக இழுத்துச் செறுகிக் கொண்டாள்.. அவளை உறுத்தப் பார்த்த விவேகானந்தன்..
“உன்சேலை என்மேல பட்டா உன் கற்பு குறைஞ்சிருமா..?” என்று சிடுசிடுத்தான்..
அதற்கும் வந்தனாவிடமிருந்த பதில் வரவில்லை என்பதில் கோபம் அதிகரிக்க மணலை உதைத்தான்.. மணல் சிதறியது..
“பத்தடிக்கு தள்ளி நடக்கறியே.. எவனாவது பார்த்தா உன்னைத் தள்ளிக்கிட்டு வந்திருக்கேனில்ல நினைப்பான்..? அப்படி நினைக்கனும்ங்கிறதுதான் உன் பிளானா..?” அடுத்த தாக்குதல்..
இந்தத் தாக்குதலில் வந்தனா கோபம் கொண்டாள்..
“அசிங்கமா பேசினா தஞ்சாவூருக்குத் தனியாக் கிளம்பிப் போயிருவேன்..” என்று சீறினாள்..
“போ.. என் பிள்ளையைத் தனியா விட்டுட்டு வந்தியான்னு என் அம்மா பிடிபிடின்னு பிடிச்சுருவாங்க.. பரவாயில்லையா..?”
“அடேங்கப்பா.. வீர தீர அம்மாவுக்குப் பிள்ளையாப் பொறந்திருக்கிற பெருமை..? எதிர் வீட்டிலதான் எங்கம்மா இருக்கிறாங்க.. ஒரு குரல் கொடுத்தா ஓடி வந்திருவாங்க..”
“வந்து என்ன செஞ்சிருவாங்க..? வேணும்ன்னா என் அம்மாவுக்கு.. ‘ஜிஞ்சா, ஜால்ரா’ போடுவாங்க..”
அதுதான் நடக்கும் என்பதில் பல்லைக் கடித்தபடி.. கடலைப் பார்த்தபடி உட்கார்ந்தாள் வந்தனா.. பக்கத்தில் ஒட்டி உரசியபடி விவேகானந்தன் உட்கார சூடு பட்டதைப் போல உடல் விதிர்த்து தள்ளி உட்கார்ந்தாள்.. அதில் விவேகானந்தனுக்கு கோபம் வந்து விட்டது..
“ஆசைப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டவ செய்கிற வேலையாடி இது..? கூடக் குடும்பம் நடத்தத் துப்பில்லாதவ.. எதுக்காக உன் அப்பாம்மாவை முடுக்கி விட்டுக் கல்யாணம் பேசச் சொன்ன..?”
“யாரு..? நான், என் அப்பாம்மாவை முடுக்கி விட்டுக் கல்யாணம் பேசச் சொன்னேன்..? நினைப்புத்தான்.. உங்க பேரண்ட்ஸ், பெண் கேட்டதாத்தான் என் வீட்டில சொன்னாங்க..”
“உன்னோட அப்பாம்மா மாப்பிள்ளை கேட்டதாகத்தான் என் வீட்டில சொன்னாங்க.. அதிலும் என் அம்மாவுக்கு மருமகளா வர யாருக்குக் கொடுத்து வைத்திருக்கோன்னு நீ ஏங்கினயாம்..”
இந்த அம்மா இப்படி மாட்டி விட்டு விட்டாங்களே என்று குன்றிப் போனாள் வந்தனா.. சும்மாவே அவளுக்கு அவன்மீது ஆசை, ஆசை, பேராசையென்று பட்டம் கட்டிக் கொண்டிருக்கிறான்.. இதில் இது வேறு சேர்ந்து கொண்டால் என்னவெல்லாம் பேசமாட்டான்..
“நான் ஒன்னும் ஏங்கலை..”
“நானும் உன்னைப் பெண் கேட்கலை..”
எழுந்து எங்காவது ஓடி விடலாமா என்று மனம் வெறுத்தது வந்தனாவுக்கு.. அவளுக்கும் அவனுக்கும் திருமணமாகி ஆறுமாதங்கள் ஓடி விட்டன.. இன்னமும் எலியும், பூனையுமாகவே மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள்.. மன இணக்கம் ஏற்படவே இல்லை.. தேநிலவுக்கு மூனாறு போனவர்கள் சண்டை போட்டுக் கொண்டு பாதியிலே திரும்பி வந்து விட்டார்கள்.. வந்தனா வேலைக்குப் போக ஆசைப் பட்டாள்.. வங்கித் தேர்வு எழுதட்டும்.. அதில் தேர்ச்சி பெற்றால் வேலைக்குச் செல்லட்டும் என்று விவேகானந்தன் சொல்லி விட்டான்.. அது நீண்டநாள் காத்திருப்பு என்பதில் அவளை அவன் சிறைவைப்பதாக அவள் சினந்தாள்.. ஆமாம் என்று தெனாவெட்டுக் காட்டி அவளை அடக்க முற்பட்டான் விவேகானந்தன்.. இதற்கு இடையில் சிநேகிதனைப் பார்க்க என்று அடிக்கடி வந்து நின்று உயிரைக் குறைத்து வைத்தான் செந்தில்நாதன்.. ஓர்முறை வந்தனா மொட்டை மாடியில் காய வைத்திருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த போது அங்கே வந்தவன்..
“உன்மேல உயிரையே வைத்திருந்தேன் வந்தனா.. உயிருக்குயிராக் காதலித்தேன்.. என்காதலை உன்னிடம் சொல்ல விடாம தடுத்துட்டான் விவேக்.. சொல்ல மறந்த கதையைப் போல என் காதல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இப்போ உன்னிடம் சொல்கிறேன்..” என்று தழுதழுத்தான்..
‘அந்தக் கருமாந்திரம்தான் எனக்குத் தெரியுமே..’
அன்றைய நாளின் நினைவில் முகம் சுளித்தாள் வந்தனா.. செந்தில்நாதனிடம் அவளைப் பற்றி விவேகானந்தன் என்னவெல்லாம் பேசினான் என்ற நினைவு வந்ததில் முகம் சுளித்தபடி நகரப் போனாள்..
வந்தனாவுக்கு செந்தில்நாதனைப் பிடிக்காது.. அவனது சொல்ல மறந்த காதல் கதையைச் சரியான தருணத்தில் அவன் சொல்லி அவள் கேட்காமல் போனதில் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான்.. ஆனால் அவளது பிடித்தமின்மையை அவள் சொல்லி செந்தில்நாதனை மறுத்திருக்க வேண்டும்.. அப்படியில்லாமல் அவள் ‘அட்டு பிகர்..’ என்று விவேகானந்தன் எடுத்துச் சொல்லித் தடுத்திருக்கக் கூடாது..
“என்னிடம் எதையெதையோ சொல்லிக் கலைத்து விட்டு.. இப்ப அவன் உன்னைக் கல்யாணம் பண்ணியிருக்கானே.. ஏன் வந்தனா..?”
‘ஏனா..? என்னைப் பழி வாங்கக் கல்யாணம் பண்ணியிருக்காண்டா.. முட்டாள்.. பேமானி.. அயோக்கிய ராஸ்கல்.. அடுத்தவன் பெண்டாட்டிகிட்ட வழியறயே.. உனக்கு அறிவில்லை..?’
வந்தனா கோத்துடன் மாடிப்படிப் பக்கம் போனால்.. அங்கே கோபாவேசமாக விவேகானந்தன் நின்றிருந்தான்.. ஓங்கி அவள் கன்னத்தில் ஓர் அறை விட்டான்.. கதி கலங்கிப் போய் நின்றவளிடம்..
“அவனுக்குத்தான் அறிவில்லை.. மொட்டை மாடிக்கு வந்து பினாத்தறான்.. உனக்குமா அறிவில்லை..? அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க.. கீழே போ..” என்று சீறியவன் செந்தில்நாதனை வாங்கு, வாங்கு என வாங்கி விட்டான்..
இன்ன பேச்சு என்றில்லை.. அதைக் காது கொடுத்துக் கேட்க முடியாமல் வந்தனா கீழே ஓடி விட்டாள்.. தலை கலைந்து, சட்டை கசங்கி செந்தில் நாதன் வந்த கோலத்தில் விவேகானந்தன் அவனைப் புரட்டியெடுத்து அடி பின்னியிருக்கிறான் என்று தெள்ளத் தெளிவாக புரிந்தது..
“இனி என் வீட்டுப் பக்கம் வந்த.. கொன்று புதைச்சிருவேன்.”
விவேகானந்தன் சொன்னதைச் செய்து விடுவான் என்பதில் பின்னங்கால் பிடறியில் பட ஓடி விட்டான் செந்தில்நாதன்.. அதற்குப் பின்னால் விவேகானந்தனின் வீட்டுப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை..
“டிரான்ஸ்பர் வாங்கிட்டு வடக்குப் பக்கம் ஓடிட்டானாம்டா..” சத்தியசீலன் தகவல் சொன்னான்..
செந்தில்நாதன் எங்கே தொலைந்தான் என்பதைப் பற்றி வந்தனாவுக்கு யாதொரு கவலையும் இல்லை.. விவேகானந்தன் அவளை வெறுப்புடன் பார்த்ததுதான் அவளை வதைத்தது.. மனது ரணமானது.. இருவர் மனதிலும் ஆயிரம் போராட்டங்கள்.. ஆறு மாதம் கடந்த நிலையில் விவேகானந்தனுக்கு சென்னைக்கு மாறுதல் வந்தது.. பதவி உயர்வுடன் கூடிய மாறுதல்..
“ஒரு வருசத்தில டிரான்ஸ்பர் வாங்கிட்டு தஞ்சாவூருக்கே வந்து விடுவேன்ம்மா..” மீனாட்சிக்கு உத்திரவாதம் கொடுத்தான்..
சென்னையில் அவர்களுக்கு சொந்தமான அபார்ட்மெண்ட் ஒன்று இருந்தது.. வந்தால், போனால் தங்குவதற்கு என்று வாங்கிய அபார்ட்மெண்ட்.. அதில் தனிக்குடித்தனத்தை ஆரம்பித்தார்கள்.. விவேகானந்தனின் கோபம் கொஞ்சம் குறைந்திருந்தது.. வந்தனாவிடம் நெருங்க ஆர்வம் காட்டினான்.. வந்தனா ஏற்க மனமில்லாமல் விலக்கம் காட்டினாள்.. மனப் புழுக்கத்தைத் தணிக்க வார இறுதியில் வெளியில் சுற்றுவார்கள்.. புழுக்கம் தணியாமல் வீட்டுக்குத் திரும்பி பலத்த சண்டை போட்டுவிட்டு அவரவர் படுக்கைகளில் சுருண்டு விழுவார்கள்..
‘என்ன வாழ்க்கை இது..!’ இருவருக்குமே சலிப்புத் தட்டியது.. இந்தச் சண்டைக்கு ஒரு முடிவேயில்லையா..? வாழ்நாள் முழுவதும் சண்டையோடுதான் காலம் கழியப் போகிறதா..? விதி வகுத்த வாழ்க்கை இதுதானா..?
அருகருகே அமர்ந்திருந்தாலும் தொலைதூரத்தில் விலகியிருப்பதைப் போல ஒட்டாத மனதுடன் உட்கார்ந்திருந்தவர்களிடம் வந்தாள் பூக்காரி..
“அம்மாவுக்கு பூ வாங்கிக் கொடுங்கய்யா.. ஆசையாசையாய் கட்டிக்கிட்ட பெண்டாட்டிக்கு பூ வாங்கிக் கொடுக்க வேணாமா..?”
அவள் நீட்டிய மல்லிகைப்பந்தை வாங்கித் தலையில் வைத்துக் கொண்ட வந்தனாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி பூக்காரிக்கு பணத்தை நீட்டிய விவேக்..
“அதைச்சொல்லு.. ஆசையாசையாய் என் கல்யாணத்தை கலைத்து விட்டுக் கட்டிக்கிட்ட மகராசிதான் இவ..” என்றான்..
விசுக்கென்று கோபமாய் எழுந்த வந்தனா விடுவிடுவென நடந்து விட்டாள்.. முகம் இறுகிப் போன விவேகானந்தன் வேண்டுமென்றே தாமதமாக வந்தான்.. காரின் மீது சாய்ந்து நின்றிருந்தவளை அறிமுகமில்லாதவளைப் போல அவன் பார்க்க.. பதிலுக்கு ‘யாரடா நீ..? வழிப் போக்கா..!’ என்று அவள் பார்த்தாள்.. சீறிப் பாய்ந்த கார் வீடு போய் சேர்ந்தது.. அவனை முந்திக் கொண்டு அவள் சென்றுவிட.. இவன் பல்லைக் கடித்தபடி காரைப் பார்க் பண்ணி விட்டுப் போனான்.. வீட்டுக்குள் நுழைந்தால் அவள் துணிகளைப் பெட்டிக்குள் திணித்துக் கொண்டிருந்தாள்.. விவேகானந்தனுக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது..
“என்னடி பண்ற..?”
“பார்த்தாத் தெரியலை.. என் வீட்டுக்குக் கிளம்பிக்கிட்டு இருக்கேன்..”
“இதுக்கு எதுக்குடி என் கல்யாணத்தைக் கலைச்சு எனக்கு கழுத்தை நீட்டின..?”
“நானா ஒன்னும் நீட்டலை.. எங்க வீட்டில நீட்ட வைச்சிட்டாங்க.. மத்தபடி உங்க மேல ஆசைன்னு பினாத்த வேணாம்.. ஆமாங்க.. நான் உங்க கல்யாணத்தைக் கலைச்சேன் தான்.. உங்க மேல ஆசைப்பட்டுக் கலைக்கலை.. பழி வாங்கக் கலைச்சேன்.. போதுமா..?”
“பழி வாங்கவா..? எதுக்கு..?”
“செந்தில்நாதன்கிட்ட என்னை ‘அட்டுபிகர்..’ ‘நசுங்கிப் போன தகர டப்பா மூஞ்சி..’ எக்ஸெட்ரா.. எக்ஸெட்ரான்னு வர்ணிச்சதுக்குத்தான்..”
“ஓ..” அவனது கண்கள் இடுங்கின.. அவளை அவன் பார்த்த பார்வையில் அவள் பயந்து போனாள்.. முதுகுதண்டு ஜில்லிட்டது..
“அவன் மேல அவ்வளவு ஆசையா..? அவன் காதலைச் சொல்ல விடாம நான் தடுத்ததில நீலாம்பரி மேடம் என்னைப் பழிவாங்கக் கிளம்பிட்டாங்க..”
“உங்க தலை..” அவள் உதடுகள் துடிக்க வெடித்தாள்..
“அவனும் அவன் மூஞ்சியும்.. அவன் லவ்லெட்டரைக் கொடுத்திருந்தாக் கிழித்து அவன் முகத்தில விட்டெரிஞ்சிருப்பேன்.. ச்சே..”
கண்களில் நீர் மல்கத் திரும்பப் போனவளை ஆவேசமாக இழுத்து அணைத்து அவளது முகமெங்கும் முத்தங்களைப் பதித்தான் விவேகானந்தன்.. எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் திகைத்து நின்றவள்.. தன்னுணர்வு திரும்ப..
“விடுங்க என்னை..” என்று திமிறினாள்..
“விட முடியாதுடி.. பைத்தியம்.. அந்த செந்தில்நாதன் ஒரு பொம்பளைப் பொறுக்கி.. அவன் உனக்கு லவ்லெட்டர் கொடுக்க வந்தான்.. தடுத்து நிறுத்த வாய்க்கு வந்த எதையோ சொன்னேன்.. அதுக்கா இவ்வளவு கோபம்..?”
“அது என்ன ஈஸியான பேச்சா..? அது போதாதுன்னு உங்க மேல ஆசைன்னு பட்டம் கட்டி விட்டிங்களே..”
“அது பொய்யா..? எங்கே.. என் கண்ணைப் பார்த்துச் சொல்லு..”
அவளது கன்னங்களை நிமிண்டியவன் முகத்தை நிமிர்த்து விழிகளுக்குள் உற்றுப் பார்த்துப் புருவங்களை உயர்த்தினான்.. அவளால் மறுக்க முடியவில்லை.. விம்மலுடன் அவன் மார்பில் குத்தியவளை வெற்றிப் பெருமிதத்துடன் இழுத்து அணைத்துக் கொண்டான்.. வந்தனா தேம்பிக் கொண்டிருந்தாள்..
“ஆக்சுவலா.. எனக்கு உன் மேல் கொள்ளை ஆசைடி.. படிக்கிற பொண்ணு மனசைக் கெடுத்து விடக் கூடாதுன்னு நான் பொறுமை காத்தா.. காத்திருந்தவன் காதலிக்கு ஒரு பொறுக்கி லவ் லெட்டர் கொடுக்க வர்றான்.. நான் என்ன செய்யட்டும்.. சொல்லுடி..”
‘இவனுக்கு என்மேல் ஆசையா..?’
விழி விரியப் பார்த்தவளின் கன்னங்களை நிமிண்டி.. முத்தமிட்டு..
“என்னடி..?” என்று கண் சிமிட்டினான்..
“எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்..”
“எனக்கு அது தெரியும்டி.. வம்பிழுத்து ஜாடை பேசறது.. சண்டை போடறதெல்லாம் சும்மா.. அம்மணி என்னைப் பார்க்கனும்ங்கிற ஆசையில்தான் வாசல் தெளிச்சுக் கோலம் போடற சாக்கில வர்றான்னு தெரிஞ்சுக்கிட்டுத்தான் நானும் வாசலுக்கு வந்து நிற்க ஆரம்பிச்சேன்..”
“என் மனசில என்ன இருக்குன்னு எனக்கே தெரியலை..”
“எனக்குத் தெரிஞ்சிருச்சு.. நீ குழந்தைடி.. உன் மனசும் கண்ணும் என்னைத் தேடின தவிப்பு ஓர் மெல்லிசைடி.. அதை உணர்ந்த பின்னாலே கோடிஸ்வர சுகுணாகிட்ட என் மனசு போகுமா..? சொல்லு..? உனக்கு அவ நிகரில்லடி..”
“இது தெரியாம நான் கல்யாணத்தைக் கலைக்கப் பிளான் பண்ணினேன்..”
“என் மேல இருக்கிற ஆசையினால்தானே..?”
“இல்லைன்னு சொல்ல மாட்டேன்.. உங்களுக்குத்தான் என் மேல் ஆசையில்லை..”
“ஏய்ய்.. என் ஆசையின் அளவு வானத்தைப் போலடி..”
விவேகானந்தன் அவளைக் கட்டிக்கொள்ள.. பிரமிப்புடன் அண்ணாந்து அவன் முகம் பார்த்தாள் வந்தனா.. கண்களைச் சிமிட்டியவன் அவளுடன் கட்டிப் பிணைந்து படுக்கையில் சரிந்தான்.. மெல்லிசையாய் ஓர் காதல் பரிணமித்து அவர்கள் இருவரையும் பிணைத்தது.. விடுபட முடியாத பிணைப்பு அது.. இனி அவர்களின் வாழ்வில் கோபம் இல்லை.. கூடல் மட்டும் தான்..
– முற்றும் –
Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.