Chapter 28
“ரூபிணி.. காரை எடுத்துக் கொண்டு வந்து தெரு முனையில் வெயிட் பண்ணுகிறேன் வந்து விடு…” ஹரிஹரன் கூறியதும் ரூபிணிக்கு தூக்கி வாரிப் போட்டது..
“வாட் இஸ் திஸ் ஹரி…? எனக்கு இருக்கிற பிரச்சனைகள் போதாதா…? இன்னும் ஒன்றும் வேண்டுமா..? நான் கோவில்பட்டிக்குப் போகப் போகிறேன்.. அங்கே உங்கள் காரில் எப்படிப் போக முடியும்..” ரூபிணி படபடத்தாள்..
“வெயிட்… வெயிட்.. ஏன் டென்சனாகிறாய்..? கோவில்பட்டிக்கு ரோடு கிடையாதா..? ஒற்றையடிப் பாதைதானா..? அங்கே கார் போகாதா…?”
“விளையாடுகிறீர்களா…?”
“ஆமாம்… நான் எல்.கே.ஜி. படிக்கிற பையன் பாரு.. உன்னுடன் விளையாடுகிறேன்.. என்ஜினியரிங் காலேஜ் நடத்துகிறவன்டி… உன் ஊருக்கு நடந்தா போகப் போகிறாய்..?”
“பஸ்ஸில் போவேன்…”
“அதற்குப் பதில் என் காரில் போகலாம் வா..”
“ஹரி.. என் அப்பாவிற்கு இது தெரிந்தால் என்னைக் கொலையே பண்ணி விடுவார்…”
“தெரிந்தால்தானே…”
“என்ன சொல்கிறீர்கள்…?”
“இதோ பார்… உன் ஹாஸ்டல் இருக்கும் தெரு முனையில் வந்து காரில் ஏறிக் கொள்.. கோவில்பட்டி போனதும் உன் வீடு இருக்கும் ஏரியா முனையிலேயே இறங்கி ஆட்டோ பிடித்துப் போய்விடு…”
“அதுதான் எதற்கு…?”
“எல்லாம் காரணமாகத்தான்.. என்னால் உன்னை அங்கே அனுப்பிவிட்டு இங்கே நிம்மதியாய் உட்கார்ந் திருக்க முடியாது.. உன் வீட்டில் என்ன நடந்தாலும் அது எனக்கு உடனடியாகத் தெரிந்தாக வேண்டும்..”
“அதை நான் போனில் சொல்கிறேனே…”
“அதைக் கேட்க நான் விழுப்புரத்தில் இருக்க மாட்டேனே.. உன் கூட கோவில்பட்டிக்கு வந்து விடுவேனே..”
“இது என்ன பிடிவாதம் ஹரி…?”
“என் பிடிவாதத்தைப் பற்றி இப்போதுதான் உனக்குத் தெரியுமா..? நீ என்னுடையவள் என்று நான் தீர்மானித்த பின்பு தனியாக உன்னை இந்த விழுப்புரத்தின் எல்லையைத் தாண்ட விடுவேனென்று நீ நினைத்தாயா? சும்மா என் மனக் கதவை நீ லேசாய் தட்டியதற்கே உன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்து என் கண்காணிப்பில் உன்னைக் கொண்டு வந்து விட்டவன் நான்.. இப்போதோ என் நெஞ்சத்தில் நீ குடியேறி விட்டாய்.. உன்னை என் பிடியில் இருந்து விலகிச் செல்ல அனுமதிப்பேன் என்று நினைத்தாயா..?” ஹரிஹரனின் குரலில் கோபம் இருந்தது..
“யார் விலகிச் செல்வது ஹரி…? நானா…? உங்களை விட்டா…? நீங்களாய் ஏன் அப்படி நினைத்துக் கொள்கிறீர்கள்..?”
“அப்புறம் ஏன் கோவில்பட்டிக்குப் போகிறாய்…? போகாதே…”
“கூப்பிடுவது என் பேரண்ட்ஸ் ஹரி…”
“அவர்கள் கூப்பிட்டால் நீ போய் விட வேண்டுமா..?”
“போகாமல் எப்படி இருக்க முடியும்…?”
“இப்போது இப்படிச் சொல்கிறவள்.. நாளை அவர்கள் சொல்லும்போதே என்னால் எப்படி மறுத்தப் பேச முடியும்..? என்று சொல்லிக் கொண்டே அவர்கள் ஏற்பாடு பண்ணும் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல மாட்டாய் என்பது என்ன நிச்சயம்…?”
“ஹரி…” ரூபிணி அதிர்ந்து போனாள்…
அவனா இப்படிப் பேசுகிறான்..? பேசலாமா..? அவளைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்கலாமா..?
“சொல்லு.. நீ அவர்கள் சொல்வதைச் செய்ய மாட்டாய் என்பதற்கு என்ன உத்தரவாதம்..?” ஹரிஹரன் மீண்டும் கேட்டான்..
“உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை…” ரூபிணியின் வார்த்தைகளில் சீற்றமிருந்ததது..
“என்னடி சொன்னாய்…? எனக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் உனக்கு இல்லையா…?” ஹரிஹரன் கோபமாய் கேட்டான்..
“ஆமாம்.. உங்களுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்..? எனக்கென்ன கட்டாயம்…?” ரூபிணியும் கோபத்தில் வார்த்தைகளை சிதறி விட்டாள்..
“எனக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உனக்கு இல்லையா..?” ஹரிஹரனின் குரலில் புயலை உள்ளடக்கிய அமைதி இருந்தது.
“இல்லை…” ரூபிணியின் குரலில் வேதனையால் பிறந்த வன்மம் இருந்தது..
“உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையா..?” ஹரிஹரன் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான்..
“இல்லை…” ரூபிணியும் பல்லைக் கடித்துக் கொண்டே பதில் சொன்னாள்..
“அப்புறம் ஏண்டி… அன்று ஜமுனா.. நந்தகோபால் கல்யாண ரிசப்ஷனில் கல்யாண மண்டபத்தின் தோட் டத்தில் இருட்டில் என்னோடு கொஞ்சிக் குழாவினாய்..?”
ஹரிஹரன் அக்கினிப் பிழம்பாய் கேட்டான்.
“ஹரி…” மீண்டும் ரூபிணி அதிர்ந்தாள்..
என்னவெல்லாம் பேசி விட்டான்.. கோபம் வந்தால் இப்படியெல்லாம் பேசுவார்களா… கேட்பார்களா…?
எந்த முன்னிரவுப் பொழுது அவளது நெஞ்சத்தில் இனித்து உறைகின்றதோ… அந்தப் பொழுதை நினைத்து இப்பொழுது அருவெறுத்தாள் ரூபிணி.. எவனிடம் மயங்கினாளோ… அவனைக் கண்டு இன்று பயந்தாள்..
“சொல்லுடி… ஏன் வாயடைத்து மௌனமாகி நிற்கிறாய்…? பேசு… சம்பந்தமில்லாதவன் நெஞ்சிலா அன்று சாய்ந்து நின்றாய்…? உன்னைப் போன்றவளுக் கெல்லாம் அது விளையாட்டாய் போய் விட்டதா…? உனக்கு புது வண்டி வாங்கி அனுப்பும்போது என்ன எழுதியிருந்தேன்…?” ஹரிஹரன் குற்றம் சாட்டும் பாவனையில் பேசிக் கொண்டிருந்தான்..
“எனக்கு நினைவில்லை…” ரூபிணி விரக்தியுடன் பதிலளித்தாள்..
“உனக்கு எப்படி நினைவிருக்கும்…? எதை யெதையோ மறந்தவள் தானே நீ… இது எப்படி நினைவிருக்கும்..” ஹரிஹரன் எகத்தாளமாய் கூறினான்..
“நீங்கள் நினைவு வைத்திருக்கிறீர்களே… அது போதும்.. இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்..? நீங்கள் வாங்கிக் கொடுத்த புது வண்டி வேண்டுமா..? திருப்பி அனுப்பி விடுகிறேன்.. வாங்கிக் கொள்ளுங்கள்..” ரூபிணி எடுத்தெறிந்து பேசினாள்..
ஹரிஹரனுக்கு வெறி பிடித்து விட்டது..
“திருப்பி அனுப்புவாயா…? எதை…?”
“ஏன்… உங்கள் வண்டியைத்தான்..”
“வண்டியா.. அது வெறும் டூ வீலர்தானா…?”
“வேறு என்ன அது…”
காதல் அதீதமாக இருக்கும் இடத்தில் சிறு அனல் பொறி கூட பெரும் காட்டுத்தீயாகப் பரவி எரித்து விடும்.. இப்போதும் அதுதான் நடந்தது..
Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.