Chapter 15
நானின்றி நீயில்லை..
நீயின்றி நானில்லை..
தனஞ்ஜெயனும்.. கிருஷ்ணனும்.. இன்னும் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் சிலரும் சேர்ந்து.. டாடா சுமோ வண்டியை எடுத்துக் கொண்டு ஊரை நோக்கிப் பறந்தார்கள்.. ஊர் எல்லையிலேயே.. ஒலி பெருக்கியில் பாடல் ஒலிக்கும் சத்தம்.. காதைப் பிளந்தது..
“மணமகளே.. மருமகளே.. வா.. வா..
உன் வலதுகாலை எடுத்துவைத்து வா.. வா..
குணமிருக்கும் குலமகளே வா.. வா..
தமிழ் கோவில் வாசம் திறந்து வைத்தோம் வா.. வா..”
தனஞ்ஜெயனின் உடல் சிலிர்த்தது.. இந்தப் பாடல் ஒலிபரப்பாத திருமண விழாக்களே.. அந்த ஊரில் நடந்த தில்லை.. ஒவ்வொரு திருமணத்தின் போதும் இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறான் அவன்.. ஆனால்.. அன்று உணராத ஆயிரம் அர்த்தங்களை இன்று உணர்ந்தான் அவன்..
அவர்களது வீட்டு வாசலில் கார் நின்றது.. அவர்கள் எல்லோரும் திமுதிமுவென இறங்க.. ஒரு சிறுமி,
“மாப்பிள்ளை வந்தாச்சு..” என்று கூவிக் கொண்டே வீட்டிற்குள் ஓடினாள்..
“அப்படியே நில்லுப்பா..” ஆரத்தி கரைத்துக் கொண்டு வந்த உறவுக்காரப் பெண்மணி ஒருத்திக் கூறினாள்..
ஆரத்தி எடுத்து முடிந்ததும் – தனஞ்ஜெயன் அவசரமாய் வீட்டுக்குள் சென்றான்.. சண்முகம் எதிரே வந்தார்..
“சாருலதா எங்கேப்பா..?”
“இவ்வளவு பாசம் வைத்திருக்கிறவன்.. ஏண்டா அவளை வேண்டாமுன்னு சொன்னே..?”
“அது.. ஒரு கோபத்தில்..”
“என்னதான் கோபம் வந்தாலும்.. உன்னை நம்பி நிற்கும் பெண்ணிடம் அப்படி ஒரு வார்த்தைய நீ சொல்லலாமா..?”
“தப்புத்தான்ப்பா..”
“இதை என் மருமகளிடம் சொல்லு.. அவள் மன்னிக்கறாளான்னு பார்ப்போம்..”
“இப்போதே சொல்லி விடுகிறேன்.. எங்கே அவள்..?”
“அலையாதே.. போய் பட்டு வேஷ்டி – சட்டையைப் போட்டுக் கொண்டு வா..”
“எதற்குப்பா..?”
“என் மருமகளின் கழுத்தில் தாலி கட்டத்தான்..”
“இப்போதேவா..?”
“உன் மாமனாரும்.. மச்சினரும் போலீஸுக்குப் போயிருக்கிறாங்க.. அவங்க வருவதற்கு முன்னால் கல்யாணத்தை முடித்து விடணும்னு நாங்க ஊரே ஒன்று கூடி வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம்.. நீ என்னன்னா.. ஆடி அசைஞ்சுகிட்டு இப்பவேவான்னு கேட்கிற.. இப்பத் தாலி கட்டாமல்.. வேறு எப்போ தாலி கட்டப் போகிற..?”
“ஒரு நொடியில் வந்து விடுகிறேன்ப்பா.. இதுக்கு எதுக்கு இன்னொரு நாளைப் பார்க்கணும்..?”
அவன் ஓடிய வேகத்தைக் கண்டு சண்முகம்.. மீசைக்குள் சிரித்துக் கொண்டார்..
தனஞ்ஜெயன் மாப்பிள்ளைக் கோலத்தோடு.. வீட்டின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் அமர்ந்து வீட்டான்.. சாருலதா வராததினால்.. அவன் கண்கள் அவளைத் தேடித் துழாவின..
அவள் மெல்ல.. மற்ற பெண்கள் புடைசூழ வந்து.. அவனருகில் அமர்ந்தபோது.. அவன் அவள் முகம் பார்க்க முயன்றான்.. அவள் குனிந்த தலை நிமிரவில்லை.. அவன் ஏமாற்றத்துடன் நிமிர்ந்து அமர்ந்தான்..
“கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..” ஒருவர் உரக்கச் சத்தம் போட.. நாதஸ்வர ஓசையுடன் கெட்டி மேளம் பலமாய் ஒலித்தது..
தனஞ்ஜெயன் தாலியை எடுத்து சாருலதாவின் கழுத்தில் கட்டி.. மூன்று முடிச்சுகளைப் போட்டான்..
“பொண்ணு மாப்பிள்ளைக்கு.. நலங்கு வையுங்க..” வரிசையில் எல்லோரும்.. சந்தனத்தை தீற்றி வாழ்த்தி விட்டுப் போக.. பெரியவர்களின் பாதம் பணிந்து எழுந்ததில்.. மணமக்களுக்கு இடுப்பு வலித்தது..
“குலதெய்வம் கோவிலுக்குப் போகணும்.. வாங்க..” அனைவரும் கார்களிலும்.. கால்நடையாகவும் ஊர் எல்லையில் இருந்த கோவிலுக்குச் சென்று வணங்கிக் கொண்டு இருந்தபோது.. போலீஸ் ஜீப் அங்கு வந்து நின்றது.. அதில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர், சண்முகத்தை அணுகினார்..
போலீஸ் ஜீப்பின் பின்னால் வந்து நின்ற காரில் இருந்து கங்காதரனும், ரமணனும் இறங்கினார்கள்..
“என்ன இன்ஸ்பெக்டர் சார்.. எங்கள் ஊருக்குள்ள புதுசாய் போலீஸ் காலடி வைச்சிருக்கு..?”
“என்ன சண்முகம் தெரியாதது போல கேட்கறீங்க.. இவங்க மகளை நீங்க கடத்திக்கிட்டு வந்து விட்டதாக இவங்க புகார் கொடுத்திருக்காங்க..”
“பாருங்க சார்.. இதுதான் என் மருமகள்.. வயது இருபத்தி ஒண்ணாகுது.. கவர்ண்மென்ட் வேலை பார்க்குது.. மேஜரான பொண்ணு.. இப்பத்தான் இதுக்கும் என் மகனுக்கும்.. ஊரைக் கூட்டிக் கல்யாணம் நடத்தி வைத்தோம்.. ரிஜிஸ்டரும் பண்ணிவிட்டோம்.. இதுகிட்டயே கேளுங்க.. இந்தப் பெண்ணை நாங்க கடத்திக்கிட்டு வந்தோமா.. இல்லை.. இது சுய விருப்பத்தோடு வீட்டை விட்டு தானாய் வெளியே வந்ததான்னு இப்பவே கேளுங்க..”
சாருலதா வாயைத் திறக்குமுன்னால்.. மாலையும் கழுத்துமாய் நின்ற மகளைக் கண்ட கங்காதரனின் மனம் மாறிவிட்டது.. அங்கே சூழ்நிலையும் மாறிவிட்டது..
“ஏம்மா.. இவ்வளவு பிடிவாதமாய் நீ இருப்பேன்னு தெரிந்திருந்தால் நானே உன் கல்யாணத்தை முன்னே நின்று நடத்தியிருப்பேனே..” என்று கங்காதரன் கண்கலங்க.. “இப்ப என்ன கேட்டுப் போச்சு மச்சான்.. உங்க சார்பாய்.. நான் நின்று நடத்தி வைத்து
விட்டேன்.. எப்படியிருந்தாலும் வாழப் போவது நம்ம பிள்ளைகள்தானே..! அதுகளை மனசார வாழ்த்துங்க..” என்று சொந்தம் கொண்டாடினார் சண்முகம்..
“மாப்பிள்ளை..” என்று ரமணன் தனஞ்ஜெயனை ஆரத் தழுவிக் கொள்ள..
“மச்சான்..” என்று பதிலுக்கு கட்டித் தழுவிக் கொண்டான் தனஞ்ஜெயன்..
“இதைப்பாருடா.. கடைசியில் எதிரிகளாய் ஆகிப்போனது நாமதாண்டா..” என்று பல்லைக் கடித்தார்கள் கிருஷ்ணனும்.. அவனது நண்பர்களும்..
மணமக்கள் அன்று இரவு சண்முகத்தின் வீட்டிலேயே தங்கி விடுவதென்றும்.. மறுநாள் மறுவீட்டிற்கு முறைப்படி அழைக்க.. காரை எடுத்துக் கொண்டு.. மனைவியோடு ரமணன் வருவானென்றும் பெண்ணும்.. மாப்பிள்ளையும் மறு வீட்டு விருந்திற்குப் போய்.. பெண் வீட்டாரோடு சமரசம் ஆகிவிடுவதென்றும்.. பேச்சு வார்த்தையில் முடிவாக.. கங்காதரனும்.. ரமணனும் கிளம்பி விட்டார்கள்..
மாடியறையில்.. தனிமையில் காத்திருந்தான் தனஞ்ஜெயன்.. தாலிகட்டியும்கூட இன்னும் சாருலதாவின் முகம் பார்த்து ஒரு வார்த்தை பேச முடியவில்லையே என்று அவனுக்குத் தாபமாக இருந்தது..
கொலுசு சத்தம் கேட்க.. திரும்பிப் பார்த்தான்.. சாருலதா உள்ளே வந்தாள்.. எழுந்து சென்று கதவைத் தாழிட்ட தனஞ்ஜெயன் தாகத்துடன் அவளை நெருங்கினான்.. அவள் முகம் திருப்பிக் கொண்டாள்.. தனஞ்ஜெயனின் புருவங்கள் மேலேறின.. அவன் முரட்டுத்தனமாய் அவளை நெருங்கி.. அவள் முகம் பற்றித் தன்பக்கம் திருப்பினான்..
“ஏண்டி.. என் முகத்தைப் பார்க்க உனக்குப் பிடிக்கவில்லையா..?”
“என்னிடம்.. நீங்கள் ஒன்றும் பேச வேண்டாம்..”
“இதற்கா.. என்னிடம் தாலி வாங்கிக் கொண்டாய்..?”
“அது.. என் காதலை நிரூபிக்க.. நீங்கள் என்னை விட்டுப் போனாலும்… நான் உங்களை விட்டுப் போகமாட்டேன் என்பதை உங்களுக்கு உணர்த்த..”
“ஸோ.. உன் காதலுக்காக மட்டும்தான் என்னிடம் தாலி வாங்கிக் கொண்டாய்.. என்னோடு வாழ்வதற்காக இல்லை..”
“ஆமாம்..”
“ஓஹோ.. இந்தக் கல்யாணத்தில் உன் பக்கத்தில் பச்சை சேலை கட்டிக் கொண்டு நின்றிருந்தாளே ஒருத்தி..”
“அவளுக்கு என்ன..?”
“அவள் என் அத்தை மகள்.. என் மேல் அவளுக்குக் கொள்ளைப் பிரியம்.. இரண்டாம் தாரமாய் வாழ்க்கைப் பட்டாலும் பரவாயில்லை.. உங்களுடன்தான் வாழ்வேன்னு இப்போதுதான் சொல்லிவிட்டு போனாள்..”
“அவள் சொன்னால்.. நீங்கள் கேட்டுக் கொள்வதா..? எவ்வளவு தைரியமிருந்தால் என்னிடமே இதைச் சொல்வீங்க..?”
சாருலதா அவன் மார்பினில் குத்த.. அவன் சந்தோசமாய் அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டு பலமாய்ச் சிரித்தான்.. அவன் அணைப்பினில் ஒன்றியவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டு கட்டிலில் சரிந்தான்.. சாருலதா.. புயலில் சிக்கிய பூவானாள்..
அவள் விரும்பியவனின் கைகளுக்குள் விருப்பத்துடன் சிக்குண்டாள்.. எல்லைகளைத் தொட்டுத் திரும்பிய தனஞ்ஜெயன் திருப்தியுடன் விலகிய போது.. அவனை விலகவிடாமல் அணைத்து, அவனது காதோரம் அவள் சொன்னாள்..
“நீயின்றி.. நானில்லை..”
– முற்றும் –
Reviews – Nee Indry Nan Illai / நீயின்றி நானில்லை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.