Chapter 27

0Shares

நதியோரம் நடந்த போது..

      தூரத்திலே விடிவெள்ளி கண்டேன்..

உன்னிடம் சொல்லத் திரும்பியபோது..

      இருளோடு நீ மறையக் கண்டேன்..

-நதியோரம் நான் நடந்த போது-

அப்படிப்பட்ட ரங்கதுரையின் மீது இப்பேற்பட்ட பழி வந்திருக்கிறது.. என்னதான் ரங்கதுரை நல்லவன் என்று மனதிற்கு தெரிந்தாலும்.. நிவேதிதாவின் பக்கமும் ஒரு நியாயம் இருந்து வைக்கிறதே.. அதற்கான பதில் கிடைக்காமல் வித்யா எந்த முடிவுக்கும் வரமுடியாதே…

“இப்பப் பிரச்னை அது இல்லை ரங்கதுரை.. நீங்க எதுக்காக நிவேதிதாவின் கையைப் பிடிச்சு இழுத்தீங்க..?”

“முழுதாக் கேட்காம என்மேல பாயாதீங்கம்மா.. அந்தம்மா பேக்டரிக்குள்ள நடந்து வந்தாங்க.. மெஷின் வேலை செய்கிற பக்கம் வர்றவங்க நாலா பக்கமும் பார்த்தபடி வரனுமா.. வேணாமா..? அந்தம்மா நடந்து வர்றாங்க.. மேலே மெஷின் கீழே இறங்கி வந்துக்கிட்டே இருக்கு.. நான் கையைப் பிடிச்சு இழுத்து இந்தப் பக்கமா தள்ளி விட்டேன்.. ஒரு நொடி தாமதிச்சிருந்தாலும் அந்தம்மா மெஷினுக்கு கீழே அகப்பட்டிருப்பாங்க…”

ரங்கதுரை விவரித்ததில் வித்யா திகிலடைந்து விட்டாள்.. எப்பேற்பட்ட விபத்து தவிர்க்கப் பட்டிருக்கிறது..! அதற்காக ரங்கதுரையை பாராட்டாமல் கன்னத்தில் அடிப்பதா…?

“சுரேன்.. இவர் நிவேதிதாவின் உயிரைக் காப்பாத்தியிருக்கார்.. அதுக்காக தேங்க்ஸ் சொல்லாம கன்னத்தில் அடிப்பதா..?”

வித்யா நியாயம் கேட்டபோது அவள் எதிர்பார்க்காத வார்த்தைகளை சுரேந்திரன் சொன்னான்..

“உங்களுக்கு நிவியைப் பிடிக்காதுதான் அண்ணி.. அதுக்காக ஒரு பெண்ணுன்னும் நினைக்காம.. அவ உணர்வுகளை மதிக்காம நீங்க பேசக்கூடாது.. அவளைப் பழிவாங்க இதுதான் நேரமா..?”

“சுரேன்..” வித்யா விக்கித்து நின்று விட்டாள்..

அவளைப் பார்த்து எப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லி விட்டான் சுரேந்திரன்.. நிவேதிதாவின் முகத்தில் அப்பட்டமான மகிழ்வு தெரிந்தது.. அவளின் விழிகள் வெற்றிப் பெருமிதத்தை பறைசாற்றின…

வித்யா தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள்…

இது அவளின் மனக் காயங்களை நினைத்து மருகுவதற்கான நேரமல்ல.. அவளை நம்பி.. அவளின் வார்த்தைக்காக.. போராட்டத்தை கைவிட்டு நிற்கும் தொழிலாளர்களுக்கு அவள் நியாயம் செய்ய வேண்டும்.. சுரேந்திரன் சொன்னதற்காக பின் வாங்கி விட்டால் ரங்கதுரைக்கு நியாயம் செய்ய முடியாது..

“இது பேக்டரி சுரேந்திரன்.. இதில் சொந்த விருப்பு.. வெறுப்புகளுக்கு இடமில்லை.. உங்க வொய்பை எனக்குப் பிடிக்காதுன்னு எதை வைத்துச் சொல்கிறிங்க..? எனக்கு யார் மீதும் விரோதமில்லை.. உங்க வொய்ப் தான் என்மேல தேவையில்லாம விரோதம் வைத்துக்கிட்டு இருக்காங்க.. இதை முதலில் நினைவில் வைத்துக்கங்க.. ஒரு பெண்ணாக ரங்கதுரையை உங்க வொய்ப் யோசிக்காமல் அடித்ததில் தவறில்லை.. ஆனால்.. அதற்க்கப்புறமா மெஷின் கீழே இறங்கி வந்ததைப் பார்த்திருக்கனுமே.. நிவேதிதாவோட உயிர் காப்பாற்றப் பட்டிருப்பதைப் புரிந்திருக்கனுமே.. உடனடியாக நிவேதிதா என்ன செய்திருக்கனும்..?”

வித்யாவின் கேள்வியில் சுரேந்திரனின் முகத்தில் யோசனை வந்தது.. அவன் இந்தக் கோணத்தில் யோசிக்கவே இல்லையே…

“கையைப் பிடித்ததினால சட்டுன்னு ரியாக்ட் பண்ணி அடிக்கத் தெரிஞ்சவங்களுக்கு அது எதற்காகன்னு தெரிந்தவுடனே தேங்க்ஸ் சொல்லி அடிச்சதுக்கு மன்னிப்புக் கேட்கவும் தெரிந்திருக்கனுமில்ல..?”

வித்யா நிற்க வைத்து கேட்ட கேள்வியில் நிவேதிதாவின் முகம் மாறியது.. இந்த அளவுக்கு புத்திசாலித்தனமாக வித்யா கேள்வி கேட்பாள் என்று அவள் எதிர் பார்த்திருக்கவில்லை…

வித்யாவின் கேள்வியில் சிந்திக்க ஆரம்பித்த சுரேந்திரனை கவலையுடன் பார்த்தாள் நிவேதிதா..

‘இவன் யோசிக்கக் கூடாதே…’

நிவேதிதாவின் கவலையைப் பற்றிய கவலையன்றி சுரேந்திரன் யோசிக்க ஆரம்பித்து விட்டான்.. அவன் முகம் கல்லைப் போல கடினமானது…

அவன் ஆண்மகன்.. அவனுடைய மனைவியை அன்னியன் ஒருவன் தொட்டவுடன் அவள் சட்டென்று அவனை அடித்து விட்டதை அவன் மனப்பூர்வமாக ஆதரித்தான்.. அதனாலேயே அவன் மனைவியின் பக்கமாக நின்று வித்யாவிடம் மோதிவிட்டான்.. ஆனால் வித்யா அவன் கேள்வியில் மனதில் அடிவாங்கினாலும் பின் வாங்காமல் நின்று எதிர்த்து கேள்வி கேட்டதில் அவன் அறிவு விழித்துக் கொண்டு யோசிக்க ஆரம்பித்து விட்டது..

“இப்ப என்ன செய்யனும்கறிங்க..?”

“உங்க மனச்சாட்சியிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்க சுரேந்திரன்.. அது சொல்வதைச் செய்யுங்க.. 

ஐ திங்க்.. இன்னும் உங்க மனச்சாட்சி உயிர்ப்போட இருக்குதுன்னு நான் நம்பறேன்…”

வித்யாவின் மறைமுகைமான குத்தலில் சுரேந்திரனுக்குள் இருந்த நியாயவாதி உயிர் பெற்றான்.. சுரேந்திரன் நிவேதிதாவின் பக்கம் திரும்பினான்.. நிதானமாகச் சொன்னான்..

“நிவி.. ரங்கதுரைக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு ஸாரி சொல்லிடு…”

“வாட்..” நிவேதிதா இமை கொட்டினாள்…

அவளுக்கு அவள் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை…

அவள் எவ்வளவு மெனக்கெட்டு.. திட்டமிட்டு.. அந்தச் சம்பவத்தை செயல்படுத்தினாள் என்று அவளுக்குத்தான் தெரியும்..

கணவனின் குணம் அறிந்தவள் நிவேதிதா.. அவனாலேயே ஆட்சேபிக்க முடியாத அளவிற்கு தொழிற்சாலைக்குள் ஒரு கலகத்தை உண்டு பண்ண வேண்டும் என்று அவள் திட்டமிட்டாள்.. வேண்டுமென்றே ரங்கதுரை பார்த்துக் கொண்டிருக்கும் போது.. மேலேயிருந்து இறங்கிக் கொண்டிருந்த இயந்திரத்தைக் கவனிக்காததைப் போல அவள் நடந்து போனாள்.. அவளின் யுக்தி பலித்தது.. ரங்கதுரை அவசரமாக அவளின் கையைப் பிடித்து இழுத்து காப்பாற்றி விட்டான்.. ரங்கதுரை அவளைக் காப்பாற்ற முனையா விட்டாலும் நிவேதிதா கவனமாகத்தான் இருந்தால்.. தானாக இயந்திரத்தின் அடியிலிருந்து விலகியிருப்பாள்.. அது தெரியாத ரங்கதுரை பதறி விட்டான்.. அவனின் அந்த மனிதாபிமானத்திற்கு பரிசாக நிவேதிதா ஒரு அறை விட்டுவிட்டு.. அதை நியாயப் படுத்தி சுரேந்திரனிடம் நாடகமும் ஆடிவிட்டாள்..

“நீங்களே சொல்லுங்க சுரேன்.. உங்களைத் தவிர வேறு ஒருத்தனின் விரல் என்மேல பட்டாலும் அவனைக் கொன்று விடனும்கிற கோபம் எனக்கு வருமா.. வராதா..?”

வராது என்று எந்தக் கணவன்தான் சொல்லுவான்..? அப்படிப்பட்ட கோபம் வந்து விட்டதால் ரங்க துரையின் கன்னத்தில் ஓங்கி அடித்து விட்டாள் நிவேதிதா என்பதில் சுரேந்திரன் மகிழ்ந்து போனான்..

அவளுக்காக.. தொழிலாளர்களையே எதிர்த்தும் நின்று விட்டான்..

இப்படி அணுவளவு கூடப் பிசகாமல் காய் நகர்த்திய நிவேதிதாவின் திட்டத்தை ஒரு நொடியில் வித்யா தகர்த்து விட்டாளே…

‘இவளை என்ன செய்தால் தேவலாம்..’ கொலை வெறியுடன் வித்யாவை முறைத்தாள் நிவேதிதா…

“நான் எதுக்காக இந்த ஆளிடம் தேங்க்ஸ் சொல்லனும் சுரேன்…”

“இந்த ஆள்ன்னு சொல்லாதே.. அவர் யூனியன் லீடர்.. அத்தோட உன் உயிரைக் காப்பாற்றியிருப்பவர்..”

“ஸோ வாட்..?”

“அதுக்காக நீ இவருக்கு தேங்க்ஸ் சொல்லனும் நிவி..”

“ஸாரியும் சேர்த்துச் சொல்லனும்கிறது டூ மச் சுரேன்..”

“நோ நிவி.. உன்னைக் காப்பாற்றியவரை நீ புரிந்துக்காம அடிச்சுட்ட.. அது தெரியாம நீ செய்து விட்ட தவறு.. அதுக்காக நீ இவரிடம் ஸாரி சொல்லித்தான் ஆகனும்…”

திரும்பவும் வித்யாவின் முன்னால் தோற்றுப் போய் விட்டதை உணர்ந்தாள் நிவேதிதா.. முகம் கன்ற சுரேந்திரன் சொன்ன இரண்டு வார்த்தைகளையும் வானத்தைப் பார்த்துச் சொல்லிவிட்டு ஆத்திரத்துடன் அவளுடைய கேபினுக்குப் போய் விட்டாள்..

“அண்ணி…”

எதையோ சொல்ல வந்த சுரேந்திரனின் முகம் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் வித்யா.. சுரேந்திரனின் முகம் மாறி விட்டது.. அவன் குற்ற உணர்வுடன் விலகி நடந்தான்..

0Shares

Reviews – Nathiyoram / நதியோரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link