Chapter 20
நதியோரம் நடந்தபோது…
பூவாசம்தான் நுகர்ந்தேன்…
பூவைத் தேடிச் சென்றபோது…
முள்வேலிதான் கண்டேன்…
-நதியோரம் நான் நடந்த போது-
“இருக்கட்டும் நிவேதா… நான்தான் பேசினேன்.. இப்ப என்ன அதுக்கு…? நாம இரண்டு பேரும்
ஒரே அரண்மனையில் வாழப் போகிறவங்க.. இதில யார் முதலில் பேசினா என்ன..?” திரும்பவும் சமாளித்தாள் மீனலோசனி..
“இல்லையே.. பாகப்பிரிவினை நடந்துட்டதா சுரேன் சொன்னாரே.. நீங்கதான் உங்க பங்களாவுக்கு போகாம அரண்மனையிலேயே ஸ்டே பண்ணியிருக்கீங்களாமே..” விடாமல் மீனலோசனியின் மூக்கை உடைத்தாள் நிவேதிதா…
“பாரு நிவேதிதா…”
“நீங்க என்ன சுரேனா…? நான் உங்களைப் பார்த்து என்னங்க ஆகப் போகுது…?”
“என்னைப் பார்த்து எதுவும் ஆகாமல் போகலாம்.. ஆனா நான் பேசுகிறதைக் கேட்டா உனக்கு நிறைய விசயங்கள் புரியும்…”
“ஓ.. எனக்கு அப்படியெதுவும் புரியத் தேவையில்லை..”
அலட்சியத்துடன் நகர முற்பட்ட நிவேதிதாவின் கையைப் பிடித்து நிறுத்தினாள் மீனலோசனி..
“அப்படிச் சொல்லிட்டா எப்படி நிவேதிதா.. உன் சுரேன் எதுக்காக எங்கேஜ்மென்டை வேண்டாம்ன்னு சொன்னாருன்னு உனக்கு தெரிய வேண்டாமா…?”
“அவருக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம்.. இல்லைன்னா உங்க அரண்மனையில அது வழக்கத்தில் இல்லததா இருக்கலாம்…”
“யார் சொன்னது…?”
“வாட்…?”
“யெஸ்.. சுரேனுக்கு எங்கேஜ்மென்ட் பங்சன்னா பிடிக்கும்.. எங்க அரண்மனையிலயும் எங்கேஜ்மென்ட் நடத்துகிற வழக்கமுண்டு…”
மீனலோசனியின் விழிகளில் ஏதோரகசியம் தெரிய நிவேதிதாவின் பார்வை கூர்மையாகியது..
“இப்ப என்னதான் சொல்ல வருகிறிங்க…?”
“ஆ.. அப்படிக் கேளு.. சுரேன்.. எங்கேஜ்மென்டை அவாய்ட் பண்ணுகிறதுக்குக் காரணம் வித்யா..!” மர்மக் குரலில் சொன்னாள் மீனலோசனி…
“ஏன்..?” நிவேதிதாவின் முகம் மாறியது…
“ஏன்னா அந்த வித்யா சுரேனின் முன்னாள் காதலி..” நிதானமாச் சொன்னாள் மீனா..
“ஸ்டுப்பிட்..” நிவேதிதா சீறினாள்…
“இதை யாரிடம் வேண்டும்னாலும் கேளு.. அவங்க உண்மையைச் சொல்லுவாங்க… வெளிநாட்டுப் படிப்பை பாதியிலேயே விட்டுட்டு வித்யாவை கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக இந்தியாவுக்கு வந்தார் சுரேன்…”
“ஐ கான்ட் பிலிவ் திஸ்…”
“நம்பலைன்னா யாரிடம் வேணும்னாலும் இதைக் கேட்டு கன்பர்ம் பண்ணிக்க… வித்யா சுரேனை வேண்டாம்ன்னு சொல்லிட்டா…”
இதைச் சொல்லும்போது மீனலோசனியின் குரலிலும் மனதிலும் குரூரம் நிறைந்திருந்தது..
‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்பது இதுதானா…?’ அவள் மகிழ்ந்து போனாள்…
‘இந்த நிவேதிதாவிற்கு என்ன திமிர்…! இவ திமிரையும் அடக்கலாம்.. அந்த வித்யாவிற்கு எதிரா இவளைத் திருப்பலாம்.. ஆஹா என்ன ஒரு சான்ஸ்..’
கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டாள் மீனலோசனி… அதுவரை அலட்சியமாக இருந்த நிவேதிதாவின் குரலில் தீவிரம் வந்திருந்தது..
“நீங்க சொல்கிறது உண்மையா…?”
“நூற்றுக்கு நூறு உண்மை.. சுரேன்.. வித்யாவைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டார்.. இதை எங்க அத்தையிடமும் சொன்னார்…”
“வாட்…? சுரேனின் அம்மா என்ன சொன்னாங்க…?”
“வித்யாவை சுரேனுக்காக பெண் கேட்டாங்க…”
நிவேதிதாவின் விழிகள் சிவந்து விட்டன.. அவர் கண்களின் ஜீவலிப்பில் மீனலோசனியே அயர்ந்து விட்டாள்…
‘என்னடா இது.. வடக்கே பிறந்ததினால இவ ஜான்ஸி ராணியைப் போலவே முழிச்சு வைக்கிறாளே….’
“அப்புறம் எதற்காக மேரேஜ் நடக்கலை…?”
“அதைத்தான் சொன்னேனே.. வித்யா சுரேனை வேண்டாம்ன்னு சொல்லிட்டா…” நிவேதிதாவின் முகத்தை ஆராய்ந்தபடி சொன்னாள் மீனலோசனி..
‘ஆப்டர் ஆல்.. அந்த வித்யா வேண்டாம்ன்னு சொன்ன சுரேந்திரனை நான் துரத்தித் துரத்தி காதலித்தேனா…’ நிவேதிதாவின் முகம் பயங்கரமாக மாறியது..
‘கொதிக்குதா.. இருடி.. இன்னும் கொஞ்சம் சூட்டைக் கிளப்பறேன்…’
“வித்யா நரேந்திரனைத்தான் காதலித்தாளாம்… அதைக் கேட்ட சுரேன் திரும்பவும் வெளிநாட்டுக்கே போயிட்டார்.. இந்தியா பக்கமே தலை வைத்துப் படுக்கலை..” மீனலோசனி கதையளக்க..
“ஏங்க.. அவர் பாரினில் எந்தப் பக்கம் தலை வைத்துப் படுத்தார்ன்னு நீங்க போய் பார்த்துவிட்டு வந்தீங்களா…?” கடுப்புடன் கேட்டாள் நிவேதிதா…
“ஹி.. ஹி.. சும்மா ஒரு பேச்சுக்கு சொல்கிறதுதான்.. அசடு வழிந்தாள் மீனா…”
“அவர் படிக்க பாரின் போனால் நீங்களா கதை சொல்வீங்களா…?” நிவேதிதாவிடம் பழைய நிமிர்வு வந்திருந்தது..
“முதலிலேயும் படிக்கத்தானே போனார்…? ஏன் பாதியிலேயே விட்டுவிட்டு வந்தார்…?” எதிர் கேள்வி கேட்டாள் மீனலோசனி..
“இதுக்கு என்ன காரணம் சொல்லப் போகிறிங்க..?”
“இருக்கே.. காரணம் இருக்கே.. மணிமுத்தாறிலே பெரியத்தான் கூட வித்யாவிற்கு கல்யாணம் நடந்து விட்டது…”
“ஸோ…?”
“அவர் மனசிலிருந்த வித்யாவை அண்ணியாகப் பார்க்க சுரேனுக்கு சகிக்குமா…?”
“சசிக்கலை”
“உங்களுக்கு மட்டும்தானா.. எங்களுக்கும்தான் சகிக்கலை…”
“நான் நீங்க சொல்கிற கதையைச் சொன்னேன்..”
விர்ரென்று அங்கிருந்து விலகி நடந்து விட்டாள் நிவேதிதா.. போகிற போக்கில் அவள்
உடைத்து விட்டுப் போன மூக்கை தடவிப் பார்த்துக் கொண்டாள் மீனலோசனி…
‘நான் நினைத்ததை விட இவ கெட்டிக்காரியாய் இருக்கிறாளே.. எதுக்கும் இவகிட்ட ஜாக்கிரதையாய் இருந்து வைத்துக்கனும்…’
நிவேதிதாவை கலங்கடிக்க வைக்க முடியாத சோகத்துடன் மீனலோசனி மகேந்திரனைத் தேடிப் போய்விட நிவேதிதா சுரேந்திரனைத் தேடினாள்.. அவன் நரேந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தான்..
அருகே வித்யா நின்று கொண்டிருந்தாள்.. நிவேதிதா பார்த்த நேரம் பார்த்து நரேந்திரன் கங்காதர்ராவுடன் எதையோ பேசச் சென்றுவிட சுரேந்திரனும்… வித்யாவும் அருகருகே நின்று கொண்டிருந்தார்கள்…
சுரேந்திரன் எதையோ கேட்க.. இயல்பாக அவன் முகம் பார்த்துப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் வித்யா.. அதைக் கண்ட நிவேதிதாவின் மனதில் புயல் அடித்தது..
‘ஓ.. இதனால்தான் நான் காதல் சொன்னபோது இவன் உடனே ஓகே சொல்லவில்லையா…?’
நிவேதிதா வித்யாவை முறைத்தபடி சுரேந்திரனிடம் போனாள்…
“ஒன் மினிட் சுரேன்…”
“வாட் இஸ்தி மேட்டர் நிவி…?”
“அதை இங்கேதான் சொல்லனுமா…?”
நிவேதிதா வித்யாவை தீர்க்கமாகப் பார்க்க.. அவள் குறிப்பறிந்தவளாக நகரப் போனாள்.. அவளை சுரேந்திரனின் குரல் தடுத்து நிறுத்தியது..
“வெயிட் அண்ணி.. நீங்க எங்கே போகிறிங்க…?”
“உங்க வுட்பி உங்களிடம் தனியே பேச வந்திருக்காங்க சுரேன்…” தயக்கத்துடன் சொன்னாள் வித்யா…
“தனியே நிறைய பேசியாகிவிட்டது.. அதோடு இது லவ்வர்ஸ் பார்க் இல்லை.. வீடு.. இங்கே குடும்பத்தோடு நான் வந்திருக்கிறேன்.. இப்ப ரகசியப் பேச்சு தேவையில்லாதது.. நீங்க இருங்க….”
வித்யாவிற்கு தர்மசங்கடமாகி விட்டது.. நரேந்திரன் வந்து விட்டால் தேவலை என்ற தவிப்புடன் அவன் போன திசையைப் பார்த்தாள்.. அவன் வருகின்ற வழியைக் காணோம்.. நிவேதிதாவோ கொதித்துப் போயிருந்தாள்.. வித்யாவின் முன்னிலையிலேயே நிவேதிதாவுடன் தனிமையில் பேச சுரேந்திரன் மறுத்ததில் அவளின் கொதிப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது.. அவனோ அதைக் கண்டு கொள்ளாமல் சாவதானமாய் அவளின் முகம் பார்த்து..
“சொல்லு நிவி…” என்றான்…
“நத்திங் சுரேன்…” நிவேதிதா விலகி நடந்து விட்டாள்…
“திங் இஸ் நாட் ஃபேர் சுரேன்.. அவங்க கோபமாப் போகிறாங்க..” வித்யா கவலையாகச் சொன்னாள்…
“போகட்டும் அண்ணி.. இது முதல் தடவையில்லை.. அவளின் குணமே இதுதான்.. நினைத்தது நடக்கனும்னு எதிர்பார்ப்பா..”
“அது தப்பில்லையே…”
“அவ நினைப்பின்படி என்னை வளைக்க நினைக்கிறது தப்பு…” சுரேந்திரன் கடினமான குரலில் சொன்னாள்..
‘என்ன மாதிரியான காதலர்கள் இவர்கள்…’ வித்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை…
சுரேந்திரனுக்கு நிவேதிதாவின் மீது அதீதக் காதல் இருப்பதைப் போலத் தெரியவில்லை.. நிவேதிதாவின் விழிகளிலோ ஒரு தீயின் ஜ்வாலை தெரிந்து கொண்டே இருந்தது.. அது வித்யாவைக் கண்டால் அதிகமானது.. அது எதற்காக என்றும் வித்யாவிற்குத் தெரியவில்லை..
நிவேதிதா கோபமாக போன பின்னாலும் சுரேந்திரனின் பக்கத்தில் நின்றால் நன்றாக இருக்காது என்ற நினைவுடன் அவள் சௌதாமினியிடம் போய் நின்று கொண்டாள்.. அவளிடம் பேசியபடி யதேச்சையாக தோட்டத்தின் பக்கம் பார்த்த வித்யாவிற்கு தூக்கி வாரிப் போட்டது…
அங்கே ஒரு செடி மறைவில் நரேந்திரன் யாரோ ஒரு பெண்ணுடன் நின்று பேசிக் கொண்டிருந்தான்.. வித்யா நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அவர்களை அவளால் தெளிவாகப் பார்க்க.. முடிந்தது.. மற்றவர்களின் பார்வைக்கு அது மறைவான இடமாக இருந்தது..
நரேந்திரனுடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணை எங்கேயோ பார்த்திருப்பதைப் போல வித்யாவிற்குத் தோன்றியது..
‘யாராய் இருக்கும்…?’
வித்யா நினைவுக் குவியல்களின் இடையே தேடிப் பார்த்துக் கொண்டிருந்த போது அந்தப் பெண் நரேந்திரனின் தோளில் சாய்ந்து விட்டாள்.. வித்யாவின் காலடியில் பூமி நழுவிய போது அவளுக்கு அந்தப் பெண் யாரென்று நினைவுக்கு வந்து விட்டது…
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.