Chapter 06
நீல வானம் சாட்சியாக..
நீயின்றி நானில்லை..
தனஞ்ஜெயனின் கண்கள் சாருலதாவைத் தேட ஆரம்பித்தன.. அவள் அதை எதிர்பார்த்தவள் போல்.. புன்னகை பூத்த முகத்துடன் அவன் முன் பிரசன்னமாக ஆரம்பித்தாள்.. அவர்கள் பேசினார்கள்.. முதலில் சாதாரணமாய் பேசினார்கள்.. ஒருவர் குடும்பத்தைப் பற்றி.. மற்றொருவர் விசாரித்துக் கொண்டார்கள்..
“நான் கிராமத்துக்காரன்..”
“அதுதான் எனக்குத் தெரியுமே..”
“ஏன்.. என் முகத்தில் நான் ‘காட்டான்’ என்று எழுதி ஒட்டியிருக்கிறதா..?”
“போதுமே.. வாய்க்கு வாய்.. நான் கிராமத்துக்காரன்.. நான் கிராமத்துக்காரன்னு அள்ளி வீசியது யார்..? நீங்கள் தானே.. ஆமாம்.. தெரியாமல்தான் கேட்கிறேன்..”
“நீ தெரிந்து கொண்டே கேள்வி கேட்கிற ஆளாச்சே..”
“இப்போது என்னைப் பேசவிடப் போகிறீர்களா.. இல்லையா..?”
“எப்போதும்… நீ அதைத்தானே செய்து கொண்டிருக்கிறாய்.. இவ்வளவு பேசுகிறாயே.. உனக்கு வாய் வலிக்காதா..?”
“என்னைப் பற்றி ரொம்பத்தான் அக்கறை உங்களுக்கு..”
“இருக்கக்கூடாதா..? அதை விடு.. நீ தெரியாமல் எதையோ கேட்டாயே.. அது என்ன..?”
“கிராமத்துக்காரங்க எல்லாம் ‘காட்டான்’ என்று யார் சொன்னது..?”
“நீ நகரத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணாச்சே.. இப்படித்தான் நினைத்து வைப்பாய் என்ற யூகம்தான்..”
“உங்க யூகத்தைத் தூக்கி உடைப்பில் போடுங்க..”
“போட்டு விட்டால் போச்சு.. அப்பா என்ன செய்கிறார்..?”
“யாருடைய அப்பா..?”
“உன்னுடைய அப்பாதான்.. இங்கே என்முன்னால் உட்கார்ந்து உயிரை எடுத்துக் கொண்டிருப்பது யார்..? நீதானே.. உன்னுடைய அப்பாவைப் பற்றிக் கேட்காமல் யாருடைய அப்பாவை நான் கேட்பேன்..?”
“நீங்கள் வேறு யாருடைய அப்பாவைப் பற்றிக் கேட்டாலும் கேட்பீங்க.. உங்களைப் புரிந்து கொள்ளவே முடியாது.. என்னுடைய அப்பா.. பேங்க் மேனேஜர்..”
“அம்மா..?”
“ஸ்டேட் கவர்மென்டில் வேலை பார்க்கிறாங்க..?”
“கூடப் பிறந்தவங்க..?”
“ஒரே அண்ணன்.. காலேஜ் லெக்சரர்.. கல்யாணமாகி விட்டது.. அண்ணி எல்.ஜ.சியில் வேலை பார்க்கிறாங்க.. அவங்களுக்கு ஒரு குட்டிப் பெண் இருக்கிறாள்.. பெயர் ஆர்த்தி..”
“ஆக.. உன் குடும்பமே.. மெத்தப் படிச்ச மேதாவிங்க குடும்பம்ன்னு சொல்லு..”
“படிச்சவங்க… அவ்வளவுதான்… பட்டம் வாங்கினவங்கதான் மேதாவி.. படிப்பறிவு இல்லாதவங்க எல்லாம் முட்டாள்ன்னு யார் சொன்னது..? காமராஜர் எந்த காலேஜில் படிச்சார்..?”
தனஞ்ஜெயன் புருவங்களை உயர்த்தி.. அவளது பேச்சை ரசித்தான்.. அவள் விளையாட்டாய்.. தன் கையிலிருந்த பேனாவினால் அவன் புறங்கையில் ஒரு தட்டுத் தட்ட.. சிரித்துக் கொண்டான்..
“ஏன் சிரிக்கறீங்க..?”
“இல்லை.. நீ இருபத்தியொராம் நூற்றாண்டில் இருந்தாலும் அந்தக் காலத்தில் காதல் பண்ணுவது போலவே காதல் பண்ணுகிறாயே.. அதை நினைத்தேன்.. சிரிப்பு வந்தது..”
“எதைச் சொல்கிறீங்க..?”
“அந்தக் காலத்து சினிமாக்களை நீ பார்த்ததில்லை போல.. அதில் கதாநாயகன் ஒரு பூவைக்கிள்ளி.. அதன் காம்பினால் கதாநாயகியின் மேல் லேசாகத் தட்டுவான்.. கதாநாயகி உடனே வெட்கப்பட்டுக் கொண்டு.. மரத்திற்கு பின்னால் போய் ஒளிந்து கொள்வாள்..”
‘தான் பேனாவினால்.. அவனது புறங்கையைத் தட்டியதை அவன் குறிப்பிடுகிறான்..’ என்று புரிந்து கொண்ட சாருலதா முகம் சிவந்தாள்.. அவன் முகத்தைப் பார்க்க அவளால் முடியவில்லை.. பார்வையைத் தாழ்த்திக் கொண்டு.. விரல் நகத்தால்.. மேஜைமேல் கீறிக் கொண்டிருந்தாள்.. எதையாவது பேச வேண்டும் என்பதற்காக..
“அப்புறம்.. சொல்லுங்க..” என்று கேட்டுவைத்தாள்.
“அப்புறம் என்ன.. ஹீரோவும்.. ஹீரோயினும் மரத்தைச் சுற்றிவந்து ஒருத்தரையொருத்தர் தொட்டுக் கொள்ளாமல் கவனமாய் நாலடி தள்ளி நின்று டூயட் பாடுவாங்க..”
தனஞ்ஜெயன் சிரிக்காமல் இதைக்கூற.. சாருலதா பொங்கிச் சிரித்தாள்.. ஒருவழியாய் சிரித்து முடித்து, அவனைப் பார்த்தவளின் கண்களில் காதல் பொங்கி வழிந்தது.. தனஞ்ஜெயனின் நினைவில் ஒரு திரைப் படப் பாடல் வந்தது..
‘பார்த்த முதல் நாளே – உன்னைப்
பார்த்த முதல்நாளே..
காட்சிப் பிழைபோலே – உணர்ந்தேன்..
காட்சிப் பிழைபோலே..
ஓர் அலையாய் வந்து எனையடித்தாய்..
கடலாய் மாறிப்பின் எனை இழுத்தாய்..
என் கனாவில்கூட உன்முகம்.. உன்முகம்..
என்றும் மறையாதே..’
அதைப் பாடும் கதாநாயகியின் கண்களில் பொங்கி வழிந்த காதலை.. அப்படியே சாருலதா பிரதிபலித்தாள்.. அவள் முகத்தில் நாணம் கலந்த பரவசம் இருந்தது.. அவனது அருகாமையில் மட்டுமே.. அவளது முகத்தில் உதிக்கும் பரவசம் அது..
அந்தப் பாடலில் கதாநாயகன்.. நாயகியைப் பார்த்து பதிலுக்குப் பாடும் பாடல் வரிகளை மெல்லிய குரலில் தனஞ்ஜெயன் பாடினான்..
“காட்டிக் கொடுக்கிறதே – கண்கள்
காட்டிக் கொடுக்கிறதே..
காதல் வழிகிறேதே – கண்ணில்
காதல் வழிகிறதே..
உன் அலாதி அன்பினில்
நானைந்த பின், நனைந்த பின்..
நானும் மழையானேன்..”
சாருலதாவின் இமையோரங்களில் நீர் முத்துக்கள் உதித்தன.. அவள் இமைகளைக் கொட்டி.. அவை சிதறாமல் தடுத்தாள்.. அவளது காதலை அவன் ஏற்றுக் கொண்டதை உணர்ந்த அவளது மனம் நெகிழ்ந்தது.. அந்த நொடியில் அவனது காலடியில் சரிந்து அமர்ந்து.. அவன் மடியினில் தலை சாய்க்க அவள் மனம் துடித்தாள்.. அவளது துடிப்பை அறிந்து கொண்டவனாய் தனஞ்ஜெயன் கரம் நீட்டி.. தன் கரத்தினுள் அவளது கரத்தை இறுக்கிப் பிடித்து, அவள் விரல் பற்றிக் கொண்டான்.. இப்போது தாங்க மாட்டாதவளாய் சாருலதா விசும்பி விட்டாள்..
“ஏய்ய்.. முட்டாள்.. இது ஆஃபீஸ்..”
புத்திசாலியென்று பெயர் எடுத்தவள்.. அவன் முட்டாளாக்கியபோது முழு நிலவாய் மலர்ந்து சிரித்தாள்..
“ம்ம்.. தெரியும்..”
“தெரிந்து கொண்டே ஏன் அழுகிறாய்..? முதலில் கண்ணைத் துடை.. உன்னைப் போய் எல்லோரும் புத்திசாலின்னு புகழ்ந்து பேசுகிறாங்களே..”
“ஸாரி.. கொஞ்சம் எமோசனலாகி விட்டேன்..”
“கொஞ்சம்தான் எமோசனல் ஆனாயா..? நீ விட்ட கண்ணீரில் நான் அம்பேல் ஆகிவிட்டேன்.. இதுவா கொஞ்சம்..? இன்னும்.. நீ நிறைய எமோசனல் ஆனால்.. என் கதி என்ன ஆவது..?”
“ஒன்றும் ஆகாது.. உங்களுக்கென்ன.. நீங்கள் ராஜா..” அவள் அவனைப் பெருமையுடன் பார்த்துக் கொள்வாள்.. ‘இப்படிக் கொண்டாடும் அளவிற்கு அவள் தன்னிடம் எதைக் கண்டாள்..’ என தனஞ்ஜெயனுக்கு புரியத்தான் இல்லை.. ஆனால்.. அவள் தன்னிடம் கொண்டிருந்த கரை காணாத காதலை அவன் நன்கு புரிந்து வைத்திருந்தான்..
“உங்களைப் பற்றிச் சொல்லுங்க தனா..”
“நான் தனஞ்ஜெயன்.. நேற்று வரை சுதந்திரமாய் வாழ்ந்தவன்..”
“ஏன்.. இன்றைக்கு என்ன வந்துவிட்டது..?”
“நீதான் பூவிலங்கை பூட்டி விட்டாயே..”
“அதனால் ஒன்றும் உங்கள் சுதந்திரம் பறிபோய் விடாது.. உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்..”
“அப்பா விவசாயி.. அம்மா இல்லத்தரசி.. ஒரே ஒரு தங்கை.. தாலுகா ஆபிஸ் கிளார்க் ஒருவருக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்திருக்கிறோம்.. அவருக்கு தாலுகா ஆபிஸில் வேலை.. என் தங்கைக்கு ஏதாவது ஒரு காரணத்தை வைத்து எங்களிடம் மொய் வசூலிப்பது தான் வேலை..”
“மொய்யா..? அப்படியென்றால்..?”
“இதுகூடத் தெரியாதா..? தாய்வீட்டில் வாங்கும்.. சீர் வரிசை பத்தாதுன்னு.. வருடா வருடம் எதையாவது ஒரு சாக்கைச் சொல்லி.. தாய்மாமன் மொய்ன்னு.. மொத்தப் பணமாய் பிறந்த வீட்டைப் போடவைப்பதுதான் மொய்..”
“தங்கைக்கு சீர் செய்ய அலுக்கலாமா..?”
“அடேங்கப்பா.. என் தங்கைக்கேற்ற அண்ணிதான்.. வா.. வந்து என் குடும்ப ஜோதியில் ஐக்கியமாகி.. உன் சம்பளப் பணத்தையெல்லாம் என் தங்கைக்கு மொய் எழுது..”
சாருலதாவிற்கு அப்போதே தனஞ்ஜெயனின் கைபிடித்து அவன் வீட்டிற்குப் போய்விடவேண்டும் என்ற துடிப்பு வந்தது.. அவளது துடிப்பினை உணர்ந்தவன்போல்.. அவன் மௌனச் சிரிப்புடன் அவளைப் பார்த்தான்..
“உங்க அம்மா கோவப் படுவாங்களா..?”
“கோவம்ன்னா என்ன விலைன்னு கேட்பாங்க..”
“அப்பா..?”
“அதை முதலில் கேளு.. அவர் வெட்டரிவாளும்.. வேல் கம்புமாக மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு அலைகிற ஆள்.. ஊர் பஞ்சாயத்து தலைவர்..”
“ஓ… பிரஸிடெண்ட்டா..?”
“அது வேறு ஒருத்தர்.. என் அப்பா பஞ்சாயத்து போர்டு பிரஸிடெண்ட் இல்லை..”
“அப்போ.. பஞ்சாயத்து தலைவர்ன்னு சொன்னீங்க..?”
“அது அப்படித்தான்ம்மா.. கிராமத்துப் பக்கத்தில் வம்சாவளியாய் ஒரு குடும்பத்து ஆள்கள்தான் பஞ்சாயத்து பண்ணி, சண்டை சச்சரவை தீர்த்து வைப்பாங்க.. அப்படி.. என் தாத்தாவிற்கு அப்புறம்.. பஞ்சாயத்து தலைவராய் வந்தவர்தான் என் அப்பா..”
“இன்ட்ரெஸ்டிங்..”
தான் எதைச் சொன்னாலும்.. இவள் இந்த வார்த்தையைத்தான் சுவராஸ்யமாய் சொல்லிக் கொண்டு, தன் வாய்பார்ப்பாள் என்று புரிந்து வைத்திருந்த தனஞ்ஜெயனுக்கு அப்போது.. அவளிடம் பரிவுதான் வந்தது..
Reviews – Nee Indry Nan Illai / நீயின்றி நானில்லை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.