Chapter 14

0Shares

நதியோரம் நடந்தபோது

நிழல்போலே கூட வந்தவளே!

ஏழேழு ஜென்மத்திலும் என்னுடனே

இணை பிரியாமல் நீ வருவாயா?

…நதியோரம் நான் நடந்த போது…

பேக்டரியின் கணக்குகளில் அனாமத்து கணக்கு என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.. கணிசமான பெருந்தொகை அந்தக் கணக்கில் கொண்டு செல்லப்பட்டிருந்தது.. வித்யா குகனை அழைத்தாள்..

“யெஸ் மேடம்..”

“அக்கவுண்டன்டைக் கூப்பிடுங்கள்..”

‘கண்டு பிடித்து விட்டாள்’ என்பதை அறிந்து கொண்டவனின் மனதில் ‘அதற்குள்ளாகவா.. வாவ்.. 

மகா புத்தி சாலிதான்..’ என்ற மதிப்பு உதித்தது.. அக்கௌண்டன்ட் பூங்காவனம் வந்தான்..

“கூப்பிட்டீங்களாமே..” என்று அலட்சியமாய் கேட்டான்..

“இது என்ன அனாமத்துக் கணக்குன்னு ஒண்ணு ஓப்பன் ஆகியிருக்கு.. இதன் டீடெய்ல வேண்டுமே..”

“அதுவே அனாமத்து.. அதில் என்ன டீடெய்ல் வேண்டியிருக்கு..”

“சார்.. அதில் போடப்பட்டு இருப்பது கோடிக்கணக்கான ரூபாய்கள்.. எனக்கு டீடெய்ல்ஸ் தெரிய வேண்டும்..”

“சாரி மேடம்.. இதை நீங்கள் ஜி.எம்.மிடம் கேட்டுக் கொள்ளுங்கள்..” அவன் அவள் உத்தரவில்லாமலேயே வெளியேறினான்..

வித்யாவின் முகம் கோபத்தில் சிவந்தது.. எவ்வளவு திமிராய் நடந்து கொள்கிறான்..? யோசனையாய் ஃபைலின் அடுத்த பக்கத்தைப் புரட்டியபோது அறைக்கதவு படாரென்று திறக்கப்பட்டது.. மகேந்திரன் கோபாவேசமாய் அவள் எதிரில் வந்து நின்றான்..

“அக்கவுண்டன்டை கேள்வி கேட்டாயா..?”

வித்யா திகைத்துப் போனாள்.. இது என்ன புதுக்குழப்பம்..? கிணறு வெட்டினால் பூதம் கிளம்புகிறது.

“ஆமாம்..”

“நீ யார் அவனைக் கேட்க..?”

“இந்த பேக்டரியின் பெர்ஸனல் மேனேஜர்..”

“நான் யார் தெரியுமா..?”

“தெரியுமே.. இதே பேக்டரியின் ஜி.எம்..”

“எவ்வளவு திமிர் உனக்கு.. நான் இதன் முதலாளி..”

“நீங்கள் இதன் முதலாளிபோல் நடந்து கொள்ள வில்லையே..”

“என்ன உளருகிறாய்..?”

“உண்மையைச் சொல்லகிறேன்.. கம்பெனியின் பணம் அனாமத்தாக செலவாகி இருக்கிறது.. ஒன்றல்ல.. இரண்டல்ல.. பலகோடி ரூபாய்கள்.. அது என்ன கணக்கு என்று தெரிய விரும்பாமல், தெரிய வேண்டும் என்று நான் நினைப்பதையும் விரும்பாமல் இருக்கிறீர்களே.. உங்களை வேறு என்ன சொல்வது..?”

“ஏய்ய்..” என்று வித்யாவின் முன் விரல் நீட்டி மகேந்திரன் எச்சரிக்கைக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்த நரேந்திரன் அந்தக் காட்சியைக் கண்டதும் அதிர்ந்து விட்டான்..

“மகி.. வாட் இஸ் திஸ்..? ஒரு பெண்ணிடம் நடந்து கொள்ளும் முறையா இது..? சீச்சீ.. உன்னிடம் நான் இதை எதிர்பார்க்கவில்லை.. குகன்.. குகன்..”

“சார்..” என்றபடி உள்ளே வந்தான்.. அதுவரை வெளியே நின்று கொண்டு உள்ளே நடந்தவைகளை செவி மடுத்துக் கொண்டிருந்த குகன்..

“இங்கே என்ன நடக்கிறது..?”

“சார் மேடம் அக்கௌண்ட்ஸ் ஃபைல்களைக் கேட்டார்கள்.. கொடுத்தேன்.. கணக்கில் ஏதோ சந்தேகமென்று பூங்காவனத்தைக் கூப்பிட்டுக் கேட்டார்கள்.. அதற்காகத்தான் ஜி.எம். சார் கோபித்துக் கொண்டிருக்கிறார்…”

“மகி.. வித்யா செய்ததில் என்ன தவறு..? அவள் வேலையைத் தானே அவள் செய்கிறாள்..?”

“செய்யட்டும்.. தாராளமாய் செய்யட்டும்.. ஆனால் அவளது லிமிட் எதுன்னு தெரிந்துக்கிட்டுச் செய்யட்டும்..”

“என்னது ‘அவளா?’ மகி.. முதலில் மரியாதையாய் பேசு..”

“நீங்களும் அவள்ன்னு சொன்னதாகத்தான் ஞாபகம்..”

“நானும் நீயும் ஒன்றில்லை..” இந்த வார்த்தைகள் வித்யாவின் மனதில் பூமாரி பொழிய மகேந்திரனின் மனதில் அக்கினி மழையாய் பொழிந்தது.. அவ்வளவு தூரத்திற்கு வந்தாகி விட்டதா என்று கருவியவன்..

“இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்..?” என்று கோபமாய் கேட்டான்..

“வித்யாவிடம் மரியாதைக் குறைவாய் நீ பேசுவதை நான் அனுமதிக்க மாட்டேன்.. வாங்க போங்கன்னு பேசு.. முதலில் நீ நடந்து கொண்ட விதத்திற்கு வித்யாவிடம் மன்னிப்புக் கேள்..”

“மன்னிப்பா.. நானா அதுவும்” ‘இவள்’ என்று சொல்ல வந்ததை வாய் விழுங்கிக் கொண்டு விறைத்தான் மகேந்திரன்..

“நீ தான் மன்னிப்புக் கேட்க வேண்டும்.. இப்போது கேட்க முடியுமா, முடியாதா..” என்று அழுத்தமாய் கேட்டான் நரேந்திரன்..

“முடியாது என்றால்..”

“இந்த பேக்டரியில் நீ கால் வைக்க முடியாது.. என்ன பார்க்கிறாய்..? நரேந்திரன் ஒரேயடியாய் ஏமாளியில்லை.. உன் அனாமத்துக் கணக்கைப் பற்றி எனக்கும் தெரியும்.. கண்டும் காணாமல் விட்டேன் கேட்டால் பெண்டாட்டி, பிள்ளை குட்டின்னு கதை விடுவாய்..” என்று நரேந்திரன் கோபத்துடன் கூறிக் கொண்டிருக்கும்போதே..

“பிள்ளை குட்டின்னுதானே சொல்வேன்.. புட்டியும் குட்டியும்ன்னு சொல்ல மாட்டேனே..” என்று எங்கோ பார்த்துக் கொண்டு கூறினான் மகேந்திரன்..

வித்யாவிற்கு நெஞ்சை அடைத்தது.. எப்படி நரேந்திரனை அவமானப்படுத்துகிறான் இவன்.. துக்கம் எல்லை மீற..

“நீங்கள் சொல்வதையெல்லாம் அவர் உழைத்த பணத்தில்தான் செய்வார்.. அடுத்தவர் உழைப்பில் வரும் பணத்தை அனாமத்துக் கணக்கு எழுதிக் கொள்ளை அடித்துச் செய்ய மாட்டார்..” என்று கூறி விட்டாள்..

குகன் மனதிற்குள் ‘சபாஷ்’ போட்டான்.. வித்யாவை மரியாதையுடனும் நட்புடனும் பார்த்தான்.. மகேந்திரன் அவர்கள் இருவரையும் ‘ஒன்று சேர்ந்து விட்டீர்களா.. இது எத்தனை நாளைக்கு என்னு நான் பார்க்கிறேன்..’ என்று மனதிற்குள் புகைந்து கொண்டு எரிப்பது போல் பார்த்தான்.. நரேந்திரன் மனம் கனிந்தது.. வித்யாவிற்கு எவ்வளவு தர்ம சங்கடம்.. அவள் பேசத் தயங்கும் வார்த்தைகளை அவனுக்காகப் பேசினாளே.. மகேந்திரனைப் பார்த்துக் கூறினான்..

“மகி.. எனக்கு இரண்டில் ஒன்று தெரிய வேண்டும் ஒன்று நீ வித்யாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.. இல்லாவிட்டால் பேக்டரியை விட்டு வெளியேற வேண்டும்..”

“இது என் அப்பாவின் பேக்டரி.. எனக்கு இதில் உரிமையிருக்கிறது.. முக்கியமாய் வாரிசை பெற்று வைத்திருக்கும் எனக்குத்தான் அதிக உரிமையிருக்கிறது..” என்று குத்தலாய் கூறினான்..

நரேந்திரன் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல்.. “அப்பாவின் பேக்டரியாக அவர் இறப்பதற்கு முன்பு இருந்தது.. அவர் இறக்கும்போது கடைசி நிமிடம் இந்த பேக்டரியை என் பெயருக்கு மாற்றினார்.. ஏன் என்று தெரியுமா..?” என்று கேட்டான்..

மகேந்திரன் உதட்டைக் கடித்துக் கொண்டு பேசாமல் நின்றான்.. நரேந்திரனே தொடர்ந்து கூறினான்..

“ஏன்னா.. இந்த பேக்டரி.. மில் எல்லாம் கடனில் மூழ்கியிருந்தது.. அதனால் இரண்டையுமே அப்பா என் பெயருக்கு மாற்றினார்.. நான் வாங்கிக் கொண்டது சொத்தையல்ல, கடனை.. அதை அடைத்து இன்று கோடிக்கணக்கில் நீ அனாமத்து பணம் கொள்ளையடிக்கும் படி நான் கொண்டு வந்திருக்கிறேன்.. நீ உருப்படியாய் என்ன செய்தாய்..? உனக்கு உரிமையில்லாத சொத்திற்கு வாரிசைப் பெற்றுக் கொண்டதைத் தவிர..”

மகேந்திரனை சாட்டையடி பட்டாற் போலானான்.. இதுவரை நரேந்திரனிடம் இந்த நிமிர்வை அவன் கண்டதில்லை.. ஏமாந்த சோணகிரி என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க அவனோ நாக்கைப் பிடுங்கிக் கொள்வதைப் போல் கேட்கிறானே.. இவனை என்னவோ என்று நினைத்தானே.. லேசாய் டிராமா பண்ணியவுடன் மணப்பெண்ணை விட்டுக் கொடுத்தான்.. குடும்பம்.. கௌரவம் என்று தன்னை தனி மரமாக்கிக் கொண்ட பிழைக்கத் தெரியாதவன் என்று நினைத்தால் அவனோ இவனை உழைக்கத் தெரியாதவன் என்று கூறிவிட்டானே.. அதுவும் ஓர் அழகிய பெண்ணின் முன்னால்..

மகேந்திரனை அவமானம் பிடுங்கித் தின்றது.. இப்போது தழைந்து போக வேண்டிய நேரம்.. பார்ப்போம்.. நிமிர்வதற்கு நேரம் வரும்போது நிமிர்ந்து கொள்ள அவனுக்கா தெரியாது..?

வித்யாவின் முகம் பார்க்காமல் சுவரைப் பார்த்து..

“ஸாரி..” என்றவன் விருட்டென்று வெளியேறி விட்டான்..

‘அடேங்கப்பா இந்தப் பெண் வந்தாலும் வந்தது.. குட்டக் குட்டக் குனிந்து கொண்டிருந்த எம்.டி வேங்கையாய் சிலிர்த்து எழுந்து விட்டாரே’ குகனுக்கு விசிலடிக்க வேண்டும் போல் ஆசையாக இருந்தது.. அதற்காக வெளியேற விரும்பி..

“நான் போகலாமா சார்..” என்று பணிவாய் கேட்டான்.

“குகன்.. இனி எக்காரணம் கொண்டும் மகி, வித்யா விடம் கிராஸ் பண்ண மாட்டான்.. மீறி ஏதாவது வம்பு வளர்த்தால்.. இம்மீடியட்டா எனக்குக் கால் பண்ணிவிட வேண்டும்.. புரிந்ததா..?”

‘அதைவிட எனக்கு வேறு என்ன வேலை..?’ என்று நினைத்துக் கொண்டவன்..

“கட்டாயம் சார், நான் மேடத்தைப் பார்த்துக் கொள்கிறேன்..” என்றான் உண்மையான விசுவாசத்துடன்.

“சரி.. நீ போ..” என்று அவன் கூறியதும் அவசரமாய் அவன் தலை மறைந்தது.. தூரத்தில் விசில் சத்தம் கேட்டது.

வித்யாவின் முகம் கலங்கிச் சிவந்திருந்தது.. வருத்தத்துடன் அவள் முகத்தைப் பார்த்த நரேந்திரன்..

“என்னால்தான் உனக்கு இந்த வேதனை..?” என்று வருந்தினான்..

“அப்படியெல்லாமில்லை.. நீங்கள் எப்படி கரெக்டாய் இந்த நேரத்தில் இங்கு வந்தீர்கள்..” என்று தன்னைச் சமாளித்துக் கொண்டு வித்யா கேட்டாள்..

“இது என்ன நேரம்..?”

“என்ன நேரம்..?”

“மதியச் சாப்பாட்டு நேரம்.. நம்மிருவருக்கும் பேக்டரிக்கு மதியச் சாப்பாட்டை அனுப்பி விடும்படி கண்ணம்மா சித்தியிடம் சொல்லியிருந்தேன்.. அதனால் உன்னுடன் சேர்ந்து சாப்பிட வந்தேன்..”

“என்ன சார் இது.. நான் தனியாய் சாப்பிட மாட்டேனா..?”

“நீ இங்கிருக்கும் வரை தனி கிடையாது.. என் பொறுப்புன்னு சொல்லியிருக்கேனா இல்லையா..? சாப்பிடும் நேரம் கூட தனியாய் விட நான் விரும்பவில்லை.. நல்லவேளை நான் வந்தேன்.. இல்லாவிட்டால்.. மகி சுயநலவாதின்னு தெரியும்.. மரியாதை தெரியாதவனாகவும் இருந்திருக்கிறான்.. அது சரி என்ன சார் என்று கூப்பிடுகிறாய்.. நரேன் என்னவானான்..?”

“ஐ ஆம் ஸாரி.. வாய் தவறி..”

“வாய் தவறக்கூடாது.. நரேன் என்று கூப்பிடு..”

“நரேன்..! போதுமா.. வாங்க சாப்பிடலாம்..”

சாப்பிடும்போது நரேந்திரனுக்கு புரையேற “பார்த்து, பார்த்து” என்று அவன் தலையைத் தட்டிக் கொடுத்தவள் தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்டினாள்..

புரையேறியதில் லேசாய் கண் கலங்கியவன் அவளைப் பார்த்து மிருதுவாய் புன்னகைத்தான்..

“ரொம்ப நாள்களாயிற்று எனக்காக ஒரு ஜீவன் அக்கறையெடுத்துக் கொள்வதைப் பார்த்து..” என்றான்..

“இங்கே இருக்கும் காலம் வரை நான் உங்கள் பொறுப்பு என்றால் நீங்கள் மட்டும் என் பொறுப் பில்லையா..?” என்று இயல்பாய் கேட்டு விட்டு கை கழுவச் சென்றாள் வித்யா..

அசையாது அப்படியே ஒரு நிமிடம் அமர்ந்து விட்டான் அவன்.. தன்னைத் திட்டும்போது மௌனித்தாள்.. அவனைத் திட்டும்போது சீற்றம் கொண்டு மகேந்திரனிடம் சண்டை போட்டாள்.. ஏன்..? தன்னைவிட அவனை உயர்வாய் நினைப்பதானால்தானே.. சிலிர்த்தது அவன் மனம்..

அன்று மாலை வித்யா பேக்டரி வேலைகளைப் பார்த்துக் கொண்டதால் மில் வேலை சீக்கிரம் முடிந்துவிட நரேந்திரன் அவளை அழைத்துப்போக மாலை ஐந்து மணிக்கே வந்து விட்டான் காரில் போய்க் கொண்டிருக்கும் போது..

“உனக்கு கோவில் போகப் பிடிக்குமில்லையா..?” என்று வினவினான்..

“இது என்ன கேள்வி..? மிகவும் பிடிக்கும்..”

“சரி.. நாம் இப்போது பெருமாள் கோவிலுக்குப் போகப் போகிறோம்.. அது எங்கள் குலதெய்வத்தின் கோவில், நீ இன்று முதன் முதலாக வேலைக்கு வந்திருக்கிறாய்.. காலையில் போக நேரமில்லை.. இப்போது போய்விட்டு வரலாம்..”

நதியோரம் கரையில் பெருமாள் கோவில் இருந்தது.. கோவிலின் வாசலில் இருந்த பூக்கடையில் மாலையும் அபிஷேகத் தட்டையும் வாங்கிக் கொண்டான்.. வித்யாவைப் பார்த்த பூக்காரம்மாள்.. “பூ வைத்துக் கொள்ளம்மா” என்று மல்லிகைச் சரத்தை அளந்து கொடுத்தாள்..

“வாங்கிக்கொள்” என்றான் நரேந்திரன்..

வித்யா பூவை வாங்கி தலையின் இரு பக்கமும் வழியுமாறு சூடிக் கொண்டாள்.. அந்த அழகை ரசித்தவன் பூக்காரம்மாளிடம் பணம் கொடுத்துவிட்டு.. “வா போகலாம்” என்றான்.. வித்யாவின் மனம் சிறகடித்துக் கொண்டிருந்தது.. அவன் வாங்கிக் கொடுத்த ‘பூ’ மணம் அவளை சொர்க்கத்திற்கே அழைத்துச் சென்றது.. எல்லையற்ற மனநிறைவுடனும், மகிழ்வுடனும் பெருமாளையும், மகாலட்சுமியையும் வணங்கினாள்.. நரேந்திரனின் அருகே நின்று கண்மூடி கரம் குவித்து வேண்டிக் கொண்டிருந்தவளைப் பார்த்து தீபாராதனை காட்டிவிட்டு தட்டுடன் வந்த குருக்கள்..

“ரெண்டு பேரையும் சேர்ந்து பார்க்கறப்போ கண்நிறைவா இருக்கு.. ஷேமமா இருக்கணும்..” என்று வாழ்த்தினார்..

அர்ச்சனைத் தட்டில் நூறு ரூபாயைப் போட்டு விட்டு நரேந்திரன் குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டான்.. வித்யாவும் குங்குமம் எடுத்து இட்டுக் கொண்டாள்.. மங்கலகரமான அவள் முகத்தை அவன் மீண்டும் பார்க்க முகம் சிவந்தாள்..

கோவிலுக்கு வெளியே வந்தவர்கள் பேசிக் கொண்டே நதியோரம் சற்று நேரம் நடந்தார்கள்.. நதி அமைதியாய் ஓடிக் கொண்டிருந்தது.. அதன் கரையோரம் நாணல்கள் வளர்ந்திருந்தன.. நதி நீரில் ஓடம் ஒன்று சென்று கொண்டிருந்தது.. அந்திவானில் செந்நிற ஒளியில் நீர் அழகாகத் தெரிந்தது.. பறவைகள் கூட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன.. மக்கள் குளிப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த படித்துறையில் நரேந்திரன் அமர்ந்தான்.. வித்யா அருகே அமர்ந்தாள்.. அவர்களை நதி பார்த்துக் கொண்டிருந்தது..

0Shares

Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link