Chapter 13

0Shares

கார்மேகம் உந்தன் கண்கள்..

காதல் மழையைத்தான் பொழியும்..

நனைய வரும் நேரத்திலே..

மழை பொழிவதை நீ நிறுத்தாதே..

கோதண்டத்தின் முன்னால்… சில பத்திரங்களும் பேங்க் பாஸ் புத்தகமும் இருந்தன.. கட்டிலில் அஞ்சனாவின் நகைப்பெட்டி திறந்து கிடந்தது.. அவர் மும்முரமாக கையிலிருந்த கால்குலேட்டரைத் தட்டிக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்..

அறைக்குள் எட்டிப்பார்த்த அஞ்சனாவின் கண்கள் கலங்கின.. அவரின் முகத்திலிருந்த பொறுப்பிலும் கவலையிலும் அவள் மனம் நெகிழ்ந்தாள்.. இதுவரை அவளைத் தவிர வேறு எந்த நினைவும் அவர் மனதில் இருந்திருக்கிறதா..?

“அஞ்சு.. இந்த சுடிதார்செட் நல்லாயிருக்கும்மா..? உனக்கு ஷூட்டாகுமேன்னு வாங்கினேன்..”

“அஞ்சு.. அட்டிகையைப்பார்.. உனக்குப் பிடிச்சிருக்கா..? சீட்டுப் பணம் வந்தது.. உடனே உனக்கு நகையை எடுத்திட்டேன்..”

“அஞ்சு.. நீ சைக்கிளில் போனது போதும்.. இந்தா புது ஸ்கூட்டியின் சாவி..”

ஒருபோதும் தனக்காக என்று எதையும் அவர் வாங்கிக் கொண்டதாக சரித்திரம் இல்லை.. பண்டிகை சமயங்களில் கூட அஞ்சனாதான் அவருக்கும் புதுத்துணி எடுக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தி எடுக்க வைப்பாள்..

மற்றபடி அந்த நினைவே அவருக்கு இருக்காது..

“அஞ்சு.. அஞ்சு.. அஞ்சு..” அது ஒன்றுதான் அவருடைய தாரக மந்திரம்.. அவர் உயிர் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் மகளுக்காகத்தான் என்பதை அவர் ஒவ்வொரு நொடியும் மகளுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தார்…

அந்த அப்பா அவளுக்காக ஒரு மாப்பிள்ளையைப் பார்த்திருக்கிறார்.. அவனும் மறுநாள் அவளைப் பெண் பார்க்க வரப்போகிறான்.. அதை வேண்டாமென்று எப்படி அவள் மறுப்பாள்..? அவள் விழிகள் இரண்டும் நீரில் மிதந்தன.. பிரதாப்பின் நினைவில் அவள் இதயம் கனத்தது.

அவள் எந்த நம்பிக்கையில் தந்தையின் ஏற்பாடுகளை தடுத்து நிறுத்துவாள்..? வெறும் பார்வை பரிமாற்றங்களைத் தவிர அவளுக்கும் பிரதாப்புக்கும் இடையில் என்ன இருக்கிறது..? அந்தப் பார்வையைக் கூட அவள் தானே பார்ப்பாள்..? அவன் மற்றவர்களைக் கவனித்துக் கொண்டு அவள் பக்கமாக திரும்பக்கூட மாட்டானே.. 

“அப்பா” அவள் தயக்கத்துடன் அழைத்தாள்..

“என்னம்மா..” நிமிர்ந்து பார்த்த கோதண்டம் பரிவுடன் கேட்டார்..

“நானே படிச்சிக்கிட்டு இருக்கேன்.. இப்போ எனக்கு எதுக்குப்பா கல்யாணம்..?”

கோதண்டத்தின் முகத்தில் பாசம் படர்ந்தது.. மகள் அவரை விட்டுப் பிரிய வேண்டி வருமோ என்று தவிக்கிறாள் என்ற நினைவில் அவரது கண்கள் பனித்தன…

“அம்மாடி.. நான் அதையெல்லாம் யோசிக்கலேன்னா நினைக்கிற..? இந்த மாதக் கடைசியில உன் படிப்பு முடியுதும்மா..”

“அதுக்கப்புறம் வேலை பார்க்கிறேனேப்பா..”

“எங்கே வேலைக்குப் போவ? ஐ.டி. கம்பெனிகள் சென்னையிலயும், பெங்களூரிலயும்தானே நிறைய இருக்கு.. அங்கே போனா நீ அப்பாவை பிரிஞ்சுதானே போயாகணும்..”

“நீங்களும் என்கூட வந்துடலாமேப்பா..”

“நான் பாண்டிச்சேரியில வேலை பார்க்கிறேன்ம்மா.. தமிழ்நாட்டுக்கோ, கர்நாடகாவுக்கோ நான் டிரான்ஸ்பர் வாங்க முடியுமா..? இது ஸ்டேட் கவர்ன்மெண்ட் வேலையாச்சே…”

“அப்படின்னா.. எனக்கும் பாண்டிச்சேரிலயே வேலை பார்க்கிற மாப்பிள்ளையாப் பாருங்க…”

பிரதாப்பின் நினைவில் அவள் சொல்ல.. கோதண்டம் கனிவாக புன்னகை செய்தார்..

“அப்படித்தான் பார்த்திருக்கேன் அஞ்சனா.. மாப்பிள்ளை பாண்டிச்சேரி யுனிவர்சிட்டியில் வேலை பார்க்கிறார்.. அவரோட குடும்பம் சேலத்தில இருக்குது.. இப்போதைக்கு ரூம் எடுத்துத் தங்கியிருக்காராம்…”

கோதண்டத்தின் பேச்சில் திருமணத்திற்கு பின்னால் அந்த மாப்பிள்ளை வீட்டோடு மாப்பிள்ளையாக தங்கி விடுவார் என்ற திட்டம் வெளிப்பட்டது. அதை மறுத்துக் கூற முடியாமல் வாயடைத்துப் போனாள் அஞ்சனா.. தாயில்லாத மகளை தாய்க்குத் தாயாக வார்த்த தகப்பனின் மனதிலிருக்கும் எதிர்பார்ப்பை அறிந்த பின்னால் அதற்கு மறுப்புக் கூற அவளால் எப்படி முடியும்..?

ஆனால்.. பிரதாப்..? அவனது நினைவு..?

அவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அவள் மனதை தகப்பனாரிடம் எப்படி புரிய வைப்பது என்ற வழிவகை தெரியாமல் திகைத்தாள்..

“மாப்பிள்ளையோட அம்மா எனக்கு தூரத்துச் சொந்தம் அஞ்சனா.. அக்கா முறையாகணும்னு வைச்சுக் கோயேன்.. அந்த மட்டிலும் பாண்டிச்சேரியிலேயே வேலை பார்க்கிற நம்ம இனத்து மாப்பிள்ளை கிடைச்சிட்டாருன்னு எனக்கு எவ்வளவு சந்தோசமாயிருக்கு தெரியுமா..?”

அஞ்சனாவின் மனதில் சாட்டையடி விழுந்தது.. அவள் அதிர்ந்து போனவளாக நிமிர்ந்து பார்த்தாள்..

இதை எப்படி அவள் மறந்தாள்..? பிரதாப்பும் அவளும் வேறு வேறு இனமென்ற நினைவே அவள் நெஞ்சில் வரவில்லையே…

கோதண்டத்திற்கு இன அபிமானம் அதிகம் என்று நினைக்கும்போதே பிரம்மநாயகமும் அப்படித்தான் என்ற நினைவு அவள் நெஞ்சில் வந்தது..

“எங்காளுகளில் இப்படி வழக்கமில்லை..”

இது அவர் அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தை பிரயோகம்.. இதில் அவளது காதல் எப்படி நிலைக்கும்..?

முதலில் நீ காதலிக்கறவன், உன்னைக் காதலிக் கிறானான்னு பார்.. அவளது நெஞ்சம் இடித்துரைத்தது..

உண்மைதானே.. அவளது காதலன் அவளைக் காதலிக்கிறானா..? அதையறியாமல் அவளது காதல் நிறை வேறுமா..? நிறைவேறாதா..? என்ற ஆராய்ச்சியில் அவள் பைத்தியக்காரத்தனமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறாளே..

அஸ்திவாரமே இல்லாத சீட்டுக்கட்டு மாளிகை யல்லவா அவளின் காதல்..? அடிப்படையே பலமில்லாமல் இருக்கும் போது அவள் யாரிடம் தன் காதலைப் பற்றிக் கூறுவாள்..?

எதிர்காலமே இல்லாத அந்தக் காதலை நிலைக்க வைக்க தன்னால் முடியுமா என்ற நிராசையோடு மொட்டை மாடிக்கு தனிமை நாடிச் சென்றாள் அஞ்சனா.. இருள் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில் இரண்டாம் மாடியிலிருந்த நிஷாவின் வீட்டிலிருந்தும் லலிதாவின் வீட்டிலிருந்தும் பேச்சுக்குரல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன.. சற்றுத் தொலைவில் தெரிந்த விழுப்புரம் போகும் ரோட்டின் நெருக்கடியைக் கவனித்தபடி அவள் அசையாமல் நின்றாள்..

0Shares

Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link