Chapter 05

0Shares

“கண்ணா..! உன்னைத்

தேடுகின்றேன்.. வா..

காதல் குயில்

பாடுகின்றேன் வா..

உன்னோடுதான் வாழ்க்கை..!

உள்ளே ஒரு வேட்கை..!”

வேட்கை ததும்பும் அவன் பார்வையில் தொய்ந்து போனாள் சசிரேகா..! இது கொடுமை..! கண்ணுக்கு முன்னால் அவள் தலைகீழாய் பாய வேண்டிய பள்ளத்தாக்கு காத்திருக்கிறது.. அவள் கை பிடித்து இழுக்கும் காதல் வரிகள் காதில் கேட்டுத் தொலைக் கின்றன.. எதற்காக இந்தப் பாடல்..? எதற்காக இந்தப் பாடு..?

‘இவன் குரூரமானவன்..’

உள்ளே கிளரும் மோகத்தீயில் கருகிச் சருகாகும் அவளது காதல் மனதைப் பற்றிக் கவலைப்படாமல் கிடைத்திருக்கும் சிறுவாய்ப்பில் அவள் மனதில் தீ மூட்டிப் பார்க்கிறான்.. அது வெறும் தீயல்ல.. மோகத்தீ..! கொழுந்து விட்டு எரியும் அந்தத்தீயில் அவள் விழுந்து மடிவதைப் பற்றிய கவலையேதும் அவனிடம் இல்லை.

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நினைக்கிறேன்..” என்ற மிதப்பான வார்த்தைகளுடன் பிரவீன் அவள் மனதில் வந்தான்..

அவனால் இத்தகைய மோகத்தீயை அவள் மனதில் மூட்ட முடியவில்லையே… அது ஏன்..?

சசிரேகாவிற்கு காரணம் விளங்கவில்லை.. பிரவீனிடம் ஒரு கர்வம் தென்பட்டது.. அவளுடைய நிராதரவான நிலைமையைப் பற்றி அவன் அறிந்திருந்தான். அவளுக்கு வாழ்க்கைப் பிச்சை போடும் தயாளன் போல முகத்தை வைத்துக் கொண்டு அவளைத் திருமணம் பண்ணிக் கொள்ளலாம் என்று அவன் முடிவெடுத் திருப்பதாக அறிவித்தான்.. வெறும் வாய் வார்த்தைக்குக் கூட என்னைத் திருமணம் பண்ணிக்கொள்ள உனக்கு விருப்பமா என்று அவன் கேட்கவில்லை..

காலத்தின் ஓட்டத்தில் சசிரேகா நிமிர்ந்து நிற்கக் கற்றுக் கொண்டிருந்தாள்.. விதி வகுத்த பாதையில் போனால் போகிறது என்று அவளுக்குக் கிடைத்த கல்விப் பிச்சையை இறுகப் பற்றிக் கொண்டு வாழ்க்கையில் மேலே ஏறும் வித்தையை வரமாகப் பெற்றிருந்தாள்..

இரக்கத்துடன் கூடிய பார்வைகளை அவள் விரும்புவதில்லை.. அவற்றை உதாசீனப்படுத்தி விட்டு நகர்ந்து விடுவாள்..

பிரவீனிடமும் அதைத்தான் செய்தாள்..

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நீங்க நினைச்சா மட்டும் போதாது..”

“வேற யார் நினைக்கனும்..? நீ நினைக்கனுமா..?”

அவனுடைய எகத்தாளமான கேள்வியில் நீ நினைக்காமல் என்ன செய்யப் போகிறாய் என்ற கேள்வி தொற்றி நின்றது..

‘என்ன ஒரு ஆணவம்..’ கொதித்துப் போனாள் சசிரேகா..

“உன்னைப் பற்றி எனக்குத் தெரியும்.. அப்பா, அம்மா இல்லையாமே.. சொந்தக்காரங்க தயவில படிச்சியாமே..”

இப்படிப்பட்ட பின்புலம் உள்ள சசிரேகாவை அவன் திருமணம் செய்து கொள்வது என்பது மிகப் பெரிய விசயம் என்பதைப் போல முகத்தை வைத்துக் கொண்டு அவன் பேசி வைத்தான்..

எடுத்த எடுப்பிலேயே அவளை ‘நீ, வா, போ..’ என்று ஏக வசனத்தில் அவன் அழைத்ததை நினைத்துப் பார்த்தாள்..

எதனால் அப்படி அழைத்தான்..? உரிமையினாலா.. இல்லை இவளுக்கு இந்த மரியாதை போதும் என்ற அலட்சியத்தினாலா..?

சசிரேகாவிற்கு என்னவோ முன்னதை விடப் பின்னது தான் காரணமாக இருக்க முடியும் என்று தோன்றியது..

“என் பெரியப்பா நினைக்கனும்..” அவள் கண்டிப்புடன் சொன்னாள்..

அவளது கண்டிப்பை விரும்பாத சிடுசிடுப்பு அவன் முகத்தில் வந்தது இன்னமும் சசிரேகாவின் நினைவில் இருக்கிறது..

“என்ன நீ..! அநாதையா வளர்ந்தவளுக்கு அடைக்கலம் கொடுக்கலாம்ன்னு பெரிய மனசு பண்ணி பெருந்தன்மையா உன்கிட்டச் சொல்ல வந்தா.. நீ ‘ஆஹா’.. நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கப் போகுதேன்னு மகிழ்ந்து எனக்கு நன்றி சொல்லாம பெரிய இவ மாதிரி பெரியப்பா, சித்தப்பான்னு சுத்தி விடற.. என்ன..? மனசுக்குள்ள பெரிய ரதின்னு நினைப்பா..? இல்ல.. இப்படி சுத்தி விட்டாத்தான் உனக்கு மதிப்புங்கிற எண்ணமா..? நீ யாருன்னு எனக்குத் தெரியாதா..?” அடிக்குரலில் அவளிடம் சீறினான்..

அவனுடைய சீற்றத்தை சசிரேகா சட்டை பண்ணவேயில்லை.. போடா நீயுமாச்சு.. உன் கோபமாச்சு என்ற அலட்சியத்துடன் நிமிர்ந்து நின்றாள்.. அவளுடைய அந்த நிமிர்வை பிரவின் கொஞ்சம் கூட விரும்பவில்லை என்பதும் அவள் நினைவில் இருந்தது..

“நான் யாரா..? நான் சசிரேகா..! இதுகூடத் தெரியாமலா என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன்னு வந்து நிற்கறிங்க..?”

“சசிரேகா..!”

“யெஸ்..! இதுதான் நான்.. நான் பெரிய ‘இவ’ இல்லை.. பட்.. நீங்க மட்டும் பெரிய ‘இவரா..’?”

“மைண்ட் யுவர் வெர்ட்ஸ்..”

“இதை நான் சொல்லனும்..? ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசனும்கிற பேசிக் கர்ட்டசி கூட உங்ககிட்ட இல்லை.. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேன்னு நான் மகிழ்ந்து போய் உங்க காலில் விழுகனுமா..? நினைப்புத்தான் உங்களுக்கு.. நான் அநாதையாய் வளர்கிறேன்.. இல்லை.. ஆள், அம்புன்னு வளர்கிறேன்.. அது என்னோட பிரச்சனை.. அதைப்பத்தி உங்களுக்கு என்ன வந்தது..? நீங்க யார் என்னைப் பத்திப் பேச..?”

“ஏய்.. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன்..”

“யாரைக் கேட்டு நினைச்சீங்க..?”

சசிரேகா நிதானமாக கேட்டதில் அவன் திகைத்துப் போனான்.. ‘நினைத்தது ஒன்று.. நடந்தது ஒன்று.. அதனால் விழிக்குது அய்யாக் கண்ணு..’ சசிரேகாவுக்குள் எரிச்சல் கலந்த சிரிப்பு வந்தது..

‘இப்ப முழி..’ அவள் பல்லைக் கடித்தபடி தாளித்தலைத் தொடர்ந்தாள்..

“இந்த ‘ஏய்’ ன்னு கூப்பிடறதையெல்லாம் என்னிடம் வைத்துக்காதீங்க.. வா, போன்னும் கூப்பிடாதீங்க.. எனக்குப் பிடிக்காது.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கனும்.. நீங்க வா, போன்னு பேசினா நானும் அப்படியே பேச வேண்டியிருக்கும்..”

“நான் எவ்வளவு பெரிய ஆள்ன்னு தெரியுமா..?”

“இருந்துட்டுப் போங்க.. அது உங்க மட்டுக்கு.. எனக்கு என்ன வந்தது.. இன்னைக்கு உங்க பக்கம் இருக்கிற காலம் என் பக்கம் வந்து நின்னா என் தலைவிதியே மாறிரும்.. அதனால அதிகமா ஆடாதீங்க சார்.. அடங்குங்க.. வாழ்க்கை எனக்கும் வசமாகும்..”

அவனை அவள் அடக்குவதா..?

‘என்ன திமிர்..!’ அவன் முகம் கருத்தான்..

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறவன் நான்.. வா, போன்னு பேசக் கூடாதா..?”

“அதைக் கல்யாணம்ன்னு ஒன்னு உங்ககூட எனக்கு நடந்தாப் பாத்துக்கலாம்.. இப்பப் பார்த்துப் பேசிப் பழகுங்க..”

நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நடையுமாக சசிரேகா அகன்றுவிட.. தான் அவமானப்படுத்தப் பட்டு விட்டதாக கொதித்துப் போனான் பிரவீன்.. அவனுக்கு அடி பணியாத சசிரேகாவை அடக்கி அவன் காலடியில் அடி பணிய வைக்க வேண்டும் என்பதற்காகவே அவள் கழுத்தில் கட்டாயம் தாலிகட்டி விட வேண்டுமென்ற வெறி அவனுக்கு உண்டானது.. அந்த வேகத்துடன் அவன் அங்குசாமியைத் தேடிப் போனான்.. போகும் போது சசிரேகாவிடம் சூளுரைத்து விட்டுத்தான் போனான்..

“போறேன்.. உனக்கு ஓசிச்சோறு போட்ட அந்த ஆள்கிட்ட உன்னைப் பெண் கேட்டுப் போறேன்.. ஒற்றைப் பைசா செலவில்லாம உன்னைத் தள்ளிவிட அவனுக்கு வழி கிடைச்சா அந்த ஆள் வேண்டாம்ன்னா சொல்லப் போறான்..? அப்புறம் இருக்கு உனக்கு..”

‘அப்படியும் நடந்து விடுமோ..’ சசிரேகா நடுங்கித்தான் போனாள்..

அப்படி ஏதும் நடக்கவில்லை.. மாறாக அதை விடவும் மோசமாக விடிந்தால் கல்யாணம்.. விடிவதற்குள் வந்து சேர்.. என்ற தகவல்தான் வந்து சேர்ந்தது..

“குளிருதா..? ஏஸியைக் குறைக்கவா..?”

கண்ணாடி வழி அவளைப் பார்த்தபடி கேட்டான் அவன்.. சசிரேகா முறைத்தாள்.. அரைத் தூக்கத்துடன் சரிந்திருந்த வத்சலா அதைக் கவனிக்கவில்லை.. அவளது முறைப்பை அவனது ஆழ்ந்த பார்வை எதிர் கொண்டதில் கலவரமாகிப் போனாள் சசிரேகா..

“நான் உங்க எதிரியில்லை..” சன்னக் குரலில் முணுமுணுத்தான் அவன்..

சசிரேகா வத்சலாவைப் பார்த்தாள்.. அரைத் தூக்கம் முழுத் தூக்கமாகிவிட அவள் ஜன்னலோரமாக சரிந்து தூங்க ஆரம்பித்திருந்தாள்.. சீரான அவளுடைய சுவாசம் அவள் ஆழ்நிலைத் தூக்கத்திற்குப் போய் விட்டதை அறிவுறுத்த..

“நீங்க எனக்கு நண்பனுமில்லை..” என்று மெல்லிய குரலில் சிடுசிடுத்தாள் சசிரேகா..

“இத்தனை கோபம் எதுக்குங்க..?”

“அதைத் தெரிஞ்சுக்கிட்டு உங்களுக்கு ஆகப் போகிறது எதுவுமில்லை..”

“அப்படி நீங்களா நினைச்சுக்கிட்டா எப்படி..? உங்களுக்கும் எனக்கும் ஆகாமப் போகக் கூடாது பாருங்க..”

“என்ன தேவைக்கு..?”

“என் தேவைக்குன்னு வைத்துக்கங்களேன்..”

அவனது ஆழ்ந்த பார்வை மீண்டும் அவள் மீது படிந்தது.. அவள் பேச்சிழந்து போனாள்.. துளைக்கும் அவன் பார்வை குளிருக்கு இதமாக ஓர் போர்வை போல அவள் மேனி முழுவதும் பரவி வருடி அவளுள் இறங்கியது.. மோகத்தீ அவள் மனதில் மூண்டது.. அரண்டு போனவளாக அவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.. அவன் பார்வையைச் சந்திக்கும் திராணி அவளிடம் இல்லை.. சக்தி முழுவதும் வடிந்தவளாக எதிர்க்கும் தெம்பின்றி நிராயுதபாணியாக மனதுக்குள் மறுகினாள்..

‘வேண்டாம்..’ அரற்றினாள்..

‘என்னை இப்படிப் பார்த்துத் தொலைக்காதே.. மோகத்தை மூட்டும் இப்பார்வையினால் யாதொரு பிரயோசனமும் இல்லை.. நான் வீழ்வதற்காகப் பயணித்துக் கொண்டிருப்பவள்.. உன் பார்வையினால் என் மனதில் இற்றுப் போயிருக்கும் நுண்ணிய உணர்வுகளை பற்ற வைக்க முயலாதே.. எரிக்கும் அந்தத் தீயின் வெப்பத்தில் நான் அழிந்து விடுவேன்..’

மூடிய இமைகளைத் தாண்டிக் கண்ணீர் வழிந்தது..

‘இது நானா..?’

திடுக்கிட்டுப் போனாள் சசிரேகா.. எந்தவொரு தருணத்திலும் கண்ணீர் விடாதவள் அப்போது கண்ணீர் விடுகிறாளா..? எதற்காக..? 

எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஓர் துறவியைப் போன்ற மனநிலையுடன்தானே அவள் கிளம்பி வந்தாள்..?

ரங்கசாமி பெற்ற மகள் பெரியவர்களின் பேச்சை மீற மாட்டாள் என்பதை உற்றார், உறவினர் முன்னால் நிருபிக்க வேண்டும் என்றுதானே அவள் கிளம்பி வந்தாள்..?

அப்படியிருக்க எதற்காக அவள் அழுகிறாள்..?

அவளது கன்னத்தில் படிந்த வெப்பமான விரல்களின் கடினமான ஸ்பரிசத்தில் பதறிப் போய் இமை திறந்தாள் சசிரேகா..

மின்வெட்டும் நேரத்துக்குள் அவள் கன்னத்தில் படிந்திருந்த கண்ணீரைத் துடைத்து விட்டு விலகிக் கொண்டன அவனது விரல்கள்.. அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.. அவன் விரல் பட்ட இடங்கள் நடந்த நிகழ்வை நினைவு படுத்தியதில் சூடாகிப் போனாள் அவள்..

“என்ன இது..?” சீறினாள்..

“அழுகாதீங்க.. ப்ளீஸ்..” மென்மையாக அவன் சொன்னதில் அவளது தேகத் தகிப்பு அதிகமானது..

“அதுக்காக என்னைத் தொடுவீங்களா..?”

“கண்ணீரைத் துடைத்தேன்..”

“கன்னத்தைத் தொட்டுத் துடைத்தீங்க..”

“கன்னத்தைத்தானே தொட்டேன்..?”

சன்னமாக அவன் கேட்டு வைத்ததில் அவள் தடுமாறிப் போனாள்.. இது போன்ற உரையாடல்கள் அவளுக்குப் பழக்கமில்லை என்பது ஒர்புறமிருக்க.. அவன் கேட்ட கேள்வியில் அவளுக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதைப் போன்ற நூதன உணர்வு எழுந்து அவளை ஆட்டிப் படைத்தது..

‘இவனை ஏன் நான் பார்த்துத் தொலைத்தேன்..?’

மறுகினாள் சசிரேகா.. எது அவளை அவன் பக்கமாக ஈர்த்து என்று யோசித்துப் பார்த்தாள்.. யோசிக்க.. யோசிக்க.. அவள் அவனைப் பார்த்த முதல் பார்வையிலேயே விழுந்து விட்டாள் என்பது புரிந்து தொலைத்தது.. எல்லையற்ற வசீகரத்துடன் அவள் விரும்பும் ஆண் மகனின் வடிவாக அவள் முன்னால் வந்து தொலைத்திருந்தவனை அவள் விரும்பத் தொடங்கி விட்டதை அவள் உணர்ந்தாள்..

“சசி.. உனக்கு எப்படிப்பட்ட ஹஸ்பெண்ட் வேணும்..?”

லேடிஸ் ஹாஸ்டலில் ஓர் பௌர்ணமி நிலாச்சோறு விருந்தின் போது வட்டமாக உட்கார்ந்திருந்த பெண்கள் வாயடித்தார்கள்.. யாருக்கு எப்படிப்பட்ட தோற்றத்துடன் கணவன் வாய்க்க வேண்டும் என்று அவர்கள் கலந்துரையாட ஆரம்பித்த போது ராதிகா சசிரேகாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாள்..

“ம்ம்ம்..”

யோசித்த சசிரேகா.. கண்களை மூடி அவள் மனதுக்குள் பிடித்த ஆண்மகனைக் கற்பனையில் கொண்டு வந்து நிறுத்தி ஒவ்வொன்றாக பட்டியலிட்டாள்..

“உயரமா இருக்கனும்..”

“பலே..! நெக்ஸ்ட்..?”

“வாட்ட சாட்டமா இருக்கனும்..”

“பாருடா.. இந்தப் பாப்பாவும் சைட் அடிக்குமான்னு இருந்துக்கிட்டு இவ போட்டுத் தாக்கறதை.. மேலே சொல்லு…”

“பெண்களை மதிக்கிறவனா இருக்கனும்..”

இப்படி அவள் பட்டியலிட்ட அத்தனை அம்சங்களும் ஒன்று சேர ஒருவன் அவள் எதிரில் வந்து ஒர்நாள் நிற்பான்.. அப்படி வந்து நிற்பவன் வேறு ஒருவன் கட்டப் போகும் தாலியை கழுத்தில் வாங்க அவளை அழைத்துக் கொண்டு போகிறவனாக இருப்பான் என்று அவள் கனவா கண்டாள்..?

“இப்படியொரு ஹீரோ எவளுக்குமே கிடைக்க மாட்டான்.. உனக்கு எப்படிக் கிடைப்பான்..?”

இப்படித்தான் அன்று ராதிகா சொன்னாள்.. அப்படியொரு ஹீரோவை சசிரேகா நேரில் பார்த்தும் அவன் அவளுக்கு எட்டாக் கனியாக நிற்பது பெரும் துயரம்..!

“என்னிடம் இப்படிப் பேசாதீங்க..” நிறைவேற முடியாத ஆசைகளைத் தேக்கி வைத்திருந்த சசிரேகா நிராசையுடன் அவனை முறைத்தாள்..

“வேற யார்கிட்டப் பேசச் சொல்றீங்க..?” அவன் வேடிக்கைபோலக் கேட்டு வைத்து அவள் கோபத்தை அதிகப் படுத்தினான்..

“இதோ.. தூங்கிக்கிட்டிருக்கா பாருங்க.. இவளை வேணும்னா எழுப்பி விடறேன்.. நீங்க பேசனும்னு நினைக்கிறதையெல்லாம் இவகிட்ட ஆசை தீரப் பேசுங்க..” வத்சலாவை எழுப்பப் போனாள் சசிரேகா..

“உங்களுக்கு நான் என்னங்க கெடுதல் பண்ணினேன்..? இப்படிப் பழி வாங்கறிங்களே.. வேண்டாங்க.. நான் தாங்க மாட்டேங்க..”

கெஞ்சுதல் போல் அவன் பேசிய விதம் அவளை வசீகரித்தது.. அவளிடம் மட்டும் அவன் பேச முயல்வதில் ரகசிய சந்தோசம் கொண்டாள் அவள்.. இருள் பரவிய காருக்குள் அவனது பார்வை அவளைப் பார்ப்பதை அவள் தெளிவாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. எங்கிருந்தோ ஓர் மயக்கம் வந்து அவளை ஆட் கொண்டது.. சசிரேகா அவளது நிலைமையை மறந்தாள்..

“தேவதையைப் போல இருக்கீங்க..”

கிசுகிசுப்பான அவனது குரலில் இருப்பது கிறக்கமா இல்லை பாராட்டா என்று கணிக்க முடியாமல் மனம் தடுமாறினாள் சசிரேகா.. அவனது குரல் அவளுக்கும் அவனுக்குமான ரகசிய உலகுக்கு பாலமிட்டு அவளை அழைத்துச் சென்றது..

“உங்களை நேரில் பார்த்ததும் அசந்துட்டேன்.. ஹப்பா..! என்ன மாதிரியான அழகு..! ஆளை அடிச்சுப் போடற அழகு..”

‘நீ அடிபட்டாயா..?’ கேட்க விரும்பினாள் அவள்..

விரும்பியதெல்லாம் நிறைவேறவா செய்கிறது..? மௌனம் அவள் வாய்க்குப் பூட்டுப் போட.. அவன் பேசுவதை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தாள்.. அதுவே போதும் என்று அவளுக்குத் தோன்றியது.. அவளுக்கு மட்டும் கேட்கும் தொனியில் அவன் பேசும் ரகசியப் பேச்சுக்கள் அவளுக்கானவை என்பதில் அவள் மனம் தித்தித்தது..

“உங்களை வீட்டில வைச்சுப் பூப்போடனும் போலத் தோணுச்சு..” அவன் குரல் நெகிழ்ந்தது..

‘உன்னால் அது முடியுமா..?’ விசனத்துடன் அவள் நினைத்துக் கொண்டாள்..

இப்படிப் போற்ற நினைக்கிறவன் கொட்டும் மழையில் எதற்காக அவளை அழைத்துக் கொண்டு போக வேண்டும்..? அப்படியொரு நேர்த்திக் கடனா அவனுக்கு..? அவன் விரும்பும் பெண்ணை மாற்றானின் காலடியில் கொண்டு தள்ள எப்படி அவனுக்கு மனம் துணிகின்றது..?

0Shares

Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link