Chapter 07

0Shares

 நதியோரம் நடந்த போது…

நாணலாக நாணம் கொண்டாய்…

வளைத்துப் பார்க்க முடியாமல்

  தென்னையாக நிமிர்ந்து நின்றாய்…

-நதியோரம் நான் நடந்த போது-

“இப்படிப் பேசலைன்னா அவர் எந்தக் காலத்திலயும் பேக்டரியை விட்டுப் போகமாட்டார்.. எனக்கு அவரைத் தெரியும்..” அழுத்தமான குரலில் சொன்னான் சுரேந்திரன்..

அதற்கு மேல் அதைப் பற்றி அவர்கள் இருவருமே பேசிக் கொள்ளவில்லை.. மாலையில் வீடு திரும்பிய போது.. எரிதணலாய் சுரேந்திரனை எதிர்கெண்டாள் மீனலோசனி..

“எப்படி என் ஹஸ்பெண்டைப் பார்த்து அப்படிப்பட்ட வார்த்தையை நீங்க பேசலாம்…?” அவள் சீறினாள்…

“நான் பேசுகிறதைப் போல அவர் ஏன் நடந்து கொண்டார்…? அதை முதலில் கேளுங்கண்ணி..” அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னான் சுரேந்திரன்..

“எப்படி நடந்துக்கிட்டார்…? இத்தனை நாளாய் அவர் கட்டிக் காப்பாற்றிய பேக்டரியின் மேல் இருக்கிற பாசத்தில அங்கே வந்தார்.. ஏன் அவர் அங்கே வரக் கூடாதா…? அவருக்கு அந்த உரிமை இல்லையா…?” கொதித்தாள் மீனலோசனி..

“கட்டிக் காப்பாற்றினாரா…? அவரா…? பேக்டரியையா…? சும்மாயிருங்க அண்ணி.. அப்புறம் ஏதாவது சொல்லிடப் போறேன்..” சுரேந்திரனுக்கு எரிச்சல் வந்து விட்டது..

“சொல்லுவீங்களோ..” எரிப்பதைப் போல பார்த்தாள் மீனலோசனி

“ஆமாம்.. சொல்லுவேன்…” சுரேந்திரன் வெடித்தான்..

“என்ன சொல்வீங்க…?” சவால் விட்டாள் மீனலோசனி..

“அவருக்கு பேக்டரியில் என்ன உரிமையிருக்கு…? அதுதான் பாகப் பிரிவினையை செய்தாகிவிட்டதே.. 

அந்த பாகப் பிரிவினையையும் அவர்தானே கேட்டார்…? கேட்டவர் கொடுத்ததை வாங்கிக் கொண்டு விலகி 

விட வேண்டும்தானே…?”

“எல்லாத்தையும் விட்டுக் கொடுத்திட்டு விலகிவிட அவர் என்ன உங்களைப் போல சொகுசாக வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தாரா…? பேக்டரியில் உழைத்துக் கொண்டிருந்தார்…”

“நான் சொகுசாய் படித்தது என் பங்கு வருமானத்தில்தான்… உங்க ஹஸ்பெண்டின் உழைப்பில் வந்த வருமானத்தில் இல்லை.. நான் படிக்கத்தான் செய்தேன்.. அனாமத்து கணக்கை எழுதி நீலாங்கரையில் பங்களைக்களை வாங்கிப் போடலை..”

சரியான இடத்தில் சுரேந்திரன் அடித்து விட… மீனலோசனிக்கு பேச வாய் வரவில்லை.. அவளைப் பார்க்கப் பிடிக்காமல் சௌதாமைனியைப் பார்த்தான் சுரேந்திரன்..

“இதுக்கு என்னதாம்மா முடிவு…? பாகப் பிரிவினைன்னு ஆன பின்னாலே.. அவங்கவங்க அவங்கவங்க இடத்தில் இருந்தால்தான் வேலையும் நடக்கும்.. சொத்தும் நிலைக்கும்..”

சௌதாமினி  எதையோ பேச வாய்திறக்க.. மீனலோசனி முந்திக் கொண்டாள்..

“நடந்த பாகப்பிரிவினை நியாயமாய் நடக்க வில்லையே அத்தை…”

“மில்லையும்.. பேக்டரியையும் சமமாக பிரித்துக் கொடுத்திருக்கிறார் பெரியண்ணா.. இதில் அநியாயம் எங்கிருந்தும்மா வந்தது…?”

“பேக்டரியில் என் ஹஸ்பெண்ட் உழைத்தார்.. மில்லில் சின்னவர் உழைத்தார்.. அவங்கவங்க உழைத்த இடத்தை அவங்களுக்கு கொடுப்பதுதான் நியாயம்ன்னு சொல்லுங்க அத்தை..”

“ஓ… கதை அப்படிப் போகிறதா…? அனாமத்தில் வாழ்ந்தவர்களுக்கு உழைத்துப் பிழைக்க எண்ணமில்லை போல.. அம்மா.. நீங்கள் பெற்றது நான்கு மகன்களையும் இரண்டு மகள்களையும்.. அவங்க இரண்டு பேரை மட்டுமில்லை.. சொல்லி வையுங்கம்மா.. மில்லையும் பேக்டரியையும் ஒட்டு மொத்தமாக இவங்க இரண்டு பேருக்கும் தாரை வார்த்துக் கொடுத்துட்டு.. நானும் பெரியண்ணனும் உடுத்தியிருக்கிற உடையோடு வெளியேறி விட வேண்டுமா..? நீங்க அதைத்தான் எதிர்பார்க்கறிங்களாம்மா…?”

சுரேந்திரனுக்கு கண்கள் சிவந்து விட்டன… அன்று பேக்டரிக்கு போகாமல் வீட்டிலேயே தங்கி விட்ட வித்யா மாடியிலிருந்து அப்போதுதான் இறங்கி வந்தாள்.. எதற்காக சுரேந்திரன் அந்த அளவிற்கு கோபப்படுகிறான் என்ற புரியாதவளாய் நரேந்திரனின் முகம் பார்த்தாள்.. அவன் இமைமூடி அவளிடம் அப்புறம் சொல்வதாக கண்சமிக்ஞை செய்தான்…

“மீனா என்னம்மா இது…?” சௌதாமினி கைகளைப் பிசைந்தாள்…

“நடந்திருக்கிற பாகப் பிரிவினையிலே எங்களுக்கு உடன்பாடில்லை அத்தை…” மீனலோசனி புருவங்களை நெரித்தாள்…

“நரேன்…” செனதாமினி பெரிய மகனை சரணடைந்தாள்..

அதுவரை பொறுமையாக நின்று கொண்டிருந்த நரேந்திரன் மனைவியை முடுக்கி விட்டுவிட்டு.. ஏதுமறியாதவனைப் போல அவள் பின்னால் மறைந்திருந்த மகேந்திரனைப் பார்த்தான் ..

வேடிக்கை பார்ப்பதைப் போல.. என்ன நிகழப் போகிறது என்ற எதிர்பார்ப்பை விழிகளில் தேக்கியபடி நின்றிருந்த பிரபாவதியையும் யுகேந்திரனையும் பார்த்தான்.. வளர்ந்து விட்ட மகன்களைக் கட்டுப்படுத்தும் வழியறியாதவளாய் கைகளைப் பிசைந்து கொண்டிருந்த தாயைப் பார்த்தான்..

“அவங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா.. இல்லையாங்கிறதைப் பற்றி எனக்குக் கவலை- யில்லைம்மா.. அப்பா என் பெயருக்கு பேக்டரியையும்.. மில்லையும் மாற்றியபோது அதை கிரயப்பத்திரமாகத்தான் மாற்றினார்.. இதை மத்தவங்க நினைவில் வைத்துக்கிறது நல்லது…”

“அப்படின்னா..?” வெகுண்டு முன்னே வந்தான் மகேந்திரன்..

மீனலோசனி நரேந்திரனிடம் பேச மாட்டாள் என்று இல்லை.. அவள் பேசத் தயங்குகிறவள் இல்லைதான்.. ஆனால்.. என்று அவள் மகேந்திரனின் மனைவியாக அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாளோ.. அன்றிலிருந்தே நரேந்திரன் அவள் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்த்ததில்லை.. அவளுடன் அவன் பேசவே மாட்டான்.. அது மீனலோசனிக்கு பெருத்த அவமானமாக இருந்தது.. அதனாலேயே அவள் மகேந்திரனை தமையனுக்கு எதிராகச் செயல்படும்படி தூண்டி விட்டுக் கொண்டேயிருந்தாள்…

மனைவியின் பின்னாலிருந்து முன்னால் வந்த மகேந்திரனை இகழ்ச்சியாகப் பார்த்தான் நரேந்திரன்.. 

“அப்படின்னா.. மில்லை நான் உங்க இரண்டு பேருக்கும் தந்தது.. உங்களுக்கும் அதில உரிமையிருக்- கிறது என்ற அர்த்தத்தில் இல்லை.. போனாப் போகுது.. கூடப் பிறந்து தொலைத்துட்டாங்களே.. அவங்களும் பிழைத்துப் போகட்டும் என்ற எண்ணத்தில்தான்னு அர்த்தம்…”

“அண்ணா…”

“கத்தாதே மகி.. உனக்கு வேணும்கிறதை கேட்டு வாங்க உனக்கு எந்த வித உரிமையுமில்லை.. நீ நினைக்கிறதைப் போல எங்களுக்கு எது வேணும்கிறதை முடிவு பண்ண எனக்கும் சுரேனுக்கும் உரிமையிருக்கு.. இன்னும் சொல்லப் போனா.. எங்களுக்குத்தான் அதிக உரிமையிருக்கு..”

“நீங்க உழைத்தாய் சொல்லிக்கிறிங்க..”

“சொல்லலை.. உழைத்தேன்.. அது இந்த உலகத்திற்கே தெரியும்..”

“ஓகே.. உழைத்தீங்கன்னே வைச்சுக்குவோம்..”

“வைத்துக்காதே.. உழைத்தேன்.. மில்லையும்.. பேக்டரியையும் கடனில் மூழ்கி விடாம காப்பாற்றினேன்..”

“இதையே எத்தனைதரம்தான் சொல்லுவீங்க…?”

“வாழ்க்கை முழுவதும் சொல்வேன்.. அப்படியாவது உன் தலையிலேயும்.. இங்கே இருக்கிற மத்தவங்க தலையிலேயும் அது ஏறுகிறதான்னு பார்ப்போம்..”

“காலம் பூராவும் இந்தப் பேச்சை நாங்க கேட்டுத்தான் ஆகனுமா..?”

“கேட்காதே.. வெளியே போய் விடு…”

“என்னது..? வெளியே போவதா..? எங்கே..?”

“உனக்குன்னு பாகம் பிரித்த உன் அம்பாசமுத்திர பங்களா இருக்கில்ல.. அங்கே போ..”

நரேந்திரன் பட்டென்று சொல்லி விட.. மகேந்திரன் ஆடிப்போய் விட்டான்.. யுகேந்திரன் எதையோ பேச வாயெடுத்தவன் அந்த வார்த்தைகளைக் கேட்டதும் வாயை இறுக மூடிக் கொண்டு விட்டான்.. மகேந்திரனும்.. யுகேந்திரனும்.. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்..

‘இவன் வாயை வைத்துக் கொண்டு சும்மாயிருந்திருக்கலாம்..’ யுகேந்திரனுக்கு கோபம் 

வந்தது..

அவனும்.. மகேந்திரனும்.. அவர்களுக்கென்று கொடுக்கப்பட்டிருந்த பங்களாக்களை வாடகைக்கு விட்டிருந்தார்கள்.. மகேந்திரனை மணி முத்தாறு வீட்டை விட்டுப் போகச் சொல்லி வார்த்தை வந்து விட்டது.. 

அந்த வார்த்தை யுகேந்திரனுக்கும் தானே…? மகேந்திரன் வீட்டை விட்டுப் போக வேண்டி வந்தால் யுகேந்திரனும் வெளியேறித்தானே ஆக வேண்டும்…?

“என்ன மகி.. பேசாம இருக்கிற…? பாகம் பிரித்துட்டால் மட்டும் போதாது.. அவங்கவங்க பங்கில இருந்து வாழப் பழகிக்கனும்.. இத்தனை நாளாய் நீயும்.. யுகேயும் உங்க வீடுகளுக்குத் தானாகவே குடித்தனம் போய் விடுவீங்கன்னு எதிர்பார்த்தேன்.. நீங்க செய்யலை…”

“பூர்ணிமாவின் கல்யாணம் வந்திருச்சுன்னு அம்மாதான் சொன்னாங்க..”

மகேந்திரன் சாமர்த்தியமாக சௌதாமினியின் பக்கமாக காயை நகர்த்தி விட்டான்.. பெற்றவளிடம் ஓங்கிப் பேச நரேந்திரன் யோசிப்பான் என்பது அவனுக்குத் தெரிந்ததுதானே… ஆனால் நரேந்திரன் சௌதாமினியின் பக்கம் திரும்பவே இல்லை.. அவன் புருவங்கள் மேலேற.. மகேந்திரனிடமே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..

“பூரணியின் கல்யாணத்திற்கும்.. நீங்க தனிக்குடித்தனம் போகிறதுக்கும் என்ன சம்பந்தம்..?”

“வீட்டுக்கு வருகிற உறவுக்காரங்க.. என்னையும்.. யுகேயையும் எங்கேன்று கேட்பாங்கன்னு அம்மா சொல்லிட்டாங்க…”

“கேட்டால் என்ன..? பாகப்பிரிவினை செய்தாகி விட்டது.. தனிக்குடித்தனம் போயாச்சுன்னு சொல்ல வேண்டியது தானே..”

“ராஜா ராஜேந்திர பூபதியோட வாரிசுகள் ஆளுக்கொரு பக்கமாய் சிதறிப் போயிட்டாங்கன்னு ஊர் சொல்லனுமான்னு அம்மா கேட்டாங்க..”

சௌதாமினி அப்படியெல்லாம் கேட்கவில்லை.. பெரிய மகனின் அமைதியை மட்டுமே அவள் நினைத்தாள்.. வேறு எதையும் நினைக்கவில்லை.. அவள் நினைக்காததை யெல்லாம் அப்போது நினைக்க வைத்து விட்டான் மகேந்திரன்.. கணவரின் பெயரைக் கேட்டதும் சௌதாமினியின் இமைகள் துடித்ததை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டான்..

அவனின் யுக்திகளில் நரேந்திரன் பல்லைக் கடித்தான்.. “அந்த ராஜா ராஜேந்திர பூபதியோட இரண்டு மகன்கள் தான் பாகப்பிரிவினைக்கு மாமனார் வீட்டை வரவழைத்திருந்தாங்கன்னு அம்மாவுக்குத் தெரியாதா…? அதை ஊர் பேசும்ன்னு அந்த இரண்டு மகன்களுக்குத்தான் தெரியாதா…?”

சௌதாமினியின் துடித்த இமைகள் சரியாகி விட.. மகேந்திரன் வெற்றிகரமாக தோல்வியைத் தழுவினான்.. ‘என்னடா இது.. இவன் வீட்டை விட்டும் வெளியேற்றி விடுவான் போல இருக்கே…’ கவலையுடன் மனைவியைப் பார்த்தான்..

அவள் முகத்தில் எள்ளும்.. கொள்ளும் வெடித்தன..

0Shares

Reviews – Nathiyoram / நதியோரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link