Chapter 19

0Shares

மின்னலாக ஓர் பார்வை பார்த்தாய்..

அந்தப் பார்வையிலே விழுந்தவன்தான்

எழுந்துகொள்ள மனமில்லை…

ஒரு பலூனில் காற்று நிரப்பப்பட்டு அதன் வாசல் மூடி போட்டு அடைக்கப்பட்டிருந்தது. அந்த மூடியை ஒரு சி.டி.யின் மேல் ஒட்டினான் சதிஷ்.. அந்த சி.டி நகரத் தொடங்கியது..

“வாவ்..” என்றாள் அஞ்சனா..

“இதுதான் ஹோவர் கிராஃட் இயங்கும் முறை..” என்றான் சதிஷ்..

“ஹோவர் கிராஃப்ட்டா..?” அஞ்சனாவுக்கு புரியவில்லை..

“மிலிடிரியில் அந்த வண்டியை யூஸ் பண்ணுவாங்கம்மா.. அது கடல் ரோடு, மணல்ன்னு எல்லா வழிகளிலேயும் போகும்.. அதுக்குக் காரணம் காற்று அழுத்தம்தான்.. அதே மெத்தேடை ஃபாலோ பண்ணித்தான் இந்த பலூனையும் நகர வைத்தேன்..”

“பெண்டாஸ்டிக்..”

“இது என்ன பெரிய விஷயம்..? எங்க ஸ்கூலில் படிச்ச ஸ்டூடண்ட் ஒருத்தன் பழைய வாட்டர் பாட்டிலில் இருந்து மைக்ரோஸ்கோப்பை உருவாக்கி இருக்கிறான்.. தெரியுமா..?”

“நிஜமாகவா..?”

“அது மட்டுமா..? சோலார் பேனல் மூலமாக ஒரு ஃபேனை ஓட வைப்பாங்க.. அதிலிருந்து கனெக்சன் கொடுத்து லைட்டை எரிய வைப்பாங்க..”

“அசத்தறாங்க போங்க.. உங்க ஸ்கூலைப் பத்தி என் விகடன்ல ஒரு கவர் ஸ்டோரி வந்திருக்கே…”

“படிச்சியா..?”

“படிக்காம இருப்பேனா..? பாண்டிச்சேரியில எத்தனையோ விசயங்கள் இருக்கு.. அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர், நேரு பார்க் அதில இருக்கிற பெருமாள் கோவில், எரோவில்.. பஞ்சவடி.. நவகிரக கோவில், பிரித்தியங்கிராதேவியின் கோவில், பீச், போட்டிங் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். அதில ஒன்னா உங்க ஸ்கூலும் இருக்கு..”

“என்ன ஆச்சு.. ஐஸ் மலையைத் தூக்கி தலையில வைக்கிற..?”

“உண்மையைத்தானே சொன்னேன்..?”

“ஆமாம்.. கேட்கணும்னு இருந்தேன்.. ஏம்மா அன்னைக்கு மயக்கம் போட்டு விழுந்த..?”

சதிஷ் திடீரென்று கேட்கவும், பதில் சொல்ல முடியாமல் ‘திருதிரு’த்தாள் அஞ்சனா..

“அது.. அது.. வந்து..”

அவள் பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தபோது அங்கே பிரதாப் வந்துவிட்டான்..

காக்கும் கரங்களைப் பார்த்து விட்டதைபோல அவள் நிம்மதி பெருமூச்சு விட..

“என்ன சார்..?” என்று வினவினான் பிரதாப்..?

“வந்துட்டியா..? என்னடா அஞ்சனா வந்து இவ்வளவு நேரமாச்சே.. இன்னமும் நம்ம ஆளு ஆஜராகலையேன்னு நினைச்சேன்.. வந்துட்ட..”

“என்ன கேட்டுக்கிட்டு இருந்தீங்க.?”

“ஏம்மா மயக்கம் போட்டன்னு கேட்டுக்கிட்டு இருந்தேன்..”

“அவளே.. மயக்கத்தில் இருந்திருக்கா.. அவகிட்டப் போய் காரணம் கேட்டீங்கன்னா அவள் என்னன்னு பதில சொல்லுவா..?”

பிரதாப் கேட்ட நியாயத்தில் அதிசயப்பட்டு போனான் சதிஷ்..

“இப்படியொரு கேள்வியைக் கேட்க உன்னால மட்டும்தான் முடியும்ப்பா.. ஏம்மா மயக்கம் போட்டன்னு கேட்டா, மயக்கத்திலே இருந்தவளுக்கு அதைப்பத்தி எப்படித் தெரியும்ன்னு கேட்கறியே.. அட.. அட.. அசச்சற போ..”

“நீங்க எதுக்காக கரண்டை கண்டுபிடிக்கறதை விட்டு விட்டு அவ மயக்கத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க கிளம்பிட்டீங்க..?”

“ஏம்ப்பா.. டாக்டர் என்ன சொன்னார் தெரியுமா..?”

“அவர் என்னத்தையோ சொல்லிட்டுப் போறாரு.. வாங்கின ஃபீஸூக்கு அவரும் எதையாவது ஒண்ணச் சொல்லணுமா இல்லையா..?”

அஞ்சனாவின் மயக்கத்துக்காக தீவிரமாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்த பிரதாப்பை உற்றுப் பார்த்தான் சதிஷ்..

“அவருக்குத்தான் எதையாவது சொல்லனும்கிற கடமை இருக்கா..? உனக்கு இல்லையா..?”

சதிஷின் கேள்வியில் பொதிந்திருந்த விவரம் பிரதாப்புக்கு மட்டும் புரிந்தது.. அதற்குள் கோதண்டம் வந்துவிட அஞ்சனா அரைமனதாக சதிஷிற்கு தெரியாது என நினைத்துக் கொண்டு பிரதாப்பிற்கு தலையசைத்து விட்டு மாடிக்குப் பறந்தாள்..

பிரதாப் சதிஷைப் பார்த்தான்…

“சொல்லக்கூடாதுன்னு இல்லை சார்.. கொஞ்சநாள் போகட்டும்ன்னு நினைச்சேன்..”

“அப்பாடா பூனைக்குட்டி வெளியில் வந்திருச்சு…”

இனிப் பூடகமாக பேச வேண்டிய அவசியமில்லை என்ற நினைவில் நிம்மதியானான் சதிஷ்..

“என்கிட்ட சொல்கிறது இருக்கட்டும்.. முதல்ல அந்தப் பெண்கிட்ட சொல்லிட்டியா.. இல்லையா..?”

“சொல்லாமலா அவ மயக்கம் போட்டு விழுந்து வைச்சா..?”

“அடப்பாவி.. உன் வேலைதானா இது..?”

“என்ன சார் இது.. விட்டா.. நான்தான் அவளுக்கு மயக்கமருந்து கொடுத்தேன்னு சொல்லி, அவளோட அப்பாகிட்ட பிடிச்சுக் கொடுத்திருவீங்க போல..”

“அப்படி ஒரேயடியான முடிவுக்கும் வந்துராதே.. ஏன் அந்தப் பொண்ணு கையில உன்னைப் பிடிச்சு கொடுக்க மாட்டேனா..?”

“அப்படி மட்டும் செய்தீங்கன்னு வையுங்க…”

“என்ன செய்வ..? எனக்கு கோவில் கட்டி கும்பிட்டிருவியா..?”

“ஊஹூம். உங்களைப் பற்றி அக்காகிட்ட போட்டு கொடுக்கிறதை நிறுத்திருவேன்…”

பிரதாப்பின் பேச்சில் உரக்கச் சிரித்தான் சதிஷ்.. அன்றைய இரவில் மொட்டை மாடியின் ரகசியச் சந்திப்பில் அந்தப் பேச்சை பற்றி அஞ்சனாவிடம் அவன் விவரித்த போது அவள் சங்கடமடைந்தாள்..

“ஏய்ய்.. என்னைக்கிருந்தாலும் இதை நாம வெளியே சொல்லித்தானே ஆகணும்..?” என்று பிரதாப் அவளைச் சமாதானப்படுத்தினான்..

விடாக்கண்டனான கோதண்டம் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவராக மாப்பிள்ளை வேட்டையைத் தொடர்ந்தார்.. வெற்றியும் பெற்றார்.. பாண்டிச்சேரியில வேலை பார்க்கும் அவரது இனத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை ஒருவன் இரண்டாவதாக அஞ்சனாவைப் பெண் பார்க்க வந்தான்..

0Shares

Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link