Chapter 31
நதியோரம் நடந்த போது..
யுத்தமில்லா அமைதி கண்டேன்..
நதியைவிட்டு விலகி நடந்தால்…
யுத்தம் மட்டும் எங்கும் கண்டேன்…
-நதியோரம் நான் நடந்த போது-
நிவேதிதாவிற்கு பூர்ணிமாவின் பலத்தைப் பற்றி அதுவரை சரிவர தெரியாமல் இருந்தது.. பூர்ணிமா மகா சத்தி.. நியாய தேவதை.. அவள் கண்முன் நடக்கும் எந்தவொரு அநியாயத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டாள்…
இதையெல்லாம் அறியாமல் அவள் வீட்டிலிருந்த போதே அவளுடைய உயிர் தோழியான வித்யாவுடன் மோதிவிட்டாள் நிவேதிதா…
“உன் வொய்ப் மனசில என்ன நினைத்துக்கிட்டு இருக்காங்க அண்ணா..? அவங்க உன்னைக் காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டது எதுக்காக அண்ணா..? உன்கூட வாழ்கிறதுக்காகவா.. இல்லை வித்யாவுடன் சண்டை போடுகிறதுக்காகவா..?”
பூர்ணிமா தெளிவாகக் கவனித்து கேட்டு விட்டதில் நிவேதிதாவின் முகம் விழுந்து விட்டது…
‘இவளுக்கு எப்படித் தெரியும்..?’
இதுதான் நிவேதிதாவின் எண்ணமாக இருந்தது.. வித்யா அதைச் சொல்லியிருக்க மாட்டாள் என்று நிச்சயமாக அவள் நினைத்தாள்.. வித்யா அப்படிப் புறம் பேசி காட்டிக் கொடுக்கும் பெண்ணல்ல என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.. அப்படிப்பட்டவளுடன்தான் அவள் தினம்தினம் போராட்டம் நடத்தினாள்…
“வித்யா எதைச் செய்தாலும் உன் வொய்ப் அதில் தலையிட்டு பிரச்னையைக் கிளப்புவாங்கன்னா.. அவங்க நோக்கம் என்ன…?”
“பூரணி.. நீ பெரியண்ணி பக்கமே பேசாதே.. நிவியும் உனக்கு அண்ணிதான்.. பெரியண்ணி உனக்கு பிரண்டுங்கிறதுக்காக நீ நிவி பக்கம் இருக்கிற நியாயத்தை கண்டு கொள்ளாமல் இருக்கிறது தப்பு..” மனைவியை விட்டுக் கொடுக்காமல் தான் பேசினான் சுரேந்திரன்…
“வாஹ்ரே வா.. சுரேன் அண்ணா.. நீ இத்தனை நியாயவாதியாய் இருப்பேன்னு நான் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கலை.. எப்படிண்ணா இப்படி மாறிப் போன..? இதைப் போலத்தான் நீ பேக்டரியிலயும் வித்யாகிட்ட பேசி வைச்சிருக்க.. உன் வொய்ப் கூட வித்யாதான் சண்டை போடுகிறாளா..? அவள் சண்டை போடறதா இருந்தா இந்த வீட்டில இருக்கிறவங்க பண்ணுகிற அழிச்சாட்டியத்துக்கு அவ எத்தனை சண்டை போட்டிருக்கனும்..? அவ போடலையே.. இப்ப உன் வொய்ப்கூட அவ சண்டை போடக் கிளம்பியிருக்கிறாளா..? இதிலிருந்து என்ன தெரியுதுன்னா.. மத்தவங்களை-யெல்லாம் உன் வொய்ப் தூக்கி சாப்பிட்டு விட்டாங்கன்னு தெரியுது….”
“ஷட் அப் பூர்ணிமா.. நிவி உன்னோட அண்ணி…”
“வித்யாவும் எனக்கு அண்ணிதான்.. அவகூட பெரியண்ணன் ஊரில் இல்லாத நேரத்தில பேக்டரியிலயும்.. வீட்டிலேயும் உன் வொய்ப் சண்டை வளர்த்துக்கிட்டு இருக்கிறாங்க.. நீ அதை ஏன்னு கேட்காம.. வித்யாவைக் கேள்வி கேட்டிருக்க.. அது போதாதுன்னு என்னிடமும் கேள்வி கேட்கிற.. இப்ப பேசியதையெல்லாம் நீயும் உன் வொய்பும் பெரியண்ணன் முன்னாலே பேசிருவீங்களா..? அவர் முன்னாலே வித்யாவை ஒரு சொல் சொல்லிப் பாருங்க.. அப்புறம் என்ன நடக்குதுன்னு நான் வேடிக்கை பார்க்கிறேன்..”
பூர்ணிமாவின் கோபத்தில் சுரேந்திரன் மனைவியை முறைத்தான்…
“வாட் இஸ் திஸ் நிவி..?”
எல்லோரின் முன்னாலும் அவன் அதட்டியதில் நிவேதிதாவிற்கு என்னவோ போல ஆகிவிட்டது..
“நத்திங் சுரேன்.. மதன்பூர் அரண்மனையில் எல்லாம் சர்வண்ட்ஸ் தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடுவாங்க.. இங்கே அப்படியில்லை..” நிவேதிதா மென்று விழுங்கினாள்…
“அதனால..?” சுரேந்திரனின் கேள்வி கூர்மையாக வந்தது…
“ப்ளீஸ்.. நம்ம ரூமில் இதைப்பத்திப் பேசலாமே…”
“சண்டையை எல்லோருக்கும் மத்தியில போட்டுட்டு.. விளக்கத்தை தனிமையில சொல்லனும்-கிறயா…? அந்தக் கதையே இங்கே வேணாம்.. இங்கேயே உன் விளக்கத்தைச் சொல்லு…”
“நான் டேபிள்.. பெஞ்சைத் தூக்கச் சொன்னேன்…”
“வாட்..?” சுரேந்திரனின் கோபத்தில் நிவேதிதாவின் முகம் கன்றிச் சிவந்து விட்டது…
“நீ யார் அதைச் சொல்ல..? அதனால எங்க வீட்டில் வேலை செய்கிறவங்களின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்ன்னு நீ நினைத்துப் பார்த்தியா..? திஸ் இஸ் டூ மச் நிவேதிதா.. லேபர்ஸ் வெல்ஃபேர் இல்லைன்னா.. எந்த முதலாளியும் தொழிலில் சக்சஸ் பண்ண முடியாது.. அது பேக்டரியாய் இருந்தாலும் சரி.. வீடாக இருந்தாலும் சரி…”
“பட் சுரேன்…”
“பேசாதே.. இப்படித்தான் தினமும் பேக்டரியில் லேபர்ஸ்கூட மோதி ஏதாவது ஒரு பிராப்ளத்தை
கிரியேட் பண்ணிக்கிட்டே இருக்கிற.. உன்னை ஜி.எம்மா கண்டினியூ பண்ண வைக்கலாமா.. வேண்டாமான்னு எனக்கு யோசனையாய் இருக்கு.. அம்மா.. நீங்களும் இங்கே தானே இருக்கீங்க.. இவதான் பைத்தியக்-காரத்தனமா எதையாவது சொன்னா நீங்க அதைக் கண்டிக்காம வேடிக்கை பார்த்தீங்களா…? நம்ம வீட்டில வேலை செய்கிறவங்க என்னைப் பத்தி என்ன நினைத்துக்குவாங்க…?”
சௌதாமினிக்கு அந்த வார்த்தைகளே போது மானதாக இருந்தன… அதுவரை மீனலோசனியையும்.. பிரபாவதியையும் கண்டிப்பதைப் போல நிவேதிதாவைக் கண்டிக்க முடியாமல் இருந்தவளுக்கு சுரேந்திரனின் அனுமதி வயிற்றில் பாலை வார்த்ததைப் போல இருந்தது…
“ஆகட்டும் சுரேன்.. இனிமே இது போல நடக்காம நான் பார்த்துக்கறேன்…” சின்ன மகனுக்கு அவள் உறுதியளித்தாள்..
இதிலிருந்து நீ அறிவது யாதெனில்… இனியும் நான் நீ செய்வதையெல்லாம் மதன்பூர் மகாராஜாவின் மகளாயிற்றே என்று பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்.. ஒரு மாமியாராய் லட்சணமாய் நீ வாய் திறக்க முடியாமல் அடக்கி வைப்பேன் என்ற செய்தியை சுரேந்திரனிடம் சொல்வதைப் போல நிவேதிதாவிடம் அவள் சொல்வதைப் புரிந்து கொண்டாள் நிவேதிதா.. இப்படி ஆகுமென்று அவள் நினைத்துப் பார்த்திருந்தாளா என்ன..? அவளை முடுக்கிவிட்ட மீனலோசனி ஏதும் அறியாதவளைப் போல நின்று விட.. எல்லோரிடமும் நிவேதிதா தான் வாங்கிக் கட்டிக் கொண்டாள்…
போதாக்குறைக்கு அன்று இரவே சுரேந்திரனிடம் அவளுக்குச் சரியான மண்டகப்படி கிடைத்தது…
“பூர்ணிமா கேட்டதை நினைத்துப் பார் நிவி.. நீ எதுக்காக என்னைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக் கிட்டே.. பெரியண்ணி கூட சண்டை போடறதுக்காகவா..?”
“சுரேன்.. அவளுக்காக நீங்க அக்கறை படறதை நான் விரும்பலை…”
“யார் அக்கறைப் பட்டது..? என் அக்கறை அவங்களைப் பத்தியில்லை.. என்னைப் பற்றித்தான்..”
“ஏன்..? உங்களுக்கென்ன..?”
“எனக்கென்னவா..? நீ எதைச் செய்தாலும்.. அது என் தலையில்தானே வந்து விடியுது…? உன்னாலே என்னோட சின்னத் தங்கையிடம் என்னவெல்லாம் பேச்சுக் கேட்க வேண்டி வந்திருக்கு.. பார்த்தியா…?”
“எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்.. நம்ம அரண்மனை விவகாரத்தில தலையிடறதுக்கு அவ யாருங்க…?”
இப்படிக் கேட்டவளை சுரேந்திரன் பார்த்த பார்வையில் நடுங்கிப் போனாள் நிவேதிதா…
“அவ யாரா..? என் தங்கைடி அவ.. இந்த அரண்மனையின் செல்லப் பெண்.. மதன்பூர் அரண்மனையில உன்னை யாருன்னு கேட்டா நீ கேட்டுக்குவியா..?”
“அது நான் பிறந்து வளர்ந்த அரண்மனை…”
“இங்கேயும் அப்படித்தான்.. இது பூர்ணிமா பிறந்து… வளர்ந்த அரண்மனை.. இங்கே அவ பேச்சுக்கு மறு பேச்சில்லை.. ஆமாம்.. உன்னை ஒன்று கேட்கனுமே..”
“கேளுங்க…”
“அந்த கார்த்திகாயினி தேவி உன் ஒன்று விட்ட அக்காதானே…”
“அதுக்கென்ன…?”
“உனக்கு அவங்களை ரொம்பப் பிடிக்குமாமே..”
“யார் சொன்னது…?”
“உன் குடும்பமே சொல்லுது.. அவங்க நினைப்பிலதான் நீ பெரியண்ணி கூட சண்டை போடறயா..?”
சுரேந்திரன் தான் புத்திசாலி என்பதை நிருபித்தான்.. நிவேதிதாவின் முகம் மாறியது.. உண்மையை ஒப்புக் கொள்ளாமல் அவள் பேச்சை திசை திருப்பிவிட முயன்றாள்…
“இப்படி நினைத்துப் பாருங்க.. அப்படி நினைக்காதீங்க…”
“எப்படி நினைக்கச் சொல்கிற…?”
“நீங்க அந்த வித்யாவைக் காதலிச்சீங்களாமே.. அவதான் உங்களை வேண்டாம்ன்னு சொல்லிட்டு
உங்க அண்ணனை மேரேஜ் பண்ணிக்கிட்டாளாம்.. அதனால தான் நான் அவகூட சண்டைக்குப் போகிறேன்.. போதுமா..”
“ச்ச்சீ…”
சுரேந்திரன் வெறுப்புடன் நிவேதிதாவை விட்டு விலகிப் படுத்துவிட்டான்..
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.