Chapter 17
நதியோரம் நடந்த போது
நிலவின்மீது ஆசை கொண்டேன்..
நான் தேடிச்சென்ற அந்தநாளில்..
அம்மாவாசை வந்ததும் ஏன்…?
-நதியோரம்.. நான் நடந்த போது-
“நாமளும் அத்தை கூடச் சேர்ந்து கீழே நின்றிருந்தா வந்தவங்களை கை கூப்பி வாங்க..
வாங்கன்னு அழைக்கனுமில்ல…? அது என்ன தேவைக்கு..?”
“ஓ… சரியாச் சொன்னிங்கக்கா.. வருகிறவங்க என்னதான் மதன்பூர் ராஜவம்சம்ன்னாலும் நாம
இந்த அரண்மனைக்கு மூத்த மருமகள்களாய் வந்த வங்களாச்சே..”
“அதேதான்.. அதனாலதான் முதலிலேயே கீழே போகலை..”
“ஆனா அந்த வித்யா அத்தை கூட நின்னு சலாம் போட்டுக்கிட்டு இருப்பாளே…”
“அது அவ தலைவிதி… நம்ம தலைவிதியே வேற.. அவங்க உள்ளே வந்து ஹாலில் உட்காரனும்.. நாம ஒய்யாரமா மாடிப்படியில் இறங்கனும்..”
“அது எதுக்குக்கா…?”
“அப்பத்தானே வந்திருக்கிறவங்க நம்மை திரும்பிப் பார்ப்பாங்க…?”
மீனலோசனியின் அறிவுக் கூர்மையை நினைத்து வியந்து வியந்து பிரபாவதிக்கு தலைவலியே வந்துவிட்டது..
“போதும்க்கா.. இனித் தாங்காது..”
“இதுக்கே தாங்காதுன்னா.. இன்னும் நிறைய இருக்கே பிரபா..”
“இன்னுமா…? இப்பவே எனக்கு கண்ணைக் கட்டுதுக்கா..”
“கண்ணைச் சிமிட்டிக்கோ… இந்நேரம் கீழே எல்லோரும் உட்கார்ந்திருப்பாங்க.. அந்த வித்யா வேலைக்காரியைப் போல வந்தவங்களுக்கு ஜீஸ் கொடுமுத்துக்கிட்டு இருப்பா.. நாம மாடியிறங்க இதுதான் நல்ல சமயம்…”
மீனலோசனி சொன்னதைப் போல்தான் நடந்தது.. அவர்கள் மாடியிறங்கியபோது.. ஹாலில் அமர்ந்திருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்…
“இதுதான் என் இரண்டாவது மருமகள்.. மீனலோசனி..”
சௌதாமினி அறிமுகத்தை ஆரம்பித்து வைக்க.. ரகசியமாக பிரபாவதியைப் பார்த்த மீனலோசனி கிசுகிசுப்பாக…
“எப்படி..?” என்று கேட்டுவிட்டு கண் சிமிட்டினாள்..
பிரபாவதி பதில் சொல்லாமல் வந்திருந்தவர்களை பார்வையிட்டாள்… பெரிய மீசையுடனும் நரை முடியுடனும் இருந்த மிடுக்கான பெரியவர்தான் மதன்பூர் ராஜாவான கங்காதர் ராவ் என்று பிரபாவதியின் காதோரமாக மீனலோசனி கூறினாள்.. அவளுடைய மனைவி காயத்ரி தேவியென்ற கூடுதல் தகவலையும் சேர்த்துக் சொன்னாள்..
“பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறது அவருடைய மகனாம்.. பெயர் கௌதம் ராவாம்…”
அடுத்த தகவல் பறந்து வர.. இவளும் நம்மோடுதானே இருந்தாள் இந்த விவரமெல்லாம் இவளுக்கு எப்படித் தெரிந்து என்ற மலைப்பு பிரபாவதியின் மனதில் எழுந்து தொலைத்தது..
“அவதான் நிவேதிதாவோட அக்காவாம்.. பெயர் ஸ்வாதிகா தேவியாம்..”
மீனலோசனி கண்ணால் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தபோது அந்த ஸ்வாதிகா அமைதியான நதியைப் போல அமர்ந்திருந்தாள்..
‘இவளுக்கு இப்படியொரு அக்காவா..!’ பிரபாவதிக்கு ஆச்சரியமாக இருந்தது..
அது எப்படி அமைதியான நதியைப் போன்றவளும்.. ஆர்ப்பாட்டமான அருவியைப் போன்றவளும் கூடப் பிறந்தார்கள்..?
நிவேதிதாவைப் பாராததைப் போல இவர்கள் பார்க்க அவளோ.. அவர்களைப் பார்ப்பது கூட தகுதி குறைவான செயல் என்பதைப் போல அலட்சியத்துடன் முகம் திருப்பிக் கொண்டாள்…
“என்ன திமிர்…” பிரபாவதிக்கு பற்றிக் கொண்டு வந்தது..
“விடு பிரபா.. இப்ப நமக்கு இது முக்கியமில்ல.. இவகிட்ட வித்யா மாட்டனும்… அதுதான் முக்கியம்..”
நிவேதிதா வித்யாவையும் மதிக்கவில்லை.. ஆனால் வித்யா அதைப் பொருட்படுத்தவில்லை.. உன்னையும் உன் வீட்டினரையும் உபசரிப்பது என் கடமை.. அதைத்தான் செய்கிறேன் என்ற ரீதியில்
அவள் உள்ளே போய்விட்டாள்.. மதிய விருந்தின் போதும் அப்படித்தான்.. வித்யா பரிமாற முனைந்த
போது நிவேதிதா எரிச்சலை அப்பட்டமாக முகத்தில் காட்டிக் கையை நீட்டி தடுத்தாள்.. வித்யா ஏனென்று
கூடக் கேட்கவில்லை.. சட்டென்று அவள் பக்கத்தில் இருந்த ஸ்வாதிகாவின் தட்டில் பரிமாறிவிட்டு நகர்ந்து விட்டாள்..
விருந்தினர்கள் மாலை வரை இருந்தார்கள்.. அரண்மனையைச் சுற்றிப் பார்த்தார்கள்.. பேக்டரிக்கு
போய் வந்தார்கள்.. கிளம்பும் போது.. கங்காதர்ராவ் சௌதாமினியைப் பார்த்து
“நீங்க எப்ப மதன்பூர் வருகிறீங்க..?” என்று கேட்டார்….
“சம்பந்தி.. இதை என் பெரிய மகன்தான் முடிவு செய்யனும்..” சௌதாமினி சொன்னாள்..
நிவேதிதாவின் முகம் சுருங்கியது..
“வாட் இஸ் திஸ் டாட்…” என்று கங்காதர்ராவின் முகம் பார்த்தாள்..
“என்னம்மா…?”
“இவங்கதானே சுரேனைப் பெற்றவங்க… இவங்க முடிவு சொல்லாம.. எதுக்காக சுரேனின் அண்ணனை இதில் இன்வால்வ் பண்றாங்க…?”
மீனலோசனியின் முகத்தில் பல்ப் எரிந்தது..
“சபாஷ் பிரபா..” என்று கொழுந்தனின் மனைவியிடம் குதூகலித்தாள்..
“சபாஷ் மீனான்னுதான் ஒரு பழைய படம் இருக்குன்னு என் பாட்டி சொல்லியிருக்காங்க..” பிரபா நொடித்தாள்
“அதை விடு பிரபா.. நடக்கிறதை கவனி…”
“கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்…”
“இந்த மதன்பூர் பொண்ணு மணி முத்தாறு அரண்மனையை தலைகீழாய் மாற்றிடும் போல இருக்கே..”
“மாற்றம் ஒன்று தானேக்கா மாற்றமில்லாதது…”
“எப்பேர்பட்ட வார்த்தைகள்.. எதற்காக பயன்டு- துன்னு பார்த்தியா..”
மீனாவின் கிண்டலில் பிரபா அவளை முறைத்தாள்.. நிவேதிதாவின் கேள்வியில் சுரேந்திரன் அவளை முறைத்தான்.. எதையோ பேசப் போனவனை பார்வையாலேயே தடுத்த சௌதாமினி இளைய மருமகளாக வரப்போகிறவளிடம் மென்மையாக முறுவலித்தாள்…
“இந்த வீட்டில் எல்லாமே நரேந்திரன்தான்ம்மா.. நான் பெற்றவளாக இருக்கலாம்.. வளர்த்ததெல்லாம் அவன்தான் அவன் அண்ணன் மட்டுமில்லை.. தாயுமானவன்.. அதனால அவன் சொல்படிதான்
இங்கே எல்லாமே நடக்கும்…”
“எல்லாமேன்னா..?” நிவேதிதா புருவங்களை உயர்த்த சௌதாமினிக்குப் பதிலாக சுரேந்திரன் பேசினான்..
“எல்லாமேன்னா.. எல்லாமும்தான் நிவி…”
“நம் கல்யாணமும் இதில் அடங்குமா சுரேன்…?”
“ஷ்யூர்…”
அழுத்தமான சுரேந்திரனின் பதிலில் நிவேதிதாவின் முகம் மாறியது..
“சப்போஸ்.. உங்க அண்ணன் நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னா…?”
நிவேதிதாவின் கேள்வியை கங்காதர்ராவே விரும்பவில்லை.. அவர் முகம் சுளித்து மகளை அதட்டினார்..
“என்ன நேரத்தில் எதைப் போசற நிவேதா..?”
“டாட்.. இவர் என்னைக் காதலிக்கிறவர்..”
“ம்ப்ச்.. பெரியவங்க பேசும்போது நீ அமைதியாய் இருக்க கற்றுக் கொள்.. ஸ்வேதிகாவைப் பார்த்தாவது
நீ தெரிந்து கொள்ள வேண்டாமா…?”
வித்யாவிற்கு அங்கே நிலவிய பேச்சு சங்கடத்தைத் தந்தது.. நரேந்திரன் அங்கே இல்லை.. அவசர வேலையென்று திருநெல்வேலி வரை போயிருந்தான்..
‘நல்ல வேளை.. அவர் முன்னால் இந்தப் பேச்சு நடக்கலை..’ வித்யா ஆறுதல் பட்டுக் கொண்டாள்…
“என்னையே சொல்லாதீங்க டாட்.. இன்றைக்கு நாம் வருகிறோம்ன்னு இவரோட அண்ணனுக்குத் தெரிந்திருக்குமில்லையா…? அப்படியிருந்தும் அவர் இங்கே இல்லை.. அவர் வந்து முடிவு சொல்கிற
வரைக்கும் நாம காத்திருக்கனுமா..?”
கங்காதர் ராவும் அதை மனதிற்குள் குறித்து வைத்திருந்தார்.. அவரின் கண்பார்வை படுவதற்காக எத்தனையோ கோடிஸ்வரர்கள் காத்திருக்க அவர் நரேந்திரனைச் சந்திப்பதற்காக மதன்பூரிலிருந்து கிளம்பி மணி முத்தாறுக்கு வந்திருக்கிறார்.. அப்படி வந்தவரை வரவேற்க நரேந்திரன் அங்கே இல்லையென்றால் அதற்கு என்ன அர்த்தம்…?
அதை அவர் வெளியே சொல்லி விட முடியாது.. அவரது உயரத்திற்கு அது அழகல்ல..
“நிவேதிதா.. அவருக்கு அவசர வேலை இருந்திருக்கலாம்..”
அவரின் தன்மையான பேச்சில் சுரேந்திரனின் கோபம் கொஞ்சம் குறைந்தது..
“அப்சல்யுட்லி யு ஆர் ரைட் அங்கிள்.. அண்ணன் மிக முக்கியமான அவசர வேலைக்காக திருநெல்வேலி வரைக்கும் போயிருக்கிறார்.. இப்போது வந்துவிடுவார்..”
“எப்ப சுரேன்.. அப்பாவும்.. நாங்களும்.. கிளம்பிப்போய் மதன்பூரில் ரீச் ஆனபின்னாலா..?”
“நிவி.. நான் உன் அப்பாவுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்..”
“ஊடே நான் பேசக் கூடாதுன்னு சொல்கிறிங்களா..?”
“தெரிந்தால் சரி…”
“வெரிகுட்… வி ஆர் லவ்வர்ஸ்.. குட் ஜோக்..”
சௌதாமினிக்கும் அதே கவலைதான்…
சுரேந்திரனும் நிவேதிதாவும் காதலர்கள்… ஆனால் அவர்களின் மோதல் அந்தக் காதலைச் சொல்லவில்லையே..
அந்த நேரத்தில் நரேந்திரன் அங்கேயிருந்தால் தேவலையென்று அவள் மனம் சோர்ந்தது.. அவள் மனது சென்று தூது சொல்லியதைப் போல நரேந்திரன் வந்து சேர்ந்து விட்டான்…
“அதோ நரேந்திரனே வந்து விட்டானே..” சௌதாமினி உற்சாகமானாள்..
“பெரிய பில்ட் அப்தான்..”
நிவேதிதா வாய்க்குள் முணுமுணுத்ததை மீனலோசனி கண்டுபிடித்து பிரபாவதியின் காதோடு சொன்னாள்.. நிவேதிதாவின் நரேந்திரனின் மீதான எதிர்ப்புணர்வு குறித்து அவர்களுக்குள் சந்தோசம் ஊற்றெடுத்தது..
நரேந்திரன் அவசரமாக உள்ளே வந்து கங்காதர்ராவிடம் கை குவித்து வணக்கம் சொன்னான்…
“ஐ ஆம் ஸாரி.. உங்களை வரவேற்க இங்கே இருக்க முடியாமல் போய் விட்டது.. தவிர்க்க முடியாத அவசர வேலை..”
அவன் வருத்தம் தெரிவித்த விதத்தில் கங்காதர்-ராவுக்கும் அவரின் குடும்பத்திற்கும் அதுவரை மனதிலிருந்த எரிச்சல் உணர்வு மறைந்து ஓடிவிட்டது.. நிவேதிதாவின் மனதிலிருந்து மட்டும் அது ஓடவில்லை..
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.