Chapter 22

0Shares

நதியோரம் நடந்தபோது

நதியின் போக்கில் கால்கள் போகும்

இசைதேடி கவி தவிக்கும்

இமையோரம் நீர் துளிர்க்கும்

  …நதியோரம் நான் நடந்த போது…

மாலை வித்யா திரும்பும்போது மிகவும் மனம் சோர்ந்திருந்தாள்.. நரேந்திரனின் முகம் பார்க்காமல் நதியோரம் அவனோடு நடக்காமல் இருவாரங்கள் ஓடிவிட்டன.. யாருக்காக அவள் சென்னையை விட்டு, வேலைகளை விட்டு முன் பின் தெரியாதவர்களின் வெறுப்பிற்கு ஆளாகி மணிமுத்தாறு வந்தாளோ.. அவன் அவளருகில் இருந்தும் மனதால் வெகுதூரம் விலகிச் சென்று விட்டான்.. இனி யாருக்காக இந்த ஊரில் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்ற விரக்தி அவளிடம் குடி கொண்டது..

விட்டேற்றியாய் வீட்டுக்குள் நுழைந்து தனக்காகத் தரப்பட்டிருந்த அறையைத் திறந்து உள்ளே சென்று இயந்திரம் போல் தாழிட்டவள், முகம் கழுவப் போனாள்.. அறையின் காலிங் பெல் அடிக்க முகத்தை டவலால் துடைத்துக் கொண்டே வந்து அறைக் கதவைத் திறந்து யாரென்று பார்த்தாள்.. வீடு பெருக்கும் செண்பகம் நின்று கொண்டிருந்தாள்..

“என்ன செண்பகம்..?”

“பெரியம்மா உங்களை உடனே அவங்க ரூமுக்கு வரச் சொன்னாங்கம்மா..”

‘சௌதாமினி அழைக்கிறாளா..? என்னவாக இருக்கும்’ என்ற சிந்தனையோடு அறைக்கதவை மூடியவள் மாடியிறங்கி கீழ் தளத்தில் இருந்த சௌதாமினியின் மிகப் பெரிய அறைக்குச் சென்றாள்.. கதவு திறந்திருந்தது.. மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தாள்..

“உள்ளே வாம்மா” என்ற சௌதாமினியின் குரல் கேட்டது..

வித்யா அந்த அறைக்குள் சென்றாள்.. இதுவரை அங்கே போக வேண்டிய அவசியம் அவளுக்கு நேரவில்லை.. இன்று போனபோது அந்த அறையின் பிரம்மாண்டத்தையும் அழகையும் கண்டு பிரமித்துப் போனாள்.. முன்புறம் வரவேற்பு அறை, உள்ளே பெரிய படுக்கையறை என இரு பெரும் பிரிவுகளுடன் இருந்தது அந்த அறை.. அங்கிருந்த சோபாக்கள்.. கட்டில் எல்லாமே பழங்கால ராஜ அலங்கார முகப்புகளுடன் இருந்தன.. அவர்களின் மூதாதையரின் சித்திரங்கள் சுவர்களை அலங்கரித்தன.. சௌதாமினி சோபாவில் ராஜ மாதாவின் கம்பீரத்தோடு அமர்ந்திருந்தாள்.. அவள் உடலை வைர நகைகள் அங்கிரித்துக் கொண்டிருந்தன..

“கூப்பிட்டீர்களாமே..” என்றாள் வித்யா மரியாதை யோடு..

“ஆமாம்மா.. கதவை மூடிவிட்டு உட்கார்..”

ஏன் கதவை மூடச் சொல்கிறார்கள்..? என்ன ரகசியம் பேசப் போகிறார்கள் என்ற குழப்பத்தோடு வித்யா கதவை மூடிவிட்டு வந்தாள்.. சௌதாமினியின் எதிரே அமர்ந்தாள்.

“நீ இன்ஜினியரிங்க படிச்சிருக்கேன்னு தெரியும்.. உன்சொந்த ஊர் எதும்மா..” சௌதாமினி மென்மையாய் வினவினாள்..

“பழனிக்குப் பக்கத்தில் ஆயகுடி..”

“அப்பா என்ன செய்கிறார்..?”

“பழனி தாலுகா ஆபிசில் கிளார்க்காக இருக்கிறார்..”

“அம்மா..?”

“சின்ன வயதிலேயே இறந்து விட்டார்கள்.. சித்திதான் இப்போது இருக்கிறார்கள்..” வெறுப்புடன் கூறினாள் வித்யா..

“ஓ.. அப்படியா.. ம்ம்.. அவர்களுக்கு குழந்தைகள் உண்டா..?”

“ஒரு தம்பியும், தங்கையும் இருக்கிறார்கள்..”

“அப்படியா… இதோ பார் வித்யா, எங்கள் குடும்பத்தைப் பற்றி பூர்ணிமா சொல்லியிருப்பாள்..”

“ராஜ பரம்பரைன்னு சொல்லியிருக்காள்..”

“எங்கள் பணவசதி பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை..”

“நீங்கள் கோடீஸ்வரங்கன்னுதான் எனக்குத் தெரியுமே..”

வித்யாவிற்கு மனம் சஞ்சலமடைந்தது.. எதற்காக இதையெல்லாம் விலாவாரியாகத் தன்னை உட்கார வைத்துக் கூறிக் கொண்டிருக்கிறாள்.. இவள் பணப் பெருமைக்காவும் பரம்பரைப் பெருமைக்காவும்.. வித்யா அவர்கள் வீட்டுப் பெண்ணோடு பழகினாள்..? அதற்காகவா அவள் பின்னால் ஆட்டுக்குட்டி போல் தொடர்ந்து வந்தாள்..?

அலுப்புடன் அவள் போய்விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது சௌதாமினி அந்தக் கேள்வியைக் கேட்டாள்..

“என் வீட்டிற்கு மருமகளாக வர எத்தனையோ ஜமீன் வம்ச ராஜ பரம்பரைப் பெண்கள் போட்டி போடுகிறார்கள்.. ஆனால் எனக்கு என்னவோ உன்னை என் மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆசை.. என் மகனும் விருப்பப் படுகிறான்.. நீ என்ன சொல்கிறாய் வித்யா..? உன் அப்பாவிடம் நான் பேசட்டுமா..?”

வித்யாவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.. இது உண்மைதானா..? அதனால்தான் நரேந்திரன் விலகிச் சென்றானா..? திருமணத்திற்கு முன்னர் தனியாக சந்திப்பது தவறு என்பதால்தான் அவளைச் சந்திக்க முனையவில்லையா..?

‘அது உண்மைதானே..?’ என்று கேட்டது அவள் மனம்.. அன்று நதியோரம் நினைவில் வந்தது.. ‘எல்லை மீற எவ்வளவு நேரம் ஆகும்’ என்ற நினைவில் அவள் முகம் சிவந்தது.. இரண்டு வாரங்களாக மனதைப் பிடித்திருந்த சோர்வும் விரக்தியும் அவளை விட்டு ஓட அவள் ஆனந்தத்துடன் சௌதாமினியின் பாதம் பணிந்து எழுந்தாள்..

“உங்கள் மருமகளாக வர நான் தவம் செய்திருக்க வேண்டும் அத்தை…” என்றாள் முதன் முதலாய் சௌதாமினியை ‘அத்தை’ என்ற முறை வைத்து விளித்து.

“எனக்கு மருமகளாக வர தவம் செய்திருக்க வேண்டுமோ இல்லையோ சுரேந்திரனின் மனைவியாக வர நீ தவம் செய்திருக்க வேண்டும்.. அவன் அழகுக்கும்… படிப்புக்கும்… துறுதுறுப்புக்கும் வெளிநாட்டிலேயே ஏதாவது ராஜ வம்சத்தில் மணமுடித்து அழைத்து வருவானென்று நினைத்தேன்.. அவன் என்னடா என்றால் இந்தியாவுக்கு வந்து உன்னைக் கை காட்டுகிறான்..” சௌதாமினி மேலே பேசியது எதுவும் வித்யாவின் காதுகளில் விழவில்லை..

அவள் உன்மத்தம் பிடித்தவள் போலானாள்..

“ஒரு நிமிடம் மேடம்.. நீங்கள் பேசுவதைக் கொஞ்சம் நிறுத்துகிறீர்களா..?” என்றாள் வித்யா அலட்சியத்துடன்..

“மேடமா..?” சௌதாமினி திகைத்துப் போய் கேட்டாள்..

“மேடம்தான்.. இனி என்றைக்குமே நீங்கள் எனக்கு மேடம்தான்.. இவ்வளவு நேரம் யாருக்கு பெண் கேட்டீர்கள்..? உங்கள் மகன்.. மகன் என்று யாரைச் சொன்னீர்கள்..? உங்கள் மருமகள் என்று கூறும் போது யாரின் மனைவியாக என்னை கற்பனை செய்து பார்த்தீர்கள்..?”

“ஏன்ம்மா.. நீயும் என் மருமகள் என்றதும் சந்தோசப் பட்டாயே.. என் காலில் விழுந்து எழுந்தாயே.. என்னை ‘அத்தை’ என்று கூப்பிட்டாயே..? என் மகன் மேல் விருப்பம் இல்லாமலா அதையெல்லாம் செய்தாய்..?” கோபத்துடன் கேட்டாள் சௌதாமினி..

“ஆமாங்க.. எனக்கு உங்கள் மகன் மேல் விருப்பம் தான்.. காதல்தான்.. வாழ்ந்தால் அவருடன் வாழ வேண்டும் என்ற எண்ணம்தான்.. அவருடைய அம்மா என்பதால் 

தான் உங்கள் காலில் விழுந்தேன்.. ‘அத்தை’ என்று கூப்பிட்டேன்..” வித்யாவின் கண்களில் சீற்றம் வழிந்தது..

“என்னம்மா பைத்தியம் போல் பேசுகிறாய்.. எல்லா வற்றையும் செய்து விட்டு ஏதோ நான் தவறு செய்தது போல் என்னுடன் முறைக்கிறாயே..”

“ம்ம்..” என்று சினத்துடன் சிரித்தாள் வித்யா..

“என்ன தவறு செய்தீர்கள் என்று கூடத் தெரிய வில்லை.. நீங்கள் எல்லாம் ஒரு தாயென்று எப்படிச் சொல்லிக் கொள்கிறீர்கள்..”

“பார்த்துப் பேசம்மா.. நீ யாரிடம் பேசுகிறாய் தெரியுமா..?”

“தெரியாமல் என்ன..? ஒரு கடமை தவறிய தாயிடம் பேசுகிறேன்..”

“என்ன வார்த்தை சொல்கிறாய்..” சௌதாமினியின் உடல் நடுங்கியது..

“என் மகன் ஆசைப்பட்டான் என்பதற்காக ஒரு குமாஸ்தாவின் மகளைப் பெண் கேட்கிறேன் பார்.. தகுதியைப் பற்றியும்.. தராதரத்தைப் பற்றியும் உனக்கு என்ன தெரியும்..? உன்னை என் மருமகளாக்க நினைத்த எனக்கு இதுவும் வேண்டும்.. இன்னமும் வேண்டும்..”

“நான் குமாஸ்தாவின் மகள்தான் அதை என்றுமே மறந்ததில்லை.. உங்களைப் போல..”

“நான் எதை மறந்தேன்..?”

“ஓர் உயிருள்ள ஜீவனை.. நான் பெற்ற தாய் இறந்ததால் அநாதையானேன்.. பெற்ற தாயிருந்தும் அநாதையாய் அலையும் ஒரு மாடி வீட்டு ஏழையை.. நீங்கள் மறந்து விட்டீர்கள்..”

வித்யாவின் உதடுகள் துடித்தன..

சௌதாமினியின் உடல் விதிர்த்தது.. இந்தப் பெண் பேசும் வார்த்தைகளில் ஏதோ அர்த்தம் பொதிந்துள்ளது போல் தோன்றுகிறது..

“அம்மா வித்யா.. கொஞ்சம் விளங்கச் சொல்.. நீ மிகவும் நல்ல பெண் என்பது என் அபிப்ராயம்.. இப்போது இவ்வளவு மரியாதையில்லாமல் எடுத்தெறிந்து நீ என்னை ஏசக் காரணம் என்னம்மா..?”

“என் மகனைக் கல்யாணம் செய்து கொள் என்று கேட்டீர்களே.. கல்யாணமாகாமல் இருக்கும் மகன் உங்களுக்கு சுரேநதிரன் மட்டும் தானா..?” வித்யாவின் வார்த்தைகள் சாட்டையடியாய் சௌதாமினியின் மனதில் விழுந்தன..

வலி தாங்க முடியாமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள் சௌதாமினி.. கல்யாணமாகாமல் இருப்பது சுரேந்திரன் மட்டுமா..? நரேந்திரனும்தானே.. அப்போது இவள்.. இவள்.. நரேந்திரனையா மணமகன் என்று நினைத்தாள்..? அவனைப் பெற்ற தாய் என்பதற்காகவா தன் தாள் பணிந்தாள்..? அவன் மனைவியாக வேண்டும் என்ற ஆசையினாலா.. ‘அத்தை’ என்று அழைத்தாள்..

‘கடவுளே.. பெற்ற குழந்தைகளில் வேற்றுமை பார்த்தேனா..?’ பதறிப் போனாள் அந்தத்தாய்..

வித்யாவின் கோபம் கரை உடைந்திருந்தது.. அவள் கொட்டித் தீர்த்து விட்டாள்..

“பெரிய ராஜ பரம்பரை ராஜ பரம்பரைன்னு பீத்திக் கிறீர்களே.. ஒரு ராஜ மாதாவின் கதை தெரியுமா..? அவள் பெயர் காந்தாரி.. நூறு பிள்ளைகள் பெற்றவள்.. நூறு பெயர்களில் ஒரு பெயரைக்கூட அவள் மறந்ததில்லை.. நூறு மகன்களிடையே அவள் வேற்றுமை பார்த்ததில்லை..

இங்கே என்ன நடக்கிறது..? பூர்ணிமாவை விட நான்கு வயது மூத்தவருக்குப் பெண் தேடுகிறீர்கள்.. அவளைவிட பதினைந்து வயது மூத்தவர் நரேன்.. அவரை தனி மரமாக்கி விட்டீர்கள்.. மறந்து விட்டீர்கள்.. நீங்கள் எல்லாம் எப்படி நல்ல தாயாக இருக்க முடியும்..? மூத்தவர் இருக்க மற்ற இளைய மகன்களுக்கு திருமணம் நடத்தியதை சந்தர்ப்ப சூழ்நிலை என்று சொல்லலாம்.. உங்கள் மூத்த மகளின் கல்யாணம் முடிந்ததை கடமை என்று சொல்லலாம்..

இப்போது மூத்தவரை விட்டுவிட்டு இளைய மகனுக்கு பெண் கேட்டதற்குக் காரணம் என்ன..? சூழ்நிலையா..? கடமையா..? எது உங்களை மூத்தவரை மறக்கச் செய்துவிட்டு இளையவருக்கு பெண் கேட்க வைத்தது..?

ஏனென்றால் இளைய மகன் உங்கள் செல்லப் பிள்ளை.. மூத்த பிள்ளை என்ன தத்துப் பிள்ளையா..? நீங்கள் பெற்ற பிள்ளை என்று நினைத்திருந்தால் இப்படி பாரபட்சம் காட்டியிருப்பீர்களா..?”

சௌதாமினி ‘கரகர’வென கண்ணீர் விட்டாள்..

“அம்மா வித்யா.. நான் எவ்வளவோ கெஞ்சினேன்ம்மா.. அவன் கல்யாணம் வேண்டாமென்று மறுத்து விட்டான்..”

“குட்.. பெற்ற தாய் சொல்கிற தன்னிலை விளக்கமா இது..? அவர் விரும்பியா இந்தக் குடும்ப பாரத்தை அவர் தலைமேல் வைத்தீர்கள்..? அவரைக் கேட்டுக் கொண்டா உங்கள் இரண்டாவது மகனும் மூன்றாவது மகனும் காதலித்தார்கள்..? குடும்பத்திற்காக அவர் தன் காதலைத் துறந்தாரே.. அவர்கள் இரண்டு பேரும் அண்ணனுக்காக அவர்கள் காதலைத் தியாகம் செய்தார்களா..? நீங்கள் எல்லோரும் மகா கெட்டிக்காரர்கள்.. நீங்கள் உங்கள் விருப்பங்களை தடை இல்லாமல் நிறைவேற்றிக் கொள்வீர்கள்.. அவருக்கு ஓர் குடும்பத்தை உண்டு பண்ணிக் கொடுக்க மட்டும் ஆயிரம் தடை சொல்வீர்கள்..”

சௌதாமினி கைகுவித்து மறுத்தாள்..

“இல்லையம்மா இல்லை.. அவனிடம் போராடிப் பார்த்து விட்டேன்.. அவன் மறுத்து விட்டான்.. அதனால் தான்..”

“விட்டு விட்டீர்கள்.. தண்ணீர் தெளித்து நீ எக்கேடோ கெட்டுப் போ என்று விட்டு விட்டீர்கள்.. அப்படித்தானே.. நான் ஒன்று கேட்கிறேன்.. இப்போது பூர்ணிமாவும் திருமணம் வேண்டாம் என்று மறுத்தாளே.. நீங்கள் ஏன் அவளை அப்படியே விடவில்லை..?”

சௌதாமினியின் கண்ணீர் நின்றுவிட்டது.. அவள் சிலையாக சமைந்து போனாள்.. அந்தச் சிறிய பெண்ணின் நாவில் தீ எழுந்து அவளைச் சுட்டது..

“சொல்லுங்கள் மேடம்.. அவள் கல்யாணம் நின்று போகக் கூடாதென்று ஏன் நரேனின் உயிரைப் போட்டு வதைத்தீர்கள்.. அவரையே சென்னைக்குத் துரத்தி அவளைக் கூட்டிவரச் செய்தீர்களே எதற்காக..?”

“நிச்சயம் பண்ணிய கல்யாணம் மாறிப்போய் விடக்கூடாது என்பதற்காக..” என்று சொல்லும்போதே சௌதாமினியின் மனம் அவளை இடித்தது..

‘நரேந்திரனின் திருமணமும் நிச்சயம் பண்ணியது தானே ஏன் மாறி விட்டது..?’

வித்யா வெறுப்போடு அறை வாசலை நோக்கிப் போனவள் அப்படியே நின்று விட்டாள்..

அறைக் கதவில் சாய்ந்து கொண்டு சுரேந்திரன் நின்று கொண்டிருந்தான்..

ஒரு கணம் தான் வித்யா தாமதித்தாள்.. மறுகணம் அலட்சியமாய் அவனைக் கடந்து செல்ல யத்தனித்தாள்.. சுரேந்திரன் அறைக் கதவை மூடித் தாழிட்டான்..

“எப்போதுமே கதவை மூடினால் தாழ் போட வேண்டும் வித்யா.. இப்போது பாருங்கள்.. நீங்கள் என்னிடமிருந்து விலகி விலகி ஓடினீர்கள்.. எனக்கு உங்களுடன் பேச ஆசை.. அம்மா ரூமிற்குள் நீங்கள் போவதைக் கண்ட நான் உங்களுடன் பேசலாமென்று பின் தொடர்ந்து வந்தேன் வந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று பார்த்தீர்களா..?”

வித்யா அவனிடம் பேச விரும்பவில்லை.. கோபமாய் மௌனித்தாள்..

“வந்ததும் நல்லதாகப் போயிற்று.. நீங்களும், அம்மாவும் பேசியதை ஆரம்பம் முதல் கடைசி வரை ஓர் வார்த்தை கூட விடாமல் கேட்டு விட்டேன்.. ஆனால் வித்யா.. இதில் என் அம்மா குற்றவாளியில்லை..”

‘என்ன சொல்கிறாய்..?’ என்பது போல் வித்யா முறைத்தாள்..

“இன்னும் சொல்லப் போனால் நானும் குற்றவாளி யில்லை.. குற்றவாளி யார் என்று எனக்குத் தெரிய வில்லை.. ஏனென்றால் என்னை உங்களை மணக்கச் சொல்லி வேண்டிக் கேட்டுக் கொண்டு ‘உடனே இந்தியாவுக்கு வா’ என்று சொல்லி வரவழைத்தது நரேன் அண்ணா..”

“என்ன..?” என்று துடித்துப் போய்விட்டாள் வித்யா..

“நான் நம்ப மாட்டேன்..”

“எனக்கு அது அவசியமில்லை.. இன்னொருவரை காதலிக்கும் பெண்ணின் வாழ்க்கையில் இனிக் குறுக்கிடவும் மாட்டேன்.. உங்கள் விருப்பத்தோடுதான் என்னை நரேன் அண்ணா வரவழைத்திருக்கிறார் என்று தான் இதுவரை நினைத்திருந்தேன்.. தமிழகப் பெண்களுக்கே உரிய வெட்கத்தால் விலகிப் போகிறீர்கள் என்றுதான் இத்தனை நாளாய் நினைத்திருந்தேன்.. பட்.. நீங்கள் என் நரேன் அண்ணனை ஒருதலையாய் காதலித்து வந்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது..”

“என்னது ஒருதலைக்காதலா..?” வித்யாவின் கண்கள் கனலாகின..

“ஆமாம்.. பின்னே தான் காதலிக்கும் பெண்ணையா வேறு ஒருவனிடம் மணந்து கொள்ளச் சொல்ல நரேன் அண்ணா சொல்வார்..”

“போதும்..” வித்யா கைகூப்பினாள்.. அவள் உடல் வெடவெடத்தது..

“வருகிறேன் சுரேந்திரன் சார்.. உங்கள் பெரிய அண்ணனிடம் என் வந்தனத்தைச் சொல்லி விடுங்கள்.. சூழ்நிலைக்கேற்ப மனம் மாற நான் கார்த்திகா இல்லை யென்றும் சொல்லி விடுங்கள்.. வருகிறேன் மேடம்.. இத்தனை நாள் என்னை ஆதரித்ததற்கு மிகவும் நன்றி..”

வித்யா அறைக்கதவைத் திறந்து கொண்டு புயலென வெளியேறினாள்.. சுரேந்திரனும் சௌதாமினியும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர்..

0Shares

Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link