Chapter 25

0Shares

அதே ஹோட்டல்.. அதே மதிய உணவு நேரம்.. அதே ஏஸி ஹால்.. அதே அலுவலகப் பணியாளர்கள்..

ஜவஹர் தன் காதலில் வென்று விட்டதற்காக அலுவலகத்தாருக்கு விருந்து கொடுத்துக் கொண்டிருந்தான்..

“ஏம்ப்பா ஜவஹர் கல்யாணச் சாப்படுதான் போடப் போகிறாயே… அப்புறமும் எதுக்கு ஹோட்டலில் சாப்பாடு..”

“அது கல்யாண விருந்து சார்.. இது காதலில் நான் ஜெயித்ததைக் கொண்டாட நான் கொடுக்கும் விருந்து…”

“உனக்கென்னப்பா குறைச்சல்..? நேர்மையான நடவடிக்கை.. நிறைவான வேலை.. நல்ல படிப்பு.. உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ப்ரீதி கொடுத்து வைத்திருக்க வேண்டும்..”

“என்ன சார் ஜவஹர் சாரை மட்டும் உயர்த்திப் பேசுகிறீர்கள்..? ப்ரீதிக்கு மட்டும் என்ன குறைச்சலாம்.. அவளது அழகு… அறிவு.. படிப்பு… வேலைக்கு.. மும்பையிலிருந்து அவளைக் கல்யாணம் பண்ணிக்க மாப்பிள்ளை பறந்து வருவதாய் இருந்தார்.. ப்ரீதிதான்.. ஜவஹர் சார் மேல் இரக்கப்பட்டு போனால் போகுதுன்னு மும்பை வாழ்க்கையை தியாகம் பண்ணிவிட்டு ஜவஹர் சாரின் கை பிடிக்கப் போகிறாள்..”

“ப்ரீதியைச் சொன்னதும் ரூபிணிக்கு கோபம் பொத்துக் கொண்டு வருவதைப் பாரேன்.. கேட்டாயா ஜவஹர்.. ப்ரீதி போனால் போகுதுன்னு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறதாம்..”

“யாரு.. இவளா என்னைப் போனால் போகுதுன்னு கல்யாணம் பண்ணிக்கப் போகிறாள்..? உங்களுக்குத் தெரியாது சார்.. அம்மணிக்கு ஒரு நாள் என்னைப் பார்க்க வில்லையென்றாலும் வேலையே ஓடாதாம்.. சபாபதியிடம் ஏன் நான் வரவில்லை.. எனக்குத் தலைவலியா.. இல்லை காய்ச்சலா.. வீட்டில் வேலையென்றால் என்ன வேலைன்னு கேட்டு உயிரை எடுத்துவிடுவாளாம்… இதற்காகவே.. தலை போகிற அவசரம் என்றாலும் நான் லீவ் எடுப்பதில்லை.. எப்போது இவள் லீவ் போடுகிறாளோ.. அப்போதுதான் நானும் போடுவேன்…”

ஜவஹர் ப்ரீதியைப் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரிக்க ப்ரீதி சபாபதியை முறைத்தாள்.

“சபாபதி.. நீ இவ்வளவு பெரிய நம்பிக்iத் துரோகியா..?”

“என்ன மேடம் இப்படிச் சொல்கிறீர்கள்.. எனக்கு லேடிஸ் சைக்காலஜி கொஞ்சம் தெரியும் மேடம்.. அதனால்தான் ஜவஹர் சாரின் காதல் ஜெயிக்கும் என்பதில் உறுதியாக இருந்தேன்…”

“என்ன சைக்காலஜியைச் சொல்லப் போகிறாய் சபாபதி.. பெண்கள் வேண்டும் என்றால் வேண்டாம் என்று அர்த்தம்.. வேண்டாமென்றால் வேண்டும் என்று அர்த்தம்.. அதுதானே..”

ரூபிணி கேட்டாள்.. சபாபதி அதிசயப்பட்டான்..

“எப்படி மேடம்.. இவ்வளவு கரெக்டாக சொல்கிறீர்கள்..?”

“இது ஒரு பிரம்ம ரகசியமா..? எல்லோரும் வாயைத் திறந்தால் பெண்களின் மனோபாவத்தைத்தான் பிட்டுப் பிட்டு வைக்கிறீர்களே.. ஆமாம் சபாபதி.. பெண்களைப் பற்றி மட்டும்தான் சைக்காலஜியில் சொல்லப்பட்டி ருக்கிறதா..? ஆண்களைப் பற்றிச் சொல்லவே இல்லையா..?”

“நான் இந்தச் சண்டைக்கே வரவில்லை மேடம்.. எப்படியோ நம் ஆபிஸில் ஒரு காதல் கதை ஆரம்பித்து கல்யாணத்தில் முடிந்து விட்டது.. ஆனால் எனக்குத் தான் இதில் ஒரு வருத்தம்…”

“அடப்பாவி சபாபதி.. உன்னைத் தினமும் தனியாய் கவனித்து.. அப்பப்போ சிறப்பாய் கவனித்து வந்தேனே.. அந்தக் கவனிப்பு நின்று விடும் என்ற பயமா..?”

“அந்தக் கவலையெல்லாம் இல்லை ஜவஹர் சார்.. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை.. காலம் முழுவதும் என்னைக் கவனிக்காமல் விட்டுவிடமாட்டீர்கள்.. எனக்கு என்ன வருத்தம்ன்னா இனிமேல் ப்ரீதி மேடத்தின் டிரஸ் கலரைப் பார்த்து தினமும் நீங்கள் பாடும் சிச்சுவேசன் சாங்கை கேட்கவே முடியாதே.. அதுதான்..”

சபாபதி சோகமாய் முகத்தை வைத்துக் கொள்ள ப்ரீதி வெட்கத்துடன் முகம் கவிழ்ந்தாள்.. ஜவஹர் அவளை ஆசையுடன் பார்த்தான்..

அவர்களது உற்சாகத்தை வயிற்றெரிச்சலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.. மூர்த்தி இந்த ஜவஹருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா..? அவனும்தான் அந்த ஆபிஸிற்கு மாற்றலாகி வந்த முதல் நாளே ப்ரீதிக்கு நூல் விட்டுப் பார்த்தான்.. ஜவஹர் நேரடியாகவே எச்சரித்து விட்டான்..

‘பாரு மூர்த்தி.. உன் விளையாட்டையெல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக் கொள். அவள் என் காதலி.. மீறி வாலை ஆட்டினால் உன் எலும்பை எண்ணி விடுவேன்.. ஜாக்கிரதை…’

எந்த நேரத்தில் அவன் அந்த வார்த்தைகளைச் சொன்னானோ.. உண்மையிலேயே ஹரிஹரனின் ஆள்கள் மூர்த்தியின் எலும்பை எண்ணிவிட்டார்கள்.

அன்று இதே ஹோட்டலில் அடிவாங்கிய மூர்த்திக்கு இன்றும் அந்த அடியின் வலி நினைவில் நிற்கிறது.. அவனது டேபிளின் அருகே வந்து உணவுத் தட்டை வைத்த சர்வர்,

“நீங்களா சார்… இப்போ உடம்பு எப்படியிருக்கிறது.. தேறிவிட்டிங்களா…?” என்று விசாரித்து வைத்தான்.

அன்று ஹரிஹரனின் பி.ஏ. அழைத்தாகக் கூறி அழைத்துச் சென்ற அதே சர்வர்.. அத்தோடு நில்லாமல் அங்கிருந்த இன்னொரு சர்வரிடமும் மூர்த்தியைக் காட்டி விவரம் சொல்லி வைத்தான். மூர்த்தியின் உடல் குப்பென்று வியர்த்தது..

கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு ஜவஹர் பக்கம் பார்த்தான்.. அதே நேரம் ரூபிணியுடன் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்த ஜவஹர் மூர்த்தியைப் பார்த்தான்..

‘என்னைப் பார்த்துத்தான் சிரிக்கிறார்கள்…’ மூர்த்தியின் மனதில் துவேசம் பொங்கியது..

நளினமாய் வாய் பொத்தி சிரித்துக் கொண்டிருந்த ரூபிணியைப் பார்த்தவளின் நெஞ்சம் கொதித்தது.. எப்பேர்ப் பட்ட பேரழகி.. இவளை அடைய அவனுக்கு கொடுத்து வைக்கவில்லையே.. அவளை பார்க்கக் கூடப் பயப்படும்படி ஹரிஹரன் செய்து விட்டானே.. ஹரிஹரன் காதலி இவள் என்று ஆகிவிட்ட பின் அவளது நிழலைப் பார்ப்பது கூட ஆபத்தானது என்று ஆகிப்போனது..

மூர்த்திக்கு அங்கு அமர்ந்திருக்கவே பிடிக்கவில்லை. சாப்பிட்டேன் என்று பெயர் பண்ணி விட்டு மற்றவர்களுக்கு முன்னால் அவன் கிளம்பி விட,

“ஏன் மூர்த்தி.. பாதிச் சாப்பாட்டில் கிளம்புகிறாய்..? போன தடவை இதே ஹோட்டலில் விருந்து நடந்த போதும் பாதி விருந்தில் கிளம்பிவிட்டாய்.. இன்றும் அதே போல் கிளம்புகிறாய்.. இந்த ஹோட்டலுக்கும் உனக்கும் ராசி இல்லையோ…” என்று அக்கறையாய் வினவுவது போல் ஜவஹர் வினவினான்..

ரூபிணி ‘களுக்’கென்று வாய் பொத்திச் சிரித்துவிட்டாள்.. மூர்த்தியின் விழிகள் கோபத்தில் சிவந்தன.. அவளை முறைத்தான்.

‘உன் கோபம் என்னை என்ன செய்து விடும்..?’ என்ற அலட்சியத்துடன் அவனைப் பார்த்தாள் அவள்..

அதுதான் அவளுக்கு வினையாக அமைந்து விட்டது. நல்லவனை நேரடியாய் எதிர்க்கலாம்.. அயோக்கியனை நேரடியாய் எதிர்க்க முனையலாமா…?

‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு…’

பெரியவர்கள் அனுபவஸ்தர்கள்.. சும்மா எதையும் சொல்லி வைக்கவில்லை.. ‘ஒல்டு இஸ் கோல்டு’ என்பார்கள்.. அது உண்மைதான்.. பழமொழிகள் ஒவ்வொன்றும் நம் வாழ்க்கைக்கு பாடம் சொல்பவை.. வழிகாட்டுபவை.. நாம் தான் அதைப் புரிந்து கொள்வதில்லை..

ரூபிணி இக்காலத்துப் பெண்.. பழமொழியை விட பாரதியாரை நேசிப்பவள்.. ஹரிஹரனைக் காதலிப்பவள்..

“பாதகம் செய்பவரைக் கண்டால் – நீ

பயம் கொள்ளலாகாது பாப்பா…

மோதி மிதித்து விடு பாப்பா – அவர்

முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா…”

பாரதியார் இந்த வார்த்தைகளையெல்லாம் பையனிடம் சொல்லியிருக்கலாம்.. பெண்ணைப் பெற்ற மனிதர்.. பாப்பாவிடம் சொல்லிவிட்டார்.. இது ஆண்களின் உலகம் என்பதை பெண் விடுதலைக்கு பாடுபட்ட அந்த மகாகவி உணராமல் போனார்..

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link