Chapter 06

0Shares

நதியோரம் நடந்தபோது

நானறிந்த உன் பாட்டு

கண்ணிரண்டை மூடச் சொல்லும்

கண்ணாமூச்சி விளையாட்டு

…நதியோரம் நான் நடந்த போது…

வித்யா திகைத்துப் போனாள்.. இது பூர்ணிமாவின் கரமில்லை.. மெதுவாக விழிபொத்திய கரங்களைப் பிடித்தாள்.. ரோமங்கள் அடர்ந்திருந்தன.. வித்யா விக்கித்துப் போனாள்.. இது ஒரு ஓர் ஆண்மகனின் கரமல்லவா..? படாரென்று கைகளைத் தட்டி விட்டவள் கோபமாய் திரும்பினாள்.. எதிரே நிற்பவனைக் கண்டதும் அப்படியே சிலையாக நின்று போனாள்.. இது யார்? கடவுளே..! இது அவளது நரேந்திரன் அல்லவா..?

‘நரேந்திரன்.. நரேந்திர பூபதி..’ எப்போது வந்தான் இவன்..? ஏன் அவள் விழிகளைப் பொத்தினான்..? அவளை அறிவானா..? பிரமித்துப் போய் அவள் அவனைப் பார்க்க.. அவனோ விதிர்த்துப் போய் அவளைப் பார்த்தான்..

“ஐ ஆம் ஸாரி.. நீங்கள் யார்..? நான் என் தங்கையென்று நினைத்து.. பூர்ணிமா.. பூர்ணிமா..”

“அண்ணா..” என்று ஓடி வந்தாள் பூர்ணிமா..

“இது என் பிரண்ட் வித்யா.. என்னுடன் இந்த வீட்டில் தங்கியிருக்கிறாள் என்று நான் சொல்லியிருந்தேனே.. வித்யா.. நீ போட்டோவில் பார்த்த என் பெரிய அண்ணன் இவர்தான்..”

பூர்ணிமா அறிமுகம் செய்து வைக்க அவன் விழிகளை நேருக்கு நேராய் பார்க்க முடியாமல் தவித்த வித்யா தலைகுனிந்து நடுங்கும் கரங்களைக் குவித்து வணக்கம் சொன்னாள்..

தன் முன்னால் தாமரை மொட்டுக்களாய் குவிந்த கரங்களைப் பார்த்த நரேந்திரன் பதிலுக்கு மெதுவாய்..

“வணக்கம்..” என்றான்.. எதிரே நின்றவளின் படபடப்பு ஏனோ அவனை ஈர்க்க தலை கவிழ்ந்திருந்த அவள் முகத்தைப் பார்த்தான்.. இமைகள் பட்டாம் பூச்சிகiளாய் அடித்துக் கொள்ள அந்த பெரிய நீள்வடிவான கண்கள் தாழ்ந்திருக்க அவள் நின்ற கோலம் ஓர் ஓவியம் போல் அவன் மனதில் பதிந்தது.. உயரமாய்.. ஒடிசலாய் சிவந்த மஞ்சள் நிறத்துடன் ஆர்ப்பாட்டமில்லாத அழகிய நதி போல் தோன்றிhள் அந்த யுவதி..

‘என்ன ஓர் அமைதியான அழகு’என்று நினைத்துக் கொண்டவன்.. அதற்கு மேல் ஓர் வயதுப் பெண்ணைப் பார்ப்பது சரியில்லை என்ற கண்ணியம் காத்தவனாய் பார்வையை விலக்கிக் கொண்டு தங்கையைப் பார்த்தவன்..

“கடைசியில் இதுதானா என்னை சிக்கலில் மாட்டி வைத்தது..” என்றான்..

“எது அண்ணா..?” என்றாள் அவள் புரியாதவளாய்..

“இல்லை பூர்ணிமாக்குட்டி.. நீ உள்ளே வரும்போதே நான் பார்த்து விட்டேன்.. நீ மாடியேறிப் போனதும் பின்னாலேயே மெதுவாக வந்து கண்பொத்தி சர்ப்ரைஸ் கொடுக்கலாமென்று வந்து கண் பொத்தினால்.. கடைசியில் அது நீயில்லை.. உன் பிரண்ட்.. எதனால் தவறு நேர்ந்தது என்று பார்த்தால்.. நீங்கள் இரண்டு பேரும் ஒரே கலர்.. ஒரே டிசைனில் சுடிதார் போட்டிருக்கிறீர்கள்.. ஏன் பூர்ணி.. அண்ணாவை இப்படி மாட்டி வைக்க எத்தனை நாளாய் பிளான் போட்டாய்..?”

“போங்க அண்ணா..! எனக்கு நீங்கள் இன்று வருவீர்கள்னு எப்படித் தெரியுமாம்..? ஜோஸியமா பார்த்தேன்..? மாடிக்கு வந்து விட்டுக் கீழே இறங்கிப் போனால் கண்ணம்மா சித்திதான் சொன்னாங்க.. ‘உன் பெரிய அண்ணா மதியமே வந்துவிட்டார்.. இப்போ உன்னைத் தேடி மாடிக்குப் போயிருக்கார்’ன்னு உடனே அவசரமாய் வந்தேன்.. நான் வருவதற்குள்..” பூர்ணிமா முடிக்காமல் நிறுத்த..

“வருவதற்குள்..?” என்று கேலியாய் புருவம் உயர்த்திய நரேந்திரனின் பார்வை வித்யாவின் மேல் பாய்ந்து.. அதே நேரம் அவனை அவளது விழிகளும் ஏறிட்டுப் பார்க்க அவள் முகம் செவ்வானமானது..

“ம்ம்..” என்று அண்ணனின் குறும்மை ரசித்த பூர்ணிமா..

“நீங்கள் வித்யாவுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தீர்கள் போதுமா..?” என்று கலகலவென்று சிரித்தாள்..

அதற்குமேல் அங்கு நிற்க முடியாதவளாய் வித்யா..

“பூர்ணி.. நான் டியூட்டிக்கு கிளம்புகிறேன்..” என்றபடி சரசரவென படிகளில் இறங்கிப் போய்விட்டாள்..

அவள் திரும்பிய வேகத்தில் சுழன்று ஆடிய பின்னலின் நீளத்தைக் கண்ட நரேந்திரன் ஆச்சரியப் பட்டான்.. வித்யாவின் நீண்ட பின்னலின் மேல் அவன் பார்வை இருப்பதைக் கவனித்த பூர்ணிமா..

“அது அவளது சொந்தக் கூந்தல்தான் அண்ணா..?” என்றாள் கண்களில் குறும்பு மின்ன..

“போக்கிரி..” என்று தங்கையின் காதைப் பிடித்துத் திருகிய நரேந்திரன்..

“உன் தோழியின் கூந்தல் இயற்கையானதா இல்லை செயற்கையானதான்னு நான் உன்னிடம் கேட்டேனா..?” என்றாள்..

“நீங்கள் கேட்கவில்லை அண்ணா.. ஆனால் உங்கள் பார்வை கேட்டதே..”

“அதுவா.. இப்போதெல்லாம் பெண்கள் முடியை வெட்டி விட்டுக் கொள்கிறார்களே.. அதுதானே இப்போதைய பேஷன்.. அதனால் பார்த்தேன்..”

“அப்படியா.. நம்ப முயற்சி செய்கிறேன்.. ஆனால் அண்ணா..? எங்கள் காலேஜில் வித்யாவின் நீண்ட கூந்தலுக்கு ரசிகர் வட்டாரமே உண்டு தெரியுமா..”

“ம்ம்.. அதைத் தெரிந்து கொள்ளத்தானே அம்பா சமுத்திரத்திலிருந்து அத்தனை கிலோமீட்டர் தூரத்தையும் தாண்டி ஓடிவந்திருக்கிறேன்..” என்று கிண்டலாக மொழிந்தவன் வாசல்புறம் கேட் திறக்கும் சத்தம் கேட்டு மாடிப் பால்கனியிலிருந்தவாறே திரும்பிப் பார்த்தான்..

ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு வாசலைக் கடந்து கொண்டு இருந்த வித்யா அதே நேரம் மேலே ஏறிட்டுப் பார்த்தாள்.. கண நேரத்தில் உடலெல்லாம் மின்சாரம் ஊடுருவிப் பாய வித்யா பார்வையை விலக்கி ஸ்கூட்டியில் பறந்தாள்.. நரேந்திரனின் விழிகளில் அவளது நாணம் பதிவானது.. யோசனையுடன் அவள் சென்றதிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றவன்..

“களுக்”கென்ற சிரிப்பொலி கேட்டுத் திரும்பினான்.. பூர்ணிமா வாய் பொத்திச் சிரித்துக் கொண்டிருந்தாள்..

“என்ன சிரிப்பு..?” என்று காரணம் தெரியாமல் கேட்டான்..

“இராமாயணத்தை நினைத்தேன்.. சிரித்தேன்..”

“இராமாயணமா..?”

“ஆமாம்.. அதில் ராமன் மிதிலையின் வீதியில் நடந்து வருவான்.. சீதை மாளிகையின் பால்கனியில் நிற்பாள்.. அவள் பார்வை கீழே பாயும்.. ராமனின் பார்வை மேலே பாயும்.. இருவரின் விழிகளும் சந்தித்துக் கொள்ளும்..”

“ஊஹூம்..” மென்மையான சிரிப்புடன் அவள் மேலே பேச ஊக்குவித்தான் நரேந்திரன்..

“அதைக் கம்பர் எப்படிச் சொல்வார் தெரியுமா..?”

“எப்படி..?” அறியாச் சிறுவன் போல் வினவினான் நரேந்திரன்..

“அண்ணலும் நோக்கினான்.. அவளும் நோக்கினாள்..”

“இதை ஏன் இங்கே இப்போது சொல்கிறாய்..?”

“இல்லை.. இங்கே கதை மாறியிருக்குன்னு நினைத்தேன்.. சிரிப்பு வந்துவிட்டது.. ராமாயணத்தில் ஹீரோ தான் தரையில் இருப்பார்.. ஹீரோயின் பால்கனியில் இருப்பாள்.. இங்கே நீங்கள் பால்கனியில் இருக்கிறீர்கள்.. வித்யா தரையில்.. அதுவும் ஸ்கூட்டியில் போகிறாள்.. ஹாஹா..”

“அவள் சீதையாயிருக்கலாம்.. நான் ராமனில்லை பூர்ணி.. அதனால் இனிமேல் விளையாட்டுக்குக் கூட அப்படிச் சொல்லாதே..” என்றான் கடினமான குரலில் நரேந்திரன்..

“அண்ணா..” என்று ஏதோ சொல்ல முயன்ற பூர்ணிமா விடம்..

“பொறு.. நான் உனக்கு எப்போதுமே உயர்த்திதான்.. ஆனால் நான் கார்த்திகாவைக் காதலித்தவன்.. வேறொரு பெண்ணை மண முடிக்க இருந்தவன்..” என்று இடை மறித்துப் பேசியவனின் வாய்பொத்தி தடுத்தாள் பூர்ணிமா..

“அவர்கள் இருவருமே வேறு ஆண்களைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு குழந்தையும் குடித்தனமுமாக இருக்கிறார்கள்.. அதை நீங்களும் மறந்து விடாதீர்கள் அண்ணா..”

“அது மட்டுமல்ல பூர்ணி..” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவன் தன்னை அடக்கிக் கொண்டு..

“இதற்குத்தான் நீ சிறு பெண்ணென்று நான் அடிக்கடி சொல்வது.. அதைவிடு.. இந்த மாலை நேரத்தில் உன் தோழி எங்கே போகிறாள்..?” என்று பேச்சை மாற்றினான்..

உடனே பூர்ணிமாவின் கண்களும் முகமும் மலர்ந்தன.. அங்கே தொங்கிக் கொண்டு இருந்த மர ஊஞ்சல் சேரில் வாகாய் அமர்ந்து கொண்டவள் கையை ஆட்டி ஆட்டி தோழியின் பெருமைகளைப் பற்றிப் பேசலானாள்.. ‘வித்யா மகாபுத்திசாலி.. வித்யா ரொம்ப சுய மரியாதை பார்ப்பவள்..’ என்று ஆரம்பித்து வித்யாவின் கதை முழுவதையும் கொட்டி முடித்தாள்.. எதிரேயிருந்த மற்றொன்றில் அமர்ந்து லேசாய் ஆடியபடியே கேட்டுக் கொண்டிருந்த நரேந்திரன்.. 

“ஸோ.. உன் பிரண்டுக்கு அம்மா கிடையாது.. சித்தி கொடுமை.. படிப்பில் கெட்டிக்காரி.. வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறாள்.. உன்னுடன் பணம் கொடுத்து விட்டு ‘பேஃயிங் கெஸ்டாக’ தங்கியிருக்கிறாள்.. அப்படித் தானே..” என்றான்..

“சுருக்கிச் சொல்வதானால் அப்படித்தான்..”

“குணம் எப்படி பூர்ணி..? உன்னுடன் தங்கும் பெண் நேர்மையான குணத்துடன் இருக்க வேண்டும்..? புரிந்ததா..?”

“அண்ணா..! அவன் தங்கக் கம்பி.. அவளைப் பற்றி இவ்வளவு கூறியும் நீங்கள் சந்தேகப்படுவதுபோல் பேசுவது கஷ்டமாக இருக்கிறது.. அவள் என்னுடன் நான்கு வருடங்களுக்கு மேலாகத் தங்கியிருக்கிறாள்..”

“அதனால்தான் கேட்கிறேன்.. வீட்டை மறந்து விட்டு.. உன் ரத்த சொந்தங்களை துறந்துவிட்டு அவளே எல்லாமும் என்று நீ ஆகிப்போனதற்கு என்ன காரணம்..?”

பூர்ணிமா திடுக்கிட்டாள்.. அண்ணன் என்ன வித்யா வின் மேல் குற்றம் சாட்டுகிறார்..?

“அண்ணா.. இது அடுக்காது.. என்னவோ நான் வித்யாவின் மேல் உள்ள பாசத்தால்தான் வீட்டை வெறுக்கிறேன் என்பதுபோல் அல்லவா பேசுகிறீர்கள்..?”

“அப்படியும் இருக்கலாமில்லையா..?”

“நல்லதற்கு இது காலமில்லை அண்ணா… வித்யாவானால் உங்கள் மேல் அப்படியொரு உயர்ந்த அபிப்ராயம் வைத்திருக்கிறாள்.. நீங்கள் அவளால்தான் எனக்கு வீட்டார்மேல் பாசம் போய்விட்டது என்கிறீர்கள்.. அவள் கேட்டால் துடித்துப் போய்விடுவாள்..”

நரேந்திரனின் புருவங்கள் யோசனையாய் உயர்ந்தன..

“என்மேல் உயர்ந்த அபிப்ராயமா..? உன் தோழிக்கா..? அவளுக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்..?”

“எல்லாம் தெரியும்..”

நரேந்திரனின் முகம் சினத்தால் மாறியது… கோபத்துடன்..

“நீ சொன்னாயா..?” என்று கேட்டான்..

“ஆமாம்..”

“ராஜேந்திர பூபதியின் மகள்.. நரேந்தி பூபதியின் தங்கை… மணிமுத்தாறு ராஜ வம்சத்தின் இளவரசி நாவடக்கம் என்பதை மறந்துவிட்டாளா..?”

“போதும் அண்ணா.. என்னவோ மன்னர் காலத்தில் குதிரைமேல் உட்கார்ந்து கொண்டு வசனம் பேசுவது போல் பேசுகிறீர்கள்.. உங்கள் ராஜவம்சமும் வேண்டாம்.. இளவரசி பட்டமும் வேண்டாம்.. நான் வெறும் பூர்ணிமா.. என் தோழி வித்யா… தோழிகளுக்குள் ரகசியங்கள் இருக்காது..”

“அதற்காக என் பெர்மிசன் இல்லாமல் என்னைப் பற்றி எப்படிப் பேசலாம்..?”

“உங்களைப் பற்றிப் பேசவில்லை.. என் பெரிய அண்ணனைப் பற்றிக் கூறினேன்.. என் வேதனையை பகிர்ந்து கொண்டேன்..”

“எப்போது சொன்னாய்..?”

“அவள் என்னுடன் தங்க வந்தபோதே சொல்லி விட்டேன்..”

நரேந்திரன் சிந்தனை வசப்பட்டான்.. அவன் வந்த நோக்கம் வேறு.. பிரகாசின் இல்லத்தில் அவனுக்கு வேறு பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.. சௌதாமினி மகளின் வாழ்க்கையை எண்ணி வழக்கம் போல் பெரிய மகனிடம் முறையிட்டாள்.. பூர்ணிமாவிற்கு புத்தி சொல்லி அழைத்துப் போகவே அவன் வந்தான்.. இங்கே யாரோ ஒரு கல்லூரித் தோழி கூட இருப்பதாக மட்டுமே அவள் கூறியிருந்தாள்.. அந்தத் தோழி அந்தரங்கத் தோழியாக இருப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை..

கண்ணம்மா மாலைச் சிற்றுண்டியுடன் மாடிக்கே வந்துவிட்டாள்.. ஒரு மோடாவை இழுத்துப் போட்டு அதில் சிற்றுண்டித் தட்டுக்களை வைத்தவள்..

“சாப்பிடுங்க ஐயா.. நான் போய் சூடா காபி போட்டுக் கொண்டு வரேன்.. வேறு ஏதாச்சும் வேணுங்களா..” என்று கேட்டாள்..

“சித்தி.. இந்த வித்யான்னு ஒரு பொண்ணு இங்க இருக்குதே அது சாப்பிட்டுவிட்டதா..?” என்று கேட்டான் நரேந்திரன்..

“எப்பவும் ஏதாவது சாப்பிட்டு விட்டுத்தான் போகும்.. ஆனால் இன்றைக்கு என்னவோ சாப்பிடாமலே ஓடி விட்டது.. புதுசா நீங்கள் வந்திருக்கிறதால சங்கடப் பட்டுச்சோ என்னவோ.. ராத்திரி பூராவும் கண்முழிச்சு வேலை பார்க்கணும்.. அங்கே ஏதாவது சாப்பிடக் கிடைக்குமோ என்னவோ..” என்று கவலைப்பட்டாள் கண்ணம்மா..

“ஏன் வழியில் ஹோட்டல் எதிலாவது சாப்பிடலாமே..”

“அது அப்படியெல்லாம் தனியாப் போய் சாப்பிடுற புள்ளை இல்லைங்க ஐயா.. காபி குடிச்சாலும் வீட்டுக்கு வந்துதான் குடிக்கும்..”

“ஐஸீ.. தனியாக வேலை பார்க்கிற பெண் இந்தக் காலத்தில் இதற்கெல்லாம் பயப்படுமா..?”

“அது பயப்படும்ங்கய்யா.. அதோட போதாத காலம்.. தான் சம்பாதித்து படிக்கிற நிலைமை வந்திருக்கிறது.. பாவம்.. ஆனால் சோர்ந்து உட்காராதுங்கய்யா.. அறிவான பொண்ணு.. நம்ம பாப்பா மேல் உயிரையே வைத்திருக்கிறது..”

கண்ணம்மாவின் கடைசி வார்த்தைகளில் பூர்ணிமா வின் விழிகளில் மின்னிய பெருமையைக் கண்டதும் நரேந்திரன் மனதிற்குள் ஓர் கணக்குப் போட்டான்..

“காலையில் எத்தனை மணிக்கு அந்தப் பெண் வரும்னு சொன்னீங்க, சித்தி..?” என்று அவன் கேட்க..

“டான்னு மணி ஆறடிக்கும்போது வீட்டுக்குள் நுழைந்து விடும்..” என்று வெகுளியாய் பதில் சொன்னாள் கண்ணம்மா..

அப்போதைக்கு மேலே பேச்சை வளர்க்காமல் பூர்ணிமாவுடன் தன்மையாக பேசிக் கொண்டிருந்து விட்டு உறங்கச் சென்ற நரேந்திரன்.. மறுநாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் வித்யா வேலை பார்க்கும் அலுவலகத்தின் வெளியே காருடன் நின்று கொண்டிருந்தான்..

0Shares

Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link