Chapter 09

0Shares

வில்லேந்தும் ராமனும்…

சொல்லேந்தும் யேசுவும்..

பிறை கொண்ட நபிகளும்..

இறையருளை சொன்னாரே..

இறைவனை உணர்ந்திருக்கிறோம்.. பார்த்திருக்-கிறோமா..? அவர் சிலுவையைச் சொன்னாரா..? சக்ராயுதத்தை ஏந்தினாரா..? பிறையினில் நின்றாரா..?

எதையும் அறியோம்.. எல்லாமும் மரபு வழியாக நம் மதத்தின் வழியாக நம்மிடம் வந்தவைதான்.. அப்படியிருக்க உன் தெய்வம் உயர்வு, என் தெய்வம் உயர்வு என்ற மதச்சண்டைகள் எதற்கு..?

இறைவன் ஒருவனே! அவனே அல்லா! அவனே கிருஷ்ணன்! அவனே இயேசு! என்று நினைத்துப் பார்த்தால் நம்மிடையே மதச்சண்டைகள் வருமா..?

அவரவர்க்கு அவருடைய அம்மா உயர்வுதான் என்பதால் மற்றவர்களின் அன்னையை குறைவாக நினைப் பார்களா..? மதத்தில் மட்டும் ஏன் அப்படி நினைக்க வேண்டும்..?

நிஷாவின் தோள் சாய்ந்து ஹஜ் யாத்திரையைப் பற்றிக் கேட்கும் அஞ்சனா தீவிர பெருமாள் பக்தை. அவள் திருப்பதியின் அதிசயங்களை எவ்வளவு சிலிர்ப்புடனும் பிரமிப்புடனும் கேட்பாளோ, அதே பிரமிப்புடனும் சிலிர்ப்புடனும் மெக்காவின் அதிசயங்களைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தாள்..

அவளின் அந்தத் தன்மை பிரதாப்பை வசீகரித்தது. அகன்ற விழிகளை விரித்து சுவாரஸ்யமாக கதை கேட்டுக் கொண்டிருந்தவளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான் பிரதாப்..

“நைட்டுக்கு என்னம்மா பண்ணப்போற..?” சபியுல்லாவின் அம்மா கேட்டார்..

சாயங்காலமே மாவு பிணைஞ்சு வைச்சிட்டேன் அத்தம்மா.. புரோட்டா போட்டு, மட்டன் சாப்ஸ் பண்ணப் போறேன்.. இணக்கமாக பதில் சொன்னாள் நிஷா..

மாமியாருக்கும் மருமகளுக்குமிடையே நிலவிய இயல்பான பாசப்பிணைப்பைப் பார்த்த அஞ்சனாவுக்கு பிரதாப்பின் தாயும் இதைப்போலவே அவளிடம் உரிமையுடனும் பாசத்துடனும் இருப்பாளா என்ற கவலை எழுந்தது..

பரிமளம்கூடப் பரவாயில்லை. கணவர் அருகில் இல்லாத நேரங்களில் சிரித்த முகமாய் இருப்பாள்.. பிரம்மநாயகத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.. எப்போதும் கடுகடுவென்ற முகபாவனையுடன் இருப்பார்..

“உன் அப்பாவுக்கு பிரம்மநாயகம்ன்னு யாருப்பா பெயர் வைச்சது..?” என்பான் ஸ்ரீதேவியின் கணவன் ராமன்..

“நிச்சயமாய் நான் வைக்கலை சார்…”

“அதான் தெரியுமே.. உன் பெயரையே நீ வைச்சிருக்கமாட்டே.. உன் அப்பாவுக்கா பெயர் வைச்சிருக்கப் போற..? அதை உன் அப்பப்பா செய்திருப்பார்.”

“அப்பப்பாவா..? உங்க பெயர் ராமனா, இல்லை வி.ஹெச். அப்துல் ஹமீதா..?”

“அடப்பாவி.. நான் ஸ்ரீதேவியின் புருஷன் ராமன்ப்பா..”

“அதிலயும் அக்காவோட ஹஸ்பெண்டுன்னுதான் உங்களை அறிமுகப்படுத்திக்கறீங்க.. உங்களைப் பெத்தவங்களை அம்போன்னு விட்டுட்டீங்க.. இருங்க உங்க அம்மா வரும்போது பத்த வைக்கிறேன்..”

“நீ கொளுத்தி போட்றதிலேயே குறியாய் இரு..”

“அது இருக்கட்டும்.. நீங்க எதுக்காக அப்பாவோட பெயரைப் பத்தி அத்தனை அக்கறையாய் விசாரிச்சீங்க..?”

“அதுவா..? உன் அப்பாவுக்கு பிரம்மநாயகம்ங்கிற பெயர் ஷீட்டே ஆகலை..”

“பின்னே..?”

“பேசாம உங்க தாத்தா அவருக்கு கடுவன் பூனைன்னு பெயர் வைச்சிருக்கலாம்..”

ராமன் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது பிரம்மநாயகம் அவர்களை கடந்துபோக.. அவன் சொன்ன பெயர் பொருத்தத்தில் பிரதாப் சிரித்து விடாமலிருக்க படாதபாடுபட்டான்.. அதை மறைவாக நின்று கவனித்து கொண்டிருந்த நினைவில் அஞ்சனா தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள்…

அவளின் அந்தப் புன்னகையை அவளது விழிகள் பிரதிபலித்தனவோ என்னவோ.. பிரதாப்பின் கண்களில் மின்னலடித்தது.. 

‘இதுக்கொன்னும் குறைச்சலில்லை..’ அஞ்சனாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது..

ரகசியப் பார்வையும்.. ரகசியச் சிரிப்புமா என் உயிரை போட்டுக் குறைப்பான்.. ஒரு வார்த்தை கூட வாய் திறந்து சொல்லமாட்டான். ‘இவனே இப்படின்னா இவனோட கடுவன் பூனை அப்பா எப்படியிருப்பாரோ..’

பிரம்மநாயகம் கடுவன் பூனைதான்.. கொஞ்சம் கூட சிரிப்பைக் காட்டாத முகம்..

“ஏன்க்கா.. உங்ககூடவாவது அவர் சிரித்துப் பேசுவாரா மாட்டாரா..?” நிஷா பரிமளத்திடம் சந்தேகம் கேட்பாள்..

“ஏய்ய்.. ஒன்னுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்காங்க.. சிரிக்காமலா அவங்க பிறந்திருப்பாங்க..?” பரிமளத்திற்கு பதிலாக லலிதா சிரித்தாள்..

“ம்ஹீம்.. சிரிப்புக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைடிம்மா..” பரிமளம் விட்ட அனல் பெருமூச்சில் அத்தனை பெண்களும் விழுந்து விழுந்து சிரித்து வைத்தார்கள்…

அந்த விசித்திர தம்பதிகளுக்குத்தான் மருமகளாக போக ஆசைப்பட்டாள் அஞ்சனா..

“அத்தம்மா.. உங்க கால் எப்படியிருக்கு..?”

பிரதாப் நலம் விசாரித்ததில் நிஷாவின் மாமியார் முகம் மலர்ந்துவிட்டார்..

“உனக்காவது கேட்கனும்னு தோணுச்சே.. உன் அப்பா இந்தப் பக்கமா ஏழு தடவை மொட்டை மாடிக்கு ஏறினாரு.. வலி எப்படியிருக்குன்னு கேட்கனுமே.. ஊஹூம்.. மகராசன் என்னவோ அவர் சொத்தே கொள்ளைபோனதைப் போல கடுகடுன்னு முகத்தை வைச்சுக்கிட்டு முறைச்சுகிட்டே போனாருப்பா..”

“விடுங்க அத்தம்மா அவர் முகமே அப்படித்தான்..”

“அதெப்படிம்மா விடறது..?”

“எங்க அம்மா காலொடிஞ்சு கிடந்தாலே அவர் ஏன்னு விசாரிக்க மாட்டாரு.. இதில உங்களை விசாரிக்கலைன்னு நாம குறை சொல்ல முடியுமா..?”

“முடியாதுதான்..”

“நீங்கதான் பார்த்து நடக்கக்கூடாதா..?”

“ஏன்ப்பா.. தரையிலே தண்ணி கொட்டிக் கிடக்கக் கண்டிருக்கோம்.. எண்ணை கொட்டிக்கிடக்க கண்டிருக்கோமா..?”

“அடடா.. அது எப்படிக் கொட்டிச்சு..?”

“குக்கர் வெடிச்சா.. கொட்டாதா..?”

“குக்கருக்குள்ள எண்ணையா இருந்துச்சு..?”

“குக்கருக்குள்ள இருந்த மட்டன் குருமாவுக்குள்ள எண்ணையாத்தானே இருந்துச்சு..”

அவர்களின் கலந்துரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்களுக்கு சிரிப்புதான் வந்தது.. சபியுல்லாவின் தாயுடன் வெகு இணக்கமாக பேசிக் கொண்டிருந்த பிரதாப்பின் மீது அஞ்சனாவுக்கு பிரியம் ஏற்பட்டது..

0Shares

Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link