Chapter 15

0Shares

நதியோரம் நடந்த போது..

கூடவந்த கார் மேகம்..

மழை பொழிய வேண்டி நின்றேன்..

மண்வாசம் நுகர நின்றேன்..

-நதியோரம் நான் நடந்த போது-

வரிசை கட்டி வந்து நின்ற வெளிநாட்டுக் கார்களின் அணிவகுப்பே மதன்பூர் ராஜகுடும்பத்தின் செல்வச் செழுமையை பறைசாற்றியது.. சுரேந்திரனுக்குப் பெண் கொடுக்கப் போகும் குடும்பத்தின் குடும்ப நிலைமையைக் கணிப்பதற்காக.. மாடியில் காத்திருந்து.. மறைந்திருந்து எட்டிப்பார்த்த மீனலோசனியின் 

விழிகள் விரிந்தன.. பிரபாவதிக்கு அப்படியெல்லாம் எதுவும் ஏற்பட வில்லையென்றாலும் அவள் முகத்தில் ஈயாடவில்லை…

“பிரபா…”

“அக்கா…”

“வந்திருக்கிறவங்க ரொம்பப் பெரிய இடம்தான் போல இருக்கே பிரபா…”

“அதை நினைத்தால்தான் எனக்கு பயமா இருக்குக்கா..”

“எதுக்கு இந்த பயம்..?”

“நாம என்னதான் ராஜ பரம்பரைன்னு சொல்லிக்கிட்டாலும் இவங்க பக்கத்தில் கூட நம்ம பிறந்த வீடு நிற்கவே முடியாது போல இருக்கேக்கா…”

“எனக்கும் அந்த எண்ணம்தான் பிரபா..”

“வருகிறவ நம்மை மதிப்பாளா..? மாட்டாளா..?”

மீனலோசனிக்கும் அதே எண்ணம்தான் என்றாலும்.. அவள் வேறு ஒன்றை நினைத்தாள்.. சிரித்தாள்…

“என்னக்கா.. சிரிக்கிறிங்க..?”

அவளது சிரிப்பிற்கான காரணத்தை அறியும் ஆவலுடன் பிரபாவதி கேட்டாள்…

எந்தவொரு இக்கட்டிலும் அதை மாற்றி.. மற்றவர்களை மாட்டி விடும் சாதுர்யம் படைத்த மீனலோசனி இப்போது எதை நினைத்துச் சிரிக்கிறாள்.. யாரை மாட்டி விட நினைக்கிறாள் என்று அவளுக்குத் தெரிய வேண்டாமா..?

மீனலோசனி அவளை ஏமாற்றவில்லை.. அவள் சொன்ன பதிலைக் கேட்ட பிரபாவதிக்கு ஆச்சரியம் உண்டானது.. அதை அவள் நினைத்தும் பார்க்க வில்லையே..

“ஏன் பிரபா.. நாம பெரிய குடும்பத்தில் பிறந்தவங்க.. அங்கே சுத்தி.. இங்கே சுத்தி.. இந்த மணிமுத்தாறு ராஜவம்சத்திலே பெண்ணெடுத்து.. பெண் கொடுத்து நாமும் ராஜ வம்சம்தான்னு சொல்லிக்கிறவங்க.. நமக்கே இந்த பயம் வந்தா.. வெறும் கையை வீசிக்கிட்டு வந்த அந்த வித்யாவின் கதி என்னவாகும்..?”

‘ஓ..! இப்படியொன்னு இருக்கில்ல…’

பிரபாவதி மீனலோசனியைப் பார்த்துச் சிரித்தாள்.. அவளுக்கு இது தோன்றவில்லையே…

அவளைச் சொல்லியும் குற்றமில்லை.. பிரபாவதி வளர்ந்த வளர்ப்பு அப்படி.. அவளுடைய அப்பா ராஜா ரகுநாதன் பெருந்தன்மையே வடிவானவர்.. அம்மா கோசலை தேவியோ அதிர்ந்து கூடப் பேச மாட்டாள்.. அண்ணன் பிரகாஷ் ரகுநாதன் நியாயத்திற்கு பெயர் பெற்றவன்.. நரேந்திரனின் கடைசித் தங்கையான பூர்ணிமா தேவியின் நியாய குணத்திற்காகவே அவளைக் காதலித்து.. காத்திருந்து.. கை பிடித்தவன்…

இப்படிப்பட்ட வீட்டில் பிறந்து வளர்ந்த பிரபாவதிக்கு சூது.. வாதை சொல்லிக் கொடுத்தவள் மீனலோசனிதான் அவளைச் சொல்லியும் குற்றமில்லைதான்.. அவள் வளர்ந்த வளர்ப்பு அப்படி…

அவளைப் பெற்ற தந்தையான துக்காராம் மணிமுத்தாறு அரண்மனையில் பெண் கொடுத்தே 

ராஜ வம்சத்தைச் சேர்ந்த வம்சமென்று சொல்லிக் கொள்ளும் பரம்பரையில் பிறந்தவர்.. அவருடன் 

பிறந்த சௌதாமினி தேவியை ராஜேந்திர பூபதிக்கு திருமணம் செய்து கொடுத்த போதே.. அவருடைய மகளையும் அந்தக் குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்து விடும் கனவுகளை வளர்த்துக் கொண்டவர்.. இத்தனைக்கும் அப்போது அவருக்கு திருமணமாகியிருக்கவில்லை…

காலப் போக்கில் அவரின் கனவுப்படியே மீனலோசனி பிறந்து.. தகப்பனின் கனவுகளை சுமந்து வளர்ந்து பெரியவளாகி மணிமுத்தாறு அரண்மனையின் வாரிசுகளில் ஒருவனைத் திருமணம் செய்யும் பருவத்திற்கு வந்த போது மகேந்திரனைக் காதலிக்கும்படி துக்காராம்தான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தார்..

“அம்மாடி மீனா.. இந்தப் பெரியவன் நரேந்திரன் இருக்கிறானே.. அவன் சுமைதாங்கிக் கல்லாய் 

பிறக்க வேண்டியவன்.. தப்பிப் போய் மணிமுத்தாறு அரண்மனையில் மூத்த மகனாய் பிறந்திருக்கான்.. எவனாவது கிரண்பூர் ராஜ வம்சத்துப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த சமஸ்தானத்துக்கு ராஜாவாகப் போகிற வாய்ப்பை வேண்டாம்ன்னு சொல்லுவானோ.. இவன் சொல்லியிருக்கான்.. 

இந்தப் பிழைக்கத் தெரியாதவனெல்லாம் உனக்கு வேண்டாம்..”

“சரிங்கப்பா…”

“யுகேந்திரனுக்கும் உனக்கும் ஒரே வயது.. அதனால் அவன் பக்கமும் நீ பார்வையைத் திருப்பாதே…”

“ஆகட்டும்ப்பா…”

“இந்த மகேந்திரன்தான் உனக்கேத்த ஜோடி.. பிழைக்கத் தெரிந்தவன்.. அவனைப் பிடித்துக்க…”

இப்படியாகத்தானே.. மணிமுத்தாறு அரண்மனையின் வாரிசுகளில் ஒருவனைக் கணக்குப் பண்ண மகளுக்கு கற்றுக் கொடுத்தார் துக்காராம்.. அவளும் தந்தையின் சொல்படி மகேந்திரனை தன் கைக்குள் கொண்டு வந்து விட்டாள்..

அப்போது தான் நரேந்திரனை அவளுக்கு மணமுடிக்கப் பெண் கேட்டாள் சௌதாமினி… துக்காராமும்…

“அதுக்கென்னம்மா.. உன் ஆசைப்படியே செய்துட்டால் போகுது..” என்று சொல்லி விட்டார்..

“அப்பா..” மீனலோசனி திகைத்த போது.. 

“பொறு மகளே.. இது ராஜதந்திரம்..” என்று மர்மமாகப் புன்னகை செய்தார்…

“என்னப்பா விசயம்..? எனக்கும் சொல்லுங்க..?” மீனலோசனி வற்புறுத்தினாள்..

“பாரும்மா.. நான் உன்னை மகேந்திரனைக் காதலின்னு சொன்னப்ப மணி முத்தாறு அரண்மனையில கடன் தொல்லை இருந்தது.. பேக்டரியும்.. மில்லும் பிரச்னையில் இருந்தது…”

“அதுக்காக..?” மீனலோசனி குழம்பினாள்..

“பெறும்மா.. நான்தான் சொல்லிக்கிட்டே வருகிறேனில்ல.. இப்ப அப்படியில்ல.. கடன் தொல்லை முடிஞ்சு.. அரண்மனையில பாலாறும்.. தேனாறும் பாய்ந்து ஓடிக்கிட்டு இருக்கு.. அதோடு அத்தனை பொறுப்பும் நரேந்திரனிடம் இருக்கு..”

“அதனால பெரியத்தானை நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்கிறிங்களா..?” என்று கேட்ட மீனலோசனி அதற்கும் தயாராகத்தான் இருந்தாள்..

“அது என்ன தேவைக்கு..? அவன் உழைப்பான்.. அவன் தம்பிகள் உட்கார்ந்து சாப்பிடுவாங்க.. நீயும் அவன்கூட தியாகச் செம்மலாகனுமா..? அதற்கா நான் மகளைப் பெற்றிருக்கேன்..?”

“இப்படிச் சொல்கிறவர் எப்படிப்பா இந்தக் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னீங்க..?” மீனலோசனிக்கு புரியவேயில்லை..

“அதுதான் சாணக்கியத்தனம்.. இங்கே பாரு மீனா.. நரேந்திரனுக்கும் பெண் கொடுக்க பெரிய பெரிய இடத்திலிருந்தெல்லாம் ‘நான்.. நீ’ன்னு போட்டி போடறாங்க.. அப்படி ஒரு இடத்தில அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டா யாருக்கு நஷ்டம்..?” அவர் மகளைப் பார்த்து கேட்டார்..

இந்தக் கேள்விக்கு அவளுக்குப் பதில் தெரியவில்லை..

“யாருக்குப்பா நஷ்டம்..?” என்று திருப்பிக் கேட்டாள்..

“ம்ஹீம்.. இத்தனை நாளாய் நான சொல்லிச் சொல்லி வளர்த்ததையெல்லாம் எப்படித்தான் மறக்கிறாயோ.. நமக்குத்தான் நஷ்டம் மீனா.. அதனால நாம என்ன செய்யனும் தெரியுமா..?”

“என்னப்பா செய்யனும்..?”

“நரேந்திரனின் கல்யாணத்தை தடுக்கனும்..”

“அது எப்படிப்பா முடியும்..? நாம மாட்டேன்னா அவருக்கு வேறு இடத்தில இருந்து உடனடியா பெண் பார்த்திர மாட்டாங்களா..?”

“அதைத்தான் தடுக்கனும்னு சொன்னேன் மீனா.. உடனடியாப் பெண் பார்க்க முடியாத சூழ்நிலைக்கு நரேந்திரனையும்.. அந்தக் குடும்பத்தையும் ஆளாக்கினா..?”

தகப்பனின் கேள்வியில் மீனலோசனியின் முகம் மலர்ந்தது..

“அப்பா..!”

அப்படித்தான் நரேந்திரனைச் சுற்றி சூழ்ச்சி வலை பின்னப் பட்டது… மீனலோசனி தன் விருப்பத்திற்கு மாறாக திருமணத்தை நிச்சயித்து விட்டார்கள் என்று திருமணத்திற்கு மூன்று நாள்கள் முன்னதாக மகேந்திரனைச் சந்தித்து அழுதாள்.. இத்தனை நாள்களாக என்ன செய்தாய் என்ற கேள்வியை அவன் கேட்டு விடாமலிருக்க.. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக பொய் கண்ணீர் விட்டாள்.. மகேந்திரன் இல்லாவிட்டால் செத்து விடுவாள் என்று தேன் இருந்த பாட்டிலைக் காட்டி ‘விசம்’ என்று கதை சொன்னாள்..

அதுவரை காதலி துரோகம் செய்து விட்டாள் என்ற கொதிப்பில் இருந்த மகேந்திரன் குளிர்ந்து விட்டான்.. அவனுக்காக உயிர் தியாகம் (!?) செய்ய இருந்த காதலியின் உண்மைக் காதலில் (!?) மெய் சிலிர்த்து விட்டான்.. அவர்களின் தெய்வீகக் காதலை உடைக்க நினைத்த நரேந்திரனின் மீது அவனின் கோபம் திரும்பியது.. மீனலோசனி அவ்வாறு திரும்பச் செய்து விட்டாள்..

“உங்க அண்ணன்தான் என்னைப் பெண் கேட்கச் சொன்னாராம்..”

“நிஜமாகவா சொல்கிற..?”

“ஆமாம் அத்தான்.. இத்தனைக்கும் நம்ம காதலைப் பற்றி அவரிடம் ஜாடைமாடையாய் அப்பா சொன்னாராம்..”

“அதைக் கேட்டுமா.. அண்ணன் மனம் மாறவில்லை..?”

“அதுக்குப் பின்னாலேதான் இந்தக் கல்யாணத்திலே உறுதியாய் நின்னாராம்…”

“அப்படியா சொல்கிற..?”

“ஆமாம் அத்தான்.. நான் நினைக்கிறேன்.. அவருக்கு உங்க மேல பொறாமை.. வந்திருக்கும்ன்னு..”

“அது எதுக்கு…?”

“என்ன அத்தான் இப்படிக் கேட்டுட்டிங்க..? அவர் காதலில் தோற்றவர்.. நாம் காதலித்தா அவரால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியுமா..? நம்ம காதலை ஜெயிக்க அவர் விடுவாரா..?”

“மீனா…”

“ஆமாம் அத்தான்.. அவர் மனதில் விசம் இருக்கிறது.. அது உங்களுக்குப் புரியவில்லை.. வெளுத்ததெல்லாம் பால்ன்னு இருக்கறிங்க…”

“இப்பவே அண்ணனிடம் போய் கேட்கிறேன் பார்..”

“வேண்டாம்.. வேண்டாம்.. நமக்கு காரியம் முக்கியம்.. நாம் வேண்டும்ன்னா ஊரை விட்டு ஓடிறலாமா..? நீங்க மணிமுத்தாறு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவங்க.. உங்க கல்யாணம் ஓடிப் போய் நடக்கிற கல்யாணமா ஆகிடனும்னு உங்க அண்ணன் சதி செய்துட்டாரே அத்தான்.. அவருக்கு மட்டும் ஊர்பார்க்க அரண்மனையில் கல்யாணம் நடக்கும்.. உங்களுக்கு ஒளிஞ்சு மறைஞ்சு கல்யாணமா..? ராஜா ராஜேந்திர பூபதியின் மகனுக்கு மணிமுத்தாறு அரண்மனையில் கல்யாணம் செய்து கொள்கிற உரிமை இல்லையா..?”

“ஏன் இல்லை..? இப்போச் சொல்கிறேன் மீனா.. அதே அரண்மனையில் குறித்த முகூர்த்தத்தில் ஊர் பார்க்க உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும்.. நான் நடத்திக் காட்டுகிறேன்…”

மீனலோசனி ஜெயித்து விட்டாள்.. மகேந்திரன் சொன்னதைச் செய்து விட்டான்…

0Shares

Reviews – Nathiyoram / நதியோரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link