Chapter 25
நதியோரம் நடந்த போது..
நான் நடக்க கரம் கொடுத்தாய்..
உன் கைபிடித்து நடந்து வந்தால்..
கரம் விலக்க ஏன் முனைந்தாய்..?
-நதியோரம் நான் நடந்த போது-
வெள்ளைக்காரர்களின் சிந்தாந்தமான வெளிப் படையான நடவடிக்கைகளைப் பற்றி வித்யா படித்திருக்கிறாள்.. அவர்கள் ரகசியம் பேண மாட்டார்கள்.. அதற்குக் காரணம்.. அவர்கள் வெளிப்படையான.. ஒளிவு மறைவில்லாத.. கள்ளம்.. கபடமில்லாத நடவடிக்கைகளை உடையவர்கள் என்பதல்ல.. அவர்களைப் பற்றி அறியும் எதிரிகளால் அவர்களை என்ன செய்து விட முடியும் என்ற ஆணவம்தான் அதற்குக் காரணம்…
அதைப் போலவே நரேந்திரனின் செயல்பாடும் இருந்தது… கார்த்திகாயினி தேவியின் பெயரை அவன் வெளிப்படையாக அவன் போனில் பதிவு செய்திருந்தான்.. அவளிடமிருந்து போன் வந்தால் அந்தப் பெயரை வித்யா பார்த்து விடக் கூடுமே என்ற பயமின்றி செயல்பட்டான்.. வித்யாவின் கண் முன்னாலேயே.. போனில் பேசியபடி பால்கனிக்குப் போய் கதவை அடைத்துக் கொண்டான்.. இப்போது அத்தனைக்கும் சிகரமாக.. அவனிடம் பேசுவதற்காக கார்த்திகாயினி போன் பண்ணிய போது.. வித்யா எதற்காக அதை எடுத்துப் பேசினாள் என்று கேள்வி வேறு கேட்கிறான்…
‘நாராயணா.. இதுதான் உன் விளையாட்டா..?’ துக்கத்துடன் மனதுக்குள் கேட்டுக் கொண்டாள் வித்யா..
“நீங்க குளித்துக்கிட்டு இருந்தீங்க.. அதோட.. உங்க போன்காலை நான் அட்டெண்ட் பண்றது சகஜம்தானே.. இது முதல் தடவையில்லையே…”
அவளின் பதிலில் நரேந்திரன் முகம் சுளித்தான்.. அவனின் அந்த முகச் சுளிப்பில் வித்யாவின் மனம் சுக்கு நூறாக உடைந்தது.. அவன் முகம் பார்க்காமல் ஒட்டுதல் இல்லாத குரலுடன்…
“இதுவரைக்கும் நீங்க அதை ஆட்சேபித்ததில்ல.. இதைப்போல கேள்வியும் கேட்டதில்ல..” என்றாள்…
“ம்ப்ச்.. கூடக்கூடப் பேசாதே.. மத்த போன்களும் இந்த போனும் ஒன்றா…? பெயரைப் பார்த்ததும் இந்த போனை அட்டெண்ட் பண்ணக்கூடாதுன்னு உனக்குத் தெரிந்திருக்க வேணாமா..? பேஸிக் மேனர்ஸ் கூட இல்லையா…?”
வித்யா விக்கித்துப் போனாள்.. தீயினால் சுட்ட புண்ணைவிட நாவினால் சுடப்பட்ட புண்ணுக்கு ரணமும்.. வலியும் அதிகமென்பதை பொய்யா மொழிப் புலவர் சொல்லி அவள் கேள்விப் பட்டிருக்கிறாள்.. அன்றுதான் அவள் அறிந்தாள்…
அதுவரை அவளை நாவினால் சுட்டவர்களால் அவளைக் காயப்படுத்த முடியவில்லை.. அவள் வித்யா..! தலை நிமிர்ந்து நிற்பவள்..! எவளுக்கும் தலை வணங்காத நிமிர்வைக் கொண்டவள்..!
யாருடைய வார்த்தைகளையும் அவள் பொருட் படுத்தியதில்லை… யாரையும் அவள் எதிரியாக ஏற்றுக் கொண்டதுமில்லை.. அவள்வழி தனி வழி..!
அப்படிப்பட்டவளின் மனம் என்று நரேந்திரனின் பின்னால் சென்றதோ.. அன்றே பலவீனமாகிப் போனதாக உணர்ந்தாள் வித்யா..
இல்லாவிட்டால் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டுக் கொண்டு அவள் சும்மா நிற்க மாட்டாள்.. இது போன்ற கேள்விகளை அனுமதிக்கவும் மாட்டாள்..
அவளுக்கா அடிப்படை நாகரிகம் இல்லை…?
அவளுடைய காதல் கணவனுக்கு.. அவனுடைய முன்னாள் காதலியிடமிருந்து போன் வந்திருக்கிறது.. அதற்காக அவள் கணவனைப் பார்த்து ஏன் என்று கேட்கவில்லை…
அந்த முன்னாள் காதலியின் போன் வந்துவிட்டால்.. அவளுடைய கணவன் அவள் கண் முன்னாலேயே தனிமையை நாடிப் போய் விடுகிறான்.. மணிக் கணக்காக அவனுடைய முன்னால் காதலியுடன் பேசிவிட்டு திரும்பி வருகிறான்.. அதையும் அவள் ஏன் என்று கேட்கவில்லை..
அவளைப் பார்த்து அவள் கணவன் கேட்கிறான்.. உனக்கு அடிப்படை நாகரிகம் தெரியாதா என்று..
“இனிச் செய்யலை…” அவள் உறுதியுடன்.. மனம் வலிக்கச் சொன்னாள்..
அவள் குரலின் மாறுபாட்டை உணர்ந்தவனாக அவள் முகம் பார்த்த நரேந்திரன் உதட்டைக் கடித்துக் கொண்டான்.. பின்னர் ஒரு பெருமூச்சுடன் பெட்டியை எடுத்தான்.. துணிகளை அடுக்க ஆரம்பித்தான்..
“நான் வெளியூர் போகனும்…”
எந்த ஊருக்கு என்று வித்யா கேட்கவில்லை… அதற்கு முன்னாலும் அவள் அது போன்ற கேள்விகளை அவனைப் பார்த்துக் கேட்டதில்லை.. அப்படிப்பட்டவளைப் பார்த்துத்தான் உனக்கு அடிப்படை நாகரிகம் தெரியாதா என்று நரேந்திரன் கேட்டு விட்டான்…
“வித்யா…”
அவள் பதில் பேசவில்லை.. என்ன நினைத்தானோ.. நரேந்திரன் அவள் அருகில் வந்தான்.. சட்டென்று விலகி அமர்ந்தாள் வித்யா… அவன் முகம் சுருங்கி விட்டது…
“நான் திரும்பி வர கொஞ்ச நாளாகும்…” என்றான்…
வித்யா பதில் சொல்லாமல் அசைவின்றி அமர்ந்திருந்தாள்.. சற்று நேரம் நின்று பார்த்த நரேந்திரன் ஒரு பெருமூச்சுடன் பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டான்…
‘கிளம்பி விட்டான்..’ வித்யா மனம் வலிக்க அவனைப் பார்த்தாள்…
அதே நொடியில் அவனும் அவளைத் திரும்பிப் பார்த்தான்… இருவரின் பார்வைகளும் ஒரு நொடி
பின்னிப் பிணைந்தன.. வித்யாதான் முதலில் பார்வையை விலக்கிக் கொண்டு வேறு திக்கில் பார்த்தாள்.. அவளின் வெறுமையான பார்வையைப் பார்த்தவனின் புருவங்கள் முடிச்சிட்டன…
“கார்த்திகாயினி எப்படியோ போகட்டும் என்று என்னால் விட்டு விட முடியாது வித்யா…” நிதானமாகச் சொன்னான்…
வித்யா அதிர்ந்து போனாள்.. முதன் முதலாக அவன் வாயிலிருந்து வரும் தன்னிலை விளக்கத்தைக் கேட்டவளின் உயிர் துடித்தது…
“அவ சந்தோசமா வாழ்ந்திருந்தா.. அவளைப் பற்றி நினைக்காம என்னால வாழ்ந்திருக்க முடியும்.. ஆனா..
அவ சந்தோசமா வாழலை.. அது தெரிஞ்ச பின்னாலே என்னாலே அவ எக்கேடோ கெடட்டும்ன்னு விட்டுவிட முடியலை…”
அவன் போய் விட்டான்.. அவன் சிந்தி விட்டுப் போயிருந்த வார்த்தைகள் வித்யாவைச் சுற்றிக் குளவிக் கூடுகளின் கூட்டைப் போல கூடு கட்டி.. அவள் மனதைக் கொட்டிக் கொட்டி துடிக்க வைத்துக் கொண்டிருந்தன…
கார்த்திகாயினி தேவியை நரேந்திரனால் விட்டு விட முடியாது.. இதை அவன் தெளிவாகச் சொல்லி விட்டான்…
இனி முடிவெடுக்க வேண்டியது வித்யாதான்… அவள் என்ன செய்ய வேண்டும்..? நரேந்திரனின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டுமா..?
‘சீச்சீ…’ அருவெறுத்தாள் வித்யா…
அவனின் இந்த முடிவை வித்யா ஏற்றுக் கொள்வதா..? ஒருநாளும் அது நடக்காது…
‘வேறு என்ன செய்யப் போகிறாய்..?’ அவள் மனம் கேட்டது…
‘நரேந்திரனை விட்டுப் பிரிந்து போகப் போகிறாயா..?’
முடியுமா..? அவளால் அது முடியுமா..? முன்பு ஒருமுறை அவனைப் பிரிந்து போக முடிவு செய்தவள் தான் அவள்.. அன்றும் அவளுடைய நரேந்திரன் அவளை இன்னொருவனுக்கு தாரை வார்த்துக் கொடுக்க முடிவு செய்திருந்தான்.. இன்று.. அவனை இன்னொருத்திக்கு தாரை வார்த்துக் கொடுத்து விடும்படி வித்யாவை மறைமுகமாக வற்புறுத்துகிறான்…
அன்று வித்யா நரேந்திரனின் காதலி மட்டும் தான்.. இன்றோ அவன் மனைவி…!
காதலியாக இருந்தபோதே இன்னொருவனுடன் அவளை இணைக்கும் நினைவை நரேந்திரன் நினைத்து விட்டான் என்று அவனை விட்டு விலகிப் போக நினைத்தவள்தான் வித்யா.. மனைவியாக இந்த நிலையில் அவன் செய்கையை அவள் பொறுத்துக் கொள்வாளா..?
எழுந்து நிற்க முயன்றவளுக்கு மயக்கம் வந்தது.. சுதாரித்துக் கொண்டவளாய் குளியலறைக்குள் புகுந்து.. தண்ணீரை அள்ளி முகத்தில் அடித்து மயக்கத்தை விரட்ட முயன்றாள்…
‘டாக்டரிடம் போயாகனும்…’
தனித்து டாக்டர் திலகவதியைத் தேடிக் கிளம்பிய போது.. அவள் மனதில் நிராதரவான உணர்வு எழுந்தது.. எப்போதும் அவளுக்கு சாய்ந்து கொள்ளத் தோள் கொடுத்த நரேந்திரன் அப்போது அருகில் இல்லையே என்ற ஏக்கம் வந்தது.. அதை விரட்டியடிக்க முயலாத இயலாமையுடன் மருத்துவமனைக்குள் சென்றாள்.. அவளைப் பரிசோதித்த டாக்டர் திலகவதியின் அகலமான புன்னகை வித்யாவின் கணக்கீட்டை ஊர்ஜிதம் செய்தது…
“கங்கிராஜீலேசன்ஸ் வித்யா.. நீங்க அம்மாவாகப் போகிறிங்க…”
அப்பாவாகப் போகிறவன் எங்கே போயிருக்கிறான் என்ற நினைவில் சந்தோஷிக்க முடியாமல் கண்களில் கண்ணீரால் குளம் கட்டினாள் வித்யா…
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.