Chapter 02

0Shares

சாருலதா புத்திசாலிப் பெண் என்று அனைவராலும் அறியப்பட்டவள்.. அந்த அலுவலகத்தில் அவளுக்கென்று ஒரு தனிமரியாதை இருந்தது.. அபத்தமான எதையும் சிறு புன்னகையுடன் உடனே அடையாளம் கண்டுகொள்வாள்.. தான், இனம் கண்டுகொண்டதை சம்பந்தப்பட்டவர்க்கு உடனே உணர்த்தியும் விடுவாள்..

“இது அதிகப்படியான வார்த்தை டேனியல்.. இதை அவாய்ட் பண்ணிவிட்டு வேலையை மட்டும் பார்க்க டிரை பண்ணுங்களேன்..”

இதுதான் சாருலதா.. கடுமையான வார்த்தைப் பிரயோகம் இல்லாமலேயே கடுமை காட்ட அவளுக்குத் தெரியும்.. ஒரு சிறு பார்வைகூட அவளை எளிதாகப் பார்த்துவிட முடியாது.. கூர்மையான நேர்பார்வையோடு.. விழிகளோடு விழிபார்ப்பாள்.. எதிரே நிற்பவன் பதறிப் போய் தன் பார்வையைத் திருப்பிக் கொள்ளும்வரை.. சாருலதா, தன் பார்வையை விலக்கிக் கொள்ளவே மாட்டாள்..

கிருஷ்ணனுக்கு சாருலதாவை மிகவும் பிடிக்கும்.. ‘அவள் வேலையில் சேர்ந்திருந்த இந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் ஆஃபீஸே பூஞ்சோலையாகக் கண்ணுக்குத் தோன்றுகிறது..’ என்று அடிக்கடி தனஞ்ஜெயனிடம் சொல்லுவான் அவன்..

“எனக்கு ஒன்றும் அப்படித் தோன்றவில்லையே.. ஆறு வருடமாய் பார்க்கும் அதே ஆஃபீஸ்தான் என் கண்ணுக்குத் தெரிகிறது.. இதைப்போய் பூஞ்சோலைன்னு எந்த மடையனாவது சொல்வானா..?”

“இந்த மடையன் சொல்வான்..”

“உனக்கு மறை கழண்டு விட்டதுன்னு நான் சொல்லுவேன்..”

“நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்.. அவள் பேச்சும்.. பார்வையும்.. சிரிப்பும்.. ச்ச்.. ச்ச்.. ச்ச்..”

“ஏண்டா இப்போது ரோhட்டில் போகும் நாயைக் கூப்பிடுகிறாய்..?”

தனஞ்ஜெயன் எரிச்சலுடன் வாசல் பக்கம் எட்டிப் பார்க்க.. காதல் கற்பனைக் குதிரையின் வேகம் தடைபட்டவனாய் அவனைவிட அதிக எரிச்சல்பட்டான் கிருஷ்ணன்..

“மனுசனாடா நீ.. ஒரு மனிதன் ரசித்து ‘ச்ச்..ச்ச்..’ சொல்லுவதற்கும்.. நாயைக் கூப்பிடுவதற்கும் வித்தியாசமே தெரியாதா உனக்கு..?”

“என்ன வித்தியாசம்…? பெரிய வெங்காய வித்தியாசம்.. இரண்டுக்குமே ‘ச்ச்.. ச்ச்..’ போட்டால் நான் எந்த ‘ச்ச்’ன்னு கண்டேன்.. எனக்கு எல்லாமும் ஒன்றுதான்..”

“உன்னிடம் போய் நான் என் காதலைப் பற்றிச் சொல்ல வந்தேன் பார்.. என் புத்தியைச் சொல்ல வேண்டும்..”

“இல்லாத ஒன்றைப் பற்றி நீயெல்லாம் பேசக்கூடாது.. மனுசனை நிம்மதியாய் தூங்கவிடு.. சும்மா காதோரம் தொணதொணன்னு பேசிகிட்டே இருந்தே.. மகனே.. கல்லைத் தூக்கிப் போட்டு உன் கதையை முடித்து விடுவேன்..”

கிருஷ்ணன், சாருலதாவைப் பற்றி தனஞ்ஜெயனிடம் புலம்பிய போதெல்லாம்.. தன்னை நிம்மதியாய் வேலை பார்க்க விடாமல் தொந்தரவு செய்கிறானென்றுதான் தனஞ்ஜெயன் கோபப் பட்டிருக்கிறானே தவிர.. கனவில் கூட சாருலதாவைப் பற்றி அவன் யோசிச்சதில்லை.. கல்லையும்.. மண்ணையும் பார்ப்பது போல் அவளிடமும் ஒரு பார்வையை வீசிவிட்டு அவன் போக்கில் போய் விடுவான்..

கிருஷ்ணனின் காதல் முற்றிப் போய் தூக்கத்தில் பினாத்துகிற அளவிற்கு வந்தபோது.. தனஞ்ஜெயன் அவன் மேல் எரிந்து விழுந்தான்.. 

“இந்த எழவெடுத்த காதலை அவள்கிட்ட சொல்லித் தொலைக்க வேண்டியதுதானேடா.. நீயும் தூங்காமல் என்னையும் தூங்கவிடாமல் ரோதனை பண்ணி, என் உயிரை ஏண்டா எடுத்துத் தொலைக்கிறாய்..?”

“தினமும் அவளிடம் சொல்லத்தான் நினைக்கிறேன்டா..”

“இது என்னவோ பழைய சினிமாப்பட டைட்டில் போல இருக்கே..”

“நீ வேறு ஏண்டா.. நேரம் காலம் தெரியாமல் எக்குத்தப்பாய் கேள்வி கேட்டு வைக்கிறாய்..?”

“சரிவிடு.. சொல்ல நினைத்தவன்.. சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே..”

“எப்படிடா சொல்வது..?”

இப்படிக் கேட்டவனை வினோதப் பிறவியைப் பார்ப்பதுபோல் விசித்திரமாகப் பார்த்தான் தனஞ்ஜெயன்..

‘இவனுக்கு என்ன ஆகிவிட்டது..’ என்று அவனுக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது..

“ஏண்டா.. வாயால்தான் சொல்லவேண்டும்.. இவ்வளவு நேரமும் உன் திருவாயை மூடாமல் என்னிடம் கதை அளந்தாயில்லையா.. அந்தக் கதையைப் போய் அப்படியே அவளிடம் அளக்க வேண்டும்..”

“நேற்றுக்கூட அப்படித்தாண்டா நினைத்தேன்..”

“நினைத்ததை முடித்திருக்க வேண்டியதுதானே..?”

“இல்லைடா மச்சான்.. ரெட்ரோஸை கையில் கொடுத்து என் காதலைச் சொல்லணும்னு ரொம்ப நாளாய் ஒரு நினைவு..”

“இது வேறா.. ம்ஹும்.. எங்கேயிருந்துடா இப்படி அபத்தமாக யோசிப்பீங்க… ரெட்ரோஸ் காதலின் அடையாளமா..? நான் அதை ‘டேன்ஜரஸ் சிக்னல்’ன்னு இல்ல நினைத்துக் கொண்டிருந்தேன்.”

“காதலின் மகத்துவம் தெரியாமல் பேசாதே..”

“ஓகே.. நான் பேசவில்லை… நீதான் பேசேன்..”

“ரெட்ரோஸும் வாங்கிக் கொண்டு போனேன்டா..”

“அப்புறம் ஏண்டா சொல்லவில்லை..?”

“வாங்கும்போது நல்லாத்தாண்டா இருந்தது..”

“எதுடா..?”

“அந்த ரெட்ரோஸ்தான்..”

“உன்னை.. அப்புறம் என்னதாண்டா ஆனது..?”

“அவகிட்டப் போய் ரோஸை எடுத்தால் காம்பு மட்டும்தான் கையில் வருது..”

“பூவோட இதழ்கள் எங்கே போச்சு..?”

“உதிர்ந்து போச்சு..”

“ஹா.. ஹா.. நீ இந்த ஜென்மத்தில் உன் காதலை அவகிட்ட சொல்லமாட்ட.. ஹா.. ஹா..”

“சிரிக்காதேடா மச்சான்..”

“ஏன்.. நான் சிரித்தால் உனக்குப் பிடிக்காதா.. அவள் சிரித்தால்தான் உனக்குப் பிடிக்குமா..?”

“ஹைய்யோ.. சொல்லவே மறந்து விட்டேன் தனா.. முந்தாநாள் பக்கத்து சீட் கலா ஏதோ ஜோக் சொன்னாள்ன்னு அவள் சிரித்தாள் பாரு.. அன்றைக்கு பூராவும் எனக்கு ஜில்லுன்னு இருந்துச்சுடா..”

“அடைமழை விடாமல் பெய்தால் உனக்கு மட்டுமா ஜில்லுன்னு இருக்கும்..? ஊருக்கே ஜில்லுன்னு தான் இருக்கும்.”

தனஞ்ஜெயனின் கிண்டலைக் கவனிக்காமல் கிருஷ்ணன் தன் டைரியில் ஒரு பேப்பரைக் கிழித்து வைத்துக் கொண்டு.. விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு.. பேனாவால் தாடையில் ஒரு தட்டு தட்டுவதும்.. பின் அவரமாய்க் குனிந்து எழுதுவதுமாக இருந்தான்..

‘இவன் என்ன செய்கிறான்..?’ தனஞ்ஜெயன் யோசனையுடன் அவன் அருகே போய் பேப்பரைப் பார்த்தான்..

‘வானில் ஒரு வெண்ணிலா..

மண்ணில் ஒரு பெண்நிலா..

அது வேறு யாருமல்ல..

நீயேதான்..’ என்று எழுதியிருந்தது..

“என்னடா இது..?”

“பார்த்தால் தெரியவில்லை.. க..வி..தை.. கவிதை..”

“கவிதையா..?”

விளக்கெண்ணெய் குடித்துவிட்டவனைப் போல, முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக் கொண்டு தனஞ்ஜெயன் கேட்டான்.. அதைக் கவனிக்காமல்.. வைரமுத்து போல முகத்தைப் பெருமையாக வைத்துக் கொண்டு, கிருஷ்ணன் பதில் சொன்னான்..

“கவிதைதான்.. எப்படி.. நல்லாயிருக்கா..?”

“உனக்கு எதற்குடா இந்த வேண்டாத வேலை..?”

“சாருலதாவிற்கு கவிதை பிடிக்கும்டா..”

“அடக் கண்றாவியே..”

“அவள் நல்லாக் கவிதை எழுதுவாள் தெரியுமா..?”

“அதைத் தெரிந்துகொண்டு நான் என்ன பண்ணப் போகிறேன்..?”

“அதனால்தான் அவளைக் கவிதையிலேயே கவர் பண்ணலாமுன்னு, நானும் இந்தக் கவிதையை எழுதினேன்.. படிக்கிறேன்.. கேட்கிறாயா..?”

“நீ இப்போது என்னிடம் அடிவாங்கத்தான் போகிறாய்.. நம் ஆறு வருட  ஃபிரண்ட்ஷிப்.. உன் அரைகுறை கவிதையால் பிய்ந்து போக வேண்டுமா..? நீயே ஒரு முடிவிற்கு வா..”

அந்த அபார்ட்மென்ட்டில் தனஞ்ஜெயன்தான் முதலில் அட்வான்ஸ் கொடுத்து குடி வந்திருந்தான்.. ரொம்பவும் கெஞ்சிக் கேட்டு.. கிருஷ்ணன் அவனுடன் தங்க வந்தான்.. இப்போது அவன் வெளியே போவென்று சொல்லி விட்டால்.. இவ்வளவு வசதியோடு வேறு ஒரு அபார்ட்மென்ட் கிடைப்பது சென்னையில் கஷ்டமான விசயம் என்பதால்.. தன் கவிதை சொல்லும் ஆசையை உடனடியாக கைவிட்டான் கிருஷ்ணன்..

ஆனால் ‘விடியவிடியத் தூங்காமல் விளக்கை எரிய விட்டுக் கொண்டு கவிதை எழுதுகிறேன் பேர்வழியென்று..’ சுற்றிலும் காகிதப் பந்துகளை சுருட்டி வீசிக்கொண்டு.. கிருஷ்ணன் பண்ணிய அலம்பல் தாங்காதவனாய், தனஞ்ஜெயன் மறுநாள் மதிய உணவு நேரத்தின் போது சாருலதாவின் இருக்கைக்குச் சென்று.. அவள் எதிரே அமர்ந்தான்.. அவள் ஆச்சரியமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. அவள் பார்வையில் கேள்வி இருந்தது..

“இங்கே பாருங்க.. மிஸ் சாருலதா..”

“பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் மிஸ்டர் தனஞ்ஜெயன்..”

“உங்களால் எனக்கு ராத்தூக்கம் போய்விட்டது..”

சாருலதாவிற்கு தூக்கி வாரிப்போட்டது..

‘இவன் என்ன இப்படி வந்து நேரடியாய் பேசுகிறான்.. இவன் இப்படியெல்லாம் பெண்களிடம் வழியும் ரகம் இல்லையே..’

“என்னங்க.. நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.. நீங்க பதில் பேசாமல் என் முகத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீங்க.. என் முகத்தில் அப்படி என்னதான் இருக்கு..?”

அவன் எரிச்சலுடன் கேட்ட விதத்தில்.. அவளுக்கு அவனது முகத்தைப் பார்க்கத் தோன்றிவிட்டது.. காந்தம் போன்ற அவனுடைய கண்களை நேருக்கு நேராய் பார்த்தவளின் உடலில் ஓர் அதிர்வு ஏற்பட்டது.. மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற புதுவகையான ஒரு உணர்வை அவள் அனுபவித்தாள்.. அவனது ஊடுறுவும் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் முதன் முறையாக அவள் விழிதாழ்த்தினாள்..

‘என்னடா இது..? நான் கிருஷ்ணனுடைய காதலைச் சொல்ல வந்தால்.. இவள் என்னை இப்படி ஒரு பார்வை பார்க்கிறாள்..’

தனஞ்ஜெயன் தாடையைத் தடவிக்கொண்டான்.. எதிரில் அமர்ந்திருக்கும் பெண்.. ஏதோ வகையில் அவனைப் பாதிப்பதை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது..

‘சேச்சே.. இவள் கிருஷ்ணனின் காதலி..!’

தனக்குள் உருப் போட்டுக்கொண்டே.. தனஞ்ஜெயன் அவளை நிமிர்ந்து பார்க்க.. அதே நேரம் அவளும் அவனைப் பார்த்தாள்..

0Shares

Reviews – Nee Indry Nan Illai / நீயின்றி நானில்லை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link