Chapter 04
மணக்குளம் விநாயகர் கோவிலில் தோழிகள் நால் வரும் கண்மூடி நின்று வேண்டிக் கொண்டிருந்தனர். அர்ச்சகர் பிரசாதம் கொடுக்கவும் பெற்றுக் கொண்டு கோவிலை வலம் வந்து முன் பிரகாரத்தில் அமர்ந்தனர்.
“அந்தத் தேங்காயை உடைடி கோமளா.”
“நீ திங்கிறதிலேயே குறியாய் இரு…”
“ஹா… ஹா.. வாசவி வயிற்றுக்கு வஞ்சகம் பண்ண மாட்டாள்..”
“மனிதருக்கும் வஞ்சகம் பண்ண மாட்டேன் ஜமுனா..”
தேங்காயை பல்லில் கடித்தபடி கோவிலைச் சுற்றிப் பார்வையை ஒட்டிய ரூபிணி.
“இந்தக் கோவில் எவ்வளவு அழகாய் இருக்கிறது என்று வியப்புடன் கூறினாள்.”
“இந்தக் கோவிலைப் பற்றி ஓர் கதை இருக்கிறது தெரியுமா?” ஜமுனா வாழைப் பழத்தின் தோலை உரித்தபடி வினவினாள்.
“தெரியாதே.”
“பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள் இந்த பிள்ளையார் சிலையை அகற்றப் பார்த்தார்களாம். முடியவில்லையாம். கடற் கரையில் இருந்த பிள்ளையார் சிலையை கையெடுத்து வணங்கிவிட்டு அவர்கள் முயற்சியை விட்டு விட்டார்களாம்.”
பேசியபடியே தோழிகள் கோவிலை விட்டு வெளியே வந்து கடற்கரையோரமாய் நடந்தனர்.
“எவ்வளவு நீட்டான ரோடு பாரேன்…”
“ஆமாம்.. கட்டிடங்கள் கூட பிரெஞ்சுக்காரர்கள் கட்டிய டைப்பில் அமைந்திருக்கிறது…”
“என்னவோ போ… வாசவி… எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. இந்த சாக்கடை கட்டியிருக்கும் விதம் தான் சரியில்லை. நம் ஊர் பக்கங்களில் உள்ளது போல தெரு வோரங்களில் பள்ளமாகக் கட்டிவிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ரோட்டின் இருபக்கமும் சாய்வாய் கட்டி விட்டிருப்பதுதான் சகிக்கவில்லை.. தண்ணீர் தேங்கி நின்று கொண்டு… அதில் குப்பைகள் ஊறிக் கொண்டு… கொசு மொய்த்துக் கொண்டு.. சுகாதாரக்கேடு.. எல்லா வற்றையும் யோசித்து மாற்றியமைக்கும் கவர்ன்மென்ட் இதையும் மாற்றி அமைக்கக் கூடாதா…”
“நீ ஏன் இவ்வளவு கவலைப்படுகிறாய் ரூபிணி. நாம் என்றாவது ஒரு நாள் சுற்றிப் பார்க்க வருகிறோம். வந்தோமா.. போனோமான்னு இருப்பதை விட்டு விட்டு பாண்டிச்சேரியின் சுகாதாரத்தைப் பற்றி வீணாய் ஏன் யோசிக்க வேண்டும்?”
“அப்படிச் சொல்லாதே ஜமுனா.. இது அழகான டூரிஸ்ட் ஸ்பாட்… ‘வாரணம் ஆயிரம்..’ என்று கௌதம் மேனனின் சினிமா பார்த்திருப்பாயே…”
“ஆமாம்.. சூர்யா கூட அப்பா… மகன்… என்ற இரண்டு கெட்டப்பில் வருவார்… பாட்டெல்லாம் சூப்பராய் இருக்கும்.”
“அதில் அப்பா கேரக்டரில் வரும் சூர்யா சிம்ரனைப் பார்த்து பாடும் பாடல் முழுவதும் பாண்டிச்சேரியில் தான் படமாக்கி இருந்தார்கள்…”
“இங்கே நிறையப் படங்களின் ஷூட்டிங் நடக்கும் ரூபிணி.”
“அதனால்தான் சொல்கிறேன். இவ்வளவு அழகான ஊரில்.. சிறு வழக்கத்தை மாற்றாமல் வைத்திருக்கிறார்களே..”
மகாத்மா காந்தியின் சிலையடியில் நின்றபடி கடலைப் பார்த்தார்கள்.. தள்ளு வண்டியில் பாப்கார்ன் விற்றுக் கொண்டு வந்தவனிடமிருந்த பாப்கார்ன் வாங்கிக் கொறித்தபடி-மகாத்மா காந்தி சிலைக்கு எதிரேயிருந்த பூங்காவை நோக்கி நடந்தார்கள்.. பூங்காவிற்குள் இருந்த வெங்கடாஜலபதியின் கோவில் சென்று வணங்கி விட்டு பூங்காவைச் சுற்றி அலுத்து அமர்ந்தார்கள்.
“அடுத்து என்னடி ஜமுனா?” ரூபிணி கால்களை நீட்டி சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தபடி கேட்டாள்.
“இங்கே பீச்சோர ஸ்டார் ஹோட்டல்களில் ஒன்றில் மதியச் சாப்பாட்டை வெட்டலாம்” வாசவி கூறினாள்.
“வாசவி இதைத்தான் சொல்வாள் என்று நினைத்தேன்..” கோமளா அடிக்க வந்த வாசவியிடம் இருந்து தப்பித்துக் கொள்ள எழுந்து தள்ளி நின்று கொண்டாள்.
“வாசவி சொல்வதும் சரிதானேடி… பீச் ரோட்டையும்.. பூங்காவையும் சுற்றி வந்ததில் பசிக்கிறது. மணியும் மதியம் ஒன்றரையாகி விட்டது. சாப்பிட்டு விட்டு… இங்கே கடற்கரையோரமாய் ஷீ கோர்ஷ்ன்னு போட்டிங் போற இடம் ஒன்னு இருக்கு.. அங்கே போய் ஜாலியாய் போட்டிங் போய்விட்டு ஹாஸ்டலுக்கு திரும்பி விடலாம்… எப்படியும் காருக்கு நாள் வாடகைதான் கொடுக்க வேண்டும்..
இன்னும் கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாமே…” ஜமுனா எழுந்து கொண்டாள்.
மெல்லிய மஞ்சள் வெளிச்சத்திலிருந்த ஏஸி ஹாலுக்குள் அவர்கள் பிரவேசித்தார்கள். தோதான இடம் தேடி அமர்ந்தார்கள். எல்லோருக்கும் என்ன வேண்டு மென்று கேட்டு ஜமுனா ஆர்டர் கொடுத்தாள்.
“இன்னைக்கு செம ட்ரீட் கொடுத்திட்ட ஜமுனா… தினமும் உன் பர்த்டே வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்…?” வாசவி கூறினாள்.
“அவ்வளவுதான்… மாதம் முழுவதும் சம்பாதிக்கும் சம்பளத்தை நான்கே நாளில் காலி பண்ணிவிட்டு காலிபர்ஸை வைத்துக்கிட்டு ஜமுனா… ஜிஞ்சா… ஜிஞ்சா.. ன்னு ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பாள்..” கோமளா பொங்கிச் சிரித்தாள்.
“வருடத்திற்கு ஒரு நாள் இப்படி வரலாம்.. தப்பில்லை.. தினம் தினம்ன்னா… அது சரி வராது…” ரூபிணி தண்ணீரைக் குடித்துக் கொண்டே கூறினாள்.
“இவள் ஒருத்தி… எல்லோரும் பணக்கணக்கைப் பார்த்தால் இவள் வெளியே சுற்றக் கணக்குப் பார்ப்பாள்…” ஜமுனா அலுத்துக் கொண்டாள்.
அதற்குள் அவர்கள் ஆர்டர் கொடுத்த உணவு வகைகள் வந்துவிட நால்வரும் அரட்டையும் சிரிப்புமாய் சாப்பிட்டு முடித்தனர். மற்ற மூவருக்கும் முன்னாலேயே சாப்பிட்டு முடித்து விட்ட ரூபிணி கை கழுவ எழுந்து சென்றாள்.
அவள் கை கழுவி விட்டுத் திரும்பும்போது உயரமாய்… ஆஜானுபாகுவாய் இருந்த ஒருவன் வேண்டுமென்றே அவள் மேல் மோதினான்.
“மிஸ்டர்… பார்த்து வரக் கூடாது..” ரூபிணி சீறினாள்.
“பார்த்ததால்தான் வந்தேன்…”
“வாட் டு யு மீன்?”
“தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீஷில் பேசி பயமுறுத்தாதே.. கண்ணுக்கு அழகா இருக்கே.. தொட்டுப் பார்க்கலாம்ன்னு தோணிச்சு.. மேலே மோதிப் பார்த்தேன்… தப்பா?”
“பின்னே… தப்பில்லையா?”
“எனக்குத் தப்பாத் தோணலை. என்னாங்கிற இப்ப..”
அவன் வேண்டுமென்றே அவள் அருகில் நெருங்கி நின்றான். அவனது தோற்றம் அவனை ரௌடியென்று தெள்ளத் தெளிவாக உணர்த்தியது. செம்பட்டை முடியுடன்.. அரக்கு ஜீன்ஸும் டி.சர்ட்டும் அணிந்து.. ஒரு காதில் வளையம் மாட்டியிருந்தான். வாயில் மது வாசனை வீசியது.
நாற்றம் பொறுக்காமல் ஒரு கையால் மூக்கைப் பொத்திக் கொண்ட ரூபிணி, “மரியாதையாய் வழியை விடு.” என்றாள்.
“விட முடியாது.. என்ன செய்வே…?”
அவன் இன்னும் நெருங்க ரூபிணி அருவெறுப்புடன் பயந்து போனவளாய் பின் வாங்கினாள். மிரண்ட அவள் விழிகள். சாப்பிட்டு முடித்து விட்டுக் கை கழுவ வந்து கொண்டிருந்த தோழிகளைப் பார்த்து உதவி நாடி இறைஞ்சின.
நிலைமையைக் கணப் பொழுதில் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.. ஆத்திரத்துடன் வேகமாய் ரூபிணியின் அருகே வந்து நின்று கொண்டார்கள்.
“யார் மிஸ்டர்.. நீ…?” கோமளா முறைத்தாள்.
“தெரிஞ்சுக்கணும்னு ஆசையா..?” அவன் இளித்தான்.
“சகிக்கலை… உனக்கென்ன பெரிய மன்மதன்னு நினைப்பா.. ஆளும்.. மூஞ்சியும்.. லேடிஸ்கிட்ட வம்பு பண்ண அலைகிறாயா?” வாசவி ரூபிணியின் கையைப் பிடித்து தன்புறமாய் இழுத்துக் கொண்டே கேட்டாள்.
“நான் மன்மதன்தான். நீ ரதியாய் வரயா?” அவன் வாசவியை மேலும் கீழும் பார்த்தான்.
“திமிரா… ஹோட்டல் மேனேஜரிடம் கம்ப்ளெயின்ட் பண்ணலாம் வாடி. இந்த மாதிரி ரோக்கையெல்லாம் உள்ளே எப்படி அலோவ் பண்ணினார்கள்ன்னு கேட்கலாம்..” ஜமுனா வேகமாய் கை கழுவினாள்.
“போ.. போய் தாராளமாய் சொல்லு… இது எங்க முதலாளியோட ஹோட்டல். நான் என் இஷ்டத்துக்கு வருவேன்.. போவேன்..” அவன் பார்வையால் அவர்களைச் சூறையாடினான்.
சகிக்க மாட்டாத ஜமுனா விடுவிடென்று சென்று மேனேஜர் என்ற போர்டு போடப்பட்டிருந்த அறையின் வெளியே நின்று கொண்டு கதவைத் தட்டினாள்.
“யெஸ்…” என்றபடி கதவைத் திறந்து கொண்டு டை கட்டிய வாலிபன் ஒருவன் வெளியே வந்தான்.
“உங்களுடைய ஹோட்டல் டீசன்டானது என்று நம்பித்தான் நாங்கள் லன்ச்சுக்கு இங்கே வந்தோம்…” கோபமாய் கூறினாள் ஜமுனா…
“உங்கள் நம்பிக்கை குலையும்படி என்ன நடந்தது மேடம்? இது ஸ்டார் அந்தஸ்துள்ள ஹோட்டல். எங்களின் வாடிக்கையாளர்களுக்கு நல்ல முறையில்தான் சர்வீஸ் பண்ணிக் கொண்டிருக்கிறோம்… உங்களுக்கு என்ன குறையென்று என்னிடம் சொல்லுங்கள். நான் நிவர்த்தி செய்கிறேன்..” அந்த வாலிபன் பவ்யமாய் வினவினான்.
“நாங்கள் நால்வரும் விழுப்புரத்தில் வொர்க் பண்ணுகிறவர்கள். இந்த ஞாயிறை இங்கு மகிழ்ச்சியாக கழிக்கலாமென்று வந்தோம். உங்கள் ஹோட்டலின் ஸ்டார் அந்தஸ்தை மதித்து வந்தால் எங்களுக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைக்கிறது..”
“என்னவென்று சொன்னால்தானே நான் ஏதாவது செய்ய முடியும்?”
“அந்த ஆள் எங்களிடம் மிஸ் பிஹேவ் பண்ணுகிறான்.”
“ஹூ இஸ் தட் ப்ளடி ராஸ்கல்..?”
மேனேஜர் கோபமாய் உள்ளே வந்தான். அந்த ரௌடி அதே இடத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்தான்.. அவனைப் பார்த்ததும் வேகமாய் வந்த மேனேஜர் தயங்கி நின்றான்.
“லாரன்ஸ்… வாட் இஸ் திஸ்..?”
“தமிழ் தெரியாதா… தமிழில் பேசு..”
“ச்சு..” மேனேஜர் அலுப்புடன் தலையை இடம் வலமாக ஆட்டினான்.
“லாரன்ஸ்.. நீ இருக்க வேண்டிய இடம் பிஷ் எக்ஸ் போர்ட் கம்பெனியில். இங்கே உனக்கு என்ன வேலை..?”
“அதை நீ கேட்காதே…”
“நான் கேட்காமல் வேறு யார் கேட்பார்கள்? இது என்னுடைய கன்ட்ரோலில் இருக்கும் ஹோட்டல். இங்கே வரும் லேடிஸிடம் நீ தகராறு பண்ணுவதை நான் அனுமதிக்க மாட்டேன்…”
“என்ன செய்வாய்…?”
“எம்.டி.யிடம் கம்ப்ளெயின்ட் பண்ணினேன்னு வை.. நீ இந்த ஹோட்டலுக்குள் எப்போதுமே கால் வைக்க முடியாது..”
லாரன்ஸ் அடங்கிப் போனாள். சிவந்த விழிகளால் அவர்கள் நால்வரையும் உறுத்து விழித்து விட்டு வெளியேறப் போனான்.
“லாரன்ஸ்… அவங்ககிட்ட ஸாரி சொல்லிட்டுப் போ..”
“என்னையா ஸாரி கேட்கச் சொல்லுகிறாய்..?”
“உன்னைத் தான் சொல்கிறேன்.. நம் ஹோட்டலுக்கு வந்தவர்கள் மனம் வருந்திப் போகக்கூடாது.. ஸாரி சொல்லு.. இல்லையென்றால் நான் நடந்ததை எம்.டி. யிடம் சொல்வேன்…”
லாரன்ஸ் தன் கருத்த முகம் இன்னும் கருக்க பெண்கள் நால்வரையும் முறைத்துக் கொண்டே பல்லைக் கடித்துக் கெண்டு,
“ஸாரி…” என்றான்.
பின் விர்ரென்று அங்கிருந்து வெளியேறி விட்டான். மேனேஜர் சிரித்த முகமாய் ஜமுனாவின் பக்கம் திரும்பி.
“இப்ப திருப்திதானே மேடம்..? எங்கள் ஹோட்டலில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு வருந்துகிறேன்.. இனி ஒரு போதும் இப்படி நடக்காது.. நீங்கள் எல்லோரும் எப்போது பாண்டிச்சேரிக்கு வந்தாலும் எங்கள் ஹோட்டலுக்கே வரவேண்டும்..” என்று வேண்டிக் கொண்டான்.
“ஷ்யூர்…” ஜமுனா சிரித்தவாறு விடைபெற்றுக் கொள்ள அவர்கள் நால்வரும் ஹோட்டலை விட்டு வெளியே வந்து காரில் ஏறினார்கள். ரூபிணி மௌனமாக வந்தாள்.
“ஏண்டி… இவ மூட் அவுட் ஆகி இருக்காள்..?” ஜமுனா விடம் வினவினாள் வாசவி.. ஜமுனா ரூபிணியைக் கேள்வியாகக் பார்த்தாள். அவள் முகம் சுளித்தபடி,
“எனக்கு போட்டிங் வர இஷ்டமில்லை. ஹாஸ்டலுக்குப் போய் விடலாம்…” என்றாள்.
“எதுக்கு…?”
“ஜமுனா… எனக்கென்னவோ அந்த ரௌடியைப் பார்க்க பயமாய் இருக்கிறது.. அவன் பார்வையே சரியில்லை..”
“போடி… அவனுக்காக நம் புரோகிராமை மாற்றுவதா..”
ஜமுனா பிடிவாதமாய் போட்டிங் போக அவர்களை அழைத்துச் சென்றாள். அங்கே ரூபிணி பயந்தது போல் அந்த ரௌடி நின்று கொண்டிருந்தான்.
“இவன் ஏண்டி இங்கே வந்தான்…?”
“நமக்கு முன்னாடியே எப்படி வந்து நிற்கிறான் பார்..”
தங்களுக்குள் பேசிக் கொண்டபடி அவர்கள் போட்டிங் போக போட்டில் ஏறினார்கள்.. திரும்பி வந்து காரையில் ஏறும்போது லாரன்ஸ் வேகமாக வந்து ரூபிணியின் கையைப் பிடித்தான். அதிர்ந்து போன ரூபிணி அவனை ‘பளார்’ என்று கன்னத்தில் அறைந்து விட்டாள். எல்லோரின் மத்தியிலும் ஒரு பெண்ணின் கையால் அடி வாங்கியவன் மீண்டும் அவள் மேல் பாய்ந்தான். அதற்குள் நான்கு பெண்களும் சேர்ந்து அவனை மொத்து மொத்தென்று மொத்தி விட்டனர். அத்தோடும் விடாமல் போலீஸில் கம்ப்ளெயின்ட் பண்ணி உள்ளே தள்ளி விட்டனர்.
Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.