Chapter 09
நதியோரம் நடந்த போது
வாழ்க்கையைத்தான் நான் நினைத்தேன்..
நாடகமாய் வாழ்க்கை ஆனால்..
வாழ்வது எப்படியென்று யோசித்தேன்..
-நதியோரம் நான் நடந்த போது-
‘நல்ல வேளை…!’
மீனலோசனி நினைத்துக் கொண்டாள்… சுரேந்திரனின் பங்குக்கு மட்டும் அரண்மனை வந்திருந்தால்…?
“நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குது பிரபா..”
மறுநாள் விடியலில் பிரபாவதியிடம் சொன்னாள்..
“நினைக்காதீங்க.. அந்த அளவுக் கெல்லாம் எனக்குத் துணிச்சலில்லை.. அவன் கைக்கு அரண்மனை போயிருந்தால் அவ்வளவுதான்.. உங்களுக்கும்.. எனக்கும்.. இந்த மணிமுத்தாறு அரண்மனையில் வாழ்ந்த நாள்கள்.. மலரும் நினைவுகளாக ஆகியிருக்கும்…”
“அதைச் சொல்லு…”
“எந்தக் கடவுளின் புண்ணியமோ இது பெரியவரின் கைக்கு வந்தது…”
“நம்ம கைக்கு வரலியே…”
மீனலோசனி வயிறெரிந்தாள்.. உனக்கு அந்த ஆசை வேறு மனதில் இருக்கிறதா என்று பிரபாவதி
மனதில் நினைத்துக் கொண்டாள்.. எது எப்படியோ.. சுரேந்திரன் என்னதான் நறுக்கென்று மனதில் தைக்கிறதைப் போலக் கேட்டாலும்.. வயதில் சின்னவன் இப்படிக் கேட்டு விட்டானேயென்று வீட்டை விட்டு வெளியில் கிளம்ப.. மீனலோசனியும்.. பிரபாவதியும் தயாராக இல்லை..
“இவனென்ன சொல்வது.. நாமென்ன கிளம்புவது..” என்று பிரபாவதியிடம் கேட்டாள் மீனலோசனி..
“அதானே…” என்ற பிரபாவதி அத்துடன் நிறுத்தாமல்
“இதை அவனிடமே சொல்லியிருக்கலாமேக்கா…” என்று வேறு சேர்த்து கேட்டு வைத்தாள்…
மீனலோசனிக்கு பற்றிக் கொண்டு வந்தது…
“ஆமாம் பிரபா.. இதை அவனிடம் கேட்டு விட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளத்தான் நான் பிறப்பெடுத்திருக்கிறேன்.. என்னை முன்னால் விட்டு.. பின்னால் குளிர் காய்த்தான் நீ பிறப்பெடுத்திருக்கிறாய்..” என்ற பதிலுக்கு கேட்டு விட்டாள்…
“என்னக்கா இப்படிக் கேட்டுட்டிங்க.. நாங்க என்ன பட்டுக்காமலா இருக்கோம்…?” பிரபாவதி போர் கொடியை உயர்த்தினாள்..
“பின்னே…? இல்லையா…?” ஒன்றை வார்த்தையில் பிரபாவதியின் போர்க் கொடியை கீழிறங்க வைத்தாள் மீனா.
“என்னதான் இருந்தாலும்… நீங்க விவரமானவங்க.. உங்க விவரம் எனக்குச் சுட்டுப் போட்டாலும் வருமாக்கா…?”
வினயத்துடன் பேசிய பிரபாவதியின் வார்த்தைகளில் ஏதும் மறைபொருள் மறைந்திருக்கிறதோ என்ற சந்தேகம் மீனலோசனிக்கு வந்தது..
பிரபாவதி அப்படிப் பேசுகிறவள்தான்… என்ன தான் மீனலோசனியுடன் பின்னிப் பிணைந்தாலும்.. நரேந்திரனை மணக்க இருந்து.. மகேந்திரனை கணக்குப் பண்ணி மணம் முடித்தவள்தானே என்று மீனலோசனியைப் பற்றி ஒரு எண்ணம் பிரபாவதியின் மனதில் என்றுமே உண்டு.. அந்தச் சாமர்த்தியத்தை வியக்காமல் இருக்க அவளால் முடிவதில்லை.. அதை வெளிப்படையாகச் செய்துவிட அவளால் முடியுமா..? அதனால் கிடைக்கும் வாய்ப்புகளில் மறைமுகமாக அதைப் புகழ்ந்து விடுவாள்… என்ன ஒன்று அந்த வஞ்சகப் புகழ்ச்சியை மீனலோசனி உடனே அறிந்து கொண்டு விடுவாள்.. அதைப் பற்றி பிரபாவதி அலட்டிக் கொள்வதே இல்லை..
‘யாரு இவ…? இவளுக்குத் தெரியாமல் இருக்குமா…?’
மனதில் எள்ளளுடன் நினைத்துக் கொள்வாள்… அதை அவள் விழிகள் பிரதிபலித்தாலும்.. ஏதும் அறியாதவள் போல பவ்யமாக…
“என்னக்கா…?” என்று மீனலோசனியிடம் வினவ வேறு செய்வாள்…
அவள் என்னவென்று சொல்லுவாள்…? பிரபாவதியுடன் மோதவும் அவளால் முடியாது..
வித்யாவை வெளியே விரட்ட பிரபாவதியின் கூட்டணி தேவைப் படுகிறதே..
‘ம்ஹீம்.. இரண்டு கைகள் நான்கானால் தான் எதையாவது செய்ய முடியும்.. இவளை முறைச்சுக்கிட்டு நம்மாலே இந்த அரண்மனையில் காலம் தள்ள முடியாது.. நமக்கு ஒரு சொந்தம்.. இவளுக்கு இவளோட அண்ணனுக்கு இந்த வீட்டில் பிறந்த பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால் இரண்டு சொந்தம்.. அசைக்க முடியாதவ.. இவளைப் பகைச்சுக்கிறது புத்திசாலித்தனமில்ல…’
மீனலோசனிதான் விவரமானவள் ஆயிற்றே.. அவள் பிரபாவதியின் கேலியை கண்டும் காணாததும் போலப் போனாள்.. அதெல்லாம் அவளால் முடிந்தது.. வித்யாவினால்தான் முடியாமல் போனது..
வித்யா எதையும் நேருக்கு நேராகப் பேசிப் பழகியவள்.. இரு பொருள்படப் பேசியறியாதவள்.. அவளால் மீனலோசனியும்.. பிரபாவதியும் பேசிய ஜாடைப் பேச்சுக்களை அவர்களின் பாணியிலேயே எதிர் கொள்ள முடியவில்லை.. ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் போக முடிந்தது..
வித்யாவின் அருகே நரேந்திரன் இல்லாத சமயங்களில் மீனலோசனியின் ஜாடைப் பேச்சு கொடி கட்டிப் பறக்கும்.. பிரபாவதி பேச மாட்டாள்.. பேசினால் அது பிரகாஷின் காதுகளுக்குப் போய் விடுமோ என்ற பயம்.. அவனே அவளுக்கு ஒற்றை அண்ணன்.. அவனுடைய ஒற்றை மனைவியான பூர்ணிமாவோ வித்யாவின்
உயிர் தோழி.. அதனால் அவள் பேசாமல் மீனலோசனியை பேச விட்டு சுவரஸ்யமாக வேடிக்கை பார்ப்பாள்..
“ஏன் பிரபா…?”
“என்னக்கா…?”
“உன் கல்யாணத்துக்கு போட்ட வைர அட்டிகையை எங்கே வாங்கினாங்களாம்..?”
“அது வாங்கியதில்லைக்கா…”
“பின்னே…?”
“செய்ததாம்…”
“அப்படின்னா…?”
“என்னக்கா.. தெரியாததைப் போல கேட்கறிங்க.. அது பரம்பரையாய் வந்த நகைக்கா… உங்ககிட்டயும் அப்படி நகைகள் இருக்கே…”
“இருக்குதுதான்…”
“அப்புறமும் எதுக்கக்கா இந்தச் சந்தேகம்…?”
“பரம்பரையாய் வைரநகைகளைக் கட்டிக் காப்பாத்தி பெத்த மகளுக்கு பூட்டி விடுகிற பரம்பரையில் நீயும் நானும் பிறந்திருக்கோம்.. நமக்கு ராஜா ராஜேந்திர பூபதியோட பரம்பரையில மருமகள்களாக வருகிற தகுதியிருக்கு..
இது ஒன்னுமேயில்லாத ஜென்மங்களுக்கெல்லாம் என்ன தகுதியிருக்குன்னு இந்த அரண்மனையில சொந்தம் கொண்டாடறாங்க..?”
மீனலோசனியின் கேள்விக்கு பிரபாவதி சிரித்து வைக்க.. வித்யாவுக்கு பேசாமல் போக மனம் வரவில்லை.. நின்று திரும்பிப் பார்த்தவள் கழுத்தில் கிடந்த தாலியைத் தூக்கிக் காண்பித்தாள்…
“இந்தத் தகுதியிருக்கு…”
பட்டென்று சொல்லி விட்டு அவள் போய் விட மீனலோசனிக்கு வயிறு எரிந்தது…
“இவளை உள்ளே வரவிட்டது மகாப் பெரியதப்பு பிரபா…”
“என்னவோ.. நான்தான் அவளுக்கு வெற்றிலை.. பாக்கு வைத்து… ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள அழைத்ததைப் போல இல்ல பேசறிங்க.. உங்களையும் என்னையும் கேட்டா இந்தக் கல்யாணம் நடந்தது…?”
“பெரியவரும்… சின்னவனும் அடிச்சுக்குவாங்க.. இவ இரண்டு பேருக்குமே இல்லாம ஓடிப் போயிருவான்னு கணக்குப் போட்டா… என் கணக்கு தப்பாப் போச்சே பிரபா..”
“எப்பவுமே நீங்க போடற கணக்கே ஜெயிக்காதுக்கா.. சில சமயம் கணக்கு மாறிப் போவதும் நடக்கும்…”
பிரபாவதி வழக்கம் போல மறைபொருளில் தாக்கினாள்.. மீனலோசனி மனதிற்குள் வெகுண்டாலும் விடாமல் தன் தாக்குதலைத் தொடர்ந்தாள்…
“இது அரண்மனை.. இங்கே மருமகளாக வருகிறதுக்கும் ஒரு தகுதியிருக்கனும்…”
விடாமல் தகுதியை நினைவூட்ட அவள் முயன்ற போது வித்யா ஒருநாள் சரியாக திருப்பிக் கேட்டு விட்டாள்..
“ஒருத்தரை மனதில் நினைத்துக்கிட்டு.. அடுத்தவர்களுக்கு கழுத்தை நீட்டத் துணியாத தகுதியிருந்தால் போதாதா…?”
இதற்கு மீனலோசனி என்ன பதிலைச் சொல்லுவாள்…?
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.