Chapter 19
ஒரு பூமாலை போல அவன் கழுத்தைச் சுற்றி வளைத்திருந்தது சசிரேகாவின் கரம்.. வெகு அருகாமையில் தெரிந்த அவள் முகத்தில் இருந்த கள்ளமற்ற தன்மை அவனை வசீகரித்தது.. அவளது தோள் மீது தவழ்ந்திருந்த முல்லைச் சரத்தின் நறுமணம் அவன் மனதை மயக்கிக் கிறங்கடித்தது.. சீரான அவளுடைய மூச்சுக்காற்று அவனுடைய மீசையில் பட்டு மோகக் கனலை மூட்டி விட யத்தனித்தது..
குவிந்திருந்த அவளது குவளை இதழ்களின் மீது விரல் கொண்டு கோடிழுத்தான் கருணாகரன்.. தூக்கம் கலையாமல் அவள் மெல்லச் சிணுங்கி விட்டு இன்னும் கொஞ்சம் புரண்டு அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள்..
மோக வெள்ளத்தில் மூச்சுத் திணற ஆரம்பித் திருந்தது கருணாகரனுக்கு.. புதுக் கணவனுக்கு இதைவிட சோதனை இருக்க முடியுமா..? தள்ளி வைக்க நினைக்கும் மனைவி தள்ளிப் படுக்காமல் ஒட்டிக் கொண்டு படுத்தால் கணவனாகப்பட்டவனின் கதி என்னாவது..?
அவன்மீது படிந்திருந்த அவளது தேகத்தின் ஸ்பரிசத்தில் அவனது வைராக்கியம் ஆட்டம் கண்டு கொண்டிருந்தது.. ஆனானப்பட்ட விசுவாமித்திரரே ஆட்டம்கண்டு போன மோக களத்தில் கருணாகரனால் பந்து வீச முடியவில்லை.. அவளுக்கும் அவனுக்குமான போராட்டத்தை மறந்து அவளுக்கும் அவனுக்குமான உறவுமுறையைப் பற்றி அவன் நினைக்க ஆரம்பித்தான்..
புரண்டு படுத்ததினால் சேலைக்குள் இருந்த திருமாங்கல்யக்கயிறு வெளிவந்து அவன் முகத்தின் மீது படிந்து இவள் உன் மனைவி என்று அறிவுறுத்திக் கொண்டிருந்தது.. அவனோடு ஒட்டியிருந்த அவளின் உடலின் அசைவுகளில் அவனது மோகம் கிளர்ந்து எழுந்தது..
கருணாகரனின் கால் உயர்ந்து அவளது காலின் மீது படிந்தும் அவள் உறக்கம் கலையாமல் அவனுடன் ஒன்றிக் கொண்டிருந்தாள்.. அவனுடைய முகத்தோடு உரசிக் கொண்டிருந்த அவள் முகத்தை தாகத்துடன் பார்த்த கருணாகரன் அவளது பிறை நெற்றியில் சிறு முத்தம் பதித்தான்.. அவளிடம் அசைவில்லை..
மெதுவாக அவனது இதழ்கள் கீழே இறங்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டன.. தூக்கக் கலக்கத்தில் அவள் முகத்தை அசைத்தாள்.. ஆழப் பதிந்திருந்த இதழ்களின் ஸ்பரிசத்தை உணராமல் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்து போனாள்..
தடைகற்ற பயணத்தை மேற் கொண்ட அவனுடைய இதழ்கள் அவளுடைய இதழ்களின் மீது புதைந்த போது அவள் கண் விழித்து விட்டாள்.. விழித்தவளின் பார்வையில் தாபத்துடன் அவள் முகத்தோடு முகம் பதித்திருந்த கருணாகரனின் முகம் தெரிந்ததில் அரண்டு போனாள்.. அவளது இதழ்களின் மீது இதழ்களைப் பதித்திருந்த அவனுடைய ஆழமான முத்தத்தை அப்போதுதான் அவள் உணர்ந்தாள்..
விலக முடியாத சூழல்.. அவனது வலிமையான கரங்கள் அவளைத் தழுவியிருந்தன.. தேக்கு மரம் போன்ற கால்கள் அவளது கால்களின் மீது விழுந்து சிறை பிடித்திருந்தன.. விட்டுவிடச் சொல்ல வேண்டுமானால் வாய் அசைய வேண்டும்.. அதையும் அவன் சிறை பிடித்திருந்ததில் அவளால் அசையக் கூட முடியவில்லை..
சசிரேகாவின் அனைத்துப் புலன்களும் விழித்துக் கொண்டதில் அவள் உடலில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டன.. அவன் தொட்ட இடங்கள் தீயாக தகிக்க.. அந்தத் தீயின் ஜ்வாலையை அணைக்க அவன் அணைத்திருக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள்..
முன்னேறிய அவன் கைகளை விலக்கப் பிரயத்தனப் பட்டாள்.. வெகு எளிதாக அதை அவன் முறியடித்தான்.. அவன் மீதான அவளுடைய மோகமே அவளுக்கு
மிகப் பெரும் எதிரியாக இருந்த போது எப்படி அவள் வெல்வாள்..?
‘இது உள்ளிருந்து கொல்லும் வியாதி..’
மோகத்தை அவள் திட்டினாள்.. அந்த நோயைத் தீர்க்கும் மருந்து அவளைத் தழுவிக் கொண்டிருக்கிறது.. அவள் மௌனமாக இருந்தால் நோயிலிருந்து அவளுக்கு மீட்சி கிடைத்து விடும்..
அவளால் மௌனமாக இருக்க முடியுமா..?
தாபத்துடன் இயங்கிக் கொண்டிருந்த கருணாகரனை தனது முழு பலத்தையும் ஒன்று திரட்டி விலக்கித் தள்ளினாள் சசிரேகா.. அவன் லேசாக விலகியதில் கிடைத்த சிறு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கட்டிலின் மறுபக்கமாக இறங்கி பால்கனிக்கு ஓடிக் கதவை வெளிப்புறமாக தாழிட்டு விட்டாள்..
“சட்..”
தீர்க்க முடியாத தாகத்துடன் பால்கனி கதவை ஓங்கி உதைத்தான் கருணாகரன்.. அதில் சசிரேகாவின் உடல் நடுங்கியது.. வெளியில் இருந்த மழை காலக் குளிர் காற்றில் நிற்க முடியாமல் கதவின் மீது சரிந்து அவள் ஒடுங்கி உட்கார்ந்தாள்.. குளிராக இருந்தது.. சேலைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.. அதையும் மீறி ஊசிக் குளிர் உடலைத் தாக்கியது.. வெடவெடத்தபடி சுருண்டு படுத்தாள்.. ஊதல் காற்றின் வேகம்..
“ஸ்ஸ்ஸ்ஸ்..” என்று காதில் பாய்ந்ததில் அவளுக்குப் பயமாக இருந்தது..
தோட்டத்தில் ஆடிய மரங்களின் நிழலாட்ட அசைவுகள் அவள் நெஞ்சத்தில் திகிலை உற்பத்தி செய்தன..
சின்ன அசைவுக்கும் சசிரேகா நடுங்கினாள்.. சிறிய சப்தமும் அவளுக்குள் பயத்தை ஊற்றிக் கொண்டிருந்தது.
“காக்க காக்க..
கனகவேல் காக்க..
நோக்க நோக்க
நொடியினில் நோக்க..”
வாய் தன்னிச்சையாய் கந்தர் சஷ்டி கவசத்தை உச்சரித்தன.. காற்று வழுத்தது.. மரங்கள் பேயாட்டம் ஆடியதில்..
“அம்மா..” என்று சசிரேகா அரற்றினாள்..
அங்குசாமியின் வீட்டிலாவது அவளுக்கு பாதுகாப்பாக ஒன்றிக் கொள்ள சமையலறை இருந்தது… இந்த வீட்டில் அதுகூட அவளுக்குக் கிடைக்கவில்லையே.
கந்தர் சஷ்டி கவசத்தை சொல்லி முடித்து துர்கா தேவியை ஆராதிக்க ஆரம்பித்தாள்..
“துர்க்கையம்மனை துதித்தால் போதும்..
துன்பம் பறந்தோடும்..
சகலமும் காக்கும் தாயே..! அவளை
தரிசனம் செய்தால் போதும்..
சகல நன்மையும் கூடும்..
சகல தீமையும் ஓடும்..”
கண்களை இறுக மூடிப் பாராயணம் செய்து கொண்டிருந்தவளின் காதில் இடிச் சப்தம் கேட்டது.. மிச்சம் மீதியிருந்த தைரியமும் காற்றாக பறக்க.. அவள் அழுக ஆரம்பித்து விட்டாள்..
“ஜெய ஜெய தேவி..!
ஜெய ஜெய தேவி..!
துர்கா தேவி சரணம்..!
ஜெய ஜெய தேவி
ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம்..!”
வேண்டியபடி சுருண்டிருந்தவளின் முகத்தில் மழைச் சாரல் ஓங்கி அடித்ததில் கண் திறந்தாள்.. இடியும், மின்னலுமாக மழை ஊற்ற ஆரம்பித்திருந்தது.. என்னதான் சசிரேகா கதவோடு கதவாக ஒண்டியிருந்தாலும் மழையின் வேகம் அவளை தொப்பல் தொப்பலாக நனைத்து விட்டது..
மழையின் குளிருடன் மழையில் நனைந்த உடைகளின் ஈரம் தரும் குளிரும் சேர்ந்து கொண்டதில் சசி கோழிக்குஞ்சைப் போல வெடவெடத்தாள்.. ஒன்றிக் கொள்ள உலர்ந்த சிறகுகளைப் போன்ற மழைநீர் அண்டாத இடம் கிடைக்காதா என்று ஏங்கினாள்..
“டமால்..”
எங்கோ தொலை தூரத்தின் இடி முழக்கத்தில்…
“அர்ஜூனா காப்பாத்து..” என்று கதறியபடி காதுகளைப் பொத்திக் கொண்டாள்..
காக்க வந்த கரங்களாக அவளது தோளில் கதகதப்பான கரம் விழுந்தது.. ரோமங்கள் அடர்ந்த வலிமையான அந்தக் கரத்தின் ஸ்பரிசத்தில் அரண்டு போய் அலற முனைந்தவளின் வாயைப் பொத்தினான் கருணாகரன்..
‘இவன் எப்படி வந்தான்..?’
மிரண்டு விழித்தாள் சசிரேகா.. சொட்டச் சொட்ட நனைந்திருந்தவன் பால்கனியின் பக்கவாட்டிலிருந்த தண்ணீர் வடிய கட்டப்பட்டிருந்த சிமிண்ட் குழாயைப் பிடித்து பால்கனிக்குள் குதித்திருந்தான்..
‘இந்தக் குழாய் எங்கேயிருந்து வருது..?’
அண்ணாந்து பார்த்தாள் சசி.. மொட்டை மாடியிலிருந்து வந்த அந்த சிமிண்ட் குழாய் மழை நீரில் குளித்துக் கொண்டிருந்தது..
‘இதைப் பிடிச்சா இறங்கி வந்தான்..?’
அவள் நடுங்கிப் போனாள்.. வழுக்கு மரம் போல மழை நீரில் பளபளத்த சிமிண்ட் குழாய் அவளை அச்சுறுத்தியது.. அதைப் பிடித்து இறங்க அசாத்திய தைரியமும், நெஞ்சுரமும் இருக்க வேண்டும்..
‘இவனுக்குத்தான் அது ரெண்டும் இருக்குதே..’
எரிச்சல் போல சிலாகித்தது அவள் மனது..
‘சிமிண்ட் குழாயைப் பற்றி இறங்கியவனின் கை ஒரு நொடி வழுக்கியிருந்தாலும் என்ன ஆகியிருக்கும்..?’ அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.. நெஞ்சம் வெடித்து விடும் போல இருந்தது..
ஒரு கையால் அவள் வாயைப் பொத்தியிருந்தவன் மறு கையால் பால்கனியின் கதவைத் திறந்து அவளை உள்ளே தள்ளி உள்ளே வந்து கதவைத் தாழ் போட்டான்..
‘அப்பாடி..’
ஆசுவாசப் பெருமூச்சு வந்தாலும்.. அவன் பக்கத்தில் வந்து விடுவானே என்ற பதட்டத்தில் வேறு எங்கே ஓடி ஒளிந்து கொள்வது என்று அவசரமாக அவள் துழாவினாள்..
“எரிச்சலைக் கிளப்பாம பாத்ரூமுக்குள்ள போய் துணியை மாத்திக்கிட்டு வா.. உன் சேலையில இருக்கிற ஈரத்தில இந்த ரூமை கழுவிக்கிட்டு நிக்காத.. ஏற்கனெவே சில்லுன்னு இருக்கு..”
அவன் விரட்டினான்..
‘உன்னாலதானேடா எனக்கு இந்த அவதி..?’
அவள் பொறுமிக் கொண்டே பாத்ரூமுக்குப் போய் ஈர உடைகளைக் களைந்து டவலால் உடம்பு துவட்டி உலர்ந்த நைட்டிக்கு மாறி.. ஈரத்தலையை டவலால் சுற்றிக் கொண்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள்..
உடைமாற்றும் அறையின் ஓரமாக அவன் உடுத்தியிருந்த ஈர உடைகளை களைந்து போட்டு விட்டு கைலிக்கு மாறிக் கொண்டிருந்தான்..
அவன் அங்கே இருப்பான் என்று தெரியாமல் வெளியே வந்து விட்டவள் அவனது வெற்று மார்பில் மயங்கி நின்று விட்டாள்..
சிவந்து விட்ட அவள் முகத்தை உறுத்துப் பார்த்தபடி உடலைத் துவட்டிக் கொண்டவனின் ஈரம் படிந்த தலைமுடி அவன் நெற்றியில் படிந்திருந்தது.. அதில் வெளிப்பட்ட கவர்ச்சியில் அவள் மனம் பலவீனமானது.. அலை பாய்ந்த அவள் பார்வையை உற்றுப் பார்த்தவனின் முகம் இறுகிப் போயிருந்தது..
உடை மாற்றும் அறையின் மூலையில் கிடந்த அவனுடைய ஈரத் துணிகளை குனிந்து எடுக்கப் போனாள் சசி..
“வேண்டாம்..” வறண்ட குரலில் அவன் தடுத்து விட்டான்..
“பாத்ரூமில் அலசிப் போட்டு விடுகிறேனே..” அவள் தடுமாறினாள்..
“தேவையில்லை.. நானே அலசிப் போட்டுக்குவேன்.. என் கவலை உனக்கு வேண்டாம்.. போய் தூங்கு..” கடின முகத்துடன் அவன் சொன்னான்..
அவனுடைய புறக்கணிப்பு அவளுக்கு வருத்தத்தைத் தந்தது.. சற்று முன் அவள் அனுபவித்த தனிமையான மழைச்சூழல் நினைவுக்கு வந்ததில் உடல் நடுங்கினாள்..
இப்போது பாதுகாப்பாக அறைக்குள் நின்று கொண்டிருப்பது யாரால்..? அவனால்தானே..
நன்றியுடன் அவனைப் பார்த்தவளை எவரோ போல
‘யார் நீ..?’ என்று பார்த்து வைத்தான் அவன்..
“என்னால்தானே நீங்க நனைஞ்சிட்டீங்க..” அவள் மேலும் சொல்ல முனைந்த போது தலையை ஆட்டி மறுத்துவிட்டான் கருணாகரன்..
“நான் உனக்காக நனையலை.. எனக்காக நனைஞ்சேன்..”
“இல்லையில்லை.. மொட்டைமாடியில இருந்து குழாயைப் பிடிச்சு வழுக்கிற மழைத் தண்ணியில ரிஸ்க் எடுத்து இறங்கி பால்கனியில குதிச்சீங்களே.. நீங்க மட்டும் வரலைன்னா..?”
அவள் உடல் நடுங்கியது.. அவன் அவளை இமைக்காமல் பார்த்த பார்வையில் தெரிந்த குற்றச்சாட்டில் அவள் ஊமையானாள்..
“அப்படி உயிரைப் பணயம் வைத்து கொட்டற மழையில வழுக்கு மரத்தைப் பிடிச்சு இறங்கறதைப் போல சிமிண்டு குழாயைப் பிடிச்சு இறங்க வைச்சது யாரு..?”
“நான்.. நான்.. நான்..”
வார்த்தைகள் வராமல் அவள் திக்கித் திணறினாள்.. என்னவென்று விளக்கம் சொல்லுவாள்..? அறைக்குள் இருந்தால் உன்னிடம் நான் தோற்று விடுவேனென்று பயமாக இருந்தது.. என்னைக் கொன்று தின்ற மோகத்தீயின் ஜ்வாலையிலிருந்து தப்பிக்க என்னால் முடியவில்லை.. மோகத்தைக் கொன்று விடும் சக்தியும் எனக்கில்லை.. உன்னிடம் என்னைத் தோற்று விடுவேன் என்ற பயத்தில் பால்கனிக்கு ஓடிவிட்டேன் என்று சொல்ல முடியாமல் தத்தளித்தாள்..
“மழையடிக்குது.. இடி இடிக்குதுன்னா பால்கனிக் கதவைத் திறந்துகிட்டு உள்ளே வர்றதுக்கு என்ன..? அதை விட்டுட்டு கந்தர்சஷ்டி கவசத்தில ஆரம்பிச்சு துர்கா தேவி பாமாலை வரைக்கும் பால்கனியில உக்காந்து பாடிக்கிட்டு இருக்கியே.. மழைச்சத்தத்தில உன் பாட்டு யார் காதிலயும் விழுகல.. மழை குறைஞ்சு யாராவது உன் பாட்டுச் சத்தத்தைக் கேட்டுட்டு பால்கனிப் பக்கம் அண்ணாந்து பாத்திருந்தா என்ன ஆகியிருக்கும்..?”
கருணாகரனின் கடுமையில் அவள் நாக்கைக் கடித்துக் கொண்டு தலை கவிழ்ந்தாள்.. சில மணித் துளிகளுக்கு முன்னால் தாபத்துடன் அவளைப் பார்த்த கருணாகரனின் முகம், இப்போது கோபத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது.. அவன் முகத்தில் தெரிந்த உக்கிரத்தில் அவள் குற்றஉணர்வு கொண்டாள்.. அவன் முகம் பார்க்க முடியாமல் நிலம் பார்த்தபடி இருந்தாள்..
Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.