Chapter 19
நதியோரம் நடந்தபோது
கூடவந்த நிலவைக் காணோம்
முதன்முதலாய் போராட்டம்
முகில் மறைத்த நிலவோட்டம்
…நதியோரம் நான் நடந்த போது…
பிரகாஷ் சாப்பாட்டு அறையில் மேஜை மேல் தாளம் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்.. சுரேந்திரன் ஒரு ஆங்கிலப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தான்.. கண்ணம்மா சிரித்துக் கொண்டே எல்லோருக்கும் தட்டைப் போட்டுப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.. அந்த வீட்டிற்கு சுரேந்திரனும், பூர்ணிமாவும் செல்லப் பிள்ளைகள் பூர்ணிமா எப்போதும் டீச்சர் போல் நியாயம் பேசிக் கொண்டிருப்பாள்.. சுரேந்திரனோ தீராத விளையாட்டுப் பிள்ளை.. அதனாலேயே அவன் எல்லோருக்கும் செல்லப் பிள்ளையாகி விட்டான்… எல்லோரும் ஏதோ ஓர் காரணத்தினால் முகம் இறுகி நடமாடும் அந்த வீட்டில் எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பவன் அவன் ஒருவன் தான்.. நரேந்திரனிடம் பாசம் அதிகம் உள்ளவன்.. ஆனால் பூர்ணிமா போல் அவன் தனி மரமாய் நிற்கிறானென்று வருந்தியதில்லை.. வெளிநாட்டிலேயே படித்துக் கொண்டிருந்ததால் ‘அவரவர் வாழ்கை அவர்களுக்கு, மற்றவர்கள் தலையிடக் கூடாது’ என்ற எண்ணம் படைத்தவன்.. இவ்வளவு ஏன்..? அவனது தங்கையான பூர்ணிமா திருமணமே செய்து கொள்ளாமல் கடைசி வரை கன்னியாகவே இருந்தாலும் அவன் கவலைப்படவும் மாட்டான்.. கண்டு கொள்ளவும் மாட்டான்..
வெளிநாட்டில் படித்த காரணத்தினால் சிலரைப் போல் அவனுக்கும் இந்திய அழகிகள் மேல் ஈர்ப்பு இருந்தது.. எதிர்மறைத் துருவங்கள்தானே ஈர்க்கும்..? நரேந்திரன் வித்யாவைப் பற்றிப் போனில் கூறியபோது.. ‘போய்த்தான் பார்ப்போமே..’ என்ற அசட்டையான எண்ணத்துடன்தான் தாய் நாட்டிற்குத் திரும்பினான்.. வந்து பார்த்த முதல் பார்வையிலேயே வித்யாவை அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது..
அருவியில் குளியல் போட்டதால் பின்னலில்லாமல் விரிந்திருந்த நீண்ட கூந்தல் தான் அவனை மிகவும் கவர்ந்தது.. அவ்வளவு நீண்ட கூந்தலை உடைய பெண்களை அவன் பார்த்ததே இல்லை.. ‘கால் அளவு கருங்கூந்தல்’ உடைய இளம் பெண்ணைப் பார்த்தவுடன் மயங்கி விட்டான்.. எளிமையான காட்டன் சுடிதாரில் அலட்சியமாய் துப்பட்டாவைப் போட்டுக் கொண்டு அவள் நின்ற விதத்தில் ஒரு படித்த கண்ணியம் தென்பட்டது..
சாயமில்லாத இயற்கை முக அழகு அவனை வசீகரித்தது.. கொடி போன்ற ஆனால் செழுமையான அவள் உடல்வாகு அவனை ஈர்த்தது.. வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட எலுமிச்சை அழகியாக அவள் அவனுக்குத் தோன்றினாள்.. வித்யாவின் மேல் நரேந்திரனுக்கு ஏற்பட்டிருந்த கரையில்லாத காதல் சுரேந்திரனுக்கு வித்யாவின் மேல் ஏற்பட்டிருந்தது என்று நிச்சயம் சொல்ல முடியாது.. ‘வித்யாவோடு வாழ முடியுமா..?’ என்று நரேந்திரன் தவிக்கும் தவிப்பும் சுரேந்திரனுக்கு இல்லை.. ஆனால் வித்யாவை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது என்பது மட்டும் உண்மை..
பூர்ணிமாவும், வித்யாவும் சாப்பிடச் சென்றதும்,
“வாங்க வித்யா.. லேடிஸ் இவ்வளவு சீக்கிரம் பேஷ்.. வாஷ் பண்ணிவிட்டு வருவது என்பது அதிசயம்தான்..” என்று வரவேற்றான் சுரேந்திரன்..
“முகம் கழுவித் துடைக்க எவ்வளவு நேரமாகி விடப் போகிறது..?” என்று அசுவாரஸ்யமாய் பதிலுரைத்தாள் வித்யா..
“கேட்டாயா பிரகாஷ்.. வித்யா சொல்வதை.. பெண்கள் முகம் கழுவ எவ்வளவு நேரமாகுமென்று கேட்கிறார்கள்.. அது ஆளைப் பொறுத்தது வித்யா.. ஒவ்வொருவர் ஒரு மணி நேரம் கூட எடுத்துக் கொள்வார்கள்..” என்று சுரேந்திரன் கூற பிரகாஷ் சிரித்துக் கொண்டே சொன்னான்..
“லேடிஸ் ஹேண்ட் பேகை திறந்து பார்த்திருக் கிறாயா..? ஒரே மேக்-அப் அயிட்டம்தான்.. பணம் வைத்திருக்கிறார்களோ இல்லையோ பவுடரும் சீப்பும் கட்டாயம் வைத்திருப்பார்கள்..”
பூர்ணிமா பிரகாஷ் பக்கம் சாய்ந்து அவன், பேன்ட் பாக்கெட்டில் செருகியிருந்த சீப்பை எடுத்துக் காட்டினாள்.
“ஐயாவோட வாய் இந்தக் கிழி கிழியுது.. பாக்கெட்டில் இருக்கும் சீப்பைப் பார்த்துக்கடி வித்யா.. ஒரு செகண்டுக் கொரு தரம் என்னை ஓர் பார்வை பார்த்துக்குவார்.. சீப்பை எடுத்து வரட்டு வரட்டுன்னு தலையில் இழுப்பார்.. அடுத்த பாக்கெட்டில் காஸ்மெடிக் அயிட்டம் எல்லாம் இருக்கு.. இவங்களை மாதிரி பேன்ட்டுக்கு நாலு பாக்கெட், சர்ட்டுக்கு நாலு பாக்கெட்டுன்னா நமக்கு வைக்க முடியுமா..? நம் சேலை, பிளவுஸில் பாக்கெட்டிருக்கா..? சுடிதார் செட்டிலாவது பாக்கெட்டிருக்கா..
இவங்க ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஒவ்வொரு அயிட்டத்தை வைத்துக்கிட்டு நம்மை வம்புக்கு இழுக்கிறதைப் பார்த்தாயா..?”
வித்யா மனதின் பாரம் மறந்து சிரித்தாள்.. பிரகாஷின் முகம் மலர்ந்தது.. பூர்ணிமாவிடம் மேலும் வார்த்தை வளர்த்தான்..
“அப்புறம் எப்படி உன்னை மயக்குவது..? அடிக்கடி தலைவாரிப் பார்க்கிறேன்.. நொடிக்கொருதரம் பவுடரில் குளித்துத்தான் பார்க்கிறேன்.. மசிய மாட்டேன் என்கிறாயே என் மாமன் மகளே..”
“எவ்வளவு வாரினாலும் இந்தக் குச்சி குச்சி முடிதான் இருக்கப் போகிறது.. எப்படி பவுடரில் குளித்தாலும் இந்த முசுட்டு முகம்தான் இருக்கப் போகிறது.. அப்புறம் தேவையில்லாமல் ஏன் வெட்டி வேலை செய்கிறீர்கள்..?”
“என் முடி குச்சி முடியா..? தலையில் விரல் விட்டு கோதும்போது அப்படி நீ நினைப்பது போல் எனக்குத் தோன்றவில்லையே..”
பூர்ணிமா பிரகாசின் முதுகின் மேல் முகம் சிவக்க ஓர் அடி போட்டாள்..
“மூச்.. வாயைத் திறக்காமல் சாப்பிடுங்க.. தெரிந்ததா..?”
“வாய்திறக்காமல் எப்படிச் சாப்பிட முடியும்..? வித்யா நீ சொல்லம்மா..”
“அதெப்படி முடியும்..? முடியாது அண்ணா..” என்றாள் வித்யா..
“ஏண்டி நீ அவர் கட்சியா..? அண்ணா நீயாவது என் கட்சியா இல்லை நீயும் கட்சி மாறி விட்டாயா..?” என்று பூர்ணிமா பொய்க் கோபத்துடன் சுரேந்திரனைப் பார்த்துக் கேட்டாள்..
“நான் எப்போதோ வித்யாவிடம் சரண்டர் ஆகி விட்டேன்.. ஸோ.. வித்யா எந்த சைடோ.. நானும் அந்த சைடு..” என்றான் சுரேந்திரன் சப்பாத்தியை குருமாவில் தோய்த்தபடி..
தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த வித்யாவிற்கு அதைக் கேட்டதும் புரையேறி விட்டது.. அவசரமாய் பூர்ணிமா அவள் தலையைத் தட்டி விட்டுக் கவலையுடன், “பார்த்துக் குடிடி” என்றாள்.. அவள் பார்வை சுநேந்திரனை ஆராய்ந்தது.. சுரேந்திரனோ வித்யாவை பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான்.. அப்போதுதான் அதைக் கவனித்த வித்யாவிற்கு உயிர் துடித்தது..
‘இது என்ன புதுக்குழப்பம்..?’ என்று பூர்ணிமாவும் பிரகாஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. வித்யா சாப்பிடாமலே எழுந்து சென்று விட்டாள்..
மறுநாள் காலையில் அவள் கீழே சாப்பிட வந்தபோது பூர்ணிமா கவலையாக இருந்தாள்.. அவள் கவலைக்குக் காரணமிருந்தது.. காலையில் சீக்கிரமே சாப்பிட்டு முடித்த நரேந்திரன் கிளம்பப் போக அவசரமாய் பூர்ணிமா அவன் காரருகே ஓடி வந்தாள்..
“அண்ணா.. வித்யாவைக் கூப்பிடாமலே கிளம்பி விட்டீர்களே..”
“சுரேந்திரனிடம் சொல்லியிருக்கேன்ம்மா.. அவன் கூப்பிட்டு வருவதாகக் கூறியிருக்கிறான்..”
“இது என்னன்னா புதுப்பழக்கம்..?”
“பழகி விட்டால் பழைய பழக்கமாகிவிடும்..”
“அதற்கு அவசியமில்லையே..”
“இல்லைன்னு உனக்குத் தெரியுமா..?”
அவன் காரை விர்ரென்று கிளப்பிக் கொண்டு போய் விட்டான்.. பூர்ணிமா யோசனையுடன் திரும்பும் போது தான் வித்யா வந்தாள்..
“உன் பெரியண்ணா இன்னுமா சாப்பிட வரவில்லை..?”
“இல்லைடி.. அவர் சாப்பிட்டு விட்டுப் போய் விட்டார்..” பூர்ணிமா தயங்கியவாறு கூறினாள்.. வித்யா ஸ்தம்பித்து விட்டாள்..
“என்ன போய் விட்டாரா.. எங்கே..?”
“ஐ டோன்ட் நோ.. பேக்டரிக்கா இல்லை மில்லுக்கான்னு என்னிடம் சொல்லவில்லை..”
“நான் எப்படிடீ போவேன்.. என்னை வரவேண்டாம்ன்னு சொன்னாரா..?” வித்யா யோசனையுடன் வினவினாள்..
“இல்லை.. உன்னை சுரேந்திர அண்ணாவுடன் வரச்சொன்னார்..”
“வாட்..?”
“எஸ்.. வித்யா உனக்கும் அண்ணாவுக்கும் ஏதும் மன வருத்தமா..?”
மனவருத்தமா..? அவர்களுக்கிடையிலா..? நதிக்கரை யோரம் ஒரு நாணல் போல் உடல் நடுங்க தலை கவிழ்ந்து அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாளே.. அவள் முடி கோதி கண்ணீர் விட்டானே.. மன வருத்தத்தாலா அது நடந்தது..? வித்யாவின் இதழ்களில் கசந்த முறுவல் தோன்றியது..
“நான் கிளம்புகிறேன் பூர்ணிமா..”
“சாப்பிடாமலா..?”
“ப்ளீஸ்.. என்னை வற்புறுத்தாதே.. எனக்கு சாப்பிடத் தோன்றவில்லை..”
“சரி.. சுரேன் அண்ணா வரட்டும்.. அவர் காரில்..”
“நீயும் என்னைத் துன்புறுத்தாதே பூர்ணி.. நீ என்னை டிராப் பண்ண முடிந்தால் பண்ணு..”
பூர்ணிமா நொடிப் பொழுது கூட யோசிக்காமல் அவள் காரில் ஏறி அமர்ந்தாள்.. முன் கதவைத் திறந்து விட்டு..
“ஏறிக்கொள்..” என்றாள்..
வித்யா ஏறிக் கொள்ள கார் கிளம்பி விட்டது.. அம்பா சமுத்திரம் போனதும் பேக்டரிக்குப் போகாமல் ஓட்டல் ஒன்றில் கார் நுழைந்தது..
“இறங்கு..”
“பூர்ணி.. எனக்குப் பசிக்கவில்லை..”
“எனக்குப் பசிக்கிறது.. நீ சாப்பிடாவிட்டால் நானும் சாப்பிட மாட்டேன்..”
தாயின் முகத்தோடு பூர்ணிமா அதட்ட வேறு வழியின்றி வித்யா இறங்கினாள்.. சாப்பிடும்போது கலங்கிய கண்களை தோழி அறியாமல் துடைத்துக் கொண்டாள்..
பேக்டரியில் இவர்கள் போய் இறங்கும்போது நரேந்திரன் எதிரில் வந்து கொண்டிருந்தான்.. காரிலிருந்து இறங்கிய பூர்ணிமாவைக் கண்டதும்,
“நீ எங்கே இங்கே வந்தாய்..?” என்று வினவினான்..
“வித்யாவை விட்டுப் போக வந்தேன்..”
“வித்யாவையா..?” நரேந்திரனின் விழிகள் ஒரு கணம் ஆவலுடன் காரிலிருந்து இறங்கிய வித்யாவைப் பார்த்தன.. அடுத்த கணம் எங்கோ பார்த்தபடி..
“சுரேந்திரனுடன் வரவில்லையா..?” என்று வினவினான்..
“இல்லை..” என்றபடி வித்யா பூர்ணிமாவைப் பார்த்து,
“பை பூர்ணிமா..” என்றவாறு விரைந்து விட்டாள்..
பூர்ணிமா நரேந்திரனை முறைத்தாள்..
“அவள் வீட்டில் சாப்பிட மறுத்து விட்டாள்..”
“பட்டினியாகவா வந்திருக்கிறாள்..? குகன்..”
“நான் ஹோட்டலில் சாப்பிட விட்டுத்தான் கூப்பிட்டு வந்து இருக்கிறேன்..”
நரேந்திரனின் முகம் நிம்மதியானது..
“அண்ணா நான் உங்களுடன் பேச வேண்டும்..”
“எனக்கு வேலை தலைக்கு மேல் இருக்கிறதம்மா.. பை..”
நரேந்திரன் அவசரமாய் அவளைத் தவிர்த்து காரில் பறந்தான்..
வித்யா வழக்கம் போல் அலுவல்களைப் பார்த்தாள்.. மதிய உணவு நேரத்தின்போது அவள் அறைக் கதவு திறக்க எதிர்பார்ப்புடன் நிமிர்ந்தாள்.. வந்தவனைப் பார்த்ததும் அவள் முகம் ஏமாற்றத்தில் விழுந்து விட்டது..
வந்தது நரேந்திரனல்ல.. சுரேந்திரன்..!
“ஹாய் வித்யா.. காலையில் ஆசையாய் உன்னுடன் டிரைவ் வரலாமென்று காலைத் தூக்கத்தை தியாகம் பண்ணிவிட்டு வந்தால் நீ பூர்ணிமாவுடன் பறந்து விட்டாய்.. என்னை ஏமாற்றி விட்டாய்..”
“நீங்களேன் சாப்பாட்டை எடுத்து வந்தீர்கள்..? இந்த சிரமம் உங்களுக்கு எதற்கு..?” வித்யா அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் பதில் கேள்வி கேட்டாள்..
“நைஸ்.. உன்னுடன் சேர்ந்து சாப்பிடத்தான் வேறு எதற்கு..?”
அவன் இயல்பாய் ஒருமையில் அழைப்பது உறுத்த வித்யா டென்சனுடன் டேபிள் வெயிட்டை உருட்டியவாறு இதை எப்படித் தவிர்க்கலாம் என்று யோசித்தாள்..
மேஜை மேலிருந்த அழைப்பிதழ் கண்ணில் பட்டது. எடுத்துப் பார்த்தாள்.. பேக்டரி தொழிலாளர் ஒருவரின் மகனின் காதணி விழா அழைப்பிதழ்.. முகம் ஒளிர நிமிர்ந்தாள்..
“குகன்..” என்று அழைத்தாள்..
“யெஸ் மேடம்” என்று அவன் உள்ளே வந்தான்..
“பேக்டரி ஜீப் இருக்கில்ல..?”
“இருக்கிறது மேடம்..”
“உங்களுக்கு ஓட்டத் தெரியுமில்லையா..?”
“யெஸ்.. மேடம்..”
“வெல்.. சுரேந்திரன் சார்.. நான் ஒரு பங்சனில் கலந்து கொள்ள போக வேண்டியிருக்கிறது.. அங்கேயே சாப்பிட்டு விடுவேன்.. ஸோ.. நீங்கள் சாப்பிட்டு விட்டுப் போய்க் கொள்ளுகிறீர்களா..?”
அவன் பதிலை எதிர்பாராமல் கைப்பையுடன் வெளியேறினாள்.. அந்தத் தொழிலாளர் வீட்டில் எதிர்பாராத விருந்தாளியாய் நுழைந்ததும் அங்கே குழுமியிருந்த தொழிலாளர்களின் முகத்தில் சந்தோசம் பொங்கியது.. விழாவை நடத்தும் தொழிலாளியின் மனைவி ஓடிவந்தாள்..
“அம்மா வாங்கம்மா.. உட்காருங்கம்மா..”
“அதற்கென்ன உட்கார்ந்தால் போகுது.. காது குத்தி முடித்தாகி விட்டதா..?” என்று அமர்ந்தபடி வித்யா கேட்டாள்.. குகன் அவள் அருகிலிருந்த மற்றொரு சேரில் உட்கார்ந்தான்..
“ஆச்சும்மா.. பந்தி நடக்குது.. அம்மா இருந்து சாப்பிட்டு விட்டுத்தான் போகணும்..”
“அதற்குத்தானே வந்திருக்கிறோம்.. குழந்தை எங்கே..?”
“இதோ இங்கதான் நின்னுக்கிட்டு இருக்கான்.. எலே மணி இங்கே வாலே.. அம்மா உன்ன பாக்கணும்கறாங்க..” அவள் சத்தமாய் அழைத்தாள்.. அதற்குள் அவளது கணவர் மகனைத் தூக்கிக் கொண்டு வந்தார்.. வித்யா எழுந்து குழந்தையின் கையில் ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தாள்.. அவர்கள் மகிழ்ந்து போயினர்..
“எலே சின்னச்சாமி இலையைப் போடுலே.. அம்மா சாப்பிட வர்றாங்க..” அவள் பந்தியில் நுழையும் போதே வரவேற்பு பலமாக இருந்தது.. குகன் அமைதியாகப் பின் தொடர்ந்தான்..
இலை போடப்பட்டு சாப்பாடு பரிமாறப்பட்டது.. எளிய மக்கள் கொடுத்த விருந்து உணவு அது.. பெரிய பருக்கைகளுடன் தண்ணீர் போன்ற சாம்பாருடன் பரிமாறப் பட்ட உணவை நிதானமாய் வயிறார வித்யா சாப்பிடுவதை குகன் ஓரக் கண்ணால் கவனித்துக கொண்டே சாப்பிட்டான்..
விழா கொண்டாடியவர்களிடம் விடைபெற்று கிளம்பினர்.. வழியில் மௌனமாக வந்த வித்யாவின் நிலை கண்ட குகனின் மனம் வருந்தியது..
கெட்டிக்கார புத்திசாலிப் பெண்.. இவள் வந்த இந்த ஆறு மாதங்களில் பேக்டரியே மாறிப் போயிருந்தது.. தொழிலாளர் நலனுக்காக எத்தனையோ செய்தாள்.. அனாமத்து கணக்கை ஒழித்தாள்.. முன் பணம் கேட்டவர்களின் கோரிக்கை நியாயமாக இருந்தால் உடனே முன்பணம் கிடைத்தது… மருத்துவச் செலவுகளை பேக்டரியே ஏற்றுக் கொண்டது… தொழிலாளர்களின் குழந்தைகள் அதிக மதிப்பெண் எடுத்திருந்தால் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.. மற்றவர்களின் வாழ்க்கையில் நதியாக வந்த பெண் இன்று மனதில் ஏதோ வேதனைப் படுகிறாள்.. அது என்ன..?
பேக்டரியில் ஜீப் நுழைந்தது.. சுரேந்திரனின் காரைக் காணவில்லை.. அவள் கண்கள் காரைத் தேடியதும், இல்லையென்றதும் முகம் நிம்மதியாய் மாறினதையும் கண்ட குகனின் மனம் ‘ஓ இதுதானா காரணம்..’ என்று கூறிக் கொண்டது..
‘ஆனால் சுரேந்திரன் நல்லவனாயிற்றே.. பெண்கள் யாரிடமும் வம்பு பண்ணும் ரகமில்லையே..’
புரியாத புதிராய் குகனுக்குத் தோன்றினாள் வித்யா.. தோளைக் குலுக்கிவிட்டுச் சென்று விட்டான் அவன்..
மாலை நெருங்க நெருங்க மனம் பதைத்தது வித்யாவிற்கு.. சுரேந்திரன் வந்ததிலிருந்து நரேந்திரனிடம் விலகல் தோன்றுவதாய் தோன்றினது அவளுக்கு.. அதிலும் நேற்றைய மாலையிலிருந்து ஏற்பட்டிருந்த உடனடி மாற்றம் அவளைப் பாதித்தது..
அவள் கலவரத்தை ஊர்ஜிதப்படுத்துவது போல் சுரேந்திரன் அவள் அறையினுள் நுழைந்தான்..
“வித்யா போகலாமா..?”
“உங்களுக்கேன் வீண் சிரமம்..?”
“எனக்கென்ன சிரமம்.. ஆக்சுவலா இந்த ஐந்து மாதங்களை வேஸ்ட் பண்ணிட்டேனேன்னு ஃபீல் பண்றேன் தெரியுமா..?”
சுரேந்திரன் கொஞ்சலாய் கூற வித்யாவினால் தாங்க முடியவில்லை.. அவள் ஏறக்குறைய அலறினாள்..
“குகன்..”
Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.