Chapter 06
மதிய உணவு உண்ண டைனிங் டேபிளில் அமர்ந்து ஒரு கவளம் எடுத்து வாயில் வைத்திருப்பாள் ரூபிணி. சபாபதி பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான். மூச்சிரைக்க தன் முன் வந்து நின்றவனைப் பார்த்து வியப்புடன்,
“எதுக்கு சபாபதி இப்படி ஓடி வருகிறாய்?” என்று கேட்டாள் ரூபிணி…
“மேடம்… மேடம்…” அவன் வார்த்தைகளால் தந்தி அடித்தான்.
“இந்தாப்பா.. தண்ணி. குடித்துவிட்டு பதட்டப்படாமல் சொல்லு..” ரூபிணி அவனிடம் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள்.
அவசரமாய் அதை வாங்கிக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன்,
“உங்களைப் பார்க்க அவர் வந்திருக்கார் மேடம்…” என்றான்.
“எவர்…?” ரூபிணி புருவம் உயர்த்தினாள்.
“ஹரிஹரன் சார்…”
அவன் வார்த்தையைக் கேட்ட டைனிங் ஹாலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்கள் அனைவரும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவர்களையே பார்த்தனர். தன்னைச் சுற்றிலும் பார்வையை ஓடவிட்ட ரூபிணி உணவுப் பொட்டலத்தை அப்படியே வைத்து விட்டு எழுந்தாள்.
“இருடி… நானும் வருகிறேன்…” ப்ரீதி எழப் போனாள்.
“வேண்டாம் ப்ரீதி… நான் போய் விட்டு வந்து விடுகிறேன்.. நீ சாப்பிடு” ரூபிணி அவளைத் தடுத்து விட்டாள்.
“என்னடி பிரச்னை?”
“நத்திங்…”
“அந்த ஆள் பயங்கரமானவர்…”
“இருக்கட்டுமே.. எனக்கென்ன வந்தது?”
ரூபிணி கைகழுவிவிட்டு கைக்குட்டையால் கையைத் துடைத்துக் கொண்டு சபாபதியைக் பார்த்து,
“எங்கேயிருக்கிறார்…?” என்று வினவினாள்.
“ஆபிஸரோட ரூமில்…”
“சரி நான் போய் பார்த்துக் கொள்கிறேன்.. நீ போ..”
ரூபிணி ஆபிஸரின் அறைக் கதவை ஒரு விரலால் தட்டினாள்.
“யெஸ் கமின்…” ஆபிஸரின் குரல் கேட்டது.
உள்ளே நுழைந்தாள். ஆபிஸர் அவரது இருக்கையை விட்டு எழுந்தார்.
“மிஸ் ரூபிணி… சார் உங்களிடம் ஏதோ பேச வேண்டுமாம். பேசிக் கொண்டிருங்கள். நான் லன்ச்சுக்கு போய் விட்டு வந்து விடுகிறேன்..” என்றவர் அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினார்.
தனது அதிகாரத்தை உணர்த்தும் தோரணையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள் ரூபிணி.
மாநிறம்.. உயரமான தோற்றம்.. பெரிய மீசை.. கூரிய விழிகள்.. எதிரேயிருந்தவன் ஒரு இரும்பு மனிதன் என்று முதல் பார்வையிலேயே பிடிபட்டு விட அவன் அருகேயிருந்த மற்றொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு,
“வணக்கம்…” என்றாள் ரூபிணி.
அவனும் அவளை எடை போட்டுக் கொண்டுதான் இருந்தான். ‘போலீஸ் கம்பளெயின்ட்’ என்றதும் அடாவடியான ஆத்திரக்காரப் பெண்ணை எதிர்பார்த்து வந்தவனுக்கு.. மென்மையான தோற்றத்துடன் ஓர் பூங்கொடி போன்ற மெலிவுடன் உயரமாய் அழகாய் வந்து அமர்ந்து கரம் குவித்த பெண்ணைப் பார்த்ததும் வியப்பாய் இருந்தது.
அவளது வணக்கத்தை சிறு தலையசைவால் அங்கீகரித்தவன், “நீங்கள் வெளியூர் என்று கேள்விப்பட்டேன்.. இந்தப் பக்க நிலவரம் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… என்னுடைய மதிப்பும்… மரியாதையும் எந்த அளவில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.. என்னுடைய பலம் தெரியாமல் விளையாடிப் பார்க்கிறீர்கள். என் பலத்தை ஒரு பெண்ணிடம்.. அதுவும் ஊர் விட்டு ஊர் வந்திருக்கும் இளம் பெண்ணிடம் பிரயோகம் பண்ண எனக்கு விருப்பமில்லை. அந்த ஒரே ஓர் காரணத்திற்காகத்தான் நான் உங்களைத் தேடி வந்தேன்… இதுவே வேறு ஒரு ஆளாக இருந்திருந்தால் என் ஆளை போலீஸில் மாட்டி விட்டதற்காக உண்டு இல்லை என்று பண்ணியிருப்பேன்…” என்று கோபமாய் தாடையைத் தடவியபடி கூறினான்.
ரூபிணி நிதானத்தை இழக்கவில்லை.
“சார்.. நான் வெளியூர். எனக்கு உங்களைப் பற்றியும் உங்கள் பெருமைகளைப் பற்றியும் தெரியாது.. ஆனால் உங்கள் ஆள் என்று நீங்கள் சொல்லிக் கொள்ளும் அந்த லாரன்ஸிற்கு உங்களைப் பற்றியும் உங்கள் பெருமை களைப் பற்றியும் தெரியும் தானே..?” அமைதியாய் வினவினாள்.
“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” அவன் புருவம் உயர்த்தி வினவினான்.
“உங்கள் பெருமைகளை சீர்குலைக்கும் வண்ணம் அவன் நடந்து கொண்டான் என்பதைச் சொல்ல வருகிறேன்.. நான் அவன் மேல் புகார் கொடுத்தவுடன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் முதற் கொண்டு… என் கூட வேலை பார்ப்பவர்கள் வரை உங்களைப் பற்றிச் சொன்னார்கள்.. ஒருவர் கூட நீங்கள் பெண்களை அவமரியாதை செய்யும் வழக்கமுள்ளவர் என்றோ பெண்களிடம் தகாத வார்த்தைகள் பேசி தகாத முறையில் நடந்து கொள்பவர் என்றோ சொல்லவில்லை… அப்படியிருக்கையில் உங்களைப் போன்ற ஓர் மனிதரிடம் வேலை பார்ப்பவன் பெண்களிடம் வம்பு பண்ணலாமா? அவன் உங்களைச் சேர்ந்தவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவனுடைய பழிபாவம் எல்லாமும் உங்களைச் சேர்ந்து விடும் என்று அவன் நினைக்க வில்லையே… நான் உங்கள் கௌரவத்தை மதிக்கிறேன் சார்.. அவன்தான் உங்கள் கௌரவத்தை மதிக்கவில்லை… மதித்திருந்தால் இப்படி ஒரு கீழ்த்தரமான மனிதனுக்காக உங்களைப் போன்ற ஓர் பெரிய மனிதர் பரிந்து கொண்டு என்னைப் பார்க்க வரும் நிலையை உருவாக்கி இருக்க மாட்டான்…” ரூபிணி தெளிவாகப் பேசினாள்.
ஹரிஹரன் அயர்ந்து விட்டான். இந்த விசயத்தை இப்படி ஒரு கோணத்தில் அவன் சிந்திக்கவில்லையே…
“லாரன்ஸ் என்ன செய்தான்…?” யோசனையாய் அவளைப் பார்த்தபடி வினவினான் ஹரிஹரன்.
“நாங்கள் நான்கு பேர்… பாண்டிச்சேரியைச் சுற்றிப் பார்க்கப் போனோம்.. மதியம் லன்ச் சாப்பிட உங்களது ஹோட்டலுக்குச் சென்றோம். சாப்பிடும் இடத்தில் நான் கைகழுவப் போனபோது இந்த லாரன்ஸ் வந்து என் மேல் வேண்டுமென்று மோதி அசிங்கமாய் பேசினான். ‘பார்த்து வரக்கூடாதா என்று கேட்டேன். உன்னைப் பார்த்ததால் தான் வந்தேன்.. தொட்டுப் பார்க்க வேண்டும்ன்னு தோணிச்சு.. உன் மேல் மோதினேன்.. என்ன இப்ப’ என்று கேட்டான். என் பிரண்ட்ஸ் வந்து என்னைக் காப்பாற்றினார்கள். ஹோட்டல் மேனேஜரிடம் புகார் பண்ணினோம்…” ரூபிணி கூறிக் கொண்டிருக்க,
“யார்.. பிரசாத்திடமா?” என்று கேட்டான் ஹரிஹரன்.
“எங்களுக்கு அவருடைய பெயர் தெரியாது சார்.. அவர் வந்து லாரன்ஸை திட்டி எங்களிடம் ஸாரி சொல்லச் சொன்னார். அவனும் ஸாரி கேட்டான். ஹோட்டல் மேனேஜர் நடந்தவைக்கு வருத்தம் தெரிவித்தார்… நாங்களும் அதை அப்படியே விட்டு விட்டு போட்டிங் போனோம். அங்கே இந்த லாரன்ஸ் வந்து என் கையைப் பிடித்து இழுத்து விட்டான் சார்…” ரூபிணியின் கண்கள் சிவந்து கலங்கின.. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவள் தொடர்ந்தாள்.
“நான் அவன் கன்னத்தில் அறைந்து விட்டேன்.. அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல்தான் போலீஸில் புகார் கொடுத்தேன்… அவனைப் பழி வாங்க வேண்டும் என்பதற்காக அல்ல… அவன் இனிமேலும் இப்படிப்பட்ட தவறுகளைச் செய்யக் கூடாது என்பதற்காக…”
ஹரிஹரன் அவளையே இமைக்காமல் பார்த்தான். அவள் வார்த்தைகளில் பொய்யில்லை. முகத்தில் நேர்மை இருந்தது. தனக்கு ஏற்பட்ட அவமரியாதையை விவரிக்கும் போது அவளது கண்களில் மனதின் வலி தெரிந்தது.
ஹரிஹரன் போனை எடுத்தான். நம்பரை அழுத்திப் பேசினான்.
“பிரசாத்… லாஸ்ட் சன்டே.. லன்ச் டயத்தில் நம் ஹோட்டலில் சாப்பிட வந்த நான்கு லேடிஸ் உன்னிடம் வந்து கம்ப்ளெயின்ட் பண்ணினார்களா?”
மறுமுனையில் பேசப்படுவதை குறுக்கிடாமல் கேட்டவன். போனை அணைத்து விட்டு ரூபிணியைப் பார்த்தான்.
“பிரசாத் நீங்கள் சொன்னதைத்தான் சொல்கிறான்.. இப்போது நீங்கள் ஒரு வார்த்தை சொன்னீர்களே.. அவனை பழி வாங்க நினைக்கவில்லை.. இனி இது போன்ற தவறுகளை அவன் செய்யக்கூடாது என்று… அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.. அவனுக்கான தண்டனையை நான் கொடுக்கிறேன். ஹரிஹரனிடம் வேலை பார்த்த ஆள் கோர்ட்டில் போய் நிற்கக் கூடாது… என் மேல் நம்பிக்கை இருந்தால் உங்கள் கம்ப்ளையின்ட்டை வாபஸ் பண்ணி விடுங்கள்…”
ரூபிணி பதில் பேசாமல் ஆபிஸரின் டேபிளில் இருந்த பேனாவையும் பேப்பரையும் எடுத்தாள். மடமடவென்று தன் புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக எழுதி ஹரிஹரனிடம் கொடுத்தாள்.
“நான் உங்களை நம்புகிறேன் சார்..”
அந்த முதல் சந்திப்பு அவர்கள் இருவரின் மனதிலும் ஒருவர் மேல் மற்றொருவருக்கு மிகப் பெரிய மதிப்பையும் மரியாதையையும் உண்டு பண்ணி விட்டது. இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிக் கொள்ளும் வரை ஒருவர் மேல் மற்றொருவர் கோபமாகவே இருந்தார்கள்.
ரூபிணிக்கு ஹரிஹரன் ஓர் ‘தாதா’ என்று தெரியப் படுத்தப் பட்டிருந்தான். அவனிடம் வேலை பார்க்கும் ஆளோ பெண்களிடம் மிகக் கேவலமாய், கண்ணியக் குறைவாய் பேசவும். நடந்து கொள்ளவும் செய்தான். அப்படிப் பட்ட ஆளை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளி எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற எண்ணம் ரூபிணிக்கு இருந்தது.
ஹரிஹரனுக்கோ தன்னிடம் வேலை பார்ப்பவனை போலீஸில் ரிமான்ட பண்ணியது தன் பலக்குறைவு என்பதில் கோபம் வந்தது. புகார் கொடுத்த பெண்ணிடம் தான் எவ்வளவோ ஹரிஹரனைப் பற்றி எடுத்துக் கூறியும் அவள் அதை கேட்டுக் கொள்ள மறுத்து விட்டாள் என்று போலீஸ் இன்ஸ்பெக்டரே கூறி விட்டார். சிறு கேலிப் பேச்சைக் கூட பொறுத்துக் கொள்ளாமல் ‘ஈவ் டீஸிங்’ என்ற பெயரில் தனது ஆளை உள்ளே தூக்கிப் போட்டு விட்டாள் என்ற கொதிப்பு ஹரிஹரனுக்கு இருந்தது. கூடுதலாக விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு ஊர் சுற்ற வந்த பெண் எப்படிப்பட்டவளாக இருப்பாள் என்ற எண்ணமும் இருந்தது.
ரூபிணிக்கு ஒரு விசயம் நன்றாக நினைவில் இருந்தது. பாண்டிச்சேரி ஹோட்டல் மேனேஜர் லாரன்ஸிடம் ‘இங்க நடந்ததை எம்.டி. கிட்ட சொன்னேன்னு வை. நீ ஹோட்டலில் கால் வைக்க முடியாது…’ என்று கூறினான். அத்தோடு விட்டு விடாமல் எம்.டி.யின் பெயரைச் சொல்லி மன்னிப்பு வேறு கேட்க வைத்தான். ஒரு வேளை ஹரிஹரன் பெண்களிடம் தரக்குறைவாய் நடந்து கொள்வதை அனுமதிக்காதவனாய் இருக்கலாம் அல்லவா?
அந்த நினைவில்தான் ரூபிணி.. தன் தரப்பு நியாயங்களை அவனிடம் எடுத்துக் கூறினாள். மென்மையான குணம் கொண்ட பெண். ஊர் சுற்றிப் பார்க்க வந்த இடத்தில் அவனிடம் வேலை செய்த ஆளால் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டதை உணர்ந்து கொண்டான் ஹரிஹரன்.
ரூபிணி நடந்த தவறுக்கு நியாயம் கேட்காமல்… அவனைத் தண்டிக்க விரும்பாமல்.. இனி இது மாதிரியான தவறுகளை அவன் செய்யக்கூடாது என்பதற்காக புகார் கொடுத்ததாகக் கூறியது ஹரிஹரனின் மனதைக் கவர்ந்து விட்டது.
ஹரிஹரன் சில குணங்களைக் கொண்டவன். அவனை நம்புகிறவர்களுக்கு அவன் கடவுள்.. தன்னிடம் உதவி கேட்டு ஒருவர் வந்து விட்டால் தன் உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டான். அதுவே ஒருவன் அவனை எதிர்த்து நின்று விட்டால்… அவனை கூண்டோடு அழிக்கவும் செய்வான்.
இங்கே அவன் ஒன்றைத்தான் ரூபிணியிடம் சொன்னான்.
“என் மேல் நம்பிக்கை இருந்தால் புகாரை வாபஸ் பண்ணுங்கள்…”
உடனே ரூபிணி தன் புகாரை வாபஸ் பண்ணி எழுதி அவன் கையில் கொடுத்து விடவும் அவன் மனம் இதமாகி விட்டது.. அவனைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு பெண்.. அவளை அவமரியாதை செய்தவனை யார் சொல்லியும் கேட்காமல் உள்ளே தூக்கிப் போட்டவள்.. அவன் சொன்ன ஓர் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறாள்.
எத்தனையோ வெற்றிகளை தினம் தினம் சந்திக்கும் அந்த பலவான் அந்த வெற்றிகளில் அடைந்த மனநிறைவை விட இன்று அதிக அளவில் மனம் நிறைந்து விட்டதாக உணர்ந்தான்.
ரூபிணிக்கு அவன் காட்டிய கண்ணியமும்… நிதானமும் ஆச்சரியத்தை அளித்தது.. மற்றவர்கள் பயமுறுத்திய அளவிற்கு அவன் கொடியவன் அல்ல என்றே அவளுக்குத் தோன்றியது. அவன் நினைத்திருந்தால் அவளை போனில் மிரட்டியிருக்கலாம். அல்லது அவனுடைய உதவியாளர்களில் ஒருவரை அனுப்பி அவளிடம் பேச வைத்திருக்கலாம். அவ்வாறு சொய்யாமல் நேரடியாய் அவளைச் சந்திக்க அவனே வந்ததும் அல்லாமல்.. அவளிடம் மரியாதையாய் அவன் பேசிய விதமும்.. அவளின் மனக்குறையை கேட்டவுடன் தன் ஹோட்டல் மேனேஜரிடம் பேசி அது உண்மை என்பதை அறிந்து கொண்டு.. தவறுக்கு தண்டனையை தான் கொடுப்பதாக உத்தரவாதம் அளித்ததும்.. அவளது மனதைத் தொட்டு விட்டது. உடனடியாய் தன் புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டாள்.
ரூபிணியிடம் இருந்து பேப்பரை வாங்கிக் கொண்ட ஹரிஹரன் எழுந்து கொண்டான். ரூபிணியும் எழுந்து நின்றாள்.
முதன் முதலாக ஒரு பெண்ணிடம் இயல்பாய் விடை பெற முடியாமல் தன் தொண்டையில் வார்த்தைகள் சிக்கிக் கொள்வதை உணர்ந்த ஹரிஹரன் ஒரு சிறு தலை அசைவுடன் அவளிடமிருந்து விடைபெற்றான்.
புலியின் மனதில் புள்ளிமானின் மேல் ஈர்ப்பு தோன்றி விட்டது.
Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.