Chapter 21

0Shares

வேனை விட்டு இறங்கி மாடியேறி மற்ற தோழி களிடம் கையாட்டி விட்டு அறைக்குள் போய் ரூபிணி கதவைத் தாழிட்ட மறுகணம் அவளது செல்போன் ஒலித்தது.

‘அவன்தான்..’ அவள் மனதில் மணியடித்தது.

ஓடிப்போய் செல்போனை எடுத்துப் பார்த்தாள்.. அவனே தான்.. மூச்சிரைக்க.. “ஹலோ…” என்றாள்.

“ஏன் மூச்சு வாங்குகிறாய்..”

“இப்போதுதான் என் ரூமிற்குள் வந்தேன்..”

“தெரியும்…”

“எப்படி..?”

“எப்படியா..? உன்னைப் பின் தொடர்ந்து என் காரில் வந்தேன்.. இப்போதும் உன் ஹாஸ்டலின் ஓரமாய் இருட்டில்தான் என் கார் நின்று கொண்டிருக்கிறது. மாடியில் உன் ரூமில் விளக்கு எரியவும் போன் பண்ணுகிறேன்..”

“இது என் ரூம்தான் என்று எப்படித் தெரியும்..?”

“ஹரிஹரனுக்குத் தெரியாதது என்று எதுவும் இல்லை..”

“என் மனம் மட்டும்தான் தெரியாது…”

“தெரியும்டி… உன் மனம் எனக்கு நன்றாகத் தெரியும்.. ஊரைப் பார்த்துப் பயந்தாய்.. என்னைக் கண்டு பயந்தாயா..? உனக்குத் தெரியுமா ரூபிணி… என்னிடம் அச்சமின்றி முகம் பார்த்துப் பேசியது நீ மட்டும்தான்.. அதேபோல் என்னை நாடி வரும் எல்லோரும் அவர்களுக் காகத்தான் உதவி கேட்டு வருவார்கள்.. அப்படி இல்லாமல் உன்னை நாடி என்னை வர வைத்தவளும் நீதான்.. உனக்காக இல்லாமல் மற்றவருக்காக என் உதவியை நாடியதும் நீதான்.. என்னிடம் இருக்கும் பணத்தையும்.. பலத்தையும்.. பவரையும் பார்த்து ஊரே மயங்க.. என்னிடம் மட்டும் மயங்கியவளும் நீ ஒருத்தி மட்டும்தான்… என்னை மயங்க வைத்தவளும் நீ ஒருத்தி மட்டும்தான்.. நீ எனக்கு என்னை விட முக்கியமானவள் ரூபிணி.. உன் வேதனை கண்டுதான் நான் உன்னைப் பிரிந்து சென்றேன்.. கோபத்தினால் இல்லை.. உன்னிடம் கோபம் கொள்ள என்னால் முடியாது ரூபிணி.. என்னை நீ விரும்பினாய்.. என்னிடம் மயங்கினாய்.. ஆனாலும் என்னிடம் பழகத் தயங்கினாய்.. அதனால் தான் உனக்காக… உன்னை விட்டு சில மாதங்கள் விலகிச் சென்றேன்.. எனக்கு உன்னைத் தெரியும்.. என்றாவது ஒருநாள் என்னைத் தேடி வருவாய் என்றும் தெரியும்.. அந்த நாள் இன்று வந்துவிட்டது.. நான் உன் மனதைத் தொட்டு.. உன்னையும் தொட்டு விட்டேன்..” ஹரிஹரனின் குரலில் மயக்கம் இருந்தது..

ரூபிணி உடை மாற்றாமல் ஜன்னலருகே ஓடிச் சென்று சாலையைப் பார்த்தாள்.. இருளில் பார்வையைச் செலுத்தி.. இருளுக்குள் அவனைத் தேடினாள்.. சற்றுத் தள்ளி மறைவாக ஒரு கார் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

“கண்டுபிடித்து விட்டாயா…?”

“நான் கண்டுபிடிக்காமல் வேறு யார் கண்டு பிடிப்பார்கள்..?”

“மற்றவர்களின் பிடிக்குள் இந்த ஹரிஹரன் சிக்கவும் மாட்டான்..”

“என்னிடம் மட்டும் வலிய வந்து ஏன் சிக்குகிறீர் களாம்..?”

“காலமெல்லாம் உன் கைப்பிடிக்குள் இருக்கத்தான்..”

“நான் காலமெல்லாம் உங்கள் காலடியில் இருப்பேன்..”

“இதைத்தானே உன் பிரண்டிஸிடமும் சொன்னாய்.. ஓடிப்போய் அவருடைய காலடியில் விழுந்து விடுவேன் என்று.. என் காலடியில் கிடப்பதில் அவ்வளவு ஆர்வமா..?”

“பின்னே இல்லையா.. மகாலட்சுமி தேவி.. மகாவிஷ்ணுவின் காலடியில் இருக்கிறதை விரும்பி அமர்ந்திருக்கும் போது… ரூபிணி ஹரிஹரனின் காலடியில் கிடக்க தவம் கிடக்க மாட்டாளா…?”

“காலடியில் மகாலட்சுமி அமர்ந்திருந்தாலும் அவள் வாசம் செய்வது மகாவிஷ்ணுவின் இதயத்தில்… அதுபோல் நீ குடியிருக்கும் இடம் என் நெஞ்சம்…”

“திரும்பவும் ஊருக்குப் போய் விடுவீர்களா…?”

“உன்னை விட்டுப் போக என்னால் முடியுமா..?”

“இத்தனை நாளும் முடிந்ததே…”

“மற்ற நாளும் இன்றைய நாளும் ஒன்றா…”

ரூபிணி.. அவனது இதழ் தொட்ட தன் இதழ்களை கடித்துக் கொண்டாள்.. ஹரிஹரனின் உல்லாச சிரிப்பு கேட்டது.

“என்ன மௌனமாகி விட்டாய்.. கல்யாண மண்டபத்தின் தோட்டம் நினைவிற்கு வந்து விட்டதா…?”

ரூபிணி இனம் புரியாத உணர்ச்சிகளால் தாக்கப்பட் டிருந்தாள் பேச முடியாமல் தடுமாறினாள்.

“பேசேண்டி… ஊமையாகி விட்டால் எப்படி..?”

அவனது நெருக்கம் கொண்ட பிரியமான அழைப்பு அவளது மனதை வருடிச் சென்றது.

“நீங்கள்தான் என்னை ஊமையாகச் செய்கிறீர்களே..”

“ரூபி… நான் உனக்காகத்தான் பறந்து வந்தேன்.. உன் முகம் பார்த்தால் மட்டும் போதும் என்ற கணக்குடன் வந்தேன்.. நீ எப்படியும் மேடையேறி வீடியோவுக்கு போஸ் கொடுப்பாய் என்பது எனக்குத் தெரியும்.. கவனித்துக் கொண்டேயிருந்து உன்னுடன் ஒன்றாக போஸும் கொடுத்துவிட்டேன்.. ரிசப்சன் செலவுகள் என்னுடையவை.. வீடியோகிராபரும் நான் ஏற்பாடு செய்தவர்தான்.. நம் புகைப்படத்தை பிரிண்ட் போட்டு வைத்துக் கொள்ளத் திட்டமிட்டிருந்தேன்.. இன்றைக்கு நைட்டே டெல்லி திரும்பி விட நினைத்திருந்தேன்…”

“டெல்லி.. டெல்லி.. அங்கே எந்த மும்தாஜ் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்..?”

“என் மும்தாஜ் விழுப்புரத்தில்தான் இருக்கிறாள்.. பட் ரூபிணி ஷாஜகானைப் போல் நான் எனது காதலிக்காக தாஜ்மஹால் எல்லாம் கட்ட மாட்டேன்..”

“ஊருக்கெல்லாம் அள்ளி வழங்கும் வள்ளல் என்று உங்களைச் சொல்லுகிறார்கள்.. கடைசியில் நீங்கள் இவ்வளவு கஞ்சமா..?”

“கஞ்சமில்லைடி… உன்னிடம் நான் தஞ்சம்…”

“தஞ்சமடைந்தது நீங்களா… இல்லை நானா…? முதலில் என் கேள்விக்குப் பதிலைச் சொல்லுங்கள்…”

“ஷாஜகான் போல மும்தாஜ் போன பின்னாலும் நான் உயிர் வாழ மாட்டேன்.. உன்னைப் பிரிந்தால் அந்த நொடியில் நானும் உன்னுடன் சேர்ந்து வந்து விடுவேன்.. ஒருவேளை நான் முந்திக் கொள்ளும் நிலை வந்தால் உன்னைக் கொன்று.. என்னுடன் அழைத்துச் சென்று விடுவேன்…”

ரூபிணி பேச்சிழந்தாள்.. வன்முறையாளனின் காதல் என்பது இப்படித்தான் இருக்குமா..? உலகிற்கு கொடுங்கோலனாய் தெரிந்த ஹிட்லர் தன் கடைசி வினாடியில் தன் காதலியை விசம் குடித்து சாகச் சொல்லிவிட்டு.. அவள் இறந்த பின்.. துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக் கொண்டு மாண்டானாமே.. அது தான் அவனின் காதலா…?

“என்னடி.. பயமாய் இருக்கிறதா…?”

“பயமே உங்களைக் கண்டால் பயப்படும்போது.. உங்கள் நெஞ்சத்தில் குடியிருக்கும் எனக்கு எங்கேயிருந்து பயம் வரப்போகிறது…?”

“நான் இப்படித்தான் ரூபிணி.. நீ அன்று சொன்னாயே.. ‘நீங்கள் ஏன் இவ்வளவு பெரிய வி.ஐ.பியாக இருக்கிறீர்கள்..’ அன்று.. உன் பிரண்ட்ஸிடம் சொன்னாயே.. ‘பணமும்.. படைபலமும் அவரிடம் இல்லாமலிருந்தால் அவரது காலடியில் போய் விழுந்திருப்பேன்..’ என்று.. ஏன் அப்படிச் சொன்னாய் ரூபிணி…?”

“அது… அது.. வந்து..”

“சும்மா சொல்லு… நமக்குள் என்ன தயக்கம்..?”

அவன் குரல் தந்த தைரியத்தில் அவள் பட்டென்று சொல்லிவிட்டாள்..

“உங்களுக்கு ஊருக்குள் ஒரு இமேஜ் இருக்கிறது..”

” ‘தாதா’ என்று தானே…” அவனும் பட்டென்று கேட்டுவிட்டான்..

“ஆமாம்..” அவள் நலிந்த குரலில் பதில் சொன்னாள்..

ஹரிஹரன் பதில் சொன்னான்.. அவனது பதிலில் அவனது கடந்த கால வாழ்க்கையின் துயரங்களும் சோகமும் வெளிவந்தன… பட்டுக் கம்பளத்தில் நடந்து கொண்டிருக்கும் ஹரிஹரன்… கடந்த காலத்தில் முள் பாதையில் நடந்து வந்தவன் என்பதை ரூபிணி அன்று அறிந்தாள்..

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link