Chapter 16

0Shares

அது புத்தம் புதிய கைனடிக் ஹோண்டா..!

ரூபிணி அவசரமாய் அதைச் சுற்றி வந்தாள்.. அவளுடைய பழைய வண்டியின் நிறத்திலேயே இருந்தாலும்.. அது புதிய வண்டி.. அவளது பழைய வண்டியின் நம்பரே எழுதப்பட்டிருந்தாலும்.. அது புதிய நம்பர் பிளேட்.. கையிலிருந்த கவரை உடைத்தாள்… உள்ளேயிருந்து ஒரு கடிதம் வெளிவந்தது.

ஹரிஹரன் எழுதியிருந்தான்..

‘நான் உன்னுடன் போனில் பேசுவதை நீ விரும்ப மாட்டாய்.. வேறு வழியின்றி கடிதம் எழுதுகிறேன்.. புது வண்டியைப் பார்த்ததும் திகைத்திருப்பாய்.. உன் வண்டி என் வீட்டு கார் ஷெட்டில் பத்திரமாய் இருக்கிறது.. உன் நினைவாக அதை நான் எடுத்துக் கொண்டு விட்டேன்.. என் நினைவை உனக்கு ஏற்படுத்த புது வண்டி வாங்கி கொடுத்து விட்டிருக்கிறேன்.. நம்பர் முதல் கலர் வரை எதுவும் மாறாமல் உன்னிடம் அது வந்து சேர்ந்திருக்கும்..’

ரூபிணி..! உன்னிடம் நான் அனுப்பியிருப்பது எனது நெஞ்சம்.. என்னிடம் நான் எடுத்துக் கொண்டிருப்பது உனது நெஞ்சம்.. இதை நீ மறந்து விடாதே.. நெஞ்சத்தை நீ கொடுக்க மறுத்தாலும் நான் எடுத்துக் கொள்வேன் என்பதை இதன் மூலம் உனக்கு உணர்த்துகிறேன்.. என் நெஞ்சத்தை நீ ஏற்க மறுத்தாலும் அது உன்னுடன் தான் இருக்கும் என்பதையும் உனக்கு அறிவுறுத்துகிறேன்..

என்றேனும் ஓர் நாள் எனை நீ அழைப்பாய் என்ற நம்பிக்கையுடன் டெல்லிக்குப் பறக்கப் போகிறேன்.. மீண்டும் ஓர் நாள் சந்திக்கலாம்..

                                                                     -ஹரிஹரன்.’

ரூபிணி புது வண்டியைக் கண்ணீருடன் தொட்டுப் பார்த்தாள்.. அது ஹரிஹரனின் நெஞ்சமாமே.. அவளது விழி நீர் வண்டியில் தெறித்து விழுந்தது.. அவசரமாய் சுடிதாரின் துப்பட்டாவை எடுத்து அதைத் துடைத்தாள்..

பரிவுடன் அவ்வண்டியைத் தடவி பூப்போல் அதை வருடிக் கொடுத்தாள்..

“என்னடி வண்டியுடன் கொஞ்சிக் குழாவுகிறாய்..” ஜமுனா கேட்டுக் கொண்டே வந்து நின்றாள்..

“ரிப்பேருக்கு போய் வந்திருக்கிறது. அதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..”

“புது வண்டி போல் ஆகிவிட்டதே.. பரவாயில்லை.. எவ்வளவு கேட்டாலும் கொடுத்து விடு…”

“கொடுக்காவிட்டால் விட்டு விடுகிறவர் போல் தெரியவில்லையே..” ரூபிணி ஹரிஹரனின் நினைவோடு சொன்னாள்.

“நீ கொடுக்க மறுப்பதில் நியாயம் இல்லையே..” ஜமுனா வொர்க் சாப் மெக்கானிக்கைப் பற்றிக் கூறினாள்..

ரூபிணி தனக்குள் சிரித்துக் கொண்டே வண்டியை மற்ற வண்டிகளுடன் நிறுத்தி பூட்டிவிட்டு வந்தாள்..

ஜமுனா அங்கிருந்த மரத்தடியிலிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தாள்.. அவள் எதையோ சொல்ல விரும்புவது புரிய ரூபிணி அவளருகில் சென்று அமர்ந்தாள்..

“என்னடி.. தனியாய் உட்கார்ந்து விட்டாய்.. காதல் வந்தால் தான் தனிமையைத் தேடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..”

“கேள்விதான் பட்டிருக்கிறாயா..? உனக்குத் தெரியாதா..?”

ரூபிணி மௌனம் சாதித்தாள்.. பொய் சொல்ல அவளுக்கு மனம் இல்லை.. அதே சமயம் ஜமுனாவின் அறிவுரையையும் அவள் மதித்தாள்..

“என்ன பேச்சையே காணோம்.. மதியம் காரில் வந்து இறங்கினாயாமே.. ஹரிஹரனின் கார்தானே…”

“ஆமாம்.. வரும் வழியில் என் வண்டி ரிப்பேராகி விட்டது… அவர்தான் என்னை ஹாஸ்டலில் டிராப் பண்ணினார்..”

“என்ன சொன்னாலும் கேட்கக் கூடாதுங்கிற முடிவோடு இருக்கிறாயா…?”

“இனி நீ சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது ஜமுனா.. அவர் இனிமேல் என்னிடம் பேசமாட்டார்…”

“நீ பேச வேண்டாமென்று சொல்லி விட்டாயா..?”

“ஆமாம்…”

ஜமுனா ரூபிணியை அணைத்துக் கொண்டாள்..

“நல்ல வேலை செய்தாய் ரூபிணி.. உன் நன்மைக் குத்தான் நான் சொன்னேன். நீ பணத்தைப் பார்த்து மயங்குகிறவளாக இருந்திருந்தால் நான் இதைச் சொல்லிருக்க மாட்டேன்.. நீ பாவம்… வெளியே ஒரு சினிமாவுக்குக் கூட பிரண்ட்ஸோடு சேர்ந்து போகப் பயப்படுகிற ரகம்.. உனக்கும் ஹரிஹரனுக்கும் ஒத்து வராது ரூபிணி.. உன்னைப் போன்ற அழகான.. மென்மையான.. நல்ல குணமுள்ள பெண்ணைப் பார்த்தால் ஹரிஹரனுக்கு ஆசை வருவது இயற்கை.. ஆனால் நீ மென்மையான பெண்.. ஹரிஹரனின் முரட்டு சுபாவத்துக்கும்.. அடாவடித்தனமான செய்கைகளுக்கும்.. உன்னால் பொருந்தி வாழ முடியாது.. அதனால் தான் சொன்னேன்.. உனக்கு இதனால் மனம் வலிக்கலாம்.. சிறிது நாளில் இது சரியாகிவிடும்…” ஜமுனா பேசிக் கொண்டே போனாள்..

ரூபிணியின் நெஞ்சம் கண்ணீர் விட்டது.. மனதின் வலி சரியாகிவிடுமா..? எப்போது சரியாகும்..? அவள் இறந்த பின்னாலா..? ஓர் நொடி.. பெண்ணென்று இந்த பூமியில் ஏன் தான் பிறப்பெடுத்தோம் என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் ரூபிணி..

‘பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்  – மிகப்

பீழை இருக்குதடி தங்கமே தங்கம்…’

பாரதி ஆணாய் இருந்ததால்தான் பெண்ணின் துன்பத்தைப் புரிந்து.. உணர்ந்து எழுதினாரோ.. அவரே பெண்ணாக இருந்திருந்தால் இதைப் புரிந்திருப்பாரா..?

பெண்ணே.. பெண்ணை.. உணர மறுப்பதேன்..?

ரூபிணியின் கை விரல்கள் அவளது துப்பட்டா நுனியைத் திருகிக் கொண்டு இருக்க ஜமுனா தொடர்ந்து பேசினாள்.

“எனக்கு கல்யாண ஏற்பாடு நடக்கிறது ரூபிணி..”

“ஈஸிட்.. என்னிடம் சொல்லவே இல்லையே..” உண்மையாய் முகம் மலர்ந்தாள் ரூபிணி..

“இன்றைக்குத்தான் முடிவானது… இரண்டு மூன்று மாதங்களாகவே அவர் குடும்பத்திற்கும்.. என் குடும்பத்திற்கும் கல்யாணப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.. அவர்கள் வீட்டில் அதிகம் எதிர்பார்த் தார்கள்.. எனக்கு அவர்கள் அப்படிக் கேட்டதில் விருப்பமில்லை.. அதனால் இந்தக் கல்யாணத்தில் எனக்கு இன்ட்ரெஸ்ட்டும் இல்லை.. உன்னிடம் நடக்காத கல்யாணத்தைப் பற்றி ஏன் பேசுவானேன் என்று சும்மா இருந்துவிட்டேன்.. பட்.. இன்றைக்கு என்னைப் பார்க்க என் காலேஜிற்கு அவர் வந்திருந்தார்…” ஜமுனா முகம் சிவந்தாள்.

“இதைப் பாருடா.. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று சாதுப் பூனை வேசம் போட்டுவிட்டு இன்றைக்கு நீயே சைட் அடித்து விட்டு வந்திருக்கிறாயா..? ஊருக்குத்தான் உபதேசமா..?” ரூபிணி கேலியாய் வினவினாள்..

“ரூபிணி.. இப்போது சொல்கிறேன்.. ஹரிஹரனுக்கு மட்டும் ‘தாதா’ என்கிற இமேஜூம்.. மிகப் பெரிய பின்புலமும் இல்லாமலிருந்து.. அவர் உன்னைப் போல் ஒரு கவர்ன்மென்ட் எம்ப்ளாயி ஆக இருந்திருந்தால் உங்கள் காதலை நான் ஆதரித்து இருப்பேன்.. முன்னால்நின்று உங்கள் கல்யாணத்தை நடத்தியும் வைத்திருப்பேன்.. ஆனால் அவர் எட்டாத உயரத்தில் இருக்கிறாரே…”

“விடு ஜமுனா.. எனக்கு உன்னைத் தெரியாதா? நான் விளையாட்டாய் சொன்னேன்.. உன் ‘அவர்’ எங்கே வேலை பார்க்கிறார்..”

“பார்த்தாயா.. அதைச் சொல்ல மறந்து விட்டேன்.. அவர் உன் ஹீரோவின் காலேஜில் தான் லெக்சரர் ஆக வேலை பார்க்கிறார்…”

“யாரைச் சொல்கிறாய்…?”

“ஹரிஹரனின் இன்ஜினியரிங் காலேஜ் ஒன்றும் இங்கு இருக்கிறது. இதை உன்னிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.. அவர் என்னைப் போலவே எம்.ஈ. படித்து விட்டு அங்கே என்னைப் போலவே லெக்சரராக இருக்கிறார்…”

“உன்னவர்… உன்னைப் போலவே தானே இருப்பார்..?”

“கிண்டலா..? அவர் என்னைப் போல சிந்திக்க வில்லை ரூபிணி.. என்னைப் பார்க்க இன்று அவர் வந்திருந்தபோது அவருடைய பேரண்ட்ஸ் கேட்பதைச் செய்தால் என்ன என்றுதான் என்னிடம் வாதாடினார்…”

ஜமுனா எரிச்சலுடன் கூறினாலும்.. அதையும் தாண்டி அவள் முகத்திலிருநத் உல்லாசத்தையும்.. மகிழ்வையும் கண்ட ரூபிணி தோழியைப் பற்றி என்ன முடிவுக்கு வருவது என்று தெரியாமல் குழம்பினாள்..

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link