Chapter 09

0Shares

நானாக.. நானில்லை..

நீயின்றி நானில்லை..

அவர்கள் இருவரும் கோவிலுக்குள் நடந்தார்கள்.. அந்தி நேரத்துக் காற்று.. அவர்களை இதமாக தொட்டுத் தழுவிச் சென்றது.. கோவில் கோபுரத்தில்.. புறாக்கள் சிறகடித்து வந்து அமர்ந்தன.. சாருலதாவின் மனம் இறகைவிட லேசாக ஆனது..

“என்ன… கோபுரத்தை அப்படிப் பார்க்கிறாய்..?” என்று வினவினான் தனஞ்ஜெயன்..

“எனக்கு அதுபிடிக்கும் தனா.. ஈவினிங் டயத்தில் கோவிலுக்கு வருவதே ஒரு இனிமையான அனுபவம் தெரியுமா..? கோவில் கோபுரத்தில் கூடுகட்டி இருக்கிற புறாக்கள் சிறகடிக்கும் சிறகோசை.. கோவிலின் ஆலய மணி எழுப்பும் மணியோசை.. இந்தக் காற்றில் நம் காதில் ஒலிக்கும் ‘ஓம்..’ என்ற மந்திர ஓசை.. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.. பட்.. அடிக்கடி கோவிலுக்கு வர என்னால் முடிவதில்லை..”

“என்னால் மட்டும் முடிகிறதா…? நீ ஆசைப்பட்டியேன்னு இன்று உன்கூட வந்தேன்..”

“உன்னைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தேன்’னு சொல்லுங்க..”

“சரி தாயே.. அப்படியே சொல்கிறேன்.. இப்ப வா.. சுவாமி தரிசனம் பகண்ணலாம்..”

அவர்கள் கண்மூடி நிற்க.. அர்ச்சகர் வந்து பிரசாதக் கூடையை வாங்கிக் கொண்டு, அவர்களின் பெயர் நட்சத்திரத்தைக் கேட்டுக்கொண்டு போனார்.. தீபாராதனை ஒளியில் கடவுளை வணங்கி.. கன்னத்தில் போட்டுக் கொண்டாள் சாருலதா.. அம்மன் சன்னதியிலும் அர்ச்சனையை முடித்துக் கொண்டு – கோவிலை வம் வந்தார்கள்..

“உட்கார்ந்து விட்டுப் போகணும்.. தனா..”

“அதோ.. அங்கே உட்காரலாமா..?”

தனஞ்ஜெயன் கோவில் மண்டபத்தை சுட்டிக் காட்டினான்.. சாருலதா சந்தோசமாய் தலை அசைத்தாள்.. அவர்கள் மண்டபத்தின படிக்கட்டில் அமர்ந்தார்கள்..

“அந்தத் தேங்காய் மூடியை இங்கே தள்ளு..”

தனஞ்ஜெயன்.. தேங்காய் வில்லையை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்.. அவனுக்கு இரண்டு படிகள் தள்ளி.. கீழே அமர்ந்திருந்த சாருலதா.. மௌனமாய் அவன் மடிமேல் தலை சாய்த்தாள்..

தனஞ்ஜெயனின் கவனம் தேங்காயின் மீதிருந்து.. சாருலதாவின் பக்கம் திரும்பி விட்டது.. அவன் மனம் மென்மையானது.. ‘நீயே தஞ்சம்..’ என்பதுபோல் மடி சாய்ந்திருந்த அவளின் அந்தத் தன்மை.. அவனது முரட்டு மனத்தை நெகிழ்த்தியது.. அவன் அவளது முடி கோதி விட.. சாருலதா கண்மூடி அவன் மடியில் இன்னும் புதைந்தாள்..

“சாரு..”

“ம்ம்ம்..”

“என்ன இது குழந்தை போல..?”

“உங்களின் முன்னால் நான் ஒரு குழந்தை போலத்தான் ஆகிவிடுகிறேன் தனா.. உங்களுக்குத்தான் இது புரியவில்லை..”

“இதை நீ சொல்லித்தான் நான் தெரிந்து கொள்ள வேண்டுமா..? எனக்கே அது நன்றாகத் தெரியுமே..”

“தெரிந்தும் ஏன்… என் மனத்தைக் காயப்படுத்துகிறீங்க..?”

“நீ ஏன் காயப்படுகிறாய்..? உன்னை நான் வழி நடத்துகிறேன் என்று நினைத்தால் என்ன..?”

“இதவா வழிநடத்துவது..? என் மனதை கசக்கிப் பிழிந்து விட்டு இப்போது நியாயவாதிபோல் பேசுகிறீங்க..”

“சண்டை போடத்தான் கோவிலுக்கு வந்தாயா..?”

“இல்லை.. சாமி கும்பிடத்தான் வந்தேன்..”

“உன்னைப் பார்த்தால் அதற்கு மட்டும் வந்தது போலத் தெரியவில்லையே..”

அவள் மடிசாய்ந்திருப்பதைத்தான் அவன் கேலியாகக் குறிப்பிடுகிறான் என்பதைப் புரிந்து கொண்ட அவள்.. வெட்கத்துடன் விலகி அமர்ந்தாள்..

“இப்படி மேலே வந்து.. என் பக்கத்தில் உட்கார்..”

அவன் கைநீட்ட.. அதை இறுகப் பற்றியவள்.. மேனிச் சிலிர்த்தாள்.. அவள் உணர்ந்த உணர்வை.. அவனும் உணர்ந்ததை அவனது முகம் சொல்லியது.. அவன் அவளையே பார்க்க ஆரம்பித்தான்.. சாருலதா முகம் சிவந்தாள்.. அவன் பார்வையைச் சந்திக்க முடியாமல்.. கோவில் கோபுரத்தை பார்த்தாள்..

“ஏண்டி.. என் முகம் பார்க்க மாட்டாயா..?”

“ச்சு.. இது கோவில் தனா..”

“இப்போதுதான் அது நினைவிற்கு வந்ததா..?”

“எப்போதும் என் நினைவில் அது இருக்கும்..”

அவள் விரல் பற்றிக்கொண்டான் தனஞ்ஜெயன்.. அவள் கையை உருவிக் கொள்ளாமல்.. அவன் முகத்தைப் பார்த்தாள்..

“என்னமோ சொல்ல நினைக்கிறாய்ன்னு தெரிகிறது.. சொல்லு..”

“இந்த நிமிடங்கள்.. என் வாழ்வின் பொக்கிஷ நிமிடங்கள் தனா..”

“எனக்கும் இந்த நினைவிருக்கும் சாரு..”

“இப்படி அமைதியாய்.. என் பக்கத்தில் உட்கார்ந்து நீங்கள் பேச.. நான் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது..”

“அதுசரி.. வேலையை யார் பார்ப்பது..?”

“இப்போதுகூட வேலையின் நினைவுதானா..? யோசித்துப் பார்க்கும்போது.. நம் நேரம்.. நமக்குச் சொந்தமாக இல்லைன்னு தோணுது தனா..”

“ம்ம்.. நிஜம்தான்..”

“எதற்கும் பொழுது இல்லை.. நமக்கே நமக்கென்று செலவழிக்க சில நிமிடங்களை நாம் விட்டுவைத்தால் என்ன தனா.. நான் படித்த ஒரு கவிதையைச் சொல்லவா..?”

“நீ படித்ததா.. இல்லை.. நீ எழுதியதா..?”

“நான் எழுதி.. நான் படித்த கவிதை..”

“அதுதானே பார்த்தேன்.. வசமாய் நான் அகப்பட்டுக் கொண்டேனென்று கவிதை சொல்ல ஆரம்பித்து விட்டாயா..? இதோ பார் சாரு.. கவிதைன்னாலே எனக்கு அலர்ஜி..”

“இப்போது நான் கவிதை சொல்லவா.. வேண்டாமா..?”

“அந்தக் குறை உனக்கெதற்கு.. சொல்லு..”

“கோபுரத்தின் மாடங்களில்

கூடுகட்டி வாழ்கின்ற..

புறாக்களை நின்று பார்க்க

பொழுதுண்டோ எந்தனுக்கு..?”

“பரவாயில்லையே.. நன்றாக இருக்கிறதே.. நான் கிருஷ்ணனின் கவிதையைப் படித்துவிட்டு கதி கலங்கிப் போயிருந்தேனா.. அந்த நினைவில்.. உன் கவிதையையும் கலாய்த்து விட்டேன்..” 

“இன்னும் சொல்லவா..?”

“சொல்லு..”

அவள் ஆர்வமாய் கேட்பதை ரசித்தபடி, அவன் அனுமதி கொடுக்க.. அவள் உற்சாகமாய் சொல்ல ஆரம்பித்தாள்..

“இதமான இரவினிலே..

இணையான உன்னுடனே

நிலவொளியில் சோறுண்ணும்

நினைவுண்டோ எந்தனுக்கு..?”

அவன்.. அவளது கவிதையின் கருப்பொருளை.. ஆழ்ந்து அனுபவித்துக் கேட்டான்..

“நீ பட்டணத்து பெண்ணாயிற்றே.. உனக்கு எப்படி நிலாச் சோற்றைப் பற்றித் தெரியும்..?”

“நீங்கள் ‘நிலாச்சோறு’ சாப்பிட்டிருக்கிறீங்களா..?”

“எங்கள் கிராமத்து வீடுகளை, எப்படிக் கட்டியிருப்போமுன்னு நீ நினைக்கிறாய்..? எங்கள் வீட்டில் முன் வராண்டாவை அடுத்து.. நான்கு பக்கமும் வராண்டா வைத்து.. நடுவில் ஒரு முற்றம் உண்டு.. ராத்திரியில் சாப்பாட்டை நாங்கள் அங்கே உட்கார்ந்துதான் சாப்பிடுவோம்.. நான் சாப்பிடாத ‘நிலாச் சோறா..?'”

“எங்கள் வீட்டில் – மொட்டை மாடியில் – குடும்பத்தோடு உட்கார்ந்து ‘நிலாச்சோறு’ சாப்பிடுவோம்.. பௌர்ணமியானால்.. நைட் சாப்பாடு.. மொட்டை மாடியில்தான்..”

அன்று.. வெகுநேரம்வரை தனஞ்ஜெயன் அவளருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.. சாருலதாவின் மனம் நிறைந்து கொண்டிருந்தான்.. சாருலதாவின் மனம் நிறைந்து.. பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது.. அவளது வீட்டருகே அவன் அவளை இறக்கி விட்டபோது விடை பெற மனமில்லாமல் விடைபெற்றுக் கொண்டாள் சாருலதா..

“வீட்டுக்கு வாங்களேன் தனா..”

“வருகிறேன் முறைப்படி.. கட்டாயம் ஒருநாள் வருவேன்.. இப்போது வேண்டாம்.. போய் வரவா..?”

“ம்ம்ம்..”

“பை..”

“பை..”

சாருலதா அழைப்பு மணியில் கை வைக்கும் முன்னாலேயே கதவுதிறந்து.. அவளின் அண்ணி அஞ்சலி.. கண்களில் ஓர் எச்சரிக்கையை உணர்த்தியவாறு நின்றிருந்தாள்..

“அண்ணி..”

“ஸ்ஸ்.. சாரு.. வீட்டில் எல்லோரும் உன்மேல் கோபமாய் இருக்காங்க..” 

“ஏன்.. என்ன விசயம்..?”

“என்ன விசயமா..? உன் ஸ்கூட்டி எங்கே..? நீ யாருடனோ பைக்கில் வந்து.. வாசலில் இறங்குகிறாயே அவன் யார்..? உன் ஆஃபீஸ் விட்டு நான்கு மணி நேரம் ஆகிறது.. இருட்டி.. இவ்வளவு நேரம் ஆகும் வரை.. நீ எங்கே போயிருந்தாய்..?”

சாருலதா.. கேள்விகளை எதிர் நோக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தாள்.. குடும்பசபை கூட்டப்பட்டது.. அவள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டாள்..

0Shares

Reviews – Nee Indry Nan Illai / நீயின்றி நானில்லை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link