Chapter 16

0Shares

ஊரெல்லாம் இருந்தபோது

தூறல் வந்து விழவில்லை..

உன்னோடு இருந்தபோது

சாரல் வந்து நனைத்ததும் ஏன்..?

மகள் மயங்கிக் கிடப்பதைக் கண்டதும் கோதண்டம் சுற்றுப்புறத்தை மறந்துவிட்டார்.. சூழ்நிலையை மறந்து விட்டார்..

“உஸ்ஸ்.. சத்தம் போடாதீங்க.. நிஷா அந்த தண்ணி பாட்டிலை எடு.. லேசா முகத்தில தண்ணிய அடிக்கலாம்” என்றபடி அஞ்சனாவை மடியில் தாங்கிக் கொண்ட பரிமளத்தின் சொற்களில் புதைந்திருந்த எச்சரிக்கையை கவனிக்க மறந்துவிட்டார்..

“அஞ்சனா.. ஆ.. ஆ..!”

அவர் போட்ட சத்தத்தில் ஐந்து பெண்களும் தலையில் அடித்துக் கொள்ள அடுத்த நொடியில் மாப்பிள்ளை வீட்டார் அந்த அறைக்குள் வந்து குழுமி விட்டார்கள்..

“பொண்ணு மயக்கமா கிடக்காமா..?”

“வியாதிக்காரப் பொண்ணோ..?”

“என்ன வியாதியாயிருக்கும்..?”

“மசக்கை வந்தா.. அதுக்கும் மயக்கம்தான் வரும்..?”

“ஏன் சாந்தி.. உன் ஒன்னுவிட்ட தம்பி பொண்ணுன்னு சொன்னியே.. நாலையும் விசாரித்துப் பார்த்தியா..?”

“நானெங்கேவிசாரிச்சேன்..? வருசக்கணக்கா போக்குவரத்தே இல்லையே..”

“அடிப்பாவி இந்தக் காலத்தில போயி இப்படியா இருந்து வைப்ப..? அததுக ஜாதகம் பார்க்கிறதுக்கு முன்னால டிடக்டிவ் ஏஜன்ஸியைத் தேடி ஓடுறாங்க.. நீ என்னடான்னா சின்ன வயசில நானும் என் தம்பியும் பாசமலரை வளர்த்தோம்ன்னு கதை பேசிக்கிட்டு பொண்ணுப் பார்க்க கிளம்பி வந்துட்டே..?”

“இப்படி நடக்கும்ன்னு நினைச்சே பார்க்கலையே..”

“என்னத்தை நினைச்சியோ.. நீ கிளம்பி வந்தது போதாதுன்னு எங்களையும் கிளம்பி வர வைச்சிட்டே.. என்னத்தைச் சொல்ல.?”

பெண் பார்க்க வந்திருந்தவர்கள் சகட்டு மேனிக்கு வாய்க்கு வந்ததையெல்லாம் பேசித்தள்ள.. அதை அந்த அபார்ட்மென்ட்வாசிகளால் சகித்துக்கொள்ள முடிய வில்லை.. ஆனாலும் பெண் சம்பந்தபட்ட விவகாரம் என்பதால் அஞ்சனாவின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு பல்லை கடித்தபடி பொறுமை காத்தார்கள்..

மற்றவர்கள் பொறுமை காக்க.. பெண்ணை பெற்ற கோதண்டமோ ருத்ர அவதாரத்தை எடுத்தார்.. 

“வாயை மூடுங்க..” என்று கர்ஜித்தார்..

“போதும் தம்பி… எங்க வாயை மூடச் சொல்றதுக்கா பெண் பார்க்க வரச்சொன்னே..?” மாப்பிள்ளையைப் பெற்றவள் நொடித்தாள்..

“வேணாம்க்கா.. நானே என் பெண்ணுக்கு என்னாச்சோ.. ஏதாச்சோன்னு பதறிப் போயி நிற்கிறேன்.. நீ தேவையில்லாம எதையும் பேசாதே..”

“பேசற மாதிரி நிலைமையை வைச்சுக்கிட்டு எங்க வாயை மூட வராதே..”

“என்ன நிலைமையைக் கண்டுட்ட..? என் பொண்ணு மயக்கமா கிடக்கிறா.. அவ்வளவுதானே.. இதுக்கே வாய்க்கு வந்ததையெல்லாம் பேசறியே.. இன்னும் உன்னை நம்பி உன் மகனுக்கு என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தா என்னவெல்லாம் பேசமாட்ட..?”

“உன் மகமேல குறையை வைச்சுக்கிட்டு எங்களை நீ குறை சொல்றியா..?”

“இன்னும் ஒரு வார்த்தை நீ பேசினாலும் நான் கொலை காரனா மாறிடுவேன்.. முதல்ல எல்லோரும் வெளியே போங்க..”

கோதண்டத்திற்கும் கோபம் வரும் என்பதை அந்த அபார்ட்மென்ட் அன்றுதான் அறிந்தது..

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்.. கோதண்டம் அன்று மிரண்டு விட்டார்.. அவரின் கோபத்தில் அடுத்த சில நிமிடங்களில் மாப்பிள்ளை வீட்டார் இடத்தை காலி செய்தார்கள்..

அஞ்சனாவை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள்.. அவளை பரிசோதித்த டாக்டர் புருவங்களை உயர்த்தினார்..

“என்ன ஆச்சு டாக்டர்..?” கோதண்டம் கவலையுடன் கேட்டார்..

“உடம்பில எந்த கம்ப்ளெயிண்டும் இருக்கிறதா தெரியலை.. ஏதோ ஒரு மயக்கம் ஏற்படுத்தற வாசனையை இவங்க ஸ்மெல் பண்ணியிருக்கலாம்…”

டாக்டர் சொன்னதைக் கேட்டதும் ஆளுக்கொன்றாக கோதண்டத்திடம் கேள்வியை கேட்டு வைத்தார்கள்..

“ஏன் சார்.. நீங்க பாட்டுக்கு வாரத்துக்கு ஒரு தரம் சமைச்சு.. ப்ரிட்ஜில் ரொப்பி வைச்சிட்டிங்களோ.. ப்ரிட்ஜை திறந்து பார்த்த உங்க பொண்ணு நாற்றம் தாங்காம மயக்கம் போட்டு விழுந்துடுச்சோ..”

“இல்லையே பிரம்மநாயகம்.. அப்பப்பதான் சமைப்பேன்..”

“நீங்கதான் சமைப்பீங்களா..? அப்படிப் போடு.. அதான் உங்க பொண்ணு மயக்கம் போட்டு விழுந்துருச்சு.. அப்படி என்னத்தை சார் சமைச்சு வைச்சீங்க..?”

“ஏன் சதிஷ்..? இன்னைக்கு நேத்தா நான் சமைக்கிறேன்.? என் ஜானகி என்னை விட்டுப் போன நாளில இருந்து சமைச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.. அப்பல்லாம் வராத மயக்கமா.. இப்ப வந்து சேர்ந்திருக்கு..?”

“வேற ஏதாவது கெட்டுப்போன ஸ்நாக்ஸ் அயிட்டம் எதையாவது வாங்கிட்டு வந்திட்டீங்களா..?”

“இல்லையே சபியுல்லா..”

“வீட்டுக்குள்ள எலி.. கிலி ஏதாவது மண்டையைப் போட்டு வைச்சிருக்குமோ..?”

“எங்க வீட்டில எலியா..? நோ சான்ஸ் ஸ்ரீதர்…”

அதைக் கேட்ட ஸ்ரீதர் ஒரு மார்க்கமாக கோதண்டத்தைப் பார்த்துவிட்டு லலிதாவின் காதுகளில் முணுமுணுத்தான்..

“ஏண்டி லலி.. இவர் வீட்டுக்கு எலி வரவே வராதா..? இவரென்ன பூனைப் படைச் சேர்ந்தவரா..?”

“கொஞ்சம் வாயை வைச்சுக்கிட்டு சும்மாயிருக்-கீங்களா..?”

“அதானே பார்த்தேன்.. நீயாவது என்னைப் பேச விடறதாவது..”

ராமனோ.. தன் நெற்றியை ஒற்றை விரலால் தட்டியபடி பலமாக யோசித்துவிட்டு..

“ஏன் சார்.. உங்களுக்கு எதிரிகள் யாராச்சும் இருக்காங்களா..?” என்று விசாரித்து வைத்தான்…

“ஏங்க உங்களுக்கு புத்தி இப்படிப் போகுது..? இவருக்குப் போயி எதிரிகள் இருப்பாங்களா..?”

“அப்படியில்ல ஸ்ரீதேவி.. இந்த செய்வினை ஏதாச்சும் செஞ்சு வைச்சிருந்தாலும் இப்படியெல்லாம் நடக்குமில்ல..”

ஸ்ரீதேவி கணவனை முறைத்த முறைப்பில் அவன் அடங்கிப் போனான்.. அன்றிரவு தனிமையில் தன் கணவனிடம் சொன்னாள் ஸ்ரீதேவி..

“ஒரு வினையும் இல்லை.. அவளுக்கு அவளாவே வினையை வைச்சுக்கிட்டு இருக்கிறா..”

“என்னடி சொல்ற..?”

“இதைப் பாருங்க..”

ஸ்ரீதேவி மடித்திருந்த உள்ளங்கையை விரித்து நீட்டினாள்.. அதில் சிறு பஞ்சுத்துண்டு இருந்தது..

0Shares

Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link