Chapter 02

0Shares

“இதுதான் உங்கள் சீட். வேலையில் சந்தேகம் வந்தால் ப்ரீதியிடம் கேளுங்கள். ஷி இஸ் எக்ஸ்பர்ட்.” என்று கூறியவாறு பக்கத்து சீட்டிலிருந்த ப்ரீதியை பார்வையால் விழுங்கினான் ஜவஹர்.

அவன் கூறிய எக்ஸ்பர்ட் அவனை மேல் பார்வை பார்த்து முறைத்தாள். ரூபிணி பேசாமல் தன் சீட்டில் அமர்ந்து கொண்டாள். ஜவஹர் தன் முயற்சியைத் தொடர்ந்தான்.

“ஆள் பார்க்க சிம்பிளா இருக்காங்கன்னு நினைத்து விடாதீங்க.. இவங்களுக்கு உடம்பெல்லாம் மூளை. நீங்களும் நானும் நாள் பூராவும் செய்யும் வேலையை இவங்க ஒரு நொடியில் செய்து முடித்து விடுவாங்க.”

“மிஸ்டர் ஜவஹர்.. நான் ஒரு நொடியில் செய்யும் வேலையை இந்த ஆபிஸிலேயே நீங்கள் ஒருவர்தான் ஓர் நாள் முழுவதும் செய்வீர்கள்.. இதில் புதிதாய் வந்திருக்கும் அவங்களை ஏன் நீங்களும் நானும் என்று கூட்டுச் சேர்க்கிறீர்கள். அப்படியிருக்கையில் இங்கே நின்று கொண்டு வெட்டிப் பேச்சுப் பேசி பொழுதை ஓட்டாவிட்டால்தான் என்ன? போங்க சார் போய் உங்கள் வேலையைப் பாருங்கள்.”

‘ஜெயம்’ திரைபடத்தில் ‘சதா’ கையை நீட்டி ‘போ..’ என்று சொல்வதுபோல் ப்ரீதி கையை நீட்டி அவனைப் போகச் சொன்னாள்.

“ஹி… ஹி.. ப்ரீதி என்னிடம் எப்போதுமே இப்படித் தான் ஜாலியாய் பேசுவாங்க” ஜவஹர் ப்ரீதியின் மேல் பதித்த பார்வையை விலக்கிக் கொள்ளாமல் ரூபிணியிடம் கூறினான்.

‘இதுவா ஜாலியாய் பேசுவது?’ ரூபிணி தலையில் கை வைத்துக் கொண்டு ப்ரீதியைப் பார்த்தாள்.

“ஏன் சார்… வேலையில் சேர்ந்த முதல் நாளே அவங்களைப் பயமுறுத்தப் பார்க்கறீங்க… பாவம் சார்.. விட்டு விடுங்க” ப்ரீதி எரிச்சலுடன் கூறினாள்.

“ஆக்சுவலாய் ப்ரீதி… இவங்களை சீட்டுக்குப் போகச் சொல்லி அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிஸர் சொல்லி விட்டார். இவங்களுக்கு சீட் தெரியாமல் விழித்தார்கள். நான்தான் நம்ம ப்ரீதியின் சீட்டிற்கு பக்கத்து சீட் என்று சொல்லி அழைத்து வந்தேன்…”

“நம்ம ப்ரீதி…?”

“ஆமாம்….”

“இப்ப உங்கள் சீட்டிற்குப் போகப் போறீர்களா… இல்லை.. நான் ஆபிஸர்கிட்ட போய் கம்ப்ளெயின்ட் பண்ணவா..?”

“அப்பச்சரி ப்ரீதி… நாம் ஈவினிங் மீட் பண்ணலாம்..”

“நீங்க அடங்கவே மாட்டீங்களா…”

“பை… ப்ரீதி… பைபை..”

“இம்சையைக் கிளப்பாமல் போங்க சார்.. அதோ இருக்கிற உங்கள் சீட்டிற்கு போவதற்கு டாட்டா சொல்லி உயிரை எடுப்பீர்கள்… சபாபதி… எனக்கு நம்ம ஆபிஸ் கேண்டினிலிருந்து ஒரு கப் காபி வாங்கிட்டு வாப்பா…” ப்ரீதி தலையைப் பிடித்து நீவ ஆரம்பித்தாள்.

“இந்தாங்க மேடம்…” பியூன் சபாபதி அவள் டேபிளில் காபிக் கோப்பையை வைத்தான்.

“எப்படிப்பா கரெக்டா வாங்கி வந்தாய்?” ப்ரீதி ஆச்சர்யமாய் வினவினாள்.

“ஜவஹர் சார் உங்கள் டேபிள்கிட்ட வந்து நின்னா உங்களுக்கு தலைவலியை வரவைக்காமல் போக மாட்டார். அவர் உங்க சீட்டுக்கிட்ட வந்து நின்னவுடன் நான் காபி வாங்கப் போய் விட்டேன்…” சபாபதி காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

“நீ நல்லாயிருப்பா… காபியைக் கொடு…”

சற்று உயரம் கம்மியாய்.. பூசின உடல் வாகுடன் சிவந்த நிறத்தில் இருந்த ப்ரீதி பார்க்க அழகாக இருந்தாள். முதுகுவரை வெட்டிவிடப்பட்டக் கூந்தலை ஒரு கிளிப்பில் அடக்கி முதுகில் விரிய விட்டிருந்தாள். பச்சைக் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள்.

“பச்சைக்கிளி முத்துச்சரம். முல்லைக் கொடி யாரோ..” பாடியவாறு ஏதோ வேலையிருப்பது போல் ப்ரீதியைத் தாண்டிச் சென்றான் ஜவஹர்.

“இவருக்கு இந்தச் சிச்சுவேஷன் சாங்கெல்லாம் எப்படிப்பா… உடனே நினைவுக்கு வருது?” சபாபதியிடம் கேட்டாள் ப்ரீதி.

“அதைத் தான் மேடம் நானும் யோசிச்சுக்கிட்டு இருக்கேன். நேத்து நீங்க மஞ்சள் கலரில் சுடிதார் போட்டுக் கிட்டு வந்தீங்க. ஜவஹர் சார் நேத்து பூராவும் ‘மஞ்சக்காட்டு மைனா… என்னை கொஞ்சிக் கொஞ்சிப் போனா’ன்னு பாடிக்கிட்டு அலைஞ்சார். முந்தா நாள் பூராவும் ‘கருப்புத்தான் எனக்குப் பிடிக்க கலரு’ன்னு பாடிக்கிட்டு இருந்தார். என்னடான்னு நான் திரும்பிப் பார்த்தால் நீங்கள் கருப்புக் கலர் சுடிதார் போட்டிருந்தீங்க…”

“இந்த ஆளை நாடு கடத்தணும் சபாபதி.”

“அது எதுக்கு கருமாயமா…? பேசாமல் ஆபிஸ் கடத்துங்கள்…”

“அதுக்குத்தான் நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”

“அவரைக் கடத்த முடியாவிட்டால் நீங்கள் ஆபிஸ் மாறி விடுங்களேன்.”

சபாபதி யோசனை கூறினான்.

“எப்படிப் போவது சபாபதி… நான் செலக்ட் ஆகி வேலை பார்த்தது திருநெல்வேலியில்.. இந்த விழுப்புரம்தான் எனக்கு சொந்த ஊர்… என் அப்பா அலையாய் அலைந்து யார் யாரையோ சிபாரிசுக்கு பிடித்து விழுப்புரத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வந்தார். சொந்த ஊரை விட்டு நான் வேறு எந்த ஊருக்குப் போக?”

“ச்ச்ச்…”

“இப்ப எதுக்குப்பா சூள் கொட்டுகிறாய்?”

“உங்க கதையைக் கேட்டால் பரிதாபமா இருக்கு மேடம்..”

“நீயெல்லாம் பரிதாபப்படும் நிலைமைக்கு என்னை ஆளாக்கி வைத்திருக்கும் அந்த ஜவஹரை இதுக்காகவே கழுவில் ஏத்தனும்…”

ப்ரீதி பல்லைக் கடித்துக் கொண்டு கூறிக் கொண்டிருந்தபோது ஜவஹர் மீண்டும் “பச்சை நிறமே. பச்சை நிறமே” என்று பாடியவாறு அவளைக் கடந்து சென்hறன்.

“போகிறதைப் பார்… ஆந்தை மாதிரி முழிச்சுக்கிட்டு.”

“நீங்க வேற மேடம்.. அவருடைய கண்ணழகைப் பார்த்து விட்டு கண்ணன்னு பெயர் வைக்கணும்னு அவருடைய பாட்டி சொன்னாங்களாம்.”

“அப்புறம் இவர் ஜவ்வு மாதிரி சவசவன்னு ஆளாய் இருக்கிறதைப் பார்த்து விட்டு ஜவஹர்ன்னு பெயர் வைத்து விட்டார்களா?”

ப்ரீதி கிண்டலாய் வினவ ரூபிணி ‘களுக்’கென்று சிரித்தாள். ப்ரீதி அவளைப் பார்த்தாள். ஒல்லியாய்… உயரமாய். கோதுமை நிறத்தில் ஆளைக் கவரும் அழகோடு இருந்தாள் ரூபிணி… ப்ரீதியின் பொறாமையைத் தூண்டி விட்டது அவளுடைய நீண்ட பின்னல்.. ப்ரீதி தன்னைக் கவனிப்பதை உணர்ந்ததும் நிமிர்ந்து அவளைப் பார்த்தவளின் கண்கள் பெரியதாய் அழகாய் இருந்தன.

“நீங்க எந்த ஊர்?” ப்ரீதி கேட்டாள்.

“கோவில்பட்டி…”

“இங்கே எங்கே தங்கி இருக்கிறீர்கள்?”

“கலைவாணி லேடிஸ் ஹாஸ்டலில்…”

“ஓ…! அதுவா? நல்ல ஹாஸ்டல்தான்.. பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கும். இங்கு போன வருடம் வரை வேலை பார்த்த எலிஸபெத்.. அங்குதான் தங்கியிருந்தாள். இப்போது சென்னையில் வேலை பார்க்கிறாள்.”

“அப்படியா?”

“நீங்கள் என்ன மேஜர்”

“பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ்.”

“எந்த காலேஸ்?”

“விருதுநகர் காலேஸ்.”

“அங்கேயிருந்து இங்கே வேலைக்கு வந்திருக்காங்க… பாவம்.”

“நீயென்ன சபாபதி எல்லாவற்றிற்கும் பாவம் போடுகிறாய்.. எனக்குக் கூட பர்ஸ்ட் அப்பாயின்மென்ட் கிடைச்சது திருநெல்வேலியில் தான்… வேலைக்குத்தானே வந்திருக்கிறோம். இதில் பாவப்பட என்ன இருக்கிறது?”

ரூபிணி சபாபதியைப் பார்த்துப் புன்னகைத்தாள். சபாபதிக்கு அவளைப் பிடித்து விட்டது. ப்ரீதி கேள்விக் கணைகளை தொடர்ந்து தொடுக்க ஆரம்பித்தாள்.

“அப்பா அம்மா என்ன செய்கிறாங்க…?”

“இரண்டு பேருமே பேங்க் எம்ப்ளாயி…”

“ஓ.. என் அப்பா ரயில்வேயில் வொர்க் பண்ணுகிறார். அம்மா ஹவுஸ் வொய்ப்.. கூடப் பிறந்தவங்க எத்தனை பேரு?”

“அக்காவும், தம்பியும் இருக்கிறாங்க… அக்கா கம்ப்யூட்டரில் சாப்ட்வேர் என்ஜினியர்… மேரேஜ் முடிஞ்சிடுச்சு.. அக்காவின் ஹஸ்பெண்டும் சாப்ட்வேர் என்ஜினியர்தான்… இரண்டு பேரும் பெங்களூரில் இருக்கிறார்கள். தம்பி என்ஜினியரிங் தேர்ட் இயர் படிக்கிறான்.”

“எனக்கு இரண்டு அண்ணன்கள். இரண்டு பேருமே ரயில்வேயில் அப்பாவைப் போல நுழைந்து விட்டார்கள். என் மேரேஜ் முடிவதற்காக அவர்களது மேரேஜை தள்ளிப் போட்டிருக்கிறார்கள்.”

ரூபிணியிடம் பேசியவாறு எழுந்து வந்து அவளின் சேரிற்கு அருகே ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்த ப்ரீதி.

“கம்ப்யூட்டரை ஓப்பன் பண்ணுங்க… உங்க சீட் வொர்க்கை சொல்லிக் கொடுக்கிறேன்…” என்றாள்.

“தேங்க்ஸ்ங்க… நான் எப்படி உங்களைக் கேட்பதுன்னு பயந்து கொண்டு இருந்தேன்..”

“எதுக்கு பயம்? உங்க சீட் வொர்க்கை நான் கொஞ்ச நாள் பார்த்தேன். என்ன சந்தேகம்ன்னாலும் என்னைக் கேளுங்க.”

அந்த சீட்டின் வேலைகளை அக்கு வேறு ஆணி வேராக விளக்கினாள் ப்ரீதி. அவள் சொல்லிக் கொடுத்ததை உடனுக்குடன் புரிந்து கொண்டாள் ரூபிணி.

“குட்… சீக்கிரமாய் கத்துக்கிட்டிங்க. என்ன சந்தேகம் என்றாலும் என்னிடம் கேளுங்க” ப்ரீதி அவளுடைய இடத்திற்குப் போனாள்.

ரூபிணி ஆர்வமாய் வேலையைத் தொடங்கினாள். மதிய உணவு நேரத்தின்போது ப்ரீதி எழுந்து அவளருகில் வந்தாள்.

“சாப்பிடப் போகலாமா…”

“இதோ வந்து விட்டேன்…”

“என்ன சாப்பாடு கொண்டு வந்தீங்க?”

“தெரியவில்லைங்க.. ஹாஸ்டலில் பொட்டலம் போட்டு வைத்திருந்தாங்க. காலை டிபன் சாப்பிட்டதும் கையோடு எல்லோரும் எடுத்துக் கொண்டோம்.”

“சரி வாங்க…”

டைனிங் ஹாலில் இருவரும் நுழைந்தனர். ப்ரீதி மற்ற பெண்களுக்கு ரூபிணியை அறிமுகப்படுத்தி வைத்தாள். ரூபிணி எல்லோரிடமும் பேசி. அவர்கள் கேட்ட விவரங்களை கூறிவிட்டு தன் உணவுப் பொட்டலத்தைப் பிரித்தாள்.

“வாசனையே அமர்க்களமாய் இருக்கு.. என்ன சாதம்?”

“தக்காளி சாதம்.”

“அந்த ஹாஸ்டலில் தினமும் வெரைட்டியாய் சமையல் செய்து போடுவார்கள். சாப்பாடும் டேஸ்டாய் இருக்கும்.”

பேசியவாறு தனது கேரியரைத் திறந்து சாப்பாடை எடுத்து ஒரு தட்டில் வைத்து ரூபிணியின் பக்கம் நீட்டினாள் ப்ரீதி. அவள் தயங்கவும்.

“ஈஸி ரூபிணி… குடும்ப விசயங்கள் முதற்கொண்டு ஷேர் பண்ணிக் கொள்கிறோம்… சாப்பாட்டை ஷேர் பண்ணிக்க வேண்டாமா?” என்று கூறினாள்.

பேசிக் கொண்டே சாப்பிட்டார்கள். கை கழுவ எழுந்திருக்கும்போது ஒருவரை ஒருவர் ‘வா… போ’ என்று இயல்பாய் கூப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு மனதால் நெருங்கி விட்டார்கள்.

“ஆமாம் ப்ரீதி. அந்த ஜவஹர் ஏன் உன்னையே சுற்றி வருகிறார்…?”

“லவ்வாம்..”

“உனக்கு அவரைப் பிடிக்காதா?”

“பிடிக்காது.”

“அதைச் சொல்லிவிட வேண்டியதுதானே…”

“நிறைய முறை சொல்லிவிட்டேன்.. சொல்லித் திருந்துற ஜென்மமில்லை அது…”

“அதுவா… எது?”

“இந்நேரம் வரை எந்த ஜந்துவைப் பற்றி நீ பேசிக் கொண்டிருந்தாயோ அதுதான்… புரியாதது போல என்ன கேள்வி?”

அவர்கள் இருவரும் அவரவர் சீட்டிற்கு வந்து அமர்ந்த போது, 

“ஹாய் ரூபிணி… வேலையெல்லாம் பழகியாகி விட்டதா?” என்று ப்ரீதியை பார்த்தபடி ரூபிணியிடம் கேட்டான் ஜவஹர்.

“பழகி விட்டேன் சார்..”

“ஒரே நாளில் எப்படிப் பழக முடியும்? மெல்ல மெல்லத்தான் எல்லாம் புரியும்..” ஜவஹர் ப்ரீதியை ஜாடை யாய் நோக்கியவாறு கூறினான்.

“சில மண்டூகங்களுக்கு எத்தனை வருஷம் ஆனாலும் புரியாது.” ப்ரீதி பல்லைக் கடித்தாள்.

“புரியா விட்டால் புரிய வைக்க முயற்சி பண்ணுவது தானே…” ஜவஹர் நேரடியாய் ப்ரீதியிடம் கேட்டான்.

“எப்படி…?” ப்ரீதி கேட்டதுதான் தாமதம்.. அவன் பாட ஆரம்பித்து விட்டான்.

“அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால்,

உலகம் புரியாதா…?”

சபாபதி ஆச்சரியப்பட்டான்.

“அது எப்படி சார் நீங்க மட்டும் உடனே ஒரு சிச்சுவேசன் சாங்கை போட்டுத் தாக்கறீங்க?”

“காதல் வந்து விட்டால் பாடல் வந்து விடும் சபாபதி” ஜவஹர் பெருமையுடன் ப்ரீதியைப் பார்த்துக் கொண்டான்.

“சபாபதி…” ப்ரீதி அழைத்தாள்.

“என்ன மேடம்…?”

“இப்ப சார் பேசினாரே… ஒரு வசனம்… அது முழுதாக உனக்குத் தெரியுமா?”

“அது பாட்டு மேடம்…”

“அதை நீதான் சொல்ல வேண்டும். எனக்கு அது வசனம்தான்..”

“இல்லை மேடம்… அது நான் உன்னை அழைக்க வில்லைன்னு ஆரம்பிக்கும் பாட்டு…”

“எப்படி ஆரம்பிக்கும்…”

“நான் உன்னை அழைக்கவில்லை…”

“அதை அப்படியே அந்த பிரகிருதிகிட்ட நான் பாடினேன்னு பாடிக்காட்டி வேலையைப் பார்க்க அனுப்பு.”

ஜவஹர் அவள் என்னவோ அவனைப் பார்த்து ‘ஐ லவ் யூ…’ என்று சொல்லிவிட்டதுபோல் முக மலர்ச்சியுடன் அவனது இருக்கைக்குப் போனான்.

ப்ரீதி தலையில் அடித்துக் கொண்டாள்.

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link