Chapter 14

0Shares

“எனக்கு அருகதையில்லையா..?”

புயலை உள்ளடக்கிய குரலுடன் அவன் வினவினான்.. சிவந்திருந்த கண்கள் அவனுடைய ரௌத்ரத்தை உணர்த்தின.. சசிரேகா அஞ்சவில்லை.. அவனுடைய ரௌத்ரத்திற்கு குறையாத ரௌத்ரத்துடன் அவனுடன் மோதினாள்..

“ஆமாம்.. உங்களுக்கு அருகதையில்லைதான்..”

“நீ யார்கிட்டப் பேசறேன்னு தெரியுமா..?”

“ஏன் தெரியாது..? தாய், தகப்பனில்லாத பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக அவளைப் பெத்தவங்க வாழ்ந்த வீட்டைத் தாரை வார்த்துக் கொடுக்கறதா வாக்குக் கொடுத்திருக்கிற ஒரு கண்ணியவான்கிட்ட பேசறேன்னு எனக்கு நல்லாவே தெரியுமே..”

“சசிரேகா..”

“இது பேச்சு.. இதை விட்டுட்டு ‘சசி..’ன்னு எதுக்காக கூப்பிடனும்..? அந்த உரிமையெல்லாம் இங்கே வேணாம்..”

“ஓ..!”

அவன் கண்கள் இடுங்க ஒரு தினுசான குரலில் சொல்லிய போதே ஏதோ வில்லங்கமாகச் சொல்லப் போகிறான் என்று அவளுக்குத் தெரிந்து விட்டது.. என்னதான் சொல்கிறான் என்று கேட்போமே என்று பொறுமையை இழுத்துப் பிடித்தபடி காத்திருந்தாள்..

“நான் உரிமையெடுத்துக்கக் கூடாதுதான்..”

அவனது இடுங்கிய கண்கள் அவள் கழுத்திலிருந்த தாலிச் சரட்டில் படிந்தன.. அவள் அலட்சியமாக உதட்டைச் சுழித்தாள்.. அவனது இடுங்கிய கண்கள் மேலும் இடுங்கின..

‘தாலியைக் கட்டிட்டா நான் இவனுக்கு அடிமையா..?’

அவளது விழிகளின் சீற்றத்தில் அவன் அவளை உற்றுப் பார்த்தான்.. சீற்றம் குறையாத அவள் முகத்தையே ஊன்றிப் பார்த்தபடி அழுத்தமான குரலில் கேட்டான்..

“வேற யாரு உரிமையெடுத்துக்கனும்னு நினைக்கிற..? அந்த பிரவீனா..?”

செந்தணலாய் கொட்டிய வார்த்தைகளில் அவள் துடித்துப் போய் விடவில்லை.. மாறாக.. “ஹ..” என்று உதட்டை ஏளனமாக வளைத்தபடி கோபத்துடன் நகைத்தாள்..

“நினைச்சேன்..”

“யாரை..? அந்த பிரவினையா..?”

“இப்படியாப்பட்ட கீழ்த்தரமான பேச்சு வரும்ன்னு நினைச்சேன்..”

“ஓ…”

“இந்த ‘ஓ’ போடற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்..”

“அப்போ என்னடான்னா உன்னை ‘சசி’ன்னு கூப்பிடற உரிமையெல்லாம் இங்கே வேண்டாம்ன்னு சொன்ன.. இப்ப என்னடான்னா ‘ஓ’ போடற வேலையெல்லாம் உன்கிட்ட வேண்டாம்ன்னு சொல்ற.. மொத்தத்தில என்னதான் சொல்ல வர்ற..? என்கிட்ட இருந்து ‘எது’வுமே உனக்கு வேண்டாமா..?”

‘எதுவுமே..’ என்று அவன் அழுத்தம் கொடுத்த விதத்தில் சசியின் முகம் ரத்தமென கன்றி சிவந்து விட்டது.. அவனைப் போல பேச அவளால் முடியவில்லை.. அந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் உதட்டைக் கடித்தபடி முகம் திருப்பிக் கொண்டாள்..

அவன் முகத்தில் லேசான இளக்கம் வந்தது.. முதல் நாள் இரவில் அவன் விரல் பட்ட ஸ்பரிசங்களைத் தாங்க முடியாமல் வெடவெடத்து நடுங்கிய மலரைவிட மெல்லிய அவளது தேகம் அவன் நினைவில் வந்து மோகத்தைத் தூண்டியது..

ஜன்னல் வழி வந்த மழைகால குளிர் காற்று அவன் மனதின் மோகத்தீயை கொழுந்து விட்டு எரிய வைத்தது.. அறையெங்கும் நிரம்பியிருந்த மலர்களின் நறுமணமும்.. சசிரேகா சூடியிருந்த மல்லிகையின் மணமும் ஒன்று சேர்ந்து அவனை மயக்கத்தில் ஆழ்த்தின..

அவன் தொட்டவுடன் அவள் உருகித் தவித்த அந்த நொடிகளை அவன் நினைத்துக் கொண்டான்.. அவன் மீதிருந்த மோகமும்.. இன்னொருவனுக்கு மாலையிடப் போய் கொண்டிருக்கும் சூழலும் சேர்ந்து தன் உணர்வுகளுடன் அவள் போராடிய நிலையை அவன் நினைத்துப் பார்த்தான்..

அவளின் அந்த மனப்போராட்டத்தை அவனுக்குப் பிடித்திருந்தது.. சந்தர்ப்பத்தையும், சூழ்நிலையையும் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் தவித்து விலகி..

‘நீ என்னை பலவீனமாக்கி அதில் குளிர் காயப் பார்க்கிறாய்..’ என்று அவள் சுட்டு விரலை நீட்டி அவனைக் குற்றம் சொன்ன விதத்தைப் பிடித்திருந்தது..

அந்த நேரத்தில் அவன் கற்பனை செய்து பார்த்தான்.. விடிந்ததும் அவன் கட்டும் தாலியைக் கழுத்தில் வாங்கிக் கொள்ளப் போகிறவளின் முகம் எத்தனை சந்தோசத்தைப் பிரதிபலிக்கும் என்று.. மறுநாளின் முதலிரவில் அவன் அவளைத் தொடும் போது மறுப்பேதும் சொல்லாமல் முதல் நாள் இரவின் தடைகள் நீங்கிய சந்தோச வேகத்துடன் அவனை அவள் எப்படி இறுக்கிக் கட்டிக் கொள்வாள் என்று..

அந்த சந்தோசங்களை அனுபவிக்க வேண்டும் என்றுதான் அவன் யார் என்பதை சொல்லாமல் மறைத்தான்..

‘ஒருவேளை நான் அதைச் சொல்லியிருந்தா..?’

இப்போது நினைத்துப் பார்த்தவனுக்கு ஏன் அதை சொல்லாமல் மறைத்துத் தொலைத்தான் என்ற வேதனை உண்டானது..

அதைச் சொல்லியிருந்தால் அந்த மழையிரவின் மணித்துளிகளில் அவனிடம் ஒன்ற முடியாமல் தவித்த சசிரேகா மனமார ஒன்றியிருப்பாள்.. அவன் காதிலும் பிரவீனைப் பற்றிய பேச்சு விழுந்து தொலைந்திருக்காது.. அதைப் பற்றிய விவரத்தைத் தெரியாமல் மனம் 

முழுக்க காதலுடன் சசிரேகாவின் கழுத்தில் தாலியைக் கட்டியிருப்பான்..

‘ஏன் அப்படி நடக்காமல் போனது..?’

அவன் கண்களை இறுக மூடித் திறந்தான்.. மயக்கும் மோகினியாய் எதிரில் நின்ற சசிரேகாவை கட்டி அணைக்க முடியாமல் கைகளை கட்டிப் போட்டு விட்ட விதியின் குரூரத்தை மனதுக்குள் நிந்தித்தான்..

எவளைக் கண்டதும் மோகித்து அவள் கழுத்தில் தாலியைக் கட்டி ஆளப் போகும் காலத்திற்காக காத்திருந்தானோ.. அந்தக் காலம் எதிரில் வந்து நின்ற போது ஏன் அவன் அவளை விட்டு விலகி நிற்கிறான்..?

வாழ்க்கையானது இத்தனை வன்மத்துடன் அவனை வஞ்சிக்கக் கூடும் என்று அவன் நினைத்தும் பார்த்த தில்லை.. அவன் கேட்டதெல்லாம் கிடைத்தது.. தொட்ட தெல்லாம் துலங்கியது..

காற்றில் முந்தானைச் சேலை படபடக்க.. எளிய அலங்காரத்துடன் எழில் மிகும் தேவதையாய் நின்ற சசிரேகாவை வேட்கையுடன் வெறித்துப் பார்த்தான்..

அவளது முந்தானைச் சேலையைப் பற்றியிழுத்து அவனுக்கு மட்டும் சொந்தமான அவளது மேனியை ஏன் அவனால் தொட முடியவில்லை..

“பதில் சொல்லுடி..”

மோகத்தீயை அணைத்து அணைக்க முடியாத கொதிப்புடன் அவன் சீறினான்.. அதே கொதிப்புடன் இருந்த சசிரேகாவும் பதிலுக்குச் சீறினாள்..

“உங்களுக்கு இப்படித்தானே பேச வரும்..?”

“வேற எப்படிப் பேசனும்னு நினைக்கிற..? இல்ல.. இப்படியாப்பட்ட பேச்சையெல்லாம் யாரு உன்கிட்டப் பேசனும்னு நினைக்கிற..?”

அவளைத் தொட முடியாத தாபத்தில் அவளைக் காயப்படுத்தி விட வேண்டுமென்ற வெறியுடன் அவன் கேட்டபோது..

“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்..” என்று அவள் கத்தினாள்..

“மெதுவாப் பேசு..” என்று எச்சரித்தான்..

“ஏன் மெதுவாப் பேசனும்.. சத்தமாகத்தான் பேசுவேன்..” 

“என் கோபத்தை தூண்டாதே.. எதைப் பேசினாலும் இந்த நான்கு சுவர்களைத் தாண்டாத மாதிரிதான் 

பேசனும்.. வெளியே இருக்கிறவங்களுக்கு எதுவும் கேட்கக் கூடாது..”

“ஏன் கேட்கக்கூடாது..? கேட்கட்டுமே.. அவங்களும் உங்களோட யோக்கியதை என்னன்னு தெரிஞ்சுக்கட்டுமே..”

“ஏய்ய்..”

அவன் அவளை நெருங்கி அவள் கழுத்தில் விரல்களைப் பதித்து விட்டான்.. மூச்சுத் திணறிய சசிரேகா அவன் கைகளை இறுப் பிடித்துக் கொண்டாள்.. கோபத்துடன் இருந்த அவன் விழிகளும் அவள் விழிகளும் பார்த்துக் கொண்டன.. அவள் கழுத்தில் படிந்திருந்த அவன் விரல்கள் தளரத் தொடங்கின.. அவனது வலிமையான முரட்டுக் கைகளை இறுக்கிப் பிடித்திருந்த அவளது பஞ்சு போன்ற உள்ளங்கைகளின் ஸ்பரிசத்தில் அவனது வேகம் குறைந்து விட்டது.. அவளது கழுத்தில் படிந்திருந்த விரல்கள் வழுக்கி இறங்கியதில் சசிரேகா நிலை குலைந்தாள்.. அவன் கைகளைத் தட்டி விட்டு தள்ளி நின்றாள்..

“ஏண்டி..? உன் கற்பு பறி போயிடுமா..?” காட்டத்துடன் அவன் கேட்டான்..

‘இவன் இப்படித்தான் பேசி வைப்பான்..’ அவளுக்குத் துன்பமாக இருந்தது..

அவளை மதிக்காதவன்.. பிரவினைக் காதலித்து விட்டு வேறு ஒருவனை மணப்பதற்காக கிளம்பி வந்தவள் என்று அவளை எடை போட்டவன்.. இடைபட்ட நேரத்தில் அவனுடைய அருகாமையில் சலனப்பட்டவள் என்று எளிதாக அவளை நினைத்தவன்.. அவளைக் கல்யாணம் செய்து கொள்வதற்காக அவளுடைய பெற்றோர் வாழ்ந்த வீட்டைத் தானமாகத் தரத் துணிந்தவன்..

அப்படிப்பட்டவன் தொடும் போது அவள் உருகிக் கரைவதா..? அனைத்தையும் மறந்துவிட்டு அவனுடன் கட்டிலில் சரிவதா..? அது அவளுடைய பெண்மையை அவமானப் படுத்துவதாக ஆகாதா..?

“கற்புங்கிறது பெண்களுக்கு மட்டும் சொந்தமில்லை.. ஆண்களுக்கும் சொந்தம்தான்.. ஆனானப்பட்ட பாரதியாரே கற்பு நெறியை இரு கட்சிகளுக்கும் பொதுவில் வைப்போம்ன்னு கவிதை எழுதியிருக்கார்..”

“இரு கட்சியா..? எந்தெந்த கட்சி.. அரசியல் கட்சிகளை ஏண்டி அவர் வம்புக்கு இழுத்தாரு..?”

அக்கறையாக அவன் வினவிய விதத்தில் அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.. அவன் வம்பு வளர்ப்பது அவளுக்குப் புரியத்தான் செய்தது.. அதிலும் ஒன்றும் அறியாத சின்னக் கண்ணன் போல முகத்தை வைத்துக் கொண்டு அவன் பேசும் கிண்டல் பேச்சுக்களில் அவள் வசீகரிக்கப்பட்டாள்..

‘வாயைத் திறந்தாலே வம்பிழுக்கிற பேச்சுத்தான்..’

அவன் முதுகில் நான்கு மொத்துக்களை மொத்த வேண்டும் என்று அவளுக்கு ஆசையாசயாக இருந்தது..

“இந்தக் கட்சி அரசியல் கட்சியில்ல.. ஆம்பளை, பொம்பளைங்கிற ரெண்டு கட்சி..”

“ஓஹோ..” அவன் தாடையைத் தடவியதில்..

‘உனக்கு இது தெரியாதாக்கும்.. இதை நான் நம்பனுமாக்கும்..’ என்று அவன் காதைப் பிடித்துத் திருகி விடலாமா என்று அவள் யோசித்தாள்..

“அதுசரி.. இப்ப எதுக்காக பாரதியார் கவிதையை சாட்சிக்கு இழுக்கிற..?”

“பாரதியார் பெண்களை எப்படி மதிக்கனும்னு பாட்டுப்பாடி வைச்சுட்டுப் போயிருக்கார்.. திருந்தாத உள்ளங்களெல்லாம் அதைக் கேட்டுட்டு திருந்தட்டு மேங்கிற அக்கறையிலதான் சாட்சிக்கு இழுத்தேன்..”

“ஸோ.. என் உள்ளம், திருந்தாத உள்ளம்..?”

“ஆமாம்..”

“அப்படி என்னடி திருந்தாம இருக்கேன்..? குடிக்கிறேனா..? இல்லை.. ஒன்னுக்கு பத்தா சின்ன வீடுகளை செட்டப் பண்ணி வைச்சுக்கிட்டு எதுக்குப் பொண்டாட்டி.. என்னைச் சுத்தி வப்பாட்டி.. எக்கச்சக்கமாகிப் போச்சு எனக்குன்னு இருக்கேனா..?”

அவன் பட்டியலிட்டதில் அவள் ஒரு மார்க்கமாக அவனைப் பார்த்து வைத்தாள்.. அந்த பார்வை ஈர்த்த ஈர்ப்பில் அவன் மனம் பற்றிக் கொண்டது.. அவன் அவளை விடவும் பல மார்க்கமாக அவளை பார்வையிட்டு வைத்ததில் அவள் மனம் மோகத்தீயில் மாட்டிக் கொண்டது..

“மனசுக்குள்ள இருக்கிற அத்தனை ஆசைகளையும் பட்டியலிடறாப்புல இருக்கு..” கிண்டலாக அவள் சொன்னாள்..

“ஆசைதாண்டி.. ஒட்டு மொத்த ஆசையை கட்டின பொண்டாட்டிக்கிட்டக் கொட்டிக் கவிழ்த்துப் புடனும்னு தான் காத்திருந்தேன்.. எங்கே..? நான் கட்டிக்கிட்டவ ‘தியாகி..’ பட்டத்துக்காக இல்ல எனக்கு கழுத்தை நீட்டி வைச்சிருக்கா..”

“இங்கே மட்டும் என்ன வாழுதாம்..? என் கழுத்தில தாலியைக் கட்டினவங்க என்னைப் பெத்தவங்க வாழ்ந்த வீட்டைப் பிடுங்கிக் கொடுக்கறேன்னு வாக்குக் கொடுத்துட்டுல்ல தாலியைக் கட்டியிருக்காங்க..?” பதிலுக்கு அவளும் வெடித்தாள்..

“அங்குசாமி சொல்லியிருக்க மாட்டார்ன்னு அப்பவே சொல்லிட்டேன்.. இதை யார் உனக்குச் சொன்னது..?”

“யார் சொன்னா உங்களுக்கென்ன..? இந்த விசயம் பொய்யின்னு உங்களாலே சொல்ல முடியுமா..?”

“இது உனக்குத் தேவையில்லாதது..”

“நல்லா இருக்குங்க உங்க நியாயம்.. என்னைப் பெத்தவங்க வாழ்ந்த வீடு எனக்குத் தேவையா தேவையில்லைiயான்னு நான் தீர்மானிக்கனும்.. நீங்க யார் அதைத் தீர்மானிக்க..?”

“நான் யாரா..? உன் கழுத்தில கிடக்கிற தாலியைக் கேட்டுப் பாரு.. அது சொல்லும்..”

“என்னன்னு..?” சசிரேகா வேண்டுமென்றே அந்தக் கேள்வியைக் கேட்டாள்..

அவன் இமைக்காமல் அவளைப் பார்த்து வைத்ததில் முகம் சிவந்து போனவள் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்..

“உன் புருசன்னு..”

அவளையே பார்த்தபடி அவன் சொன்னதும் அவள் இமைகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.. ஒரு நொடி அனைத்தையும் மறந்து அவன் பார்வை அவள் பார்வையை கவ்விக் கொண்டது.. விழியோடு விழி கலக்க இடையில் இருந்த மனப் போராட்டங்களை மறந்து அவர்கள் சிலையாக உறைந்து நின்றார்கள்..

“சசி..”

அவன் கைகளை விரித்து அவளை அழைத்தான்.. விரித்த கைகளுக்குள் புகுந்துவிட சசிரேகா துடித்தாள்.. ஒரடி எடுத்து முன்னேறியவளை தாகத்துடன் அவன் பார்த்தான்..

‘நில் சசி..’ அவளுடைய புத்தி அவளைத் தடுத்தது..

சசிரேகா கண்களை இறுகமூடியபடி பின் வாங்கினாள்.. தலையை ஆட்டி அவனை மறுத்தாள்.. கோபம் கொண்ட கருணாகரனின் முகம் பயங்கரமாக மாறியது..

“ஏண்டி..? உன் புருசனா நான் நிக்கறேன்னு வர மாட்டேங்கறியா..? இதுவே அந்த பிரவீன் நின்றிருந்தா மாட்டேன்னு சொல்லியிருப்பியா..?” வெறுப்புடன் வார்த்தைகளை உமிழ்ந்தான்..

சசிரேகா காதுகளைப் பொத்திக் கொண்டாள்.. அவளுடல் நடுங்கியது..

0Shares

Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link