Chapter 04
மழைச்சாரல் உடல் நனைத்தும்..
என் மனச்சாரல்
உன் மனதை நனைக்கவில்லையே..
ஸ்டூடன்ஸ் சயின்ஸ் ஸ்கூல்.. என்ற பேனர் கட்டப் பட்டிருந்த தரைத்தளத்தில் அபார்ட்மென்டின் முன்னால் நின்று கொண்டிருந்தான் சதிஷ்.. அவன் விழிகள் எதிர் வீட்டின் தோட்டத்தின் மீது பதிந்திருந்தன..
“என்ன சார்.. எலுமிச்சை பழத்திலே கரண்ட் எடுக்கிறதை விட்டுட்டு சப்போட்டா பழத்திலே கரண்ட் எடுக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கீங்களா..? சப்போட்டா பழத்திலே ஜாம் வேணும்னா செய்யலாம்.. கரண்டை செய்ய முடியாது..”
வேலை முடிந்து அப்போதுதான் வீட்டுக்குத் திரும்பியிருந்த பிரதாப்.. காரிலிருந்து இறங்கியபடி வேடிக்கையாகச் சொன்னான்..
“ஹா.. ஹா..” என்று அதை ரசித்து சிரித்தான் சதிஷ்.
“திடீர்னு என்ன சப்போட்டா பழம் மேல உங்க கருணை திரும்புது..?”
“நீயேன் சப்போட்டாவையே கட்டி இழுக்கிற..?”
“நீங்க பார்த்த திசையிலே சப்போட்டாபழ மரம்தானே இருக்கு..?”
“அதை யாரு பார்த்தா..? நான் அந்த வீட்டு வாசல் முன்னாலே இருக்க ஆர்ச்சைத்தானே பார்த்தேன்..?”
“நம்பிட்டேன்…”
சதிஷிடம் பேசியபடி மாடிப்படியில் கால் வைக்கப் போன பிரதாப் தேங்கி நின்றான்.. அவன் பார்வை போன திசையில் பார்த்த சதிஷ் மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டான்..
அங்கே.. பிரதாப்பையே அள்ளிப் பருகுவதைப் போல பார்த்தபடி ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தாள் அஞ்சனா.
“நான் தான் சப்போட்டா பழ மரத்தை பார்த்தேன்.. இப்ப நீ எதைப் பார்த்துக்கிட்டு நிற்கிற..?” கிண்டலாகக் கேட்டான் சதிஷ்..
“நான் மெயின்ரோட்டைப் பார்த்தேன் சார்.. ஹெவி டிராபிக்.. இல்லையா..?”
“பாண்டிச்சேரியில இருந்து விழுப்புரம் போற நேராட்டில ஹெவி டிராப்பிக்கா இல்லாம.. வெறிச்சோடிப் போயா இருக்கும்..? இதை நான் இல்லைன்னு சொல்ல முடியாதுங்கிற நம்பிக்கையிலதானே ரீல் விடற..?”
“ரீலா..?”
“பின்னே..? இது ரீல்தானே.. இங்கேயிருந்து பார்த்தா விழுப்புரம் போற மெயின்ரோடு கிளீனாத் தெரியறது உனக்கு கதைவிட தோதாப் போச்சில்ல..?”
அதற்குள் அஞ்சனா அவர்களை சமீபித்துவிட.. பிரதாப் சதிஷிடம் தீவிரமாக பேச ஆரம்பித்தான்..
“ஆனாலும் நீங்க ஜீனியஸ் சார்..”
“அப்படியா..?”
“ஆமாம் சார்.. எங்ககிட்ட ஒரு எலுமிச்சை பழத்தைத் தந்தால் என்ன செய்வோம்..? ஜூஸ் போட்டுக் குடிப்போம். அப்புறமா லெமன் சாதம் செய்வோம்.. அதுக்கப்புறமா வண்டி டயருக்கு அடியில வைத்து நசுக்குவோம்.. ஆனா நீங்க.. அதே எலுமிச்சம்பழத்தில இருந்து கரண்டையே எடுக்கறீங்களே.. நீங்க ரொம்ப கிரேட் சார்..”
அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வந்த அஞ்சனா தயங்கி நின்றாள்..
‘இவளைக் கண்டா இவன் ஸ்பீடு பிரேக் போடறான். இவனைக் கண்டா இவ காலில இரும்புக் குண்டைக் கட்டிவிட்டதைப் போல நகரமாட்டேங்கிறா.. என்னவோ பிலிம் ஓடுதே..’
சதிஷ் மர்மப் புன்னகையுடன் அஞ்சனாவைப் பார்த்தான்.. அவள் முகத்தில் எதையோ கேட்கத் துடிக்கும் ஆவல் தெரிந்தது..
“என்ன அஞ்சனா.. காலேஜ் முடிந்து வர்றியா..?”
எதையாவது கேட்க வேண்டுமே என்று சதிஷ் கேட்டு வைக்க “பின்னே.. சினிமா முடிஞ்சா வரப்போறா..?” என்று அவன் காதருகே முணுமுணுத்தான் பிரதாப்..
அவன் சொன்னதற்கு சிரிக்கவும் முடியாமல்.. சிரிக்காமல் இருக்கவும் முடியாமல்.. புன்னகைத்த வைத்தான் சதிஷ்.. பொதுவாகவே அவன் புன்னகை மன்னன்தான்.. எல்லோரையும் நேசிக்கும் புன்னகையும், எல்லோரையும் சிநேகிக்க வைக்கும் புன்னகையும் அவனுக்குச் சொந்தமானது..
அறிவியலில் முதுகலைப் பட்டம் முதற்கொண்டு நிறையப் பட்டங்களை வாங்கியிருக்கிறான்.. கல்லூரியில் லெக்சரராக இருந்தவன்.. அறிவியலின் மீதிருந்த அளவு கடந்த ஈடுபாட்டினால் வேலையை ராஜினாமா பண்ணிவிட்டு புதுமையான அறிவியல் பள்ளி ஒன்றை புதுச்சேரியில் நடத்தி வருகிறான்.
“அறிவியல்ன்னாலே பல மாணவர்களுக்கு வேப்பங்காயாய் கசக்குது பிரதாப்.. காரணம் என்ன தெரியுமா..? கண்ணைக் கட்ட வைக்கும் ஃபார்முலாகள் தான்.. உண்மையிலே அறிவியல்ன்னாலே அருமையான விளையாட்டுத்தான்.. இதை கத்துக்கிற விதத்திலே கத்துக்கிட்டா குதூகலமாயிருக்கும்…”
பிரதாப்பிடம் தனது பள்ளியைப் பற்றி விளக்கும் போது சதிஷின் கண்கள் ஜ்வலிக்கும்.. அறிவியலின் மீதான அவனின் காதல் அற்புதமானது..
“அக்கா உங்களுக்கு போட்டியா சயின்ஸ் வந்து.. சார் முன்னாலே வந்து நிக்குது.. உங்களை விட அதிகமாக சயின்ஸை காதலிக்கிறார்.. கவனத்தில் வைச்சுக்கங்க..”
பிரதாப் விளையாட்டாய் சதிஷின் மனைவியை எச்சரிப்பான்.. உமா மகேஸ்வரி சிரிப்பாள்..
அப்படிப்பட்ட சதிஷிடம் அஞ்சனா தனது அறிவியலின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தினாள்..
“காலேஜ் விட்டுத்தான் வர்றேன் சார்.. எனக்கு உங்க ஸ்கூலைப் பத்தி தெரிஞ்சுக்கணுமே.. சயின்ஸ்ன்னா எனக்கு உயிர்…”
அவளின் பார்வையே.. பிரதாப்தான் அவளின் உயிர் என்று சொல்லாமல் சொல்லியது.. அதை சதிஷ் அறிந்து கொள்ள மாட்டான் என்ற நினைவில் அவள் கதை பிணைந்தாள்..
சதிஷ்.. உமா மகேஸ்வரியை காதலித்து மணந்தவன்.. அவனுக்கா காதலர்களின் பார்வை தெரியாது..?
“ஈஸிட்..? அப்புறம் எதுக்காக அஞ்சனா இன்ஜினியரிங்கில சேர்ந்து படிக்கிற..? சயின்ஸை படிச்சிருக்கலாமே..?”
சதிஷின் கேள்வியில் அஞ்சனா திருதிருக்க.. பிரதாப் அதை சுவாராஸ்யமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்..
“அது.. அது.. வந்து.. மேத்ஸும் ஒருவகையான சயின்ஸ்தானே சார்..”
அவள் திறமையாக சமாளிக்க..
“இதைத்தான் சமாளிப்பிகேசன்னு சொல்லு-வாங்களோ சார்…” என்று சதிஷின் காதோரமாக முணுமுணுத்தான் பிரதாப்…
“அப்படிங்கறே..?”
“ஆமாம் சார்..”
“ஓகே.. உள்ளே வா.. என் ஸ்கூலைப் பத்தி சொல்றேன்..”
சதிஷ் அங்கேயே நின்றுகொண்டு ஸ்கூலைப் பற்றிய விவரம் சொல்லுவான் என்கிற நினைவில் பேச்சை வளர்த்த அஞ்சனா ஏக்கத்துடன் பிரதாப்பை பார்த்தாள்..
‘இவன் இங்கே நிற்க.. நான் அங்கே போகணுமா..?’ விட்டால் அன்பே நீ இங்கே.. நான் அங்கே போனால் இன்பம் காண்பது எங்கே..? என்று பாடி விடுவாள் போலத் தோன்றி வைக்க சதிஷின் பின்னாலேயே சென்றான் பிரதாப்..
Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.