Chapter 13
நதியோரம் நடந்த போது..
நதிநீரில் முகம் பார்த்தேன்..
கலக்கமில்லா அந்தப் பால் முகத்தை..
வாழ்க்கையிலே எங்கே தொலைத்தேன்..?
-நதியோரம் நான் நடந்த போது-
சௌதாமினி கூறியதிலிருந்து வித்யா சுரேந்திரனின் காதலியைப் பற்றிய விவரங்களைக் கிரகித்துக் கொண்டாள்…
அவள் பெயர் நிவேதிதா தேவி.. மதன்பூர் ராஜாவின் இளைய மகள்.. அவளுக்கு மூத்த சகோதரனும்..
மூத்த சகோதரியும் இருக்கிறார்கள்.. அவர்கள் திருமணமானவர்கள்.. இவள் உலகத்தைச் சுற்றிப்
பார்க்கப் போகிறேன் என்று வெளிநாட்டு சுற்றுலாவிற்கு கிளம்பிப் போயிருக்கிறாள்.. போன இடத்தில் சுரேந்திரனைக் கண்டிருக்கிறாள்.. கண்டதும் காதல் வந்து விட்டது.. சுரேந்திரனிடம் சொல்லியிருக்கிறாள்..
அவன் அவளை விசித்திரமாகப் பார்த்திருக்கிறான்…
பழகிப் பார்த்து விட்டுப் பதில் சொல்லுகிறேன் என்ற சுரேந்திரனின் நிபந்தனைக்கு அவள் சரியென்று சொல்லியிருக்கிறாள்.. பழகிப் பார்த்ததில் சுரேந்திரனுக்கும் அவள்மீது காதல் ஏற்பட்டிருக்கிறது.. அவன் அவளிடம் காதல் சொல்லி விட்டு.. மணி முத்தாறு வீட்டிற்கும் சொல்லி விட்டான்…
இதைச் சொல்லி முடிப்பதற்குள் சௌதாமினி எதையெதையோ பேசி முடித்து விட்டாள்.. அவள் பேச்சுப் போகும் திசைகளெல்லாம் கூடவே போய் பேசி அவளை மீண்டும் சுரேந்திரனின் காதலைப் பற்றிய பேச்சுக்குள் இழுத்துவிட நரேந்திரன் பற்பல பகீரதப் பிரயத்தனங்களை செய்ய வேண்டியிருந்தது…
வித்யாவிற்கு அவன் நிலையைக் கண்டு சிரிப்பு வந்தது… அவள் அதை மறைத்தாலும் அவளின் கண்கள் அதைக் காட்டிக் கொடுத்து விட அதை கண்டு கொண்ட நரேந்திரனின் கண்கள் மின்னின…
“என் நிலையைப் பார்த்தா உனக்கு சிரிப்பு வருதா..?” அவளுக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுத்தான்…
“சிரிச்சேனா..? நானா..? அபாண்டமா பேசாதீங்க..” அவள் கண்களில் சிரிப்பு அதிகரித்தது…
“நம்ம ரூமுக்கு வாடி.. உனக்கு இருக்கு…”
அவனின் எச்சரிக்கையில் அவள் முகம் சிவந்தது..
‘இவனுக்கு இது ஒருசாக்கு..’ கள்ளச் சிரிப்புடன் அவனைப் பார்த்தாள்..
அவளின் அந்த முகச் சிகப்பில் நரேந்திரனின் உல்லாசம் அதிகரித்தது.. அவளின் மஞ்சள் கலந்த சந்தனத்தைப் போன்ற நிறத்தில் மயங்கிப் போனவனாக…
‘மஞ்சளழகி..’ என்று நினைத்துக் கொண்டான்…
“இஞ்சி இடுப்பழகி…
மஞ்சச் சிகப்பழகி…
கள்ளச் சிரிப்பழகி..
மறக்க மனம் கூடுதில்லையே…”
மாடியறைக்கு வந்தபின் அவளை அவனுடைய கை வளைவிற்குள் வைத்தக் கொண்டு அவன் பாடியபோது தன்னை மறந்து அவன் மார்பில் முகம் புதைத்த வித்யா லேசாக விம்மி விட்டாள்…
“என்னடி..?” பதறிப் போனவனாக அவள் முகம் நிமிர்த்திப் பார்த்தான் நரேந்திரன்..
“மறந்திர மாட்டிங்கள்ல..?”
வித்யாவின் முகம் தவிப்பை பிரதிபலித்தது.. என்னவோ நள்ளிரவில் கூடிய சங்க காலத்து தலைவனைப் பார்த்து தலைவி கேட்பதைப் போலக் கேட்டு வைத்தவளை என்ன செய்வது என்று தெரியாமல் ஆற்றாமையுடன் பார்த்தான் நரேந்திரன்…
“அறிவு கெட்டவளே..! நீ என் பெண்டாட்டிடீ…”
“அதுக்காக.. காதல் சொல்லக் கூடாதா..?”
“வித்யா.. நான் உன்னைக் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டவன்…”
“அந்தக் காதல் என்றென்றும் நிலைத்திருக்குமா..?”
அவளின் விழிகள் நீரில் மிதந்தன.. நரேந்திரனின் மனதில் கருணை சுரந்தது…
அவனுக்கு வித்யாவைத் தெரியும்.. பரிபூரணமாக அவளை அறிந்தவன் அவன்…
வித்யா யாரிடமும் யாசித்ததில்லை.. அவள் யாசிக்க மாட்டாள்.. ஒரு வகையான நிமிர்வு அவளிடம் எப்போதும் குடி கொண்டிருக்கும்.. இதழை மடித்து அவள் சிந்தும் சிறு புன்னகையில் சுயமரியாதை கலந்த கர்வம் கலந்திருக்கும்..
அவள் வணங்காமுடி.. நெருங்கிய தோழியான பூர்ணிமாவுடன் ஒரே வீட்டில் வசிக்க நேர்ந்த போது தங்குவதற்கும்.. சாப்பிடுவதற்குமான கட்டணத்தை மாதா மாதம் கொடுத்து வந்தாள்…
அப்படிப்பட்ட வித்யா.. அவனிடம் இறைஞ்சுகிறாள்.. அவளின் அந்தக் காதலில் அவன் மனம் மெழுகாக உருகியது…
‘இவளை மறந்து நான் உயிர் வாழ்வேனா..?’
நரேந்திரன் அவள் நெற்றியில் முத்தம் பதித்து அவளைத் தன் மார்போடு இறுக்கிக் கொண்டான்.. அவளின் மெல்லிய உடலின் நடுக்கத்தை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.. அந்த நடுக்கம் அவனுக்காக என்பதில் அவன் மனதில் எல்லையற்ற திருப்தியும்.. கர்வமும் உண்டானது…
இந்த திருப்தியையும்.. கர்வத்தையும்.. கார்த்தி-காயினியால் ஒருபோதும் கொடுக்க முடியாது என்பதை இவள் அறிவாளா என்று அவன் மனதிற்குள் கேட்டுக் கொண்டான்…
“மறக்குமோ மாமன் எண்ணம்..?
மயக்குதே பஞ்சவர்ணம்..
மடியிலே ஊஞ்சல் கட்ட..
வா.. நீ….”
அவளை மடியில் ஊஞ்சல் கட்டச் சொல்லிவிட்டு அவன் மடியில் ஊஞ்சல் கட்டினான்.. அதில் சாய்ந்தவளின் கூந்தலில் முகம் புதைத்த போது.. இந்த சுகத்திற்கு ஈடு இணை உண்டா என்று அவன் மனம் கேட்டது…
“நரேன்..” வித்யா தவிப்புடன் அழைத்தாள்…
“சொல்லுடி..” அவள் முகம் நோக்கிக் குனிந்தான் அவன்…
“இந்தப் பிரியம் என்னைக்கும் நிலைத்திருக்குமா..?”
எவ்வளவு சொல்லியும் திரும்பத்திரும்ப அந்த ஒன்றிலேயே நிற்பவளின்மீது நரேந்திரனுக்கு கோபம் ஏற்பட்டது.. எதற்காக அவள் அப்படி மறுகுகிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை.. அவள் அவனுடைய மனைவி.. அவளைவிட்டு அவன் பிரிவானா..? இல்லை அவள்மீது பிரியம் காட்டாமல்தான் இருப்பானா..?
‘இவள் ஏன் இப்படியே கேட்கிறாள்..?’
நரேந்திரன் முகம் மாறினான்.. அதைக் கண்ட வித்யாவின் மனம் பதறியது.. அவள் முகம் நோக்கிக் குனிந்தவனின் முகம் விலகப் போனதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை…
“நரேன்…”
வேகத்துடன் அவன் கழுத்தை அவள் கைகள் வளைத்தன.. அந்த வேகத்தில் அவன் திகைத்துப் போனான்.. அவள் முகம் நோக்கி இழுக்கப்பட்ட அவன் முகத்தில் அவள் முத்தங்களைப் பதித்தாள்.. அந்த ஆவேச முத்தங்களில் திணறிப் போனவன் அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.. அவளது மனதைக் குறித்த ஐயப்பாடு மறைந்து அவனுக்குள் மோகம் மூண்டது.. அந்த மோகத்துடன் அவள் மீது சரிந்தவனின் காதோரமாக வித்யா முணுமுணுத்தாள்…
“நீங்க எனக்கு மட்டும் தான் சொந்தம் நரேன்…”
“இல்லைன்னு யார் சொன்னது..?”
“எப்பவும் என் சொந்தமா மட்டும் இருப்பீங்களா..?”
“இல்லாமல் எங்கேடி போவேன்..?”
“எனக்கு உங்க சொத்து சுகம் வேண்டாம்…”
“எனக்கு அது தெரியுமே வித்யா..”
“உங்க ராஜ பரம்பரைங்கிற அந்தஸ்து வேணாம்..”
“இதை நீ சொல்லனுமா வித்யா..?”
“நீங்க மட்டும்தான் வேணும் நரேன்.. உங்க அன்பு மட்டும்தான் வேனும்.. உங்க காதலில் துளியளவு குறைந்தால் கூட நான் தாங்கிக் கொள்ள மாட்டேன்…”
இது என்ன வகையான பரிதவிப்பு என்று நரேந்திரன் தவித்துப் போனான்.. அவனால் வித்யாவின் தவிப்பினைக் காணச் சகிக்கவில்லை.. அவன் அவள் கைக்குள்தான் இருக்கிறான்.. மிக அந்தரங்கமாக அவர்கள் இருக்கிறார்கள்.. அந்தத் தருணத்திலும் அவள் மனதில் பாதுகாப்பில்லாத உணர்வு ஏற்படுகிறதென்றால் அவள் எதனால் பாதிக்கப் பட்டிருக்கிறாள்..?
அதைக் கேட்க அது சரியான நேரமல்ல என்பதை நரேந்திரனின் மனம் அறிவுறுத்தியது..
அதைக் கேட்க வேண்டுமென்றால் அவளை விட்டு அவன் விலக வேண்டும்.. அவள் இருக்கும் மனநிலையில் அந்த விலகலே அவளது தவிப்பை அதிகரித்து விடாதா..?
நரேந்திரன் நெருக்கத்தை அதிகரித்தான்.. அவள் பக்கம் நெருங்கினான்.. அவள் காதோரமாக தாபத்துடன் பாடினான்…
“பேசாமல் வா…
என் பக்கம் நெருங்கு..
கேட்காமல் தா..
தேன் முத்தம் வழங்கு…”
மன்மதனின் மலர் அம்புகளைத் தாங்கிய அவன் பாடல் அவள் காதினில் பாய்ந்தது.. அவள் பேச்சிழந்தாள்.. அவள் நெருங்க வேண்டிய அவசியமில்லாமல் அவன் அவளை நெருங்கினான்.. அவளிடம் கேட்காமல் அவனே முத்தங்களை வாரி வழங்கினான்…
வாரி வழங்கிய கொடை வள்ளலிடம் தேவைக்கு அதிகமாகவே பெற்றுக் கொண்ட வித்யாவின் மனதிலிருந்த கிலேசம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி மறைந்து விட்டது..
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.