Chapter 03
“தடக்.. தடக்..”
சீரான வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்த ரயிலின் சப்தத்தைக் கூர்ந்து கவனித்தாள் வத்சலா..
“ஏண்டி..?”
“உனக்கென்னம்மா..? நன்றிக்கடனைத் தீர்க்கிற கடமையை ஆற்றப் போகிறவ எதைப் பற்றியும் கவலைப் பட்டுக்க மாட்ட.. நான் அப்படியா.. உன்கூடப் பழகின பாவத்துக்கு துணைக்கு வரக் கிளம்பியிருக்கேன்.. கொட்டற மழையில ரயில் கவிழ்ந்திருச்சுன்னா என்ன பண்ணுவேன்..?”
“அடச்சீ.. உன் வாயில நல்ல வார்த்தையே வராதா..?”
“எனக்கும் நல்ல வார்த்தையாக் கொட்டிக் கவிழ்க்கனும்னு ஆசைதாண்டி சசி..! இருக்கிற சிச்சுவேசன் இப்படிப் பேச வைக்குதே..”
“வத்சலா.. உனக்குப் புண்ணியமாப் போகும்..”
“எதுக்கு இப்ப புண்ணியத்தை என் தலையில கட்டப் பார்க்கிற..?”
“கொஞ்சநேரம் வாயை மூடிக்கிட்டு வாயேன்..”
“நினைச்சேண்டி.. நீ இதைத்தான் சொல்லுவன்னு நினைச்சேண்டி.. வாயை மூடிக்கிட்டு வர்றதா..? நானா..? நெவர்.. உன் புண்ணியத்தை நீயே மூட்டை கட்டி முந்தானையில முடிஞ்சு வைச்சுக்க.. என் வாயை மூடவே மாட்டேன்.. போனாப் போறா.. பிரண்டாச்சேன்னு பார்த்தா.. அங்கே சுத்தி, இங்கே சுத்தி, கடைசியில என் பேச்சு சுதந்திரத்தில கையை வைக்கவா வர்ற..?”
வத்சலா முறைப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு.. அடுத்த பெட்டியில் இருந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்து விட்டாள்.. அவர்கள் இருவர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் ரயில் அத்துவானக்காட்டில் அம்போ என நின்று விடுமா.. இல்லை கவிழ்ந்து விடுமா என்பதிலேயே இருக்க சசிரேகா நொந்து போனாள்..
அடைமழையைக்கூட நிறுத்தி விடலாம்.. வத்சலாவின் பேச்சை மட்டும் நிறத்தவே முடியாது என்பதில் ஜன்னலின் கண்ணாடியில் சோர்வாக சாய்ந்து வெளியே பார்க்க முயன்றாள்.. கனத்த மழையின் தாரைகள் கண்ணாடியில் வழிந்த கோடுகள்தான் தெரிந்தன.. அதைத் தாண்டி கும்மிருட்டு மட்டும் கண்களில் தட்டுப்பட சசிரேகாவின் அடிவயிற்றில் பயபந்து உருண்டது..
“இருட்டிருச்சா..?” வத்சலாவிடம் கேட்டாள்..
“இருட்டாம என்ன செய்யும்..?” வத்சலா பதிலுக்கு கேட்டாள்..
“ஏண்டி சண்டைக்காரியைப் போலவே பேசி வைக்கிற..?”
“பேசாம போயிரு.. நானே கடுப்பில இருக்கேன்.. கூடப் பழகின கொடுமைக்கு கொட்டற மழையில டிரெயினில இழுத்துக்கிட்டு வர்றவகிட்ட சிரிச்சுச் சிரிச்சு கதை பேசுவேன்னு நினைக்கறியா..?”
சசிரேகா வாயை மூடிக் கொண்டாள்.. அடுத்த பெட்டியிலிருந்த பெண்மணி சசிரேகாவைப் பார்த்துச் சிரித்தாள்.. பதிலுக்கு சிரிக்க முடியாத சசிரேகா லேசாக இதழ் பிரித்து வைத்தாள்.. அந்தப் பெண்மணி ஆச்சரியமாகி விட்டாள்..
“ஏம்மா வத்சலா.. இந்தப் பொண்ணு உன்னோட பிரண்டுதான..?”
“நீங்கன்னு இல்லை ஆண்ட்டி.. எங்க பிரண்ட்ஷிப் பைப் பத்தித் தெரிஞ்சவங்க அத்தனைபேரும் இந்தக் கேள்வியைத்தான் கேட்கிறாங்க..”
“கேட்காம என்ன செய்வாங்க.. நீ கலகலன்னு பேசிப் பழகற.. இந்தப் பொண்ணு என்னடான்னா சிரிக்கக் கூலி கேக்குது..”
“கூலி கொடுத்தாலும் இவ சிரிச்சுத் தொலைக்க மாட்டா..”
“ஏனாம்..?”
“அப்படி வரம் வாங்கிப் பிறந்திருக்காளாம்..”
சிரிக்காமல் வத்சலா சொன்னதில் அந்தப் பெண்மணி சிரித்து விட்டாள்.. கூடையிலிருந்த சில்வர் தூக்கைத் திறந்து வடைகளை எடுத்து நீட்டினாள்..
“சாப்பிடுங்கம்மா..”
“தேங்க்ஸ் ஆண்ட்டி..” வத்சலா முதல் ஆளாக வாங்கிக் கொள்ள..
“நோ.. தேங்க்ஸ்..” என்று மறுத்தாள் வத்சலா..
“இவ இப்படித்தான் ஆண்ட்டி.. நீங்க கண்டுக் காதீங்க.. இவ பங்கையும் என்கிட்டயே கொடுத்திருங்க..”
வத்சலா அந்த வடைகளையும் கைப்பற்றி ‘ஸ்வாகா’ செய்ய அந்தப் பெண்மணி சசிரேகாவை கூர்ந்து பார்த்தாள்.. சசிரேகாவுக்கு சங்கடமாக இருந்தது..
“எங்கே போறிங்க..?”
வடை கொடுத்த உரிமையுடன் அந்தப் பெண்மணி கேட்க.. இதற்குத்தான் வடையை வேண்டாம் என்றேன், நீ கேட்டாயா.. என்பதைப் போல வத்சலாவை முறைத்தாள் சசிரேகா.. அந்த முறைப்பை சட்டை செய்யாத வத்சலா வெகு சுவாதீனமாக..
“அன்னவாசலுக்குப் போறோம் ஆண்ட்டி..” என்றாள்.
“அங்கே சொந்தக்காரங்க.. இருக்காங்களா..?” விடாமல் அந்தப் பெண்மணி துளைக்க..
“சேச்சே..” என்று மறுத்தாள் வத்சலா..
“என்னது..? சொந்த பந்தம்ன்னு யாருமே இல்லாத ஊருக்கு ஏன் போறிங்க..?”
“நான் சொன்னா இவ கேட்கனுமே ஆண்ட்டி.. போய்த்தான் ஆகனும்னு ஒற்றைக்காலில நிற்கிறாளே..”
வத்சலா அலுத்துக் கொண்டாள்.. அந்தப் பெண் வத்சலாவை விட்டு விட்டு சசிரேகாவைப் பார்த்து வைத்தாள்.. அவள் ஒற்றைக் காலில் நிற்கிறாளா இல்லை ரெட்டைக் கால்களில் நிற்கிறாளா என்று பார்க்கிறாளோ என்று யோசித்தாள் சசிரேகா..
“ஏம்மா.. உன் பிரண்டுதான் வேண்டாம்ன்னு சொல்லியிருக்காள்ல.. இருந்தும் எதுக்காகம்மா இந்தக் கொட்டற மழையில அறியாத ஊருக்கு டிரெயினில போய்க்கிட்டிருக்க..?”
சசிரேகாவின் மௌனத்தைப் பொருட்படுத்தாமல் அந்தப்பெண்மணி கேட்டு வைக்க.. மெதுவான குரலில் பதில் சொன்னாள் சசிரேகா..
“அது அறியாத ஊரில்லை ஆண்ட்டி..”
“உன் பிரண்ட் அறியாத ஊர்ன்னு சொன்னாளோ..? அங்கே சொந்த பந்தம்ன்னு யாருமில்லைன்னு சொன்னாளே..?”
“அவளுக்கு அது அறியாத ஊர்தான் ஆண்ட்டி.. எனக்கு என்னோட அப்பா பிறந்த ஊர்.. அவளுக்கு அங்கே சொந்த பந்தம்ன்னு யாருமில்லை ஆண்ட்டி.. எனக்கு அங்கே என்னோட அப்பாவோட அண்ணன் இருக்கிறார்..”
“அப்பாவோட அண்ணனா..? பெரியப்பான்னா சொல்ற..?”
அந்தப் பெண்மணி விளக்கம் கேட்க.. ஊடே புகுந்த வத்சலா..
“அப்பாவோட அண்ணனை பெரியப்பான்னுதான ஆண்ட்டி சொல்லனும்..? மாமான்னு சொல்ல முடியாதே..” என்று விளக்கம் சொன்னாள்..
அந்தப் பெண்மணியின் முகத்தில் குடம், குடமாக அசடு வழிந்தது.. அதை மறைக்க அவள் பேச்சை மாற்றினாள்..
“எங்களுக்குத்தான் அவதி.. இவரோட அம்மா படுத்த படுக்கையா இருக்காங்களாம்.. உடனே ஓடலைன்னா நாலுபேர் நாலு விதமாப் பேசுவாங்க.. உனக்கென்னம்மா அவதி..? சொந்த ஊருக்கு பெரியப்பாவைப் பார்க்கப் போகிற பொண்ணு மழையில்லாத காலத்தில போகக் கூடாதா..? இப்படியா கொட்டற மழையில அடிச்சுப் பிடிச்சுக்கிட்டுப் போவ..? நீ போகிறது பத்தாதுன்னு உன் பிரண்டையும் இழுத்தடிக்கிற..”
சசிரேகா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அந்தப் பெண்மணியின் கேள்விக்குப் பதில் சொல்ல அவளால் முடியாது.. அதை அந்தப் பெண்மணி உணர்வாளா என்றிருந்தது அவளுக்கு.. இதுபோன்ற பஸ் பிரயாணங் களிலும், ரயில் பயணங்களிலும் உடன் பயணிப்பவர் களிடம் ஒரளவிற்கு மேல் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்பதை எப்படிச் சொல்வது..?
வத்சலாவிற்குத்தான் அதுபோன்ற வரையறைகள் இல்லையே..
“என்ன ஆண்ட்டி செய்யறது..? இந்தக் கொட்டற மழை ராத்திரியில இவடிராவல் பண்ணி ஓடினாத்தான் இவளோட அப்பாம்மா இவளை நல்லவிதமா வளர்த்திருக் காங்கிற பெயர் நிலைக்குமாம்.. இல்லேன்னா நீங்க சொல்ற அதே நாலுபேர் அதே போல நாலு விதமாக பேசி வைப்பாங்களாம்.. அதுக்காகத்தான் இவ இந்த ஓட்டம் ஓடறா..”
“என்னது..?”
அந்தப் பெண்மணிக்கு ஒன்றுமே புரியவில்லை..
“ஏம்மா வத்சலா.. நீ நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்த..? உனக்கும் உன் பிரண்டோட காத்து அடிச்சிருச்சா..? தெளிவாய் பதில் சொல்லாம இப்படி மொட்டைக் காத்தான் குட்டையில விழுந்தான்ங்கிற மாதிரி சொன்னா எனக்கு என்ன புரியும்..?”
“புரியற மாதிரி சொல்லனும்னா இவ நன்றிக் கடனைக் கழிக்கறேன் பேர்வழின்னு நீங்க சொன்ன அதே குட்டையில விழுக ஓடிக்கிட்டிருக்கா..”
“என்னது..?”
அந்தப் பெண்மணிக்கு தெளிவாக விவரத்தை அறியாவிட்டால் தலை வெடித்து விடும் போல ஆகி விட்டது.. சசிரேகாவின் முகம் சிவந்து விட்டது.. அவளுடைய சொந்தக்கதையை இப்படி அயலாரின் முன்னால் வத்சலா கடை பரப்புவதை அவள் கொஞ்சம் கூட விரும்பவில்லை..
“ஸ்ஸ்ஸ்.. வத்சலா..”
சிநேகிதியை அடக்க முயன்றாள்.. அதில் கதை கேட்டுக் கொண்டிருந்த பெண்மணியின் சுவராஸ்யம் அதிகரித்து விட்டது.. சசிரேகாவின் முகத்தைப் பார்த்தால் எதுவும் பெயராது என்பதால் அவள் வத்சலாவின் முகத்தை ஆவலோடு பார்த்தாள்.. அந்த ஆவலில் தூண்டப்பட்ட வத்சலா சசிரேகாவின் அடக்கு முறைக்கு அடி பணியாமல் தொடர்ந்து கதை சொல்ல ஆரம்பித்தாள்..
“ஆமாம் ஆண்ட்டி.. இவ எதுக்காக இந்த கொட்டற மழையில டிரெயினில டிராவல் பண்ணிக்கிட்டிருக்கான்னு நினைக்கறிங்க..?”
அதைக் கேட்கத்தானே இந்தப் பாடு படுகிறேன் என்று சலித்துக் கொண்ட அந்தப் பெண்மணி அதை மறைத்துக் கொண்டு ‘எதற்கு’ என்று கேட்டு வைத்தாள்.
“இந்த சினிமாக்கள்லயும், சீரியல்கள்லயும் யூசுவலா ஒரு டயலாக் சொல்வாங்களே..”
“என்னன்னு..?”
“விடிஞ்சாக் கல்யாணம்.. விடிஞ்சாக் கல்யாணம்ன்னு சொல்லுவாங்களே ஆண்ட்டி..”
“அட..! ஆமாம்..”
அந்த டயலாக்கை இவள் ஏன் சொல்கிறாள் என்ற குறுகுறுப்புடன் ஆமாம் போட்டாள் அந்தப் பெண்மணி..
“அந்தக் கதைதான் இப்ப நடந்துக்கிட்டு இருக்கு ஆண்ட்டி..” என்றாள் வத்சலா..
“என்னம்மா சொல்ற..?”
“யெஸ் ஆண்ட்டி.. இவளுக்கு விடிஞ்சாக் கல்யாணம்..”
சசிரேகாவைப் காட்டி வத்சலா சொல்ல அவசரமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சசிரேகா.. அவள் முகத்தில் பல்வேறு உணர்ச்சி அலைகள் வந்து போயின.. அழுது விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.. திடமான மனதுடன் தெளிவான முடிவுடன் கிளம்பிய பின்னால் அழுகக் கூடாது..
“அப்படியா..?”
அந்தப் பெண்மணி சசிரேகாவின் முகத்தை கூர்ந்து பார்த்துவிட்டு..
“கல்யாணக் களையே இல்லையே..” என்றாள்..
“எப்படியிருக்கும்..?” என்று கேட்டு விட்டு சசிரேகாவின் கிள்ளலை வாங்கிக் கொண்ட வத்சலா வலி பொறுக்காமல்..
“இந்த மழையில கல்யாணக்களை எப்படி வரும் ஆண்ட்டி..? ஹி..ஹி..” என்று சிரித்து வைத்தாள்..
“என்னவோம்மா.. விடிஞ்சாக் கல்யாணம்ன்னு இருக்கிறப்ப கல்யாணப் பொண்ணு கொட்டற மழையில தன்னந்தனியா டிரெயினில டிராவல் பண்றதை இப்பத்தான் பார்க்கிறேன்..”
“கூட நானிருக்கேனே ஆண்ட்டி..?”
“நீயெல்லாம் ஒரு துணையாம்மா..?”
அந்தப் பெண்மணி கேட்டு வைத்த கேள்வியில் வத்சலாவின் முகம் விளக்கெண்ணையைக் குடித்ததைப் போலக் கோணிக் கொண்டது..
“என்ன ஆண்ட்டி இப்படிச் சொல்லிட்டிங்க..?” பரிதாபமாக கேட்டாள்..
‘உனக்கு வேணும்டி..’ சசிரேகாவின் முறைப்பு வேறு அவளை உசுப்பி விட்டது..
“அட..! நான் அந்த அர்த்தத்தில் சொல்லலைம்மா..” என்று ஆரம்பித்தாள் அந்தப் பெண்மணி..
அது எந்த அர்த்தமாக இருந்தாலும் அதைப் புளி போட்டுத் தேய்த்து விளக்கி அவள் தெளிவாகச் சொல்லி விட்டால் தேவலை என்றிருந்தது வத்சலாவுக்கு..
போனால் போகிறது.. பேச்சுத் துணைக்கு இருந்தாளே.. வடையெல்லாம் கொடுத்தாளே என்று வத்சலா கதை சொல்லப் போனால் ஒரு மனுஷி இப்படியா கேட்டு வைப்பாள்..?
‘இந்தப் பொம்பளைக்கு சசிரேகா மாதிரி ஊமைக் கோட்டான்கள்தான் லாயக்கு..’ மனதுக்குள் தாளித்துக் கொண்டிருந்தாள் வத்சலா..
“விடிஞ்சாக் கல்யாணம்ன்னு இருக்கிறப்ப கல்யாணப் பெண்ணுக்குத் துணையா குடும்பத்தில இருக்கிற பெரியவங்க வர வேணாமா..? அதைத்தான் நான் சொன்னேன்.. நீயும் சின்னப் பொண்ணு.. இந்தப் பொண்ணும் சிண்ணப் பொண்ணு.. சின்னப்புள்ளைக கூடி வீடு கட்டினதப் போல இப்படி விடிஞ்சா நடக்கப் போற கல்யாணத்துக்குப் போறிகளே.. அதைச் சொன்னேன்..”
“அப்படியா ஆண்ட்டி..?”
வாயெல்லாம் பல்லானாள் வத்சலா.. அவளைப் பார்த்து அந்த ஆண்ட்டி ‘சின்னப் பொண்ணு..’ என்று சொல்லி விட்டதில் உடனடியாக கவுன் வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும் போல புளகாங்கிதப் பட்டுப் போனாள் அவள்..
‘என்னைப் பார்த்தா.. ‘சின்ன்ன்..னப்’ பொண்ணு போல தெரியுதா..?’
அந்த சந்தோசத்தில் மிச்சம் கொச்சம் இருந்த மீதிக் கதையையும் கொட்டிக் கவிழ்க்க ஆரம்பித்து விட்டாள் வத்சலா..
“அதாகப்பட்டது ஆண்ட்டி.. இவளுக்கு அப்பா, அம்மா இல்லை..”
“ஐயோ பாவம்..”
ஆண்ட்டியின் இரக்கமான பார்வையைச் சந்திப்பேனா என்ற பிடிவாதத்துடன் மழையை வெறித்தாள் சசிரேகா.. கொட்டும் மழையைக்கூட நிறுத்தி விடலாம்.. கொட்டிக் கொண்டிருக்கும் வத்சலாவின் பேச்சை நிறுத்த முடியாது என்பதில் ஆயாசம் மேலிட்டது அவளுக்கு..
“இவளோட அப்பா கூடப் பிறந்த அண்ணன் வீட்டிலதான் இவ வளர்ந்தா..”
“பெரியப்பா வீட்டிலன்னு சொல்லு..”
“அப்படியும் சொல்லலாம்..”
என்னவோ பூவை ‘பூ’ என்றும் சொல்லலாம்.. ‘புய்ப்பம்’ என்றும் சொல்லலாம் என்ற ரீதியில் வத்சலா சொல்ல அவளை விசித்திரமாக பார்த்து வiத்தாள் ஆண்ட்டி.
“அந்தப் பெரியப்பா இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறாராம்.. அதுக்குத்தான் இவ ஓடிக்கிட்டு இருக்கா..”
“அந்த ஓட்டத்தை ரெண்டு நாளைக்கு முன்னால ஓடியிருக்கலாமே.. இப்படியா விடிஞ்சாக் கல்யாணத்தை வைச்சுக்கிட்டு கொட்டற மழையில ஓடுவீங்க..?”
“தெரிஞ்சா ஓடியிருக்க மாட்டாளா ஆண்ட்டி..?”
“என்னது..?”
ஆண்ட்டி விழிகளை விரிக்க அவளை ஆசுவாசப் படுத்தினாள் வத்சலா..
“இதுக்கே அசந்தா எப்படி ஆண்ட்டி..? இன்னும் பல திடுக்கிடும் திருப்பங்கள் இருக்கே..”
“ஏம்மா.. இந்தப் பொண்ணுக்கு கல்யாணம்ன்னு இவளுக்கே தெரியாதா..?”
“இன்னைக்கு சாயங்காலம் வரைக்கும் தெரியாது..”
“அடக் கொடுமையே..! மாப்பிள்ளை யாருன்னா வாவது தெரியுமா தெரியாதா..?”
“அதுதான் முக்கியமாத் தெரியாது ஆண்ட்டி..”
“என்னது..?”
“நிறைய ‘என்னது’ களை ஸ்டாக் வைச்சுக்கங்க ஆண்ட்டி.. அடுத்தடுத்து எடுத்து விடவேண்டியிருக்கும்.. விடிஞ்சாக் கல்யாணம்ன்னு இவளுக்கு ஈவினிங்தான் நியூஸ் வந்துச்சு.. அந்த நியூஸில் மாப்பிள்ளை யாரு எவருன்னு சொல்லப்படலை..”
“அநியாயமா இருக்கே.. இந்தப் பொண்ணு கேட்கலையா..?”
“கேட்க சான்ஸ் கொடுத்தாத்தானே..? திடிர்ன்னு போன் வந்துச்சு.. விடிஞ்சா உனக்குக் கல்யாணம்மா.. சொந்த பந்தத்துக்கெல்லாம் பத்திரிக்கை வைச்சாச்சு..
ஊரே இங்கே கூடியிருக்கு.. விடியறதுக்குள்ள வந்து சேருன்னு ஒரு மனுசன் போன் பண்ணினா இவ என்ன செய்வா..?”
“என்னது..?”
“சொன்னேனில்ல.. இதுக்குத்தான் ஸ்டாக் வைச்சுக்கச் சொன்னேன்..”
“இந்தப் பொண்ணுக்கே தெரியாம கல்யாணம் பேசி முடிச்சு ஊருக்கெல்லாம் பத்திரிக்கை வைச்சிருக் காங்களா..?”
“அந்த வயித்தெரிச்சலைக் கேக்காதீங்க ஆண்ட்டி.. அதில ஒற்றைப் பத்திரிக்கையை இவளுக்கு அனுப்பி வைச்சா என்ன..? எந்தத் தேதியில, எந்த இடத்தில, எந்த நேரத்தில, யாருக்குக் கழுத்தை நீட்டப் போகிறோம்ன்னு இவளும் தெரிஞ்சு வைச்சிருப்பாள்ல..?”
வத்சலா நியாயம் கேட்க.. ஆண்ட்டி கூடுதலான பரிதாபத்துடன் சசிரேகாவைப் பார்த்தாள்.. அவளோ ஜன்னலின் கண்ணாடியில் பல்லி போல ஒட்டிக் கொண்டாள்..
“இப்படியாப்பட்ட கல்யாணத்துக்கு இந்தப் பொண்ணு போகாட்டித்தான் என்ன..?”
ஆற்றாமையுடன் ஆண்ட்டி சொல்ல..
“அதைத்தான் நானும் சொன்னேன் ஆண்ட்டி.. இவ கேட்கலை.. என் தம்பி நாணயம் தவறாதவன்.. அவன் பெத்த பொண்ணு நீ.. உன்னை நம்பி வாக்குக் கொடுத்து கல்யாணத்தை நிச்சயம் பண்ணிட்டேன்.. ஊரு, உறவு முன்னால என்னைத் தலைகுனிய வைச்சிராதேன்னு இவளோட பெரியப்பா போனில சொன்னாராம்.. இவங்கப்பாவோட பெயரைக் காப்பாத்தனும்.. பெரியப்பாவுக்கு நன்றிக்கடனைக் செழுத்தனும்னு கொட்டற மழையில டிராவல் ஏஜன்ஸிக்கு போன் பண்ணி டிரெயின் டிக்கெட்ட ஏற்பாடு பண்ணிட்டா.. தனியா அனுப்ப மனமில்லாம எனக்கும் டிக்கெட் போடச் சொல்லி நானும் கிளம்ப வேண்டியதாயிருச்சு..”
“நல்ல காரியம் பண்ணினம்மா.. உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப..”
மனமார வத்சலாவை ஆசிர்வதித்தாள் ஆண்ட்டி.. இதுபோன்ற ஆசிர்வாதங்கள் ஏன் தனக்குக் கிடைக்க வில்லையென்று வேதனை கொண்டாள் சசிரேகா.. அப்படிக் கிடைத்திருந்தால் இப்படியொரு இன்னல் அவளுக்கு வந்திருக்குமா..?
“நீங்க ரெண்டு பேரும் படிக்கறிங்களா..?”
“படிச்சு முடிச்சு வேலை பார்க்கிறோம் ஆண்ட்டி..”
“என்ன வேலைம்மா..?”
“ஐ.டி கம்பெனியிலதான்.. வேற எங்கே..? என்ஜினியரிங் சேர்ந்தப்ப எக்கச்சக்க சம்பளம் கொடுத்துக் கிட்டு இருந்தவங்க நாங்க என்ஜினியரிங்கை முடிச்சு வேலைக்கு வந்தவுடனே இத்துனூண்டு சம்பளத்தை கொடுக்கிறாங்க..”
“போதும்ங்கிற மனமே பொன் போன்றதும்மா..”
“பழமொழி..? இதை அங்கிள் சம்பளம் வாங்கிக் கொடுக்கிறப்ப சொல்லிக்கங்க.. இங்கே வேணாம்..”
“லேடிஸ் ஹாஸ்டலில் இருக்கீங்களா..?”
“இப்போதைக்கு கொட்டற மழையில டிரெயினில டிராவல் பண்ணிக்கிட்டு இருக்கோம் ஆண்ட்டி..”
இவளால் எப்படி இத்தனை சுவாதீனமாக ஜோக்கடித்துக் கொண்டு வர முடிகின்றது என்று பொறாமைப் பட்டுப் போனாள் சசிரேகா.. பிரச்னையின் உள்ளே இருப்பது அவள்தான்.. வத்சலா அல்ல.. என்ற உண்மை அவளுக்கு உறைத்தது.. பிரச்னைக்கு வெளியே இருப்பதினால்தான் வத்சலாவால் இலகுவாக இருக்க முடிகிறது..
ஏன் சசிரேகாவிற்கு மட்டும் இலகுவான மனம் கிடைக்கவில்லை..? எப்போதும் பாரம் சுமந்து கொண்டிருக்கும் மனநிலையுடன் வாழும் வாழ்க்கையை அவள் வாழ காலம் ஏன் கட்டாயப் படுத்துகிறது..? விதி ஏன் அந்தத் தலைவிதியை அவள் நெற்றியில் எழுதி வைத்தது..?
“சிரிக்கச் சிரிக்கப் பேசற வத்சலா..”
“வெளியூரில இருந்து சென்னைக்கு வேலை பார்க்கன்னு வந்து சேர்ந்திருக்கோம்.. லேடிஸ் ஹாஸ்டலை விட்டா தங்கறதுக்கு வேற இடமே கிடைக்காதே ஆண்ட்டி.. ஸோ.. நாங்க ரெண்டு பேரும் லேடிஸ் ஹாஸ்டலிலதான் தங்கியிருக்கோம்..”
“சுயமா சம்பாதிச்சு சொந்தக் காலில நிக்கிற பொண்ணு கல்யாண விசயத்தில எதிர்த்து நின்னிருக்க வேணாமோ..?”
அதற்காகத்தான் அங்குசாமி இந்தத் திருமணத்தை முடிவு செய்திருப்பாரோ என்று ஐயம் கொண்டாள் சசிரேகா.. இந்த ஆறுமாத காலமாக பிடித்ததை உண்டு.. விரும்பிய உடைகளை உடுத்தி என்று சுதந்திரமாக அவள் சுய சம்பாத்தியத்தில் வாழ்ந்ததை பொறுக்க மாட்டாமல் தான் சிறையில் அவளை அடைக்க வழி செய்திருக்கிறாரோ..
“என்னத்தைச் சொல்ல ஆண்ட்டி.. எங்ககூட வேலை பாக்கிற ஒருத்தன்.. ‘பிரவீன்’ அப்படின்னு பேரு.. அழகா ஹேண்ட்சம்மா இருப்பான்.. வசதியானவன்.. இவளைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு இவகிட்டக் கேட்டான்..”
“ஓகேன்னு சொல்லியிருக்கலாமே..”
“நானா இருந்தா சொல்லியிருப்பேன்.. இவ பெரிய நாணயவாதியாட்டம் எங்க பெரியப்பாவைக் கேட்கனும்னு சொல்லிட்டா.. அவனும் இவளோட பெரியப்பா வீட்டுக்கு பெண் கேட்டுப் போனான்..”
“என்னாச்சு..?”
“யாருக்குத் தெரியும்..? அந்த மனுசன்தான் அதைப்பற்றி எதுவும் பேசாம உனக்கு விடிஞ்சாக் கல்யாணம்.. கிளம்பி வான்னு போனைப் போட்டுட்டாரே..”
“அவன் பெண் கேட்டுப் போனதினாலதான் இந்த முடிவுக்கு வந்தாரோ..?”
“அப்படித்தான் நானும் நினைக்கிறேன் ஆண்ட்டி.. அதனாலதான் இவளுக்கு எந்தத் தகவலையும் சொல்லாம மறைச்சு வைச்சு வேலை பார்த்துட்டு பொழுது
விடிஞ்சாக் கல்யாணம்.. புறப்பட்டு வான்னு தகவல் கொடுத்திருக்காரு..”
“பாவம்..” இரக்கப் பட்டாள் ஆண்ட்டி..
சசிரேகாவின் முகம் கன்றியது.. அந்த பிரவின் மீது அவளுக்கு என்றுமே ஈர்ப்பு இருந்ததில்லை.. திருமணம் செய்து கொள்ள அவன் விருப்பம் தெரிவித்தான்.. இவள் பெரியப்பாவைக் கேட்கச் சொன்னாள்.. அவ்வளவுதான்.. அதற்கு மேல் பிரவீனுக்கு அவள் முக்கியத்துவம் கொடுத்ததில்லை..
அதற்காகவா அங்குச்சாமி இப்படியொரு முடிவை எடுத்தார்..?
எங்கேயாவது கண் காணாத இடத்திற்கு ஓடி விட்டால் என்ன என்ற வேகம் பிறந்தது அவளுக்கு.. அவளை அடிமைப்படுத்தப் போகும் திருமணத்திலிருந்து தப்பிக்க வேண்டும்.. எப்படி..?
அவள் மனம் அறிந்ததைப் போல ரயில் நின்றுவிட..
“சொன்னேனில்ல..?” என்றாள் வத்சலா..
ரயிலில் இருந்த ஆண்பிள்ளைகள் வெளியே எட்டிப் பார்த்து விட்டு கதவை இறுக மூடித் தாழிட்டார்கள்..
“எந்த நேரத்தில நீ வாய் வைச்சியோ.. ரயில் நிசமாவே அந்துவானக் காட்டில்தான் நிக்குது..” அலுத்துக் கொண்டாள் ஆண்ட்டி..
“சுத்திலும் வெள்ளக்காடு..” அங்கிள் நிலவரம் சொன்னார்..
“எப்படியோ தொலையுது.. இழுத்துப் போர்த்திக் கிட்டுப் படுங்க.. நாங்க கிளம்பித்தான் வந்தோம்.. அத்துவானக்காட்டில நடுராத்திரியில ரயில் நின்னுட்டா நாங்க என்ன பண்ணுவோம்..? எப்படி எங்களால வர முடியும்ன்னு சொல்லிக்கலாம்..” அங்கிளுக்கு வழி சொல்லிக் கொண்டிருந்தாள் ஆண்ட்டி..
“தப்பிச்சேடி நீ..” உற்சாகமாக சொன்னாள் வத்சலா..
“இந்தத் கதையை நாமும் சொல்லிக்கலாம்.. உனக்கும் மனச்சாட்சி உறுத்தாது.. ஓகேயா..?”
‘ஓகேதான்..’ என்றது சசிரேகாவின் மனது..
தளைகளற்ற வானம்பாடி போல தன்னை உணர்ந்தாள் அவள்.. நிம்மதியுடன் கம்பளியைப் போர்த்திக் கொண்டு படுத்தவள்.. சீக்கிரத்திலேயே தூங்கிப் போனாள்..
“சசி.. அம்மா சசி..”
சில்லிட்ட கைகள் கன்னத்தில் தட்டியதில் சிலிர்த்துப் போனவளாக கண் விழித்தாள் சசிரேகா.. ரயில் பெட்டியில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் வெளிச்சத்தில் வெகு அருகாமையில் தெரிந்தது ஆண்ட்டியின் முகம்..
“என்ன ஆண்ட்டி..?” கண்ணைக் கசக்கினாள்..
“இவர் உன்னைத் தேடிக்கிட்டு வந்திருக்காரும்மா..”
ஆண்ட்டியின் வார்த்தைகளில் சசிரேகாவின் தூக்கம் பறந்தோடியது.. அரண்டு போனவளாக அவள் ஆண்ட்டியின் சுட்டு விரல் சுட்டிய திசையில் பார்த்தாள்..
உயரமாக.. வாட்ட சாட்டமாக.. அவளையே பார்த்தபடி.. ‘அவன்..’ நின்றிருந்தான்..
‘யார் இவன்..?’ திகைத்துப் போன சசிரேகா..
“வத்சலா..” என்று குரல் கொடுத்தாள்..
“நான் அப்பவே முழிச்சாச்சு..” வத்சலா எழுந்து உட்கார்ந்திருந்தாள்..
“யார் நீங்க..?” நடுக்கத்துடன் கேட்டாள் சசிரேகா..
“உங்க பெரியப்பா அனுப்பி வைத்திருக்கார்..” அவன் செல்போனை நீட்டினான்..
நடுங்கும் விரல்களுடன் அதை வாங்கிப் பார்த்தாள் சசிரேகா, அங்குசாமியின் செல்போன் நம்பர் அதில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.. காதில் வைத்தாள்..
“சசிதானே.. உன்னைக் கூப்பிட வந்திருக்கிறவர் கூடக் கிளம்பி அன்னவாசலுக்கு வந்திரு.. விடிஞ்சா நடக்கப் போற உன் கல்யாணம் தடையில்லாம நடந்தாகனும்.. உங்கப்பன் பேரைக் காப்பாத்து..” அதிகாரமாக உத்தர விட்டார் அங்குசாமி..
‘தப்பிக்க முடியாதா..?’ தொய்ந்து போனவளாக செல்போனை அவனிடம் நீட்டி விட்டு இயந்திரம் போல அவனைப் பின் தொடர்ந்தாள் சசிரேகா..
பரிதாபத்துடன் அவளைப் பார்த்த ஆண்ட்டியையும் அவள் பார்க்கவில்லை.. பிரமை பிடித்தவளைப் போல பைகளை எடுக்காமல் போனவளைப் பின் தொடர்ந்து பைகளுடன் ஓடி வந்த வத்சலாவையும் அவள் கவனிக்க வில்லை.. அவள் நினைவில் இருந்ததெல்லாம் தப்பிக்கும் மார்க்கம் இல்லாமல் அவள் விருப்பமில்லாத கல்யாணத்தில் மாட்டிக் கொள்ளப் போகிறாள் என்பதுதான்.. ‘அவன்’ காரோடு வந்திருந்தான்..
காரில் ஏறப் போனவள் தடுமாறி விழப் போன போது தாங்கிப் பிடித்தான்.. விலகி ஏறி அமர்ந்தவளின் மனதில் ஏதோ ஓர் மோகம் வந்து தொலைத்தது..
Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.