Chapter 21
சசிரேகாவின் முகம் கன்றிப் போனது.. அது அவள் தங்கியிருந்த லேடிஸ் ஹாஸ்டல்.. வாசலில் நின்று கொண்டிருந்த வாட்ச்மேன் முதல்.. தோட்டத்தில் நடந்தபடி அவர்களின் ஜோடிப் பொருத்தத்தை சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்த பெண்கள் வரை எல்லோருக்கும் அவளைத் தெரியும்.. அவளது கணவனைப் பார்க்கும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப்பவர்களின் காதில் அவனது கேள்வி விழுந்து வைத்தால் அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்..? அவளுக்கென்று ஒரு மரியாதை இல்லையா..? அவன் தாலி கட்டி விட்டான் என்பதற்காக அவளது அனைத்து மரியாதைகளையும் அவள் குழி தோண்டிப் புதைத்து விட வேண்டுமா..?
இன்னும் அவன் பேசியிருப்பான்.. அதற்குள்..
“என்னடி சசி..? ஆபிசர் சார் என்ன சொல்லுகிறார்..?” என்று கேட்டபடி வத்சலா வந்து விட்டாள்..
“நத்திங்..” சசி சிரிக்க முயன்றாள்..
“வரலைன்னா விட்டிரு.. எதுக்காக சிரிப்பைப் பிடித்து இம்சை பண்ற..?” இலகுவாகப் பேசிய வத்சலாவின் மீது சசிக்குப் பொறாமையாக இருந்தது..
‘இவளைப் போல ஏன் என்னால் கேசுவலா இருக்க முடியலை..?’
அதற்கெல்லாம் கொடுப்பினை இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் சசிரேகா.. வத்சலாவுக்கு பெற்றோர் இருக்கிறார்கள்.. கூடப் பிறந்த அண்ணன் இருக்கிறான்.. அவளை உயிருக்குயிராய் காதலிக்கும் காதலன் இருக்கிறான்..
சசிரேகாவுக்கென்று யார் இருக்கிறார்கள்..?
சின்னஞ்சிறு வயதில் பெற்றோர்களை இழந்து உறவினரின் வீட்டில் அகதியாக.. ஒண்டியிருந்தவள் அவள்.. நல்ல துணிமணிகள் கிடைக்காமல்.. வீட்டில் மீந்து போகும் பழைய சோற்றையுண்டு வளர்ந்தவள் அவள்.. அவளை அவர்கள் படிக்க அனுமதித்ததே பெரிய விசயம்.. அவளுடைய திருமணம் யாருடன் எப்போது நடக்கப் போகிறது என்பதைக் கூட அறிந்து கொள்ளும் உரிமையில்லாத அடிமை அவள்..
அவளுக்குப் போய் வத்சலாவைப் போல இலகுவான மனம் எப்படி இருக்கும்..?
மலைபோன்ற பாரங்களைச் சுமக்கும் பாரமான மனதுதானே இருக்கும்..?
“ஸாரி ஆபிசர்..! உங்க காதல் பெண்டாட்டியை ஒரு செகண்ட்கூட பிரிஞ்சிருக்காம அடை காத்தீங்க.. நான் இவ்வளவு நேரம் பிரிச்சு வைச்சிட்டேன்.. சசி அப்பவே வர்றேன்னுதான் சொன்னா.. ஆனா பாருங்க.. இவளோட கல்யாண விசயம் தெரிஞ்சு ஹாஸ்டல் வார்டனும் மத்த பிரண்ட்ஸீம் இவளைப் பார்க்க வந்துட்டாங்க.. அத்தனை பேரோட கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லிட்டு கிளம்பி வர்றதுக்கு லேட்டாகிருச்சு..”
சசியின் விழிகள் கேட்டுக் கொண்டாயா என்று கருணாகரனைப் பார்த்துக் கேட்டன.. அவன் தோள்களைக் குலுக்கி விட்டு எதுவும் நடக்காததைப் போல காரில் ஏறினான்..
“வரேன் வத்சலா..” சசியின் தொண்டை அடைத்தது.
“நாளைக்கு பார்ப்போம் சசி.. உன்னோட டிரஸ்ஸை யெல்லாம் பெட்டியில அடுக்கி ரெடியா வைச்சிடறேன்..” வத்சலா சமாதானம் சொன்னாள்..
“நாளைக்கும் வரனுமா..? ஏன்..? இப்பவே பெட்டியைத் தூக்கிட்டு வர வேண்டியதுதானே..” கருணாகரன் எரிந்து விழுந்தான்..
“அது சட்டு புட்டுன்னு முடிகிற வேலையில்லை ஆபிசர்.. குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும்.. ஹாஸ்டல் ரூமை வெகேட் பண்ணறதுக்கு வார்டன்கிட்டச் சொல்லனும்.. அங்கேயும் ஃபார்மாலிட்டிஸ் இருக்கு.. அவ்வளவு நேரமும் உங்களை வெயிட் பண்ண வைக்க முடியுமா..?”
வத்சலாவின் கேள்வியில் எரிச்சல் அதிகமான கருணாகரன் காரைக் கிளப்பினான்..
“ஏறிக்கடி.. இல்லேன்னா விட்டுட்டுப் போயிடப் போறாரு..” வத்சலா கேலியாக சொன்னாள்..
‘நீ கேலியா சொன்னாலும் அதுதான் உண்மை வத்சலா..’ கனத்த மனதுடன் காரில் ஏறினாள் சசிரேகா..
கார் பறந்தது.. ஒரு ஸ்டார் ஹோட்டலின் வளாகத்துக்குள் நுழைந்தது.. ஏற்கனெவே போனில் ரூமைபுக் பண்ணியிருந்ததால் வரவேற்பறையில் விசயத்தை சொல்லி சாவியை வாங்கிக் கொண்டு நடந்தான் கருணாகரன்.. ஏறக்குறைய அவன் பின்னால் ஓடினாள் சசிரேகா..
ஆடம்பரமான அறையில் பெட்டியைத் தூக்கிப் போட்டுவிட்டு அவன் குளியலறைக்குள் புகுந்து விட்டான்.. அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்த சசிரேகாவுக்கு அலுப்பாக இருந்தது.. வெந்நீரில் குளித்தால் தேவலையென்று நினைத்துக் கொண்டாள்..
கருணாகரன் வந்ததும் இவள் நைட்டியுடன் குளிக்கப் போய் விட்டாள்.. வெந்நீர் குளியளில் அலுப்புக் குறைவதைப் போல இருந்தது.. ரோஜா வண்ண நைட்டியுடன் முடியைப் பிரித்துப் போட்டபடி குளியலறையை விட்டு வெளியே வந்தாள்..
அவர்களுக்கான இரவு உணவை போனில் சொல்லிக் கொண்டிருந்த கருணாகரனின் பார்வை அவள் மேல் படிந்தது.. அவளை ஊன்றிப் பார்த்தவனின் பார்வையில் அவள் முகம் சிவந்தாள்.. அதை மறைக்க முகத்தை டவலால் துடைத்தபடி கண்ணாடியின் முன்னால் போய் நின்று விட்டாள்..
தோகை போல விரிந்திருந்த கூந்தலைத் தளரப் பின்னி.. நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை ஒற்றி அவள் திரும்பிய போது அவன் கால்மேல் கால் போட்டு சோபாவில் தோரணையாக சாய்ந்து அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்..
‘எதுக்காக இப்படிப் பார்க்கிறான்..’
அவளுக்கு லஜ்ஜையாக இருந்தது.. அவனுக்கு முதுகு காட்டி உட்கார்ந்தவள் டீப்பாயில் கிடந்த மாத, வார இதழ்களில் ஒன்றை எடுத்துப் பிரித்துப் படிப்பதைப் போல பாவனை செய்ய ஆரம்பித்தாள்..
‘இன்னும் அவன் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கானா..?’ அவள் மனம் குறுகுறுத்தது..
அதை அறிய வேண்டுமானால் அவனைப் பார்க்க வேண்டும்.. அவள் அவனைப் பார்ப்பதை அவன் பார்த்து தொலைத்து விட்டால் வம்பு வந்து சேரும்..
‘எதுக்கு வம்பு..?’ அவள் திரும்பவில்லை..
அறைக்கதவு தட்டப்பட்டது.. கருணாகரன் கதவைத் திறந்தான்.. அவன் ஆர்டர் செய்திருந்த உணவு வகைகளை வைத்து விட்டு ஹோட்டலின் பணியாள் சென்று விட்டான்..
“சாப்பிட வான்னு அழைக்கனுமா..?”
அவன் குரலில் அவசரமாக கையிலிருந்த புத்தகத்தை டீப்பாயில் வைத்து விட்டு அவள் திரும்பினாள்..
“எனக்கு ரெண்டு இட்லி போதும்..”
“இது ஸ்டார் ஹோட்டல்.. இடத்துக்குத் தகுந்தபடி தான் சாப்பாடும் இருக்கும்.. இங்கே இருக்கிறதில எது வேணுமோ அதை எடுத்துச் சாப்பிடு.. முட்டாள் மாதிரி பேத்தாதே..”
அவனுக்கு எதிரே இருந்த சோபாவை அவன் சுட்டிக் காட்டியதில் அவள் தயக்கத்துடன் உட்கார்ந்தாள்.. ஊடே இருந்த இன்னொரு டீப்பாயின் மீது உணவு வகைகள் இருந்த தட்டுக்கள் பரத்தி வைக்கப் பட்டிருந்தன.. எதை எடுத்துக் கொள்வது என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது.. அவனே அவள் பக்கமாக சில தட்டுக்களை நகர்த்தி விட்டான்..
“இதையெல்லாம் உனக்காக ஆர்டர் பண்ணினேன்.. சாப்பிடு..”
அவளுடைய பதிலுக்கு காத்திருக்காமல் அவன் பக்கமாக இருந்த தட்டுக்களை அவன் காலி பண்ண ஆரம்பத்ததில் சசிரேகா மெதுவாக ஒரு தட்டை கையில் எடுத்தாள்.. சாப்பிட ஆரம்பித்தாள்.. உணவு ருசியாக இருந்தது.. வயிறு பசியாக இருந்தது.. அடுத்த சில நிமிடங்களில் அவளுக்கென்று அவன் கைகாட்டிய தட்டுகள் காலியாகி விட.. அவன் ஜாடையாக அவளைப் பார்த்தான்..
‘பாவம்.. பசியோட இருந்திருக்கா..’ அவனுக்கு இரக்கமாக இருந்தது..
கடைசியாக காபி கப்பை கையில் எடுத்துக் கொண்டவளிடம்..
“பசிச்சதுன்னா சொல்ல மாட்டியா..?” என்று கடிந்து கொண்டான்..
காபியை உறிஞ்சியபடி அவனை மேல் பார்வை பார்த்தவளின் விழிகளில்..
‘இவன் என்ன கேட்டகிரி..?’ என்ற குழப்பம் தெரிந்தது..
“என்னைப் புரிஞ்சுக்கிறது சுலபம்தாண்டி.. என்ன.. புரிஞ்சுக்கனும்ங்கிற தேடல் உன்கிட்ட இருக்கணும்.. அதுதான் இல்லையே..” அவன் நிதானமாக சொன்னான்..
“தெரிஞ்சவரை போதும்..” அவள் காபிக் கப்பை வைத்துவிட்டு நிமிர்ந்து அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள்..
“ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்க அவளின் சம்மதத்தைக் கேட்கனும்.. அவளும் மனுஷிதான்.. அவளுக்கும் ஓர் மனமிருக்கும்ங்கிற நினைப் பிருந்திருக்கனும்.. உங்ககிட்ட அது சுத்தமா இல்லையே.. என்னைக் கல்யாணம் பண்ணிக்க என் சம்மதம்
எதுக்குன்னு நீங்க நினைச்சிட்டிங்க.. இவளோட பெரியப்பாவுக்கு இவ அடிமைதானே.. அந்தப் பெரியப்பாவுக்கு சொத்துத்தரேன்னு சொல்லிட்டா இவ கழுத்தைப் பிடிச்சு நம்ம காலடியில தள்ளிருவாருன்னு கணக்குப் போட்டுக் காய் நகர்த்தி ஜெயிச்சுட்டிங்க.. உங்களுக்கு உரிமையில்லாத எனக்கு மட்டும் உரிமையான என்னோட அப்பாஅம்மா வாழ்ந்த வீட்டை என்னிடம் இருந்து பறித்து என் பெயரிப்பாவுக்கு தாரை வார்த்துக் குடுப்பேன்னு வாக்குக் குடுத்திருக்கீங்க.. இத்தனைக்கும் மேலா இன்னொருத்தனைக் காதலிச்சுட்டு.. அந்தக் காதலை தியாகம் பண்ணிட்டு பெரியப்பா கை காட்டற ஆளுக்கு கழுத்தை நீட்டப் போகிறவ.. வழியில காரில் உங்களுடன் காதல் செய்ததா என்னைப் பத்தின உயர்வான அபிப்ராயங்களைச் சொன்னீங்க.. ஆயுசுக்கும் இது போதும்.. இதுக்கும் மேலே உங்களைப் புரிஞ்சுக்கிட்டா நான் என்னாவேன்னு எனக்கே தெரியலை..”
சசிரேகா பேசப்பேச.. அவனது முகம் மாறியது.. புருவங்கள் சுருங்க யோசனையுடன் அவளைப் பார்த்தவனைப் பார்க்காமல் காரமங்களத்தில் படுப்பதைப் போலக் கட்டிலின் ஓரமாக சுருண்டு படுத்தவள் அசதியுடன் தூங்கிப் போனாள்..
மறுநாள் காலையில் அவள் கண் விழித்த போது அறையில் அவன் இல்லை.. கட்டிலின் ஓரமாக ஒரு பேப்பர் இருந்தது.. அது பறந்து விடாமலிருக்க வைக்கப் பட்டிருந்த புத்தகத்தைத் தள்ளி விட்டு பேப்பரை எடுத்தாள் சசிரேகா..
‘ஜிம்முக்குப் போகிறேன்.. போனில் ரூம் சர்வீஸைக் கூப்பிட்டு காபியை ஆர்டர் பண்ணிக் குடித்து விடு.. டிபன் சாப்பிட நான் வந்து விடுவேன்..’ என்று பேப்பரில் எழுதியிருந்தது..
‘என்ன மாதிரியான கணவன் இவன்..?’
புரியாத போதிலும் அவளுக்காக அவன் காட்டிய அக்கறை அவளுக்குப் புதிதாகவும் இதமாகவும் இருந்தது.. அவளுக்காக யோசிக்கவும் ஒருவன் இருக்கிறான் என்ற நினைவே அவளுக்கு சக்தியைக் கொடுத்ததில் அவள் புத்துணர்வாக உணர்ந்தாள்..
அந்தப் புத்துணர்வுடன் போனை எடுத்து ரூம் சர்வீஸை அழைத்து காபி ஆர்டர் பண்ணிவிட்டு குளியலறைக்குள் முகம் கழுவப் போனாள்.. பல் துலக்கி, முகம் கழுவி அவள் வந்தபோது காபியும் வந்திருந்தது. டிவியை உயிர்ப்பித்து அன்றைய செய்திகளைப் பார்த்தபடி அவள் காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தபோது கருணாகரன் வந்து விட்டான்..
“குட் மார்னிங்.. நல்லாத் தூங்கினியா..?”
அவனது இயல்பான விசாரிப்புக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவள்..
“ம்ம்ம்..” என்று முணுமுணுத்தாள்..
அவன் கண்டு கொள்ளாமல் விசிலடித்தபடி குளியலறைக்குள் போகப் போனான்.. அதற்குள் அவன் பார்க்கவில்லையென்ற நினைவில் அவள் கள்ளத்தனமாக அவனைப் பார்த்து வைத்தாள்.. இறுக்கிப் பிடித்த டி சர்ட்டில் உருண்டு திரண்டிருந்த அவனது புஜங்கள் கவர்ச்சியாக தெரிந்ததில் அவள் மனம் சலனப்பட்டது.. போதாக்குறைக்கு தொடை தெரியும் பெர்முடாஸீடன் அவன் அவளை மயக்கி வைத்தான்..
‘இப்படியா டிரஸ் பண்ணிக்குவான்..?’ அவள் முகம் சிவந்தது..
“ஜிம்முக்கு போக இப்படித்தான் டிரஸ் பண்ணிக்கனும்..”
குளியலறைக்குள் போகப் போனவன் நின்று பதில் சொன்னதில் அவள் அரண்டு போனவளாக காபிக் கப்புக்குள் கவிழ்ந்து கொண்டாள்..
ஓரச் சிரிப்புடன் அவன் குளிக்கப் போய் விட்டான்.. வெளியே வந்தவன் பெர்முடாசும்.. வெற்று மார்புமாக இருந்ததில்..
‘இவன் ஒரு முடிவோடதான் இருக்கான்..’ என்று உதட்டைக் கடித்தபடி அவளுக்கான மாற்றுடையை எடுக்கப் பெட்டியைத் திறப்பதைப் போல முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சசிரேகா..
அவளைப் பார்த்தபடி அவன் வெற்றுடம்பைத் துடைத்துவிட்டு நிறுத்தி நிதானமாக உடல் முழுவதும் பவுடரை அபிசேகம் பண்ணிக்கொண்டிருந்ததில் அவளது கைவிரல்கள் நடுங்கின.. ஆண்மை ததும்பும் அவன் மார்பில் ஒன்றியிருந்த தருணங்கள் நினைவுக்கு வந்து அவளை இம்சித்தன.. அவள் மனதில் மோகத்தீ பற்றிக் கொண்டது.. அதைக் கொன்று புதைக்கும் திராணி மெல்ல மெல்ல அவளிடமிருந்து விடைபெற்று விடுமோ என்று அவள் பயந்தாள்..
‘நானா உன்னைத் தொட மாட்டேன்..’
அவனது அழுத்தமான குரல் அவள் காதில் ஒலித்தது.. அவளாக அவனைத் தொட்டு விடச் செய்து விடும் முடிவோடு அவன் இருக்கிறானோ என்ற பயத்துடன் அவள் அவசரமாக குளியலறைக்குள் ஓடிவிட்டாள்..
குளித்து முடித்து ஒரு பிரிண்டட் சில்க் சேலையை உடுத்தி வெளி வந்தவளை பேண்ட் சர்ட்டுடன் இருந்தவன் ஏற இறங்க பார்த்து வைத்தான்..
அவனுடைய ஒரு மார்க்கப் பார்வையில் மனம் சலனப் பட்டாலும்..
‘அப்பாடி.. முழு டிரஸ்ஸீடன் இருக்கிறான்..’ என்று அவள் ஆசுவாசப் பெருமூச்சை விட்டாள்..
காலை டிபனையும் பார்த்துப் பார்த்து ஆர்டர் பண்ணிச் சாப்பிட வைத்தவனின் குறுகுறுவென்ற பார்வையில் ஏதோவொரு செய்தியிருந்தது..
‘என்னவா இருக்கும்..?’
யோசித்து யோசித்து தலை குழம்பியதுதான் மிச்சம்.. அவளுக்கு விடை கிடைக்கவில்லை.. அவன் மனதில் என்ன இருக்கிறதென்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது, அவனாகச் சொன்னால்தான் உண்டு என்பதை உணர்ந்து வைத்திருந்தவள்..
‘சரியான கல்லுளி மங்கன்..!’ என்று அவனை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்..
அவள் வேலை செய்த கம்பெனிக்கு அழைத்துக் கொண்டு போனான்.. அவள் ராஜினாமாக் கடிதத்தை கொடுத்து விட்டு வரும் வரைக்கும் வரவேற்பறையில் காத்திருந்தான்.. அவள் வந்ததும்..
“போகலாமா..?” என்று எழுந்து கொண்டவன்..
“அந்த பிரவின் இங்கேதான் வேலை செய்கிறானா..?” என்று விசாரித்து வைத்தான்..
அவள் எரிச்சலுடன் முறைத்ததும் தோள்களைக் குலுக்கியவன்..
“கேட்கனும்னு தோணிச்சு.. கேட்டேன்..” என்றான்.
“இதைப் போல நான் கேட்கனும்னு நினைக்கிறதை யெல்லாம் கேட்டா நீங்க தாங்க மாட்டிங்க..” அவள் சூடாக பதில் சொன்னாள்..
“ஆஹா..! நீ கேட்காத ஆளுதான்.. பேசா மடந்தைதான்.. கேட்கிறதுக்கு எதையும் மிச்சம் வைத்திருக்கியா என்ன..? வாடி..”
இலகுவாக பேசிவிட்டு காரைக் கிளப்பியவனை முறைத்தவளுக்கு லேசாக சிரிப்பு வந்தது.. காட்டிக் கொள்ளாமல் சாலையைப் பார்ப்பதைப் போல பாவனை செய்தாள்.. லேடிஸ் ஹாஸ்டலுக்குச் சென்று ரூமைக் காலி செய்து விட்டு அவளுடைய பெட்டியை எடுத்துக் கொண்டாள்.. வத்சலா கார் வரைக்கும் வந்து டாட்டா சொல்லி வழியனுப்பி வைத்தாள்..
“இன்னைக்கோடு உன் சென்னை வாழ்க்கைக்கு குட்பை சொல்லிட்ட.. இதை மனசில வைச்சுக்க..”
கண்டிப்புடன் அவன் சொன்னபோது அவள் கண்கலங்க பேசாமல் இருந்தாள்..
Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.