Chapter 23
வருடம் மட்டும் புதிதல்ல..
நீ புதிது! நான் புதிது!
நமை நனைக்கும்
இந்த மழையும் புதிது!
அஞ்சனாவின் கையில் ப்ரீதியின் பெயர் வந்திருந்தது.. அவள் பெயர் யாருக்கு போயிருக்கிறதென்று அவளுக்குத் தெரியவில்லை.. அன்று இரவில் அடிமேல் அடியெடுத்து வைத்து பிரதாப்பின் அபார்ட்மெண்ட் வாசலை அடைந்தாள் அஞ்சனா.. கையிலிருந்த பரிசுப் பொருளை வாசலில் வைத்துவிட்டு அவள் திரும்பிய போது அவள் வாயைப் பொத்தியது ஒரு உருவம்.. அலற முடியாமல் அவள் விழிகளை உருட்டி இருட்டுக்குள் பார்த்தபோது அங்கே பிரதாப் நின்றிருந்தான்.. திமிறயவளை தன் கைக்குள் அடக்கியபடி அனாசியமாக தூக்கிக்கொண்டு மாடியேறி விட்டான்..
மொட்டை மாடியில் இறக்கிவிடப்பட்டவள் மூச்சிரைக்க அவனை முறைத்தாள்..
“என்னடி முறைக்கிற..? உன்னைத் தொட்டுத் தாலி கட்டப் போறவன்தானே தொட்டுத் தூக்கியிருக்கேன்..? என்னவோ தெருவில் போகிற வழிப்போக்கன் தூக்கிட்டதைப் போல இந்த முறை முறைக்கிற..?”
அவள் பேசாமல் மாடிப்படிப் பக்கம் போகத் திரும்பினாள். அவள் கையைப் பிடித்து தடுத்தான் பிரதாப்.
“என்னவோ.. ஒரு அடி அடிச்சுட்டேன்.. அதுக்காக என்னைக் கண்டுக்காம பழி வாங்குவியா..? ஏன்..? உன்னை அடிக்க எனக்கு உரிமையில்லையா..?”
அதுவரையில் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமை காத்தவளுக்கு பொறுமை காற்றில் பறந்தது..
“உரிமையைப் பத்தியெல்லாம் நீங்க பேசக்கூடாது” அடிக்குரலில் சீறினாள்..
“அஞ்சனா..” அவன் திகைத்தான்..
இந்தக் கோபம் அவனுக்குப் புதிது.. அவனறிந்த அஞ்சனா மின்னலை மட்டுமே தன் கண்களில் பிரதிபலித் திருக்கிறாள். கோபத்தை பிரதிபலித்ததில்லை…
“என்னடி ஆச்சு..?”
“இன்னும் என்ன ஆகணும்..? என் அப்பாவுக்கு அவமானத்துக்கு மேலே… அவமானமாய் தேடிக் கொடுத்துக் கிட்டு இருக்கேன்… உங்களுக்கு மட்டும்தான் கடமையிருக்கா..? ஒரு மகளாய் தகப்பனுக்கு நிம்மதியைக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கில்லையா..?”
“கொஞ்சநாள் பொறுத்துக்கடி..”
“இதையே எத்தனை தரம்தான் சொல்லுவீங்க..? ஒவ்வொரு முறையும் பெண் பார்க்க வருகிறவர்களை ஓட்ட எதையாவது செய்து வைக்கிறேன்.. அது என் அப்பா தலையிலதான் வந்து விடியுது.. ஓர்நாள் மொத்தமா போய் சேரப்போறேன்.. அன்னைக்குத் தெரியும் உங்களுக்கு இந்த அஞ்சனாவின் அருமை என்னன்னு..”
அவள் போய்விட்டாள்.. அவள் பேசிய வார்த்தைகளின் துயரம் கண்டு பிரதாப் மனதுக்குள் விசனப்பட்டான்..
“இந்த ஜாதியை யார் கண்டுபிடித்தது..?”
தெரிந்தால் அவனை வெட்டிப் போட்டுவிடும் கொலை வெறியோடு மாடியை விட்டு இறங்கினான்.. அவன் அபார்ட்மென்டில் நுழைந்த போது தீர்க்கமான பார்வையோடு அவனை எதிர்கொண்டாள் ப்ரீதி.
“ப்ரீதி நீ இன்னும் தூங்கலையா..?”
“இல்லை…”
“நான் காற்று வாங்க மொட்டை மாடிக்கு..”
“ரொம்பவும் பொய் சொல்ல சிரமப்பட்டுக்காதே.. நீ அஞ்சனாவின் வாயைப் பொத்தி.. தூக்கிக் கொண்டு போகும்போதே நான் பார்த்துட்டேன்.. அதை மத்தவங்க பார்த்துடக்கூடாதுன்னு மாடிப்படி பக்கம் காவல் நிற்கிறேன். உன் கூடப்பிறந்த கொடுமைக்கு நான் என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு பார்த்தியா..?”
ப்ரீதியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாட்டை-யடியாய் அவன் மனதில் விழுந்தன.. அவன் முகம் கருத்தது..
“இதைப் பார்த்தியா..?”
ப்ரீதி நீட்டிய படத்தில் மீனாட்சி கல்யாணம் இருந்தது..
“என்ன இது..?”
“பார்த்தாத் தெரியலை.. பெருமாள் அவர் தங்கைக்கு நடத்தி வைக்கிற மீனாட்சி கல்யாணம். இந்த படத்தைத் தான் எனக்கு பிரஸண்ட் பண்ணியிருக்கா.. இப்பவாவது அஞ்சனா மனசை புரிஞ்சுக்கடா..”
ப்ரீதி போய் வெகுநேரமான பின்னும் பிரதாப்பின் மனதில் அவள் காட்டிய படமும் பேசிய பேச்சுகளுமே சுழன்று கொண்டிருந்தன.. அவன் மனதில் சிந்தனை ஓடியது.. தங்கைக்கு கல்யாணம் பண்ணி வைத்த கண்ணன் ருக்மணியை தூக்கிக்கொண்டுபோய் தாலி கட்டவில்லையா..?
கோலாகலமாக புதுவருட கொண்டாட்டம். இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்த ஆயிஷாவைக் காட்டிய நசிம்…
“இவளுக்கு இரண்டரை வயசு வரைக்கும் பேச்சே வரலையாம் அக்கா..” என்றான்..
“போடா பொய் சொல்லாதே.. எப்படி மணிமணியாய்ப் பேசற குழந்தையைப் போய் இப்படிச் சொல்றியே..?” அஞ்சனா அவன் சொன்னதை நம்ப மறுத்தாள்..
“நிஜம்தான்க்கா.. அப்ப பேச ஆரம்பிச்சவதான்.. இப்ப வரைக்கும் பேச்சை நிறுத்தலையே..”
நசிம் சொல்லிய விதத்தில் வாய்விட்டுச் சிரித்தாள் அஞ்சனா.. அவள் சிரிப்பதை பார்த்துக்கொண்டே அங்கு வந்த பிரதாப்பைக் கண்டதும் அவளது சிரிப்பு உறைந்தது.. காலைப் பலகாரத்திற்கு அவரவர்க்கு தெரிந்ததை அவர்கள் செய்து கொண்டு வந்து நிரம்பியிருந்தார்கள்..
“பரிமளம் ஆன்ட்டி செய்த வடையா..? பார்த்து எடு நிஷா.. கையில காலில விழுந்து.. கை கால் உடைஞ்சிர போகுது..” எச்சரித்தாள் ஸ்ரீதேவி..
“பல்லிலே பட்டு.. பல் உடைஞ்சா பரவாயில்லையா..?” லலிதா கலாய்த்தாள்..
அஞ்சனாவைப் பாடச் சொன்னார்கள்.. அவளோ..
“காவேரி ஓரம் கவிசொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா..?
உள்ளம் அலைமோதும் நிலை கூறவா..
எந்தன் கனிவான பாடல்
முடிவாகுமுன்னே
கனவான கதை கூறவா
பொங்கும் விழிநீரை அணைபோடவா..?”
என்று பாடி வைத்தாள்..
“இவ என்னதான் சொல்ல வர்றா..? காதல் கதை முடிஞ்சிருச்சுன்னு சொல்றாளா..?” பிரதாப் மண்டை காய்ந்து போனான்..
புதுவருடக் கொண்டாடத்தில் பிரம்மநாயகம் ஓர் அறிவிப்பை செய்து வைத்து இன்னும் கொஞ்சம் புளியைக் கரைத்து பிரதாப்பின் வயிற்றில் ஊற்றினார்..
“எல்லோருக்கும் ஒரு குட் நியூஸ்.. வர்ற ஆறாம் தேதி வியாழக்கிழமையன்னைக்கு என் பெண் ப்ரீதியை நிச்சயம் பண்ண மாப்பிள்ளை வீட்டில இருந்து வர்றாங்க.. அந்த மாப்பிள்ளையோட ஒன்னுவிட்ட தங்கையை என் மகன் பிரதாப்புக்கு நான் பேசி முடிச்சிருக்கேன்.. ரெண்டு கல்யாணத்துக்கும் சேர்த்து அன்னைக்கு நிச்சயம் பண்ணப் போறோம்.. இதை நீங்க எல்லோரும் முன்னேநின்று நடத்திக் கொடுக்கணும்..”
“என்னது..”
அனைவரும் அதிர்ச்சிக் குரல் எழுப்பி.. அசையாமல் நின்றார்கள்…
Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.