Chapter 01
அடித்துக் கொட்டும் அடை மழை..! வானம் கிழிந்து விட்டதோ என்று பயந்து போனாள் சசிரேகா..! கையிலிருந்த செல்போனை அடிக்கடி பார்த்துக் கொண்டவளின் கண்கள் கலங்கின..
“ப்ம்ச்.. இதானே வேண்டாம்கிறது.. இப்ப என்ன ஆச்சுன்னு கண்ணிலயும் மழையைக் கொட்டக் கிளம்பற..? அடிக்கிற மழை பத்தாதா..?” கடிந்து கொண்டாள் வத்சலா.
“மழை கொட்டறதைப் பார்த்தியா வத்ஸ்..?”
“எல்லாம் பார்த்தாச்சு.. எங்க பார்த்தாலும் வெள்ளக்காடு.. இதைத் திருப்பித் திருப்பிப் பார்க்கச் சொல்றியா..? பயமாயிருக்குடி..”
“தெரியுதில்ல.. அப்புறம் என்னப் பாத்து அதட்டி வைக்கிற..?”
“நான் அதட்டறதுக்கான காரணமே வேற.. உனக்கே அது தெரியும்.. வாயைப் பிடுங்காம பேசாம இரு.. நானே டென்சனில இருக்கேன்..”
நகம் கடித்துத் துப்ப ஆரம்பித்த வத்சலா அளவான உயரமும் சற்று சதைப் பிடிப்பான உடல்வாகுமாக இருந்தாள்.. சிவந்த மேனியும் அடர்ந்த கூந்தலுமாக இருந்தவளிடம் ஓர்வித வசீகரத்தன்மை இருந்தது..
அவளை நகத்தைக் கடித்துத் துப்ப வைத்துக் கொண்டிருந்த சசிரேகா ஒல்லியாக, உயரமாக கொடி போன்ற உடல்வாகுடன் இருந்தாள்.. சந்தனத்தை அரைத்துப் பூசியதைப் போன்ற நிறம்.. வத்சலாவைப் போல இவளுக்கும் அடர்ந்த கருங்கூந்தலாக இருந்தாலும்.. இவளது கூந்தல் வத்சலாவைப் போல இடையைத் தொட்டதுடன் நில்லாமல் நீண்டு முழங்கால்களைத் தாண்டித் தொங்கிக் கொண்டிருந்தது.. மயக்கும் பேரழகுடன் இருந்தவள் அந்த அழகைப் பற்றிய பிரக்ஞை துளியும் இல்லாமல் இருந்தது அந்த அழகுக்கு அழகு சேர்த்தது.
அடித்துக் கொட்டிய மழைச்சாரல் நீண்ட அம்புகளாய் கண்ணாடி ஜன்னலில் மோதியதில் எழுந்த தடதடத்த சப்தம்.. ரயிலின் தடதட சப்தத்தையும் மீறி ஒலித்ததில் சசிரேகாவின் இதயம் தடதடத்தது..
“சொன்னாக் கேட்டாத்தானே..” சலித்துக் கொண்டாள் வத்சலா…
அவள் குற்றம் சாட்டிய சசிரேகா குற்றவாளியைப் போலப் பார்வையைத் தழைத்துக் கொள்ளாமல் தீர்க்கமாக நிமிர்ந்து பார்த்தாள்..
“நான் சொன்னதை நீயும்தான் கேட்கல..” என்றாள்..
“அடிச்சேன்னா பாரு..” கையை ஓங்கினாள் வத்சலா..
“எப்படிடீ கேட்க முடியும்..? கொட்டற மழையில கிளம்பித்தான் ஆகனும்னு அடம் பிடிச்சுக்கிட்டு நிக்கிற.. தனியாப் போடின்னு அனுப்பி வைக்க முடியுமா..?”
“தனியா நிற்கிறவ தனியாப் போனாத்தான் என்ன..?” சசிரேகாவின் குரலில் சோகம் ததும்பியது..
“உன்னைப் போல அப்பா.. அம்மா.. அண்ணன், தங்கைன்னு இருந்திருந்தா நான் தனியாப் போகப் பயந்திருப்பேனோ என்னவோ.. எனக்குன்னு யாருடி இருக்கா..?”
வத்சலாவுக்கு கோபம் வந்து விட்டது.. கையில் கிடைத்த புத்தகத்தால் சசிரேகாவின் தலையில் ஒரு போடு போட்டாள்.. சசிரேகாவுக்கு வலிக்கவில்லை.. வலித்தாலும் அது சுகமான வலியாக இருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் அவள் நினைத்துக் கொண்டாள்..
எவரும் இல்லையென்று மருகும்போது உனக்காக நானில்லையா என்று ஒருவர் அடித்தால் அந்த அடி வலிக்குமா..?
“உனக்குன்னு நானில்லையா..?”
“வத்ஸ்..”
“போதும்.. பேத்தாதே..”
“மழையடிக்குதுடி..”
“அடிக்கட்டும்..”
“வெள்ளக்காடா இருக்கு..”
“இருக்கட்டும்..”
“டிரெயின் வழியிலே நின்னாலும் நின்னுடலாம்..”
“நிற்கட்டும்.. ஒருவகையில் அது உனக்கான விடுதலைதானே சசி..?”
“வத்சலா..?”
சசிரேகாவின் குரல் நடுங்கியது.. வத்சலாவின் பார்வையில் இருந்த இரக்கம் அவளை வாள் கொண்டு அறுத்தது.. அவள் வார்த்தைகளில் இருந்த உணமை அவளைச் சுட்டது..
“விடுதலையா..?”
‘பின்னே இல்லையா..?’ என்று கேட்டது சசியின் மனம்..
உயிர் துடிக்க சசி பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.. வெள்ளிக் குத்தீட்டிகளாய் ரயிலின் ஜன்னல் கண்ணாடியில் இறங்கிய மழைத் தாரைகள் அவளை பயமுறுத்தின.. பயந்து போனவளாக வத்சலாவைப் பார்த்தாள்.. அவள் தோள்களைக் குலுக்கி.. கைகளை விரித்து..
“நான் மழையை வரச் சொல்லலை.. அது தானாக் கொட்டுது..” என்றாள்..
சசிரேகா பார்வையைச் சுழல விட்டாள்.. அவர்கள் இருந்த கம்பார்ட்மெண்டில் அதிகமான கூட்டமில்லை யென்றாலும் ஒரேயடியாக வெறிச்சோடியில்லாமல் இரண்டு சீட்டுகளுக்கு ஒருவர் என ஆள்கள் இருந்ததில் அவளுக்குப் பயம் சற்றுக் குறைந்தது.. அவர்களில் சில பெண்களும் இருந்ததில் சசிரேகா ஆறுதலடைந்தாள்..
“என்ன..? துணைக்கு எத்தனை பேர் இருக்காங்கன்னு பார்த்து வைச்சுக்கறியா..?” வத்சலா கேட்டாள்..
‘இவள் பார்வைதான் எத்தனை கூர்மையானது..!’ சசிரேகாவுக்குள் வியப்பு வந்தது..
வத்சலா அப்படித்தான்.. சசிரேகாவின் கண்களைப் பார்த்தே மனதை கண்டு பிடித்து விடுவாள்.. வாழ்க்கை சசிரேகாவின் மீது இரக்கப்பட்டுக் கொடுத்த வரங்களில் ஒன்று வத்சலாவின் நட்பு.. விதி வகுத்த பாதையிது என்று வெறிச்சோடிக் கிடந்த மனதுடன் காலத்தின் ஓட்டத்தோடு கலந்து ஓடிக் கொண்டிருந்த சசிரேகாவின் பாதையில் பாலைவனச் சோலையாக வந்தவள்தான் வத்சலா.. சசிரேகாவைப் பொருத்தவரை அவள் கற்பகத் தரு..! அன்பை அள்ளியள்ளி வழங்கும் அமுதசுரபி போன்றவள் வத்சலா..!
“டீ குடிக்கலாமா..?”
ஏதோவொரு நிலையத்தில் ரயில் நின்றது.. சூடான டீக்கப்புக்களைப் பார்த்தபடி கேட்டாள் வத்சலா.. மழையினால் பிளாட்பாரம் முழுவதும் ஈரமும் சகதியுமா யிருக்க.. அதைப் பற்றிக் கவலைப்படப் பொழுதில்லாமல் முகத்தில் மழைத்திவலைகள் படிந்திருக்க சூடான டீக்கப்புக்களைத் தட்டுக்களில் அடுக்கி ஏந்தியபடி ரயில் நிற்கும் ஐந்தாறு நிமிடங்களுக்குள் அவற்றை விற்றுத் தீர்த்து விட வேண்டுமே என்ற பதைப்புடன் ரயிலின் ஜன்னல்களுக்கு அருகே ஓடி வந்தவர்களைப் பார்த்தபடி சசிரேகா தலையை ஆட்டினாள்..
“வாங்கேன்.. அவங்களைப் பார்த்தாப் பாவமா இருக்கு..”
“இதிலயும் மத்தவங்க பாவத்தைத்தான் நீ பார்ப்பியா..? உனக்காக பாவம் பாருடி.. கொட்டற மழையில ஏஸி கம்பார்ட்மெண்டில உக்காந்திருக்கோம்.. உடம்பு சில்லுன்னு இருக்கு.. கொதிக்கிற டீயை உள்ளே ஊத்தினாக் கொஞ்சம் குளிர் குறையும்ன்னு நினைப்பியா.. அதை விட்டுட்டு கொட்டற மழையில டீ விக்கிறவன் பாவம்ன்னு நினைக்கிற..”
“தெரியாமச் சொல்லிட்டேன் தாயே..! ஆளை விடு.. இப்ப டிரெயின் கிளம்பறதுக்குள்ள டீயை வாங்கிட்டு வர்றயா..? உனக்கு புண்ணியமாப் போகும்..”
“அஃது..”
வத்சலா எழுந்து ஏஸி கம்பார்ட்மெண்டின் கதவைத் திறந்து வெளியே போனாள்.. இரண்டே நிமிடங்களில் சூடான டீக்கப்புக்களுடன் திரும்பி வந்தாள்.. அவள் சீட்டில் உட்காரவும் ரயில் நகரவும் சரியாக இருந்தது.. நகர்ந்து வேகமெடுத்த ரயிலில் கொட்டும் மழைத் தாரைகள் கண்ணாடி ஜன்னலில் கொட்டி இறங்குவதை ரசித்துப் பார்த்தபடி டீயைக் குடிப்பது சுகமான ஒன்றாக இருந்து..
“தேங்க்ஸ்..” என்றாள் சசிரேகா..
“எதுக்கு..?”
“டீக்கு..”
“பாருடா.. எனக்குத் தேங்க்ஸ் சொல்ல ஆரம்பிச்சேன்னு வைய்யி.. எத்தனை விசயங்களுக்குத் தேங்க்ஸ் சொல்லுவ..? ம்ம்ம்..?”
புருவங்களை உயர்த்தினாள் வத்சலா.. மௌனமாகிப் போன சசிரேகாவின் மனம் ஆமாம்தானே என்றது.. வத்சலாவின் உதவிகளுக்கு நன்றி சொல்வதாக இருந்தால் சசிரேகாவின் வாய்தான் வலித்து விடும்.. சொல்லித் தீராத நன்றிகளைக் கொண்ட உதவிகள் பலவற்றை வத்சலா சசிரேகாவிற்காகச் செய்திருக்கிறாள்.. அவற்றில் முக்கியமானது.. புயலுடன் கூடிய அடை மழையின் வானிலை எச்சரிக்கையையும் பொருட் படுத்தாமல் சசிரேகாவுடன் அவள் கிளம்பிவந்திருப்பது..
எல்லாவற்றையும் விட மேலான அந்த உதவிதான் சசிரேகாவின் மனதை கொள்ளை கொண்டது..
“என்னடி.. பேச்சைக் காணோம்..?”
“ம்ம்ம்.. அதை மழை தூக்கிட்டு ஓடிருச்சு..”
சசிரேகா முல்லைப்பற்கள் மின்ன வெள்ளையாக சிரித்தாள்.. அந்த சிரிப்பின் அழகை ரசித்தாள் வத்சலா.. தோழியின் இந்த வெள்ளைச் சிரிப்பு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுமே என்று அவளுக்குக் கவலையாக இருந்தது..
“மழை எங்கேடி ஓடிருக்கு..? அது கொட்டிக் கிட்டில்ல இருக்கு.. நிக்கிற வழியைக் காணோமே..”
வத்சலா மழையைப் பார்த்தபடி சொன்னாள்.. சசிரேகாவின் சிரிப்பு நின்று விட்டது.. அவளும் மழையைப் பார்க்கலானாள்..
“பார்த்து என்ன ஆகப் போகுது..?” வத்சலா மெதுவான குரலில் கூறினாள்..
“எனக்கென்னவோ சசி.. உன் நிலைமையைப் பார்த்துத்தான் மழை இந்த ஊத்து ஊத்துதோன்னு தோணுது..”
“சும்மாயிரு..”
“சும்மாதானே இருக்கேன்.. போகாதே.. வேண்டாம்டின்னு சொன்னாக் கேட்டுக்கிற பிறவியா நீ..? அதனால வாயை மூடிக்கிட்டு சும்மாதானே இருக்கேன்..?”
“சம்மா இருக்கியா..? நீ சும்மா இருக்கியா..? கிளம்பினதில இருந்து என்னைப் போட்டுத் தாக்கிக்கிட்டே வர்ற.. நீ சும்மா இருக்கியாம்.. குட் ஜோக்..!”
“போட்டுத் தாக்கறது நானில்லைடிம்மா.. மழை..!”
“அது உனக்குத்தானே சப்போர்ட் பண்ணுது..”
“இல்லை.. உனக்குத்தான் சப்போர்ட் பண்ணுது.. அதை ஏத்துக்கத்தான் உனக்கு மனசில்லை..”
ஆழ்ந்த குரலில் சொன்னாள் வத்சலா.. உதட்டைக் கடித்தபடி மழையை வெறித்தாள் சசிரேகா.. இடியும் மின்னலுமான மழையுடன் கூடிய அந்த ரயில் பயணம் வழியிலேயே நின்று விடக் கூடும் என்ற அபாய எச்சரிக்கை அந்த ரயிலில் பயணித்த அனைவரின் மனதிலும் இருந்ததை அவர்களின் பேச்சு அறிவுறுத்தியது..
“எங்க பார்த்தாலும் வெள்ளக்காடு..”
“ஆமாண்டா ராமு.. எதுக்கும் வீட்டுக்கு ஒரு போனைப் போட்டு வைய்யி..”
“வழியிலே நின்னிருமோ..”
“யாருக்குத் தெரியும்..? எதுக்கும் நாம தயாரா இருந்துக்கிறது நல்லதுதானே..?”
“ஸ்டேசனில நின்னாப் பரவாயில்லை.. அத்துவானக் காட்டில நின்னிருச்சுன்னா..?”
“உன் வாயை வைச்சுக்கிட்டு இருக்க மாட்டியா..? அச்சாணியமாப் பேசி வைக்கிறயே..”
பக்கத்தில் நடந்த உரையாடல்களைக் கவனித்துக் கொண்டிருந்த வத்சலா மெல்லச் சிரித்தாள்..
“எதுக்குடி சிரிக்கிற..?”
“இல்ல.. அந்தம்மா அச்சாணியமாப் பேசலைன்னா ரயில் நிற்காம ஓடிருமா..?”
“இப்ப நீதாண்டி அச்சாணியமாப் பேசற..”
“உனக்குப் பிடிச்ச மாதிரிப் பேச எனக்கும் ஆசைதான்.. ஆனா அது பொய்யின்னு உனக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும்.. பொய்யான வார்த்தைகளை ஏன் பேசச் சொல்ற..?”
“வத்சலா..”
“விட்டுட்டேன்.. கூல் டவுன்..”
“ஏற்கனெவே படு கூலாத்தான் இருக்கு..”
சில்லிட்டுப் போயிருந்த உள்ளங்கைகளைத் தேய்த்து வெப்பமேற்றி கன்னத்தில் வைத்துக் கொண்டாள் சசிரேகா..
“இத்தனைக்கும் ஏஸியை ஆஃப் பண்ணிட்டாங்க.. இருந்தும் இப்படிக் குளிருது பாரேன்..” என்றாள் வத்சலா..
ரயிலின் மேற்கூரையில் பலர் சேர்ந்து ஓடுவதைப் போலத் தடதடத்த சப்தம் கேட்டது.. பக்கவாட்டிலும் அந்த சப்தம் சேர்ந்து கொண்டதில் சசிரேகாவின் மனதில் பயத்தின் குளிர் பரவியது..
“கொஞ்சம் ரிலாக்ஸா இரு சசி..”
“முடியலை வத்சலா.. பயம்மாய் இருக்கு..”
“எதுக்கு பயம்..?”
“ஒருவேளை ரயில் நின்னுட்டா..?”
“நின்னுட்டா.. இந்தக் கம்பார்ட்மெண்டில இருக்கிற மத்தவங்க என்ன செய்கிறாங்களோ அதையே நாமும் செய்வோம்.. நாம ஒன்னும் தனியா டிராவல் பண்ணலையே..”
“மத்தவங்களும் நானும் ஒன்னில்ல வத்சலா.. விடிகிறதுக்குள்ள நான் அன்ன வாசலிலே இருக்கணும்..”
“இல்லைன்னா..?”
வத்சலா அலட்டிக் கொள்ளாமல் கேட்ட கேள்வியில் ஆடிப் போனாள் சசிரேகா.. சீற்றத்துடன் வத்சலாவைப் பார்த்தாள்..
“இல்லேன்னா.. எனக்கு நன்றியில்லேன்னு அர்த்தமாகிரும் வத்சலா.. போதுமா..? அதுக்குத்தான் நீ ஆசைப்படறியா..?”
“நன்றிக் கடனைக் கழிக்கிறதுக்கு நீ உன் வாழ்வைப் பணயம் வைக்கக் கூடாதுன்னு ஆசைப்படறேன்..”
அமைதியாக சொன்னாள் வத்சலா.. சசிரேகாவின் சீற்றம் போன இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொண்டது.. அவள் நிராதரவாக ஜன்னலின் கண்ணாடியில் சாய்ந்து கொண்டாள்.. மழையின் சில்லிப்பு அவள் கன்னத்தில் இறங்கி உடலில் ஊடுறிவியது.. அடர்ந்த மழைத் தாரைகளின் அடர்த்தியில் கடந்து போன மரங்களையும் ஊர்களையும் அவளால் பார்க்க முடியவில்லை..
“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிடலை சசி.. நாம அடுத்த ஸ்டேசனில் இறங்கிறலாம்..”
“இறங்கி..?”
“சென்னைக்கு ரிட்டர்ன் ஆகிறலாம்..”
“ஆகி..?”
“நம்ம வேலையைப் பார்க்க ஆரம்பிக்கலாம்..”
“பார்த்து..?”
“என்னடி.. கடுப்படிக்கிற..?”
“வேற என்ன செய்யச் சொல்கிற..? எங்கே ஓடி ஒளியச் சொல்கிற..? என் மனச்சாட்சி என்னைக் கேள்வி கேட்கும்.. அம்மா, அப்பா இல்லாத அநாதையா நீ தெருவில் நின்னயே.. அப்ப உன் பெரியப்பா உன்னைத் தன் பொறுப்பில் வளர்க்க ஆரம்பிக்கலைன்னா உன் கதி என்னவாகியிருக்கும்ன்னு கேட்கும் வத்சலா..”
“இதையே சொல்லி வாயை அடைச்சிரு.. தன் பொறுப்பில் ஏத்துக்கிட்டவராலே.. தன்னோட குழந்தை களுக்கு இணையா உன்னை வளர்க்க முடிந்ததாடி..?”
இல்லைதான்.. சசிரேகாவின் பெரியப்பா அங்குசாமியால் அதைச் செய்ய முடியவில்லைதான்..
அவர் பெற்ற பிள்ளைகளுக்குச் சமமாக சசிரேகாவை அவரால் வளர்க்க முடியவில்லை.. அவருடைய மனைவி பானுகீதா அதை அனுமதிக்கவில்லை..
“தம்பியும் தம்பி பெண்டாட்டியும் போய் சேர்ந்துட்டா தலையை முழுகிட்டு வந்து சேர்ந்திருக்கனும்.. தாய், தகப்பனை முழுங்கிட்ட இந்த தறுதலையையும் கையில பிடிச்சுக்கிட்டா வரனும்..?” என்று சீறினாள்..
எடுத்த எடுப்பிலேயே கிடைத்த வரவேற்பில் மிரண்டு விட்டாள் எட்டு வயதான சசிரேகா.. அவளுடைய அம்மாவும் அப்பாவுமான தாரிணியும் ரங்கசாமியும் உயிருடன் இருந்த போது அவர்களின் வீட்டிற்கு அடிக்கடி விருந்தாட வந்து போகிறவள்தான் பானுகீதா.. அவளும் அவளுடைய புத்திர செல்வங்களும் அங்குசாமியை முன்னிருத்தி அவருடைய தம்பியின் வீட்டில் மாதக் கணக்கில் முகாமிடுவார்கள்.. சேலத்தில் செல்வாக்காய் வாழ்ந்து வந்த ரங்கசாமிக்கு ஏற்காடு மலையில் வீடிருந்தது.. அங்கு வந்து ஓய்வெடுப்பது என்றால் பானுகீதாவுக்கு அல்வா சாப்பிடுவதைப் போல இருக்கும்.. பதிலுக்கு அவள் வசிக்கும் அன்னவாசல் கிராமத்திற்கு ஓர் நாளாவது வந்து விட்டுச் செல்லும்படி ரங்கசாமியின் குடும்பத்தைக் கூப்பிட அவளுக்கு வாய் வராது.. இத்தனைக்கும் அன்னவால்தான் ரங்குசாமியின் பிறந்த ஊர்.. அங்கே அங்குசாமி அனுபவித்து வந்த விவசாய நிலங்களிலும், தோப்பிலும் ரங்கசாமிக்கும் பாதி உரிமை இருந்தது.. தாரிணியை விரும்பி மணந்தவருக்கு சேலத்தில் வேலை கிடைத்து விட..
அவர் ஏற்காட்டில் வீடு கட்டிக் கொண்டு அங்கேயே தங்கி விட்டார்..
அது பானுகீதாவுக்கு வசதியாகப் போய் விட்டது..
“என்ன செய்கிறதுப்பா..? உன்னையும் உன் குடும்பத்தையும் பார்க்கனும்ன்னா நாங்கதான் கிளம்பி வந்தாகனும்.. நீ வர முடியுமா..? நம்ம இனத்தில, சொந்த பந்தத்திலே, பெண் கட்டாம காதல்ன்னு சொல்லி அன்னியத்தில நீ பெண்ணைக் கட்டிட்ட.. தூரந் தொலைவில் குடித்தனத்தையும் வைச்சிட்ட.. உன்னால நம்ம ஊருப் பக்கம் வரமுடியாதுதான்.. வந்தா சொந்த பந்தங்க முகத்தில முழிக்க யோசனையா இருக்கும்தான்.. அதனால என்ன இப்ப..? உனக்கு சொந்தம்ன்னு சொல்லிக்க நாங்க இல்லையா..? கால்பரிட்சை, அரைப்பரிட்சை, முழுப்பரிட்சைன்னு லீவு, விட்டிராங்க.. அதுகளும் சித்தப்பா, சித்தியைப் பார்க்கனும்னு ஆளாப் பறக்குதுக.. உங்க அண்ணனும் தம்பி நம்மளையும், நம்ம குடும்பத்தையும் பாத்தாச் சந்தோசப் படுவானேன்னு எங்களைக் கூப்பிட்டுக்கிட்டு வந்திடராரு.. அப்புறம் என்ன உனக்கு..?”
இப்படியே பேசிப்பேசி ரங்கசாமியை அன்னவாசல் பக்கம் எட்டிப் பார்க்க விடாமல் எட்ட நிறுத்திவிட்ட கெட்டிக்காரிதான் பானுகீதா.. அப்போதெல்லாம் அவள் சசிரேகாவை ‘தங்கம்’.. ‘தங்கம்’.. என்றுதான் கொஞ்சுவாள்.. அந்தத் ‘தங்கம்’ என்ற அழைப்பு சசிரேகா பெற்றவர்களை இழந்து பெரியப்பனின் கையைப் பிடித்துபடி அநாதரவாக பானுகீதாவின் வீட்டுவாசல்படியில் நின்றபோது.. தறுதலையாக மாறிவிட்டது..
ஏற்காட்டிற்கு வரும்போது அன்னவாசல் நிலங்களில் விளைந்தது என்று ஒரு தேங்காயைக் கூடக் கையில் பிடித்து வராதவள் ஏற்காட்டை விட்டுக் கிளம்பும் போது அந்த மலையில் கிடைக்கும் அனைத்துப் பொருள்களையும் ரங்கசாமியிடம் சொல்லி வாங்கித் தரச்சொல்லி பைகளில் அடைத்துக் கொண்டுதான் கிளம்புவாள்..
ரங்கசாமியும் சும்மா இருக்க மாட்டார்.. இருக்கும் ஒரே சொந்தம் அண்ணன்தானே என்று தாராளம் தண்ணி பட்ட பாடாக கையிலிருக்கும் ஒட்டு மொத்தப் பணத்தையும் செலவளித்து அங்குசாமிக்கும், அவர் குடும்பத்திற்கும் புதுத்துணிகள், நகையென்று வாங்கிக்கொடுத்து அனுப்பி வைப்பார்.. அதைக் குறித்த நன்றி கொஞ்சம்கூட பானுகீதாவிடம் இருக்காது..
“நீ செய்கிறதா இருந்தா எங்களுக்குத்தானே செய்தாகனும்..? உனக்குன்னு வேற யாரு இருக்கா..?” என்பாள்..
அப்படிப் பிடுங்கி வாழ்ந்தவள்தான் அந்தக் கொழுந்தன் பெற்ற மகளைக் கண்டதும் வெறுப்பை உமிழ்ந்தாள்..
“இதை வளர்க்க என்னால ஆகாது.. ஏதாச்சும் அனாதை ஆசிரமம் இருந்தாச் சேர்த்து விட்டுட்டு வாங்க.. போங்க..” என்று கணவனை விரட்டினாள்..
“அடி அறிவு கெட்டவளே..!”
எட்டு வயதுக் குழந்தையை வாசலிலேயே நிறுத்தி விட்டு மனைவியைத் தள்ளிக் கொண்டு வீட்டுக்குள் போனார் அங்குச்சாமி.. அங்கே அவர் என்ன சொன்னாரோ.. ஏது சொன்னாரோ.. கொஞ்சநேரம் கழித்து வந்த பானுகீதா சசிரேகாவைப் பார்த்து..
“வந்து தொலை..” என்றாள்..
வேண்டாத விருந்தாளியாக அந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்ததைத்தான் நன்றிக்கடன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள் சசிரேகா.. அந்த நன்றிக் கடனைக் கழிப்பதற்காகத்தான் கொட்டும் மழையில் அன்னவாசல் நோக்கிப் போய்கொண்டிருக்கிறாள்..
Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.