Chapter 04
நதியோரம் நடந்த போது…
நதியாக என் வாழ்வில் வந்தாய்…
பொருள் வேண்டும் இவ்வுலகில்…
என் மனதை நீ கேட்டாய்…
-நதியோரம் நான் நடந்த போது-
பெருமாளையும்.. தாயாரையும் சேவித்து விட்டு… நதியோரமாக அவர்கள் நடந்தார்கள்… வழக்கமான படித்துறையில் அமர்ந்த பின்பும் வித்யா மௌனமாகவே இருந்தாள்.. நரேந்திரனின் புருவங்கள் சுருங்கின… அருகிலிருந்தவளின் கை பிடித்து இழுத்து… மார்போடு இறுக்கி முத்தம் பதித்தான்… வித்யாவின் உள்ளங்கை உணர்ந்த மீசையின் ரோமங்களின் உராய்வில் அவள் சிலிர்த்துப் போனாள்…
“வித்யா…”
“ம்ம்ம்…”
“ஐ லவ் யு…”
“இதை நான்தான் சொல்லனும்…”
“ஏன்.. நான் சொல்லக் கூடாதா…? நான் உன்னைக் காதலிக்கலையா…?”
“என்னளவுக்கு காதலிக்கலை…”
இதைக் கேட்ட நரேந்திரனின் முகம் சுருங்கி விட்டது.. அவளின் கையை அவன் விட்டு விட்டான்.. வித்யா அவன் முகம் பார்த்தாள்.. அவனின் மனச் சிணுங்கலைப் புரிந்தவளாக மெல்லச் சிரித்தபடி அவனை ஒட்டி அமர்ந்தாள்… அவனின் வலிமையான கையை எடுத்து.. தன் கன்னத்தில் பதித்துக் கொண்டாள்.. வித்யாவின் கன்னத்தின் மென்மையில் நரேந்திரனின் மனம் குழைந்தது..
“நரேன்…”
“சொல்லு…”
“நீங்க என்னைக் காதலிக்கறிங்கதான்.. ஆனா.. என்னைப் பார்க்காமலே நீங்க என்னைக் காதலிக்கலை.. நான் அப்படியில்லை… உங்களைப் பார்க்கிறதுக்கு முன்னாலேயே உருகி உருகி… உங்களைக் காதலிச்சவ.. அந்த அர்த்தத்தில் தான் சொன்னேன்…”
“அப்ப.. என் காதல் உயர்த்தியில்லையா…?”
“யார் சொன்னது…? ராஜா ராஜேந்திர பூபதியோட மூத்த மகன் ராஜா நரேந்திர பூபதி… ஒரு ஏழைப் பெண்ணுக்காக.. கூடப் பிறந்தவர்களையே எதிர்த்து நின்னார்… அவளையே கல்யாணமும் பண்ணிக்கிட்டு.. அவளின் காதலுக்கு மரியாதை கொடுத்தார்.. யார் இதைச் செய்வாங்க…? சொல்லுங்க…”
“உன் காதலன் செய்வான்…”
நரேந்திரன் முக மலர்ச்சியுடன் அவளை அணைத்துக் கொண்டான்.. அந்தி நேரம் முடிந்து கொண்டிருந்தது.. லேசான இருள் படலம் அவர்களைச் சுற்றிக் கவிய ஆரம்பித்திருந்தது… அமைதியாக ஓடிக் கொண்டிருந்த நதி நீர்… அவர்களை வாத்சல்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது…
“இந்த நதி என் சிநேகிதி…” பாசத்துடன் சொன்னாள் வித்யா..
“பூர்ணிமாவை விடவா…?” என்று கேட்டான் நரேந்திரன்..
“அவளைப் போலவே..” வரிசைப் பற்கள் தெரிய சிரித்தாள் வித்யா…
அவளின் அந்தச் சிரிப்பில் மயங்கிப் போனான் நரேந்திரன்..
“சிரிச்சே மயக்கறடி…” அவளை இழுத்துக் கொண்டான் அவன்..
அவனின் கரங்கள் அவள் மேல் படிந்த விதத்தில் வித்யா கிறங்கிப் போனாள்.. அவனின் நெருக்கத்தில் அவளின் பெண்மை தவித்து தத்தளித்தது… அவள் மேல் அவன் கொண்டிருக்கும் ஆசையின் அளவை அவன் கொடுத்த முத்தங்கள் உணர்த்த… எதிர்ப்பேயில்லாமல் அவன் கைகளுக்குள் ஒன்றிக் கிடந்தாள் வித்யா… அவளை அணுவணுவாக ரசித்து ஆக்ரமிக்க அவனுக்குப் பிடித்திருந்தது.. அவனையே அவளுக்குப் பிடித்திருந்தது.. அவளின் தேவைகளுக்கு இசைந்து கொடுப்பதிலிருந்த ஓர்வித சுகத்தை பரிபூரணமாக உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தாள் வித்யா…
“உன் மேல கொண்ட ஆசை…
உத்தமியே மெத்தை உண்டு…
சத்தியமா சொல்லுறேண்டி தங்கரத்தினமே..
தாள முடியாது கண்ணே பொன்னு ரத்தினமே…”
அவளின் காதோடு அவன் பாடிய பாடலின் ஆசைத்தீ உணர்த்திய வெப்பத்தில் அவள் எரிய ஆரம்பித்தாள்.. அவனின் மூச்சுக்காற்று அவள் காதைச் சுட்டது.. நகர்ந்து கொண்டிருந்த மணித்துளிகள் அவனுக்கும்.. அவளுக்குமான ரகசிய அந்த மணித்துளிகளை பதிவு செய்து கொண்டிருந்த போது கோவிலின் மணி ஒலித்தது.. அந்த மணியோசையில் வித்யாவை நரேந்திரன் விடுவிக்க.. அவள் விலகி அமர்ந்தாள்..
அவள் முகம்… அவனின் அழுத்தமான முத்தங்களினால் கலங்கிச் சிவந்திருந்தது.. கலைந்திருந்த அவளின் தலைமுடி அவனின் ஆவேச அணுகுமுறையைச் சொன்னது.. மெல்லிய இருளில் தெரிந்த அவளின் வடிவம்.. முன்பு ஒருமுறை சென்னையில் பங்களாவின் மொட்டை மாடியில் நிலவின் ஒளியில் அவளைத் தனியாக சந்தித்த அந்தத் தருணத்தை நினைவு படுத்தியது…
அன்றும் இன்று போல ஒரு கோட்டுச் சித்திரத்தைப் பார்ப்பதைப் போலத்தான் அவளின் வடிவம் இருந்தது.. மெலிதான நிலவொளியில் தலையில் சூடிய மல்லிகையின் நறுமணத்தோடு.. தேவதையின் அழகோடு அவன் அருகே நின்றாள் அவள்…
இன்று அந்த தேவதை அவனருகில்… அவனுக்கு மட்டும் உரிமையானவளாக.. அவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தவளாக இருக்கிறாள்…
இது எப்படி நிகழ்ந்தது என்று பிரமித்துப் போனான் நரேந்திரன்…
“என்ன பேச்சையே காணோம்…?” வித்யா கேட்டாள்..
“பேசத்தான் இங்கே வந்தோமா…?” நரேந்திரனின் கைகள் மீண்டும் அவளைத் தேடின…
“ஊஹீம்…….? வேகம் அதிகமாக இருக்கே…”
“எதைச் சொல்கிற…?”
“நதியின் வேகத்தைச் சொல்றேன்.. நீங்க எதை நினைச்சீங்க..”
“உன் நாயகனின் வேகத்தைச் சொல்கிறாயோன்னு நினைச்சேன்…”
அவன் சொல்லிய விதத்தை ரசித்துச் சிரித்தாள் வித்யா.. அதில் தெறித்து விழுந்த அழகில் மயங்கிப் போனவனாக அவளது கைவிரல்களில் விரல் கோர்த்து விளையாடிக் கொண்டிருந்தான் நரேந்திரன்..
“வர வர… சினிமாடிக்கா பேச ஆரம்பிச்சிட்டிங்க நரேன்..”
“ஈஸ் இட்…? என்னமோ தெரியலை.. நீ பக்கத்தில் இருந்தாலே இப்படித்தான் எனக்குப் பேச வருது..”
“ஊஹீம்..? யாராவது கேட்டா நம்மை லவ்வர்ஸ்ன்னு நினைச்சுக்கப் போறாங்க…”
வித்யா சிரித்தபடி சொல்ல.. இருளில் தெரிந்த அவள் முகத்தை ஊன்றிப் பார்த்தான் நரேந்திரன்.. அவன் குரல் சூழ்ந்து ஒலித்தது..
“ஏன் வித்யா.. நாம லவ்வர்ஸ் இல்லையா…?”
இல்லையென்று அவள் எப்படிச் சொல்லுவாள்…? கணவன் மனைவியாக ஆனபின்பு காதலிக்கக் கூடாது என்று ஏதும் சட்டமிருக்கிறதா என்ன…? அவள் மீதான அவனின் காதலை ஒவ்வொரு நொடியிலும் அவள் உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறாளே.. அவன் மீதான அவளின் தேடலை அவனுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறாளே.. அப்படியிருக்கும்போது அவர்கள் காதலர்கள் இல்லையென்று அவளால் சொல்ல முடியுமா..?
“நரேன்…” அவள் கண்களில் ஈரம் தெரிந்தது..
“வித்யா…” அவன் பதறி அவள் முகத்தை கையில் ஏந்தினான்..
ஏந்திய அவன் கரத்தில்.. இரண்டு சொட்டுக் கண்ணீர் துளிகள் தெறித்து விழுந்தன..
“என்னடி ஆச்ச…?” நரேந்திரன் தவித்தான்…
“நான் உங்களைக் காதலிக்கிறேன் நரேன்…” வித்யா விம்மினாள்..
“அதான் எனக்குத் தெரியுமே.. இதுக்குப் போயா அழுகிற…? பைத்தியம்.. நான் என்னவோ.. ஏதோன்னு பயந்துட்டேன்…” நரேந்திரனின் குரலில் நிம்மதியிருந்தது..
“என் வாழ்க்கையில நான் எனக்குன்னு ஆசைப் பட்டது படிப்பை மட்டும்தான்… அப்படியிருந்தவ உங்க மேல ஆசைப் பட்டேன்..”
“வித்யா…”
“பூரணி சொல்லுவா.. தினமும் உங்களைப் பத்திப் பேசுவா.. அவ பேசப் பேச… என் நினைவுகளின் கதாநாயகனா நீங்க ஆனிங்க நரேன்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே சொன்னீங்களே.. நீங்க என்னோட நாயகன்னு.. அது நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை.. என் நாயகனா உங்களை மனசுக்குள்ளே நான் வரிச்சேன்..”
“அந்தத் தகுதி எனக்கிருந்துச்சாடி…?”
“உங்களைத் தவிர யாருக்கு அந்த தகுதியிருக்கு..? சொல்லுங்க பார்ப்போம்… உங்களைப் பத்திக் கேட்டுக்கிட்டே இருந்தால் போதும்ன்னு எனக்குத் தோணும்.. சாப்பிடத் தோணாது.. உங்க போட்டோவைப் பார்த்துக்கிட்டே இருப்பேன்.. என்னைக்காவது ஒரு நாள் உங்களை நேரில் பார்க்க முடிந்தால் போதும்ன்னு மனசு கிடந்து அடிச்சுக்கும்.. அது நடக்குமா.. நடக்காதான்னு தெரியாது…”
வித்யாவின் கடந்த காலக் காதல் கதையின் கதாநாயகனான நரேந்திரன் அவள் சொன்னதை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான்.. இந்த அளவுக்கு ஒருத்தி அவனை நேசித்துக் கொண்டிருக்க அதை அறியாதவனாக அவன் போதையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தவனுக்கு அவன் மீதே வெறுப்பு வந்தது.. அவனுக்காக முழு நிலவு காத்துக் கொண்டிருக்க மின்மினிப் பூச்சிகளின் பின்னால் எதைத் தேடி அவன் ஓடினான்…?
“என் காதல் ஒரு தவம் மாதிரி நரேன்.. என் தவம் பலிச்சது.. ஒருநாள் உங்களை நேரே பார்த்தேன்.. நீங்க என்னையும் மதிச்சு உங்க மன உணர்வுகளைப் பகிர்ந்துக்கிட்டிங்க.. அந்த நிமிசம் போதும்ன்னு எனக்குத் தோணிப் போச்சு.. அதுக்குப் பின்னாலே நீங்க எதைக் கேட்டாலும் மறுக்க முடியாம உங்க பின்னாலேயே வந்து விட்டேன்..”
“நான் கொடுத்து வைத்தவன் வித்யா.. என் மனசு நிறைஞ்சிருக்குடி.. உனக்கு எதையாவது கொடுக்கணும்னு எனக்குத் தோணுது.. கேளுடி… உனக்கு என்ன வேணும்னு கேளு…”
நரேந்திரனின் மனம் தளும்ப உணர்வு பூர்வமாக இந்த வார்த்தைகளை அவன் சொன்னான்.. வித்யாவும் கேட்டாள்..
“எனக்கு உங்க மனசு வேணும் நரேன்…”
“வித்யா…”
“அதில எனக்கு மட்டும்தான் இடமிருக்கனும்.. எனக்கு மட்டும் சொந்தமானதாக.. எனக்கே எனக்குன்னு உங்க மனசு இருக்கனும் நரேன்..”
வித்யா இரு கைகளையும் நீட்டி இறைஞ்சினாள்.. நரேந்திரன் திக்பிரமை பிடித்தவன் போலானான்…
அவன் கோடிஸ்வரன்.. ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன்.. அவனிடம் அவனது காதல் மனைவி அன்புப் பரிசாக..
வைர நகைகளைக் கேட்கலாம்.. அவளுக்கே.. அவளுக்காக ‘வசந்த மாளிகை…’ ஒன்றைக் கட்டித் தரும்படிக் கேட்கலாம்.. அவன் பெயரில் உள்ள பேக்டரியின் நிர்வாகத்தைக் கேட்கலாம்.. இப்படி எத்தனையோ ‘கேட்கலாம்’கள் இருக்க… அவள் அவன் மனதை மட்டும் கேட்டாள்…
‘பொன்னை விரும்பும் பூமியிலே..
என்னை விரும்பும் ஓர் உயிரே…
புதையல் தேடி அலையும் உலகில்..
இதயம் தேடும் என்னுயிரே..!’
அவன் மனதில் அவனுக்குப் பிடித்த பாடல் ஒலித்தது..
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.