Chapter 09

0Shares

 ‘இனம் விளங்கவில்லை – எவனோ

      என் அகம் தொட்டு விட்டான்….’

தூண்டிற் புழுவினைப் போல் துடித்த பெண் கூறுவதாய் பாரதியாரின் கவிதை சொல்கிறதே… அந்தத் தவிப்பை அன்று அனுபவித்தாள் ரூபிணி..

ஓர் நாள்… சில நிமிடங்கள் மட்டுமே பார்த்த அவன் முகம் நினைவில் வர மறுத்தது.. அவனது ஆண்மை நிரம்பிய கனத்த குரல் மட்டுமே.. அதில் தொனித்த கம்பீரம் மட்டுமே.. அவள் நினைவில் நின்றது.

ஹரிஹரன்..! பெயரைக் கேட்டால் அழுத குழந்தை வாய் மூடுமாமே… இன்று அவன் பெயரை நினைத்தாலே அவளது நெஞ்சம் இனிக்கிறதே ஏன்?

“சரியாப் போச்சு போ.. குழாயைத் திறந்து விட்டுக் கையைக் கழுவாமல் அப்படி என்னடி யோசித்துக் கொண்டிருக்கிறாய்.. சாப்பிட்ட கையே காய்ந்து விட்டது? வாட் இஸ் ராங் வித் யு?”

“நத்திங்… நத்திங்…”

அவசரமாய் கையைக் கழுவினாள் ரூபிணி.. அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி கையைக் கழுவிய ஜமுனா,

“ஊஹீம்.. நீ இன்றைக்கு ஒரு மார்க்கமாய் இருக்கிறாய். திருதிருவென விழிக்கிறாய்.. எதுவோ உன்னிடம் சரியில்லை.. ரூமுக்கு வா.. பேசிக் கொள்கிறேன்…” என்றபடி விடுவிடென்று முன்னால் போனாள்.

மாட்டிக் கொண்ட உணர்வுடன் நாக்கைக் கடித்துக் கொண்ட ரூபிணி அவளைப் பின் தொடர்ந்தாள்.

“ஜமுனா.. உன் ரூம் மேட் காமினி என்ன செய்கிறாள்..” வார்டன் மணிமேகலை வினவினாள்.

“இதுகூட இது ஒரு லொள்ளு.. மேடம் இதோ என் கூட ஆடு திருடின கள்ளி போல ஓர் விழி விழித்துக் கொண்டு வருகிறாளே இவள்தான். என் ரூம் மேட் ரூபிணி.. காமினி இல்லை..”

“ரூபிணியை எனக்குத் தெரியாதா? நீ போம்மா…”

“ஏய்… வந்து விடுடி.. அது பாட்டுக்கு வேறு ஏதாவது தாமினின்னு ஆரம்பித்து வைக்கும்.”

ஜமுனா சன்னக் குரலில் எச்சரித்தவாறு விரைந்தாள்.

“ஹி.. ஹி.. போய்விட்டு வருகிறேன் மேடம்..” ரூபிணி மணிமேகலையிடம் விடைபெற முனைய அவள் மூக்குக் கண்ணாடியை சரி செய்தவாறு ரூபிணியை ஏற இறங்கப் பார்த்தாள்.

“ஏம்மா.. எந்த ஊருக்குப் போகிறாய்? உனக்கு டிரான்ஸ்பர் கிடைத்து விட்டதா?”

ஜமுனா தள்ளி நின்று கொண்டு தலையில் அடித்துக் கொண்டாள்.

“ஏய்ய்… வாடி இங்கே…”

மீண்டும் விடைபெற்றால் மணிமேகலை வேறு எதையாவது கேட்டு வைப்பாளென்ற பயத்தில் ரூபிணி வாயே திறக்காமல் ஜமுனாவிடம் ஓடினாள்.

“ஏண்டி.. இன்னைக்கு பேக்கு போல நடந்து கொள்கிறாய்..? சாப்பிட வந்தோம். மாடியிலிருக்கிற ரூமிற்குப் போகிறோம். என்னவோ ஏழு கடல் தாண்டி போகப் போகிறவள் மாதிரி மறதி மணிமேகலையிடம் போய் பிரியா விடை வாங்கிக் கொள்கிறாயே.. அது கேட்டு வைத்தது பார் சரியான ஓர் கேள்வி.. சில சமயம் மறதி மணிமேகலை கூட புத்திசாலி ஆகி விடுகிறது. உன்னைப் போல புத்திசாலிகள் மண்டூகம் ஆகி விடுகிறார்கள்..”

“சரி.. சரி.. ஏனிப்படி மண்டகப்படி நடத்துகிறாய்..”

“நீ செய்யும் கேணத்தனமான வேலைகளுக்கு மண்டகப்படி நடத்தாமல் மெச்சிக் கொள்ளனுமா.. உள்ளே வா.. ரூம் கதவை லாக் பண்ணப் போகிறேன்…”

இனி ஜமுனா கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவாள். எப்படி பதில் சொல்வது? யோசனையுடன் அறை ஜன்னலுக்குப் போய் வானத்தை வெறித்தாள் ரூபிணி… நட்சத்திரங்கள் கண் சிமிட்ட வானில் நிலவு தன் பவனியைத் தொடங்கியிருந்தது. அவள் உடல் மேல் இரவு நேரக் குளிர் காற்று தொட்டு விளையாடியது.

மனதில் ஓர் சிலிர்ப்புடன் ஜமுனாவின் கேள்விக் கணைகளை எதிர்பார்த்து நின்றிருந்தவள்.. அவளிட மிருந்து எந்தவித வார்த்தைகளும் வெளிவராமல் போகவே திரும்பிப் பார்த்தாள்…

கட்டிலில் அமர்ந்து தலையணையை மடியில் வைத்து அதில் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு கைகளில் முகம் புதைத்தவளாய் ஜமுனா மௌனமாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி…?”

“எதுவும் பேச மாட்டேன்கிற…?”

“நீ பேசுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்…” ஜமுனாவின் பார்வை அவளைத் துளைத்தது.. ரூபிணி தடுமாறினாள்.

“எதைச் சொல்ல…?”

“நீ மௌனமாய்… மௌனத்தை ரசிப்பதற்கான காரணத்தைச் சொல்லு…”

“ஜமுனா…”

ரூபிணி உதடு கடித்து தலை குனிந்தாள்.. ஜமுனாவின் முகம் பார்க்காமல் சொல்லி முடித்தாள். ஜமுனாவின் முகம் மாறியது… இருண்டது.

“ரூபிணி…” ஜமுனாவின் குரலில் கவலை இருந்தது.

“சொல் ஜமுனா…” ரூபிணி கனவில் மிதந்தவளாய் பதில் கூறினாள்.

“இது சாதாரண விசயமல்ல…”

“எனக்கும் தெரிகிறது..”

“எனக்கென்னவோ… நீ நெருப்போடு விளையாடுகிறாய் என்று தோன்றுகிறது.. இது மிகவும் அபாயகரமான விளையாட்டு…”

ரூபிணியின் முகம் சிந்தனையைக் காட்டியது.. மௌனமாய் கட்டிலின் மெத்தையில் கைவிரலால் கோலமிட்டாள்.. பின் தலை நிமிர்ந்து ஜமுனாவைப் பார்த்துக் கூறினாள்.

“நான் இந்த விளையாட்டை ஆரம்பிக்கவில்லை ஜமுனா.. என்னால் ஒரு குடும்பமே பட்டினி கிடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது எப்படி?”

“அன்றைக்கே நான் சொன்னதைக் கேட்டிருந்தால் இது நடந்திருக்குமா? போலீஸில் கம்ப்ளெயின்ட் கொடுக்காதே என்று எவ்வளவு முறை எடுத்துச் சொன்னேன்? நீ கேட்கவில்லையே…”

“தவறு செய்தவனுக்கு தண்டனை வேண்டாமா? அவன் மேலும் மேலும் இது போல தவறுகளைச் செய்யாமல் தடுக்க வேண்டாமா…?”

“இப்போதுதான் அவனுக்கு தண்டனை கிடைத்து விட்டதே.. இதில் மேலேயும் ஏன் தலையைக் கொடுத்தாய்?”

“இது அதிகப்படியான தண்டனை ஜமுனா… அவனை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது. அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்தாயா? அதைப் பார்த்த பின்னும் அதைப் பட்டினி போட மனம் வருமா? நீயே சொல்…”

“அதற்காக.. அதற்காக.. ரூபிணி எப்படி நீ ஹரிஹரனுடன் போனில் பேசத் துணிந்தாய்? உனக்குப் பயம் என்பதே இல்லையா..?”

“எதற்குப் பயம்? அவரும் மனிதர்தானே…” சொல்லும் போதே அவனை முதன் முதலில் பார்த்தபோது ‘இரும்பு மனிதன்’ என்று தான் எண்ணியது ரூபிணிக்கு நினைவில் வந்தது.

“என்னடி… இவ்வளவு சாதாரணமாகச் சொல்கிறாய்? அவரைப் பற்றிய பேச்சு என்ன சொல்கிறது தெரியுமா? அவர் ஒரு ‘தாதா’ என்று சொல்கிறது.. அவர் மிகப் பெரிய பணக்காரர். உன்னாலும் என்னாலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு பணக்காரர்.. அரசியலில் அதிக அளவு செல்வாக்கு உள்ளவர். கட்சி பேதமில்லாமல்.. இந்தப் பகுதியில் யார் ஜெயிக்கிறார்களோ… அவர்கள் அனைவரும் அவர் கேட்பதை செய்து கொடுப்பார்கள்.. அவர் விரல் நுனியில் ஒரு ராஜாங்கமே நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதரிடம் போய் விளையாட்டாய் பேசியிருக்கிறாய்..”

“அது விளையாட்டுப் பேச்சில்லை ஜமுனா…”

“அவருக்கு அது விளையாட்டாய் தோன்றி விட்டால் என்ன செய்வாய்? வேண்டாம் ரூபிணி.. இது போன்ற செயல்களை இனி செய்யாதே.. விட்டுவிடு. உன் மேல் அக்கறையிருப்பதால்தான் சொல்கிறேன்.. இது விபரீத விளையாட்டு.”

ஜமுனா படுத்து விட்டாள்.. இயந்திர கதியில் விளக்கை அணைத்து விட்டுப் படுத்த ரூபிணிக்கு தூக்கம் வரவில்லை…

‘தூங்காத கண்ணென்று ஒன்று..

துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று

தந்தாயே நீயென்னைக் கண்டு..’

கண்ணதாசனின் திரைப்படப் பாடல் அவளது நெஞ்சினில் ஒலித்தது. ‘துடிக்கின்ற சுகம்..!’ எவ்வளவு சரியான வார்த்தை.. துடிப்பது சுகமாய் அமைவது எப்படி? உணர்ந்தவள் தவித்தாள்.. துடித்தாள்…

“நெருப்போடு விளையாடுகிறாய்…!”

“இல்லை ஜமுனா.. நான் நெருப்போடு விளையாட வில்லை.. அவர் நெருப்பென்று நினைத்து நான் பேசவில்லை.. பேசி முடித்த பின்னால் தான் என் தேகம் சுடுகின்றது.. இந்தத் தவிப்பை உனக்கு எப்படிப் புரிய வைப்பேன்.. சொல்ல முடியாத இந்த சுகமான வேதனையை வார்த்தைகளால் விவரிக்க வழி தெரியாமல் துடிக்கிறேன் ஜமுனா…”

ரூபிணி தலையணையில் முகம் புதைத்து தலையை உலுக்கிக் கொண்டாள். புரண்டு படுத்தாள்.

    ‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா.. நின்னை

     தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா…’

தீயும்.. நீராய் மாறி குளிர்விக்கும் விந்தையான விளையாட்டு இது. ரூபிணியின் இதழ்களில் புன்னகை அரும்பியது. இது உனக்குத் தெரியாது ஜமுனா.. அவன் பெயரைச் சொல்லும் போதே நீ பயப்படுகிறாய்.. நினைக்கும்போதே என் நெஞ்சம் இனிக்கிறது..

வெறும் நினைவு தானே.. அவனை நினைக்கக் கூடவா என் மனதிற்குத் தடை…? தன் உணர்வுகளுக்கு விடை கிடைத்து விட்ட தெளிவுடன் கண் மூடி உறங்கி விட்டாள் ரூபிணி…

அடுத்து வந்த நாட்களில் அவனைப் பற்றிய பேச்சையே ரூபிணி எடுக்காததால் ஜமுனா அதை மறந்தே போனாள்..

ரூபிணியின் அலுவலகத்தில் மூர்த்தி என்ற ஒருவன் கோயம்புத்தூரிலிருந்து மாறுதலாகி வந்து சேர்ந்தான்… வந்த முதல் நாளே ரூபிணியிடம் வந்து தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“ஐ.. ஆம் மூர்த்தி.. கோவையிலிருந்து வருகிறேன்..”

“ஆபிஸில் சொன்னார்கள்.. என்ன வேண்டும் சார்?”

“நீங்கள் தான் வேண்டும்..”

“வாட்…?”

“உங்கள் அறிமுகம்தான் வேண்டும்..”

“எதற்காக…?”

“ம்ம்.. பார்த்த முதல் பார்வையிலேயே வசீகரித்து விட்டீர்கள்..”

அவனது குரலில் ஓர் மாற்றம் இருந்தது.. முன்பின் தெரியாத பெண்ணிடம் இப்படியா பேசுவார்கள்? ரூபிணிக்கு கோபம் வந்தது.

“கேட்ட முதல் பேச்சிலேயே வெறுக்க வைத்து விட்டீர்கள்..” ரூபிணி பட்டென்று பதில் சொன்னாள்.

மூர்த்தியின் முகம் சுருங்கி விட்டது. தன்னுடைய அழகான தோற்றத்தில் அவனுக்கு கர்வம் உண்டு. தன் தோற்றத்திலும் பேச்சிலும் மயங்காத பெண்கள் இல்லை என்பது அவனது எண்ணம். இதுவரை அவன் வேலை பார்த்த ஊர்களில் அலுவலகத்திலும், வெளியிலும்.. அவனது அழகிலும்.. நளினமான பேச்சிலும் மயங்கிய பெண்கள் ஏராளம். இவள் மட்டும் என்ன பெரிய மேனகையா? இவளை மயக்க அவனால் முடியாதா?

முதல் நாளே சவாலை எடுத்துக் கொண்டான் அவன். அதன் பின் ரூபிணியைக் கவர்வதையே தன் வாழ்க்கையின் லட்சியமாய் நினைத்துக் கொண்டு.. தினமும் அவளிடம் வந்து பேச்சுக் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துக் கொண்டான்.

“என்னப்பா மூர்த்திக்கு தினமும் உன்னிடம் சந்தேகம் கேட்க வேண்டும் போல் இருக்கிறதே.. என்ன விசயம்?” ப்ரீதி வினவினாள்.

“தேவையில்லாமல் என்னைச் சீண்டிப் பார்க்கிறார்.. அதுதான் விசயம்.. ப்ரீதி.. நான் ஜூனியர்.. வேலையில் சேர்ந்து இன்னும் ஒரு வருடம் கூட முடியவில்லை.. இவர் என்னை விட எட்டு வருடம் சீனியர்.. இவருக்குத் தெரியாத வேலையா.. எனக்குத் தெரியும்? என்னிடம் பேச்சுக் கொடுக்க இதெல்லாம் ஒரு சாக்கு..”

“ம்ம்.. வேலைக்கு வந்து விட்டால் இது ஒரு கஷ்டம்..”

“ஜவஹரையும் இந்த ஆளையும் இணை சேர்த்து நினைக்கிறாயா?”

“சேச்சே.. ஜவஹர் ஓர் டீசன்ட் மேன்.. என்னிடம் மட்டும்தான் வழிவார்.. இந்த மூர்த்தி எல்லாப் பெண்களிடமும் வழிவான்.. தான் ஒரு மன்மதன் என்கிற நினைப்பு அவனுக்கு..”

“அவன் மன்மதனாகவே இருக்கட்டும்.. அதற்காக அவனிடம் எல்லாப் பெண்களும் மயங்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லையே.. எனக்கு அவனைக் கண்டாலே பிடிக்கவில்லை…”

“அதனால்தான் உன்னைத் தொல்லை செய்கிறான்.” நீ அவனுக்கு பெரிய சவால் ஆகிவிட்டாய் போல…

“ஏன்.. நீ கூடத்தான் அவனுடன் பேச மாட்டாய்.. உன் அலட்சியம் அவனுக்கு ஓர் சவால் இல்லையா?”

ப்ரீதி அதற்குச் சொன்ன பதில் ரூபிணியின் சிந்தனையைத் தூண்டியது. அது தன் மனதில் பதியும் என்றோ.. அதனாலேயே ஜமுனா சொன்ன நெருப்பு விளையாட்டை மீண்டும் ஓர் முறை அவள் விளையாடிப் பார்க்க நேருமென்றோ அவள் அப்போது நினைக்க வேயில்லை.

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link