Chapter 03

0Shares

நதியோரம் நடந்தபோது

நெஞ்சினிலே யார் நினைவு?

ஊருக்குத் தெரியாமல்

உறங்குகின்ற உன் நினைவு!

…நதியோரம் நான் நடந்த போது…

வித்யாவும், பூர்ணிமாதேவியும் நான்கு வருடங்களாக கல்லூரியில் ஒன்றாகப் படிக்கிறார்கள்.. அதில் முதல் ஒரு வருடம் தவிர்த்து அடுத்த மூன்று வருடங்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கின்றனர்.. இந்த மூன்று வருடங்களில் ஆரம்பத்தில் ஒட்டாமல் அளவோடு பழகி வந்த வித்யா ஓர் ஆறுமாத கால அளவில் மட்டுமே ஒதுங்கியிருக்க முடிந்தது.. ஒருநாள் நைட் டூயுட்டி முடிந்து வீடு வந்தவள் அன்று ஞாயிறு என்பதால் காலை பதினொரு மணியளவில் எழுந்து குளித்துச் சாப்பிட வந்தாள்.. கண்ணம்மா டேபிளில் வைத்திருந்த ஹாட்பாக்ஸில் இருந்த இட்லிகளை எடுத்துப்போட்டு சாப்பிட ஆரம்பித்தவள்..

“பூர்ணிமா சாப்பிட்டாச்சா ஆன்ட்டி..” என்று வினவினாள்..

பூர்ணிமாவைப் போலவே வித்யாவையும் நினைக்க வேண்டும் என்று பூர்ணிமா கறாராகக் கூறியிருந்தாள்.. எனவே அவளுக்கு பரிமாறியபடி..

“இன்னும் வரலைம்மா.. ரூம் கதவை அடைச்சிட்டு உள்ளேயே இருக்கு..” என்றாள் கண்ணம்மா..

“காபி குடித்தாளா..?”

“ம்ம்.. கண்ணெல்லாம் சிவந்து படுத்திருக்கு.. நான்தான் எழுப்பி காபியை குடிக்க வைத்தேன்.. அப்புறம் சாப்பிட்டுக்கிறேன் சித்தி.. தொந்தரவு பண்ணாதேன்னு சொல்லிடுச்சு.. அது மனசில என்ன இருக்கோ.. அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..”

வித்யா அப்படியே சாப்பாட்டை மூடி வைத்து விட்டு எழுந்து கை கழுவினாள்..

“என்னம்மா.. பாதியிலேயே எழுந்துட்டே..”

“பூர்ணிமாவைக் கூப்பிட்டுக் கொண்டு வருகிறேன் ஆன்ட்டி..” என்றவள் அதுநாள்வரை போகாத பூர்ணிமாவின் அறைப்பக்கம் சென்று கதவுகளைத் தட்டினாள்..

“சித்தி.. அப்புறம் சாப்பிடுகிறேன்..” என்று கதவுகளைத் திறக்காமல் குரல் கொடுத்தாள் பூர்ணிமா..

“இது உன் சித்தியில்லை.. வித்யா..” உள்ளேயிருந்து சிறிது நேரம் பதிலில்லை.. சற்றுப் பொறுத்து..

“வித்யா நீ சாப்பிடு.. நான் அப்புறம் வருகிறேன்..” என்று குரல் வந்தது..

“நான் சாப்பிடுவது இருக்கட்டும்.. நீ முதலில் கதவைத் திற..” என்று அதட்டினாள் வித்யா..

“வித்யா ப்ளீஸ் என்னை டிஸ்டர்ப் செய்யாதே..”

“இப்போது நீ கதவைத் திறக்காவிட்டால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வருவேன்.. என் குணம் தெரியுமில்லை..?”

வித்யாவின் மிரட்டலுக்கு உடனே பலன் கிடைத்தது.. பூர்ணிமா கதவைத் திறந்தாள்.. உள்ளே நுழைந்த வித்யா பூர்ணிமாவின் முகத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டாள்.. கண்ணம்மா கூறியதுபோல் பூர்ணிமாவின் கண்கள் தூக்கமில்லாமல் சிவந்திருந்தன.. இமைகள் வீங்கியிருந்தன.. தலை கலைந்திருந்தது.. முகத்தை துடைத்துக்கொண்டே மூக்கை உறிஞ்சிக் கொண்டு..

“உட்கார் வித்யா..” என்றாள் பூர்ணிமா.. வித்யா.. பூர்ணிமாவுடன் தங்கியிருக்க ஒப்புக் கொண்டு வந்திருந்த ஆறுமாதங்களில் அன்றுதான் முதன்முறையாக அவள் அறைக்குள் சென்றிருக்கிறாள்.. அறையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள் வித்யா..

‘பூரணம்’ பங்களா பூர்ணிமாதேவியின் பெயரில் வாங்கப்பட்டிருந்தது.. முன்புறம் சிறிய தோட்டத்துடன் விசாலமான போர்டிகோவுடன் இருந்த வீட்டின் கீழ்தளத்தில் பெரிய ஹால், டைனிங் ஹால், பூஜையறை, சமையலறை போக நான்கு பெட்ரூம்கள் இருந்தன.. மாடியிலும் அதே போல் பெரியஹாலும் ஐந்து பெட்ரூம்களும் இருந்தன.. போர்டிகோவின் மேல்புறம் மாடியின் பால்கனியாக அமைந்திருந்தது.. அதில் நான்கு மரச்சேர், தொங்கு ஊஞ்சல்கள் தொங்கிக் கொண்டிருந்தன. பால்கனியின் கைப்பிடியோரம் பூந்தொட்டிகளில் ரோஜாச் செடிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன..

கீழ்தளத்தில் இருந்த அறைகளில் ஒன்றில் கண்ணம்மா இருந்தாள்.. இன்னொரு அறையை சதாசிவமும், சின்னய்யனும் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தனர்.. மற்ற இரு அறைகளும் பூட்டியிருந்தன. மாடியில் பால்கனி மாடி ஹாலை ஒட்டி அமைந்திருந்தது.. ஹாலின் இருபுறமும் ஒரு பக்கம் பெரிய அறைகள் இரண்டும் மற்றொரு பக்கம் சிறிய அறைகள் மூன்றும் அமைந்திருந்தன.. பெரிய படுக்கையறைகளில் ஒன்றில் பூர்ணிமா இருந்தாள்.. மற்றொன்றை வித்யாவுக்கு கொடுக்க அவள் மறுத்து விட்டாள்..

“எனக்கு இந்த ரூமே போதும் பூர்ணி.. தோட்டத்தை ஒட்டி இருக்கு.. அட்டாச்டு பாத்ரூம் இருக்கு..”

சிறிய அறைகளில் ஒன்றை வித்யாவிற்கு கொடுத்து விட்டாள் பூர்ணிமா.. வற்புறுத்தினால் அவள் வெளியேறி விடுவாள் என்ற பயம்.. பூர்ணிமாவின் அறைக்கு நேர் எதிரே வித்யாவின் அறை இருந்தாலும் வித்யா பூர்ணிமாவின் அறைக்குள் போக மாட்டாள்..

இப்போது பார்க்கையில் ஒரு சிறிய குடும்பம் இருக்கு மளவிற்கு அந்த அறை பெரிதாக அழகாக கட்டப்பட்டு இருந்தது தெரிய வந்தது.. அறையினுள்ளேயே உடை மாற்றும் அறையும் அதற்குள்ளேயிருந்தும் அட்டாச்டு பாத்ரூமிற்குள் போக வசதியும் இருந்தது.. பெரிய பிரம்மாண்டமான கட்டில் அதனருகே போடப்பட்டிருந்த சோபாக்கள் என்று அறையின் ஒவ்வொரு அங்குலமும் பணத்தால் செதுக்கப்பட்டிருந்தது..

வித்யா தங்கியிருந்த அறையிலும் கட்டில், டேபிள், சேர், டிரெஸ்ஸிங் டேபிள், சுவரில் பதித்த அலமாரிகள், ஆகியள உண்டு..

“இது எனக்கு வேண்டாம்..” என்று மறுத்தவளிடம்..

“உன் ரூமில் மட்டுமா இருக்கு..? கண்ணம்மா சித்தி, சதாசிவம் தாத்தா ரூம்களிலும் போட்டிருக்கோம்.. இதற்கும் சேர்த்துத்தான் பணம் உன்னிடம் வசூல் பண்ணுகிறேன். இப்ப அடங்கு..” என்று அடக்கினாள் பூர்ணிமா..

இப்போது இந்த அறையின் படாடோபத்தைப் பார்த்ததும் பிரமித்தாள் வித்யா.. ‘அன்பே வா’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் அறை மட்டும் விசேசமான அலங்காரங்களுடன் இருக்கும்.. அதே போல் இருந்தது பூர்ணிமாவின் அறை.. தோழியின் வருத்தத்தை விசாரிக்க மறந்து..

“எவ்வளவு அழகாக இருக்கு உன் ரூம்..?” என்று ஆச்சரியப்பட்டாள்..

பூர்ணிமாவின் இதழ்களில் புன்முறுவல் உதித்தது..

“பணம் கொட்டிக் கிடந்தால் அழகை உருவாக்கலாம் வித்யா..?” தோழியின் வார்த்தைகளில் இருந்த கசப்பை உணர்ந்த வித்யா..

“பணத்தின் மேல் திடீரென்று ஏனிந்த கசப்பு பூர்ணி..? அது அதிகம் இருப்பதால் உனக்கு அதன் அருமை தெரிய வில்லைபோல.. ஒரு வேளைச் சாப்பாட்டிற்கு ஏங்கும் ஏழைகள் இந்த உலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா..?” என்றாள் கோபத்துடன்..

“எனக்குத் தெரியாதுதான் வித்யா.. பணத்திலே பிறந்து பணத்திலே வளர்ந்த எனக்கு ஏழைகளின் கஷ்டம் தெரியாதுதான்.. ஆனால் இந்தப் பணத்திற்காக, இது தரும் கௌரவத்திற்காக வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கும் தியாகியைப் பற்றி உனக்கும் தெரியாது..”

“என்னடி..? நான் ஒன்று கேட்டால் நீ வேறு ஒன்றைச் சொல்கிறாய்..?”

“இல்லை வித்யா.. இரண்டும் வேறாக இருந்தாலும் இரண்டிற்கும் சம்பந்தம் இருக்கிறது.. ஏழைகளின் தேவை மிகவும் கம்மி, பசியாற உணவும், உடுத்த ஒரு முழம் துணியும், உறங்க ஓர் கூரையும் கிடைத்தாலே அவர்களுக்குப் போதும்.. படுத்தவுடன் உறங்கி விடுவார்கள்.. ஆனால் நாங்கள்.. ராஜவம்சத்தில் பிறந்தவர்கள்.. ஒரு சிறு சறுக்கல் வந்தால் கூடக் கலங்கி விடுவோம்.. எங்கள் ராஜ மாளிகையில் வாழ்வின் கௌரம் குறைந்து விடக்கூடாது.. அந்தப் பரம்பரைப் பெருமையில் தூசிபடிந்து விடக்கூடாதுன்னு கிடந்து போராடுவோம்.. எங்களது படுக்கை பஞ்சனையாய் இருந்தாலும் எங்களுக்கு அது முள்படுக்கைதான்.. படுத்தாலும் உறக்கம் வராது..” கலகல வென்று சிரித்தாள் வித்யா.. தோழியின் அருகே சென்று அமர்ந்து அவள் முகத்தை தன்புறம் திருப்பி..

“இன்றைக்கு என்னடி இவ்வளவு அலுத்துக் கொள்கிறாய்..?” என்று அன்பாகக் கேட்டாள்..

பூர்ணிமாவின் கண்கள் கலங்கி கண்களில் நீர் வழிந்தது.. வித்யா பதறிப்போனாள்.. கருணையே வடிவான தன் தோழிக்கு என்ன துயரம்..?

“என்னிடம் சொன்னால் உனக்கு ஆறுதல் கிடைக்கு மென்றால் என்னிடம் சொல் பூர்ணி.. உன் மனதை வருத்தும் வருத்தம் என்ன..?”

மற்றவர்களின் அந்தரங்கத்தை அறியக் கூடாதென்ற கொள்கை உடைய வித்யா தோழியின் துயர் தாங்க முடியாமல் கேட்டாள்..

பூர்ணிமா எழுந்தாள்.. அலமாரியைத் திறந்து ஓர் ஆல்பத்தைக் கொண்டு வந்தாள்.. பிரித்து ஒரு பக்கத்திலிருந்த போட்டோவைக் காட்டினாள்..

“இதுதான் பிரகாஷ்.. எனக்காக நிச்சயம் செய்யப் பட்டிருக்கும் மாப்பிள்ளை.. எனக்காக காத்திருப்பவர்..”

புகைப்படத்திலிருந்த இளைஞனின் முகத்தில் ஓர் கவர்ச்சி இருந்தது.. சிரிக்கும் கண்கள் கூடச் சேர்ந்து சிரிக்க அழைத்தன.. வசீகரமான அந்த இளைஞனை மீண்டும் ஓர்முறை பார்த்தவள்..

“நன்றாகத்தானே இருக்கிறார்.. இவரைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள உனக்க ஏன் விருப்பமில்லை..?” என்று கேட்டாள்..

“எனக்கு மிகவும் விருப்பம் வித்யா.. அதனால்தான் விருப்பமில்லை..” வித்யா திகைத்தாள்.. என்ன சொல்கிறாள் இவள்..?

“என்னடி புதிர் போடுகிறாய்.. ‘வரும் ஆனால் வராது’ன்னு வடிவேலுகிட்ட என்னத்த கன்னையா சொன்னது மாதிரியில்ல இருக்கு நீ சொல்வது.. விளங்குவது போல் சொல்லக்கூடாதுன்னு விரதமிருக்கியா..?”

“விளங்காதுதான்.. உனக்கு எப்படி விளங்கும்..? என்னைப் பெற்ற அம்மாவுக்கும், கூடப்பிறந்தவர்களுக்குமே விளங்காதபோது உனக்கு எப்படி விளங்கும்..?”

“ஏன் பூர்ணி.. உன் மனதில் என்ன பிரச்சனை..?”

பூர்ணிமாதேவி தோழியை ஏறிட்டுப் பார்த்தாள்.. அவள் மனதில்தான் பிரச்னை உள்ளது என்பதை கண்டுபிடித்து விட்டாளே..

“நீ புத்திசாலி வித்யா.. நீ சொல்வது போல் என் மனது தான் எனக்குப் பிரச்சனை.. இன்னும் சொல்லப் போனால் என் வீட்டில் யாருக்கும் மனம் என்பதே இல்லை.. சுய நலம் மட்டும்தான் இருக்கிறது என்பதே என் வருத்தம்..”

வித்யா தோழியை புரிந்து கொள்ளலுடன் பார்த்தாள்.. பேசட்டும்.. அவள் மனதிலிருப்பதைக் கொட்டட்டும்..

அப்போதுதான் பூர்ணிமா அந்த ஆல்பத்தின் அடுத்த பக்கத்தைப் புரட்டிக் காட்டினாள்..

“இவர்தான் என் பெரிய அண்ணன் நரேந்திரன்.. நரேந்திர பூபதி..” வித்யா அப்போது அந்தப் படத்தைப் பார்த்த பார்வையில் கல்மிஷம் துளிகூட இல்லை.. போட்டோவிலிருந்த நபரைப் பார்த்து..

“உன் பெரிய அண்ணன் ரொம்பக் கடுமையானவர் போல இருக்கே பூர்ணி.. போட்டோவில் கூட முறைக்கிறார். சிரிக்கத் தெரியாதா..?” என்று தான் முதலில் கேட்டாள்..

“அவர் சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் வீட்டில் உள்ள மற்றவர்கள் சிரிப்பது எப்படி..? அவர் சிரிப்பை மறந்ததால்தான் வீட்டில் அனைவரும் சிரித்து வாழ்கிறோம்..” என்றாள் பூர்ணிமா கண்கலங்க..

“ஏன் பூர்ணிமா.. நீங்கள் எல்லோரும் பரம்பரைப் பணக்காரர்கள்தானே..?”

“பரம்பரையைப் பற்றிப் பேசாதே வித்யா.. எனக்கு மிகவும் மனக்கஷ்டமாக இருக்கிறது.. அந்தப் பரம்பரைப் பெருமையைக் காப்பாற்றத்தான் என் பெரிய அண்ணன் அவர் சிரிப்பைத் தொலைத்தார்..”

பூர்ணிமா அந்த ஆல்பத்தின் முதல் பக்கத்தைக் காட்டினாள்..

“இதுதான் என் அப்பா ராஜேந்திர பூபதி.. இவங்க என் அம்மா சௌதாமினி தேவி..”

அடர்ந்த மீசையுடன் ராஜகுல தலைப்பாகையுடன் அந்தப் பெரியவர் இருக்க பக்கத்திலிருந்த பெண்மணி அழகாக இருந்தாள்..

“இது எங்கள் குடும்பப்படம்.. இது என் மூத்த அண்ணன் நரேந்திரபூபதி.. இது அவருக்கு நேர் இளைய அண்ணன் மகேந்திர பூபதி.. இது அவருக்கு அடுத்துப் பிறந்த அக்கா மாலினிதேவி.. இது என் மூன்றாவது அண்ணன் யுகேந்திர பூபதி.. இதுதான் கடைசி அண்ணன் சுரேந்திர பூபதி..”

“உனக்கு மொத்தம் நான்கு அண்ணன்கள், ஒரு அக்காவா..?”

“ஆமாம்.. எங்கள் குடும்பம் பணத்தில் மட்டுமில்லை.. அளவிலும் பெரிய குடும்பம்தான்.. நாங்கள்.. நான்கு ஆண்கள்.. இரண்டு பெண்கள் உடன்பிறந்தவர்கள்..”

“உன் அம்மா ரொம்ப அழகு பூர்ணிமா..”

“ம்ம்.. இப்போது அம்மாவுடைய படத்தைப் பார்..”

பூர்ணிமா ஆல்பத்தின் கடைசி பக்கத்தைத் திருப்பிக் காட்டினாள்.. சௌதாமினி தேவியின் நெற்றியில் திலகமில்லாமல் விபூதிக்கீற்று இருந்தது..

“பூர்ணிமா.. உன் அப்பா இறந்துவிட்டாரா..?” வித்யா அதிர்ச்சியுடன் கேட்டாள்.. போட்டோவில் தெரிந்த சௌதாமினியின் கண்களில் அடிபட்ட பறவையின் சோகம் தெரிந்தது..

பூர்ணிமா ‘ஆம்’ என்பதாய் தலை அசைத்தாள்.. போட்டோ ஆல்பத்தின் முன்னிரு பக்கங்களைத்தாண்டி மூன்றாம் பக்கத்தைக் காட்டினாள்.. ஓர் அழகான பெண் ஆர்ப்பரித்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.. முகத்தில் வட இந்திய சாயல் தென்பட்டது..

“இதுதான் கார்த்திகா.. கார்த்திகாயினி தேவி.. என் பெரிய அண்ணனின் காதலி.. நார்த் இண்டியாவில் ஜெய்ப்பூர் அருகில் உள்ள கிரண்பூர் சமஸ்தான இளவரசி.. என் அண்ணனுடன் வெளிநாட்டில் ஒன்றாகப் படிக்கும் போது காதலித்திருக்கிறார்கள்..”

“அப்புறம்..” கதை கேட்கும் ஆர்வத்துடன் தோழியைத் தூண்டினாள் வித்யா..

“என் பெரிய அண்ணன் படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தார்.. எங்க அப்பாவிடம் தன் காதலைச் சொன்னார்.. என் அப்பா ஜெய்ப்பூர் போய் சம்பந்தம் பேசிவிட்டு வந்தார்.. நான் அப்போது ஸிக்ஸ்த் படித்துக் கொண்டிருந்தேன்.. பனிரெண்டு வயது.. நான் தான் என் வீட்டின் கடைக்குட்டி.. என் பெரிய அண்ணனுக்கும் எனக்கும் பதினைந்து வயது வித்தியாசம்.. அப்போது என் பெரிய அண்ணனுக்கு இருபத்தி ஏழு வயது.. அப்போதுதான் என் அப்பா காலையில் எங்கள் பேக்டரிக்குப் போனவர் மதியம் பிணமாக வீடு வந்தார்..”

“என்ன ஆச்சு வித்யா..?”

“மாரடைப்பாம்.. தொழிலில் ஏதோ நஷ்டமாம்.. திடீரென்று போன் வந்ததாம் எடுத்துப் பேசியவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்து விட்டாராம் டாக்டர் வருவதற்குள் உயிர்போய்விட்டது..”

“நீ மிகவும் கஷ்டப்பட்டிருப்பாயே பூர்ணிமா..?”

“கஷ்டம்தான்.. மனக்கஷ்டம்.. ஆனால் பெரிய அண்ணன் பொறுப்பை எடுத்துக் கொண்ட பின்னால்தான் பணக்கஷ்டம் தெரிந்தது.. எங்கள் பேக்டரியில் மோட்டார் சைக்கிளுக்கான பாகங்கள் தயார் பண்ணுவார்கள்.. அத்தோடு துணி தயாரிக்கும் மில்லும் இருந்தது.. இரண்டையுமே ஏற்றுமதி பண்ணுவார்கள்.. எங்கள் சரக்குப் போன கப்பல் கவிழ்ந்து விட்டதால் நஷ்டம் வந்துவிட்டது..”

“இன்ஷ்யூர் பண்ணவில்லையா..?”

“போதுமான அளவு பண்ணவில்லை.. இப்போது அண்ணன் போதுமான அளவு இன்ஸ்யூர் பண்ணாமல் சரக்கு அனுப்புவதில்லை..”

“அந்த ஒரு விபத்தால் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டதா..?”

“இல்லை வித்யா.. அந்த நேரம் பார்த்து தொழிலாளர் பிரச்சனை.. ஸ்டிரைக் வந்தது.. ஏற்றுக் கொண்ட வேலைகளை முடித்துக் கொடுக்க காலதாமதம் ஆனது.. என் பெரிய அண்ணன் பேயாய் உழைத்தார்.. அப்போது அவரது காதலியின் அப்பா வந்தார்..”

“வந்து..”

“எனக்கு இருப்பது ஒரே மகள்.. உங்களை என் மகனாக நான் பார்த்துக் கொள்கிறேன்.. உங்களை வீட்டோடு மருமகனாக வைத்துக் கொள்ளத்தான் விருப்பப் பட்டேன்.. உங்கள் தந்தையும் சம்மதம் சொன்னார்.. அங்கே கடல் போன்ற என் தொழில் சாம்ராஜ்யம் உங்களுக்காக காத்திருக்கிறது.. என் மகளும் காத்திருக்கிறாள்.. ‘வாங்க’ன்னு சொன்னார்..”

“உன் அண்ணன் என்ன சொன்னார்..?”

“அப்பா உயிரோடிருந்தால் அண்ணன் அவர் கோரிக்கையை ஏற்று இருக்கலாம்.. ஆனால் கடலில் நங்கூரமில்லாமல் தத்தளிக்கும் கப்பலைப் போல எங்கள் குடும்பம் அல்லாடிக் கொண்டு இருந்தபோது அதைவிட்டு விட்டு அவர் எப்படிப் போவார்..?”

“அப்படியானால்..?”

“மறுத்துவிட்டார்.. அவரது கோரிக்கையை மட்டு மல்ல.. அவரது காதலி கார்த்தியாயினி தேவியையும் தான்..”

கைகளில் முகம் புதைத்து பூர்ணிமா விம்மினாள்..

0Shares

Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link