Chapter 33

0Shares

“என் பெயர் ஹரிஹரன் மாமா..”

“தயவு செய்து என்னை மாமாவென்று கூப்பிடாதீர்கள்..”

“வேறு முறை சொல்லிக் கூப்பிட முடியாதே.. அதனால் அதைப் பற்றிய பேச்சை விட்டு விட்டு என் பேச்சைக் கேளுங்கள்.. எனக்கு பல தொழில்கள் இருக்கின்றன.. கோடிக் கணக்கில் சொத்து இருக்கிறது.. நான் ரூபிணியை என் கண்ணுக்குள் வைத்து மகாராணி போல் பார்த்துக் கொள்வேன்..”

வீரலட்சுமிக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது.. இன்றைய உலகில் அடாவடியாய் இருந்தால்தான் பிழைக்க முடியும்.. இவன் என்ன அடுத்தவர் சொத்தை கொள்ள அடித்தானா..? சுயமாய் சம்பாதித்திருக்கும் கோடீஸ்வர மாப்பிள்ளை வீடு தேடி வந்து பெண் கேட்கும்போது.. ஜாதியாவது.. ஒன்றாவது.. இந்தக் காலத்தில் யார் அதையெல்லாம் பார்க்கிறார்கள்..

அவள் ஹரிஹரனைப் பார்த்து புன்னைக செய்தாள்..

“என்ன சாப்பிடுகிறீர்கள் மாப்பிள்ளை..”

“அம்மா..” ரூபிணி விழி விரிய தாயைப் பார்த்தாள்..

“சூடாய் ஒரு கப் காபி கொடுங்கள் அத்தை.. அதற்கு முன்னால் உங்களிடம் பேச வேண்டுமே..”

“பேசுங்கள் மாப்பிள்ளை..”

“எனக்கு அப்பா அம்மா இல்லை அத்தை.. என் சார்பில் பெரியவர்களாய் நிற்க என் தாய் மாமாவும் அத்தையும் தான் வருவார்கள்.. மற்ற கல்யாண வேலைகளை நீங்கள்தான் முன்னால் நின்று செய்ய வேண்டும்..”

வீரலட்சுமிக்கு உச்சி குளிர்ந்து விட்டது.. பெங்களூரில் கூட வேலை பார்க்கிறவனை காதலிக்கிறேன் என்று மூத்த பெண் தாரிணி வந்து நின்றாள்.. திருமணம் பேசிய போது மாப்பிள்ளையின் பெற்றோர் பெரிய லிஸ்டையே சீர் வரிசைப் பட்டியலாய் போட்டு நீட்ட காதல் செய்த மாப்பிள்ளை மௌனமாகிப் போனான்.. கடைசிப் பைசாவரை செலவழித்து தாரிணியின் திருமணத்தை முடித்து அனுப்பி வைத்தார்கள்..

இவன் என்னடாவென்றால் நீ என் கல்யாண வேலைகளை மட்டும் கவனித்தால் போதும் என்கிறானே..

“மாப்பிள்ளை.. எங்கள் பெண்ணுக்கு சீர் வரிசை..”

“அவளே எனக்குப் பெரிய சீர்வரிசை அத்தை.. கட்டிய புடவையுடன் அனுப்பி வையுங்கள் போதும்..”

வீரலட்சுமி மகிழ்ந்துபோய் காபி போட உள்ளே விரைய ரெங்கநாதன் அவளைப் பின் தொடர்ந்தார்.. ரூபிணி இவ்வளவு எளிதாக தன் திருமணம் முடிவாகி விட்டதா என்பதை நம்ப முடியாமல் திகைத்தாள்.. ஹரிஹரன் அவளைப் பார்த்து மர்மமாய் புன்னகைத்தான்..

“என்னடி நினைச்சுக்கிட்டு இருக்கே.. இது என்ன ஆம்பளை இல்லாமல் பொம்பளை ராஜ்ஜியம் கட்டி ஆள்கிற வீடா.. உன் இஷ்டத்துக்கு அவனிடம் கல்யாணம் பேசி முடிவு பண்ணுகிற.. என்ன விஷயம்..?” ரெங்கநாதன் விரோதமாய் மனைவியைப் பார்த்தபடி கேட்டார்..

சூடான காபியை ஆற்றியபடி கணவரின் முகம் பார்க்காமல் “வீட்டு ஆம்பளை.. பொண்டாட்டிக்கு நல்ல புருசனா பெத்த பொண்ணுக்கு நல்ல அப்பனா இருந்தால் வீட்டுப் பொம்பளை ஏன் ராஜ்ஜியம் கட்டி ஆள நினைக்கப் போகிறாள்..? தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் எங்காவது நெறி கட்டுமா..? காதல் பிடிக்கலைன்னா பெண்ணைக் கண்டிக்கலாம்.. அதை விட்டு விட்டு உங்க அக்காள் மகன் ஊரறிஞ்ச பொறுக்கி.. அவனுக்குப் போய் என் பெண்ணைக் கட்டிக் கொடுக்கத் திட்டம் போட்டிங்களே.. அப்பவே எனக்கு உங்க புத்தி தெரிஞ்சு போச்சு.. என் பொண்ணு எப்படா மாட்டுவா நாம் இதுதான் சாக்குன்னு அக்கா மகன் கையில் பிடிச்சுக் குடுத்திடலாம்கிறது தானே உங்க கனவு..? நான் அதை நடக்க விட மாட்டேன்..” என்று கடுகடுப்பாய் பதில் கூறினாள்..

“வீரலட்சுமி.. அதெல்லாம் நம் வீட்டு உள் விவகாரம்டி.. வந்திருப்பவன் நாடறிஞ்ச தாதா..”

“பொறுக்கிக்கு தாதா பெட்டர்..”

“ஏய்.. வேணாம்டி சொன்னால் கேளு.. அவன் கொலை செய்யவும் அஞ்சாதவன்.. அவனைக் கண்டால் அவனது ஜில்லாவே பயப்படுதாம்..”

“எனக்கு அதுதான் வேண்டும்.. உங்க அக்கா மகன்.. கண்டபடி அலைகிற அந்த நாதாரி.. என் மகளை கனவில் நினைச்சுப் பார்க்கக் கூட பயப்படுவான்..”

வீரலட்சுமி அலட்டிக் கொள்ளாமல் பேசியபடி காபிக் கோப்பைகளை எடுத்து டிரேயில் அடுக்கி ஹாலுக்குக் கொண்டு சென்றாள்.. ரெங்கநாதன் அடங்கிப் போனவர் போல் பின் தொடர்ந்து சென்று ஹால் சோபாவில் உட்கார்ந்து கொண்டார்..

“என்ன மாப்பிள்ளை செய்வது..? உங்களுக்கு தாய்க் குலத்தின் ஆதரவு எக்கச்சக்கமாக இருக்கிறது.. பெண்ணை விட்டு விட்டுப் போங்க.. நீங்க சொன்ன நாளில் வந்து உங்கள் கையில் பிடித்துக் கொடுக்கிறோம்..”

ரெங்கநாதனே ஒப்புக் கொண்டார் என்றதும் ரூபிணி மகிழ்ந்து போனாள்..

“அப்பா.. தேங்க்ஸ் அப்பா..” என்று ஓடிப்போய் அவரது கால்களில் விழுந்தாள்..

“எழுந்திரும்மா.. எப்படியோ நீ நன்றாக இருக்க வேண்டும்.. எங்களுக்கு அதுதானே வேண்டும்..” கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்துக் கொண்டார் ரெங்கநாதன்..

“மாமா.. வரும் புதன்கிழமை நல்ல முகூர்த்த நாள்..”

“இன்னும் ஆறே நாட்கள்தான் இருக்கிறது மாப்பிள்ளை.. மண்டபம் கிடைக்குமா..? இன்விடேசன் அடித்துக் கொடுக்க நாள் வேண்டாமா..?”

“எனக்குச் சொந்தமான மண்டபம் இருக்கும்போது ஊரில் வேறு ஒரு மண்டபத்தை நான் ஏன் தேட வேண்டும் அத்தை..?”

வீரலட்சுமி மகிழ்ந்து போனாள்.. ஹரிஹரன் எழுந்து கொண்டான்.. “அப்போ.. நான் கிளம்பட்டுமா மாமா.. கிளம்புகிறேன் அத்தை..”

ஹரிஹரனின் கார் கிளம்பிப் போன சற்று நேரத்தில் வாசலில் மீண்டும் கார் சத்தம் கேட்டது.. ஓடிப்போய் பார்த்தார்கள்.. தாரிணி தன் கணவன் குமாருடன் இறங்கிக் கொண்டிருந்தாள்..

“தாரிணி.. என்னம்மா திடீர்ன்னு கிளம்பி வந்திருக்கிறாய்.. வாங்க மாப்பிள்ளை.. நீங்கள் வந்ததும் நல்லதாகப் போயிற்று.. ரூபிணிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கிறோம்..”

வீரலட்சுமி மகிழ்வாய் மூத்தமகளையும் மருமகனையும் வரவேற்றாள்.. சற்று நேரத்தில் நவின் காலேஜிலிருந்து வந்து விட்டான்.. மூத்த சகோதரிகளைக் கண்டதும் அவனுக்குக் கொண்டாட்டம்.. வீரலட்சுமி வீட்டில் கல்யாணக் களை வந்து விட்டதாக நினைத்து மகிழ்ந்து போனாள்..

இரவுச் சாப்பாடு முடிந்ததும் ரெங்கநாதன் மனைவியையும் பிள்ளைகளையும் பார்த்து,

“காலையில் நம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு அபிசேகத்திற்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்.. குடும்பத்தோடு போக வேண்டும்.. காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து எல்லோரும் ரெடியாகி விடுங்கள்.. வேனை வரச் சொல்லியிருக்கிறேன்..” என்றார்..

“விடியற்காலை நான்கு மணிக்கேவா..” வீரலட்சுமி விழித்தாள்..

“அதிகாலையில் அபிஷேகம்டி.. சரிசரி.. பேச்சை வளர்க்காமல் எல்லோரும் காலா காலத்தில் படுத்துத் தூங்குங்க.. காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்..” ரெங்கநாதன் படுக்கப் போய் விட்டார்..

விடிந்தும் விடியாத இருள் பிரியாத அதிகாலை நேரத்தில் பெருமாள் கோவில் வாசலில் போய் நின்றது அந்த வேன்.. ரெங்கநாதன் குடும்பத்தினர் இறங்கினார்கள்.. கோவிலுக்கு வெளியே முரட்டு ஆட்கள் பலர் வெட்டரிவாள்.. வேல் கம்பு சகிதம் நின்று கொண்டிருந்தனர்.

‘யாரு இவங்க.. தெரிந்த முகங்களாக இருக்கிறதே..’ வீரலட்சுமி யோசனையுடன் பார்க்க, 

“ம்ம்… சீக்கிரமாய் கோவிலுக்குள் போங்க..” என்று விரட்டினார் ரெங்கநாதன்.

கோவிலுக்கு உள்ளே ரூபிணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.. ரெங்கநாதனின் அக்காள் குடும்பமும் அவர்களது உறவினர் கூட்டமும் கோவிலுக்குள் இருந்தனர்.. மணமேடை அமைக்கப்பட்டு அதில் ரெங்கநாதனின் அக்காள் மகன் அமர்ந்திருந்தான்.. வீரலட்சுமி அதிர்ச்சியுடன் கணவனைப் பார்க்க அவரோ.. “பேசாமல் போய் உன் சின்ன மகளை மணவறையில் உட்காரச் சொல்.. இல்லா விட்டால் விசத்தைக் குடித்து விடுவேன்..” என்று தயாராய் வைத்திருந்த விஷப் பாட்டிலைக் காட்டி மிரட்ட ஆரம்பித்தார்..

“அப்பா.. சிங்கத்தின் வாயில் தலையைக் கொடுக்கப் பார்க்கிறீர்களே.. ஹரிஹரனுக்கு வாக்குக் கொடுத்து விட்டு ரூபிணியை உங்கள் அக்காள் மகனுக்குக் கட்டி வைக்க நீங்கள் நினைத்தது மட்டும் ஹரிஹரனுக்கு தெரிந்து விட்டால் உங்கள் கதி என்னவாகும் தெரியுமா..?” தாரிணி தலையில் அடித்துக் கொண்டாள்..

“அக்கா… பேசாமல் இரு.. அப்பா… நான் இன்னொருவர் பக்கத்தில் மணவறையில் போய் உட்கார மாட்டேன்.. உங்களுக்கு ஹரிஹரனைத் தெரியாது.. உங்கள் எண்ணம் ஒரு நாளும் நிறைவேறாது..” ரூபிணி அழுத்தமாய் கூறினாள்..

“அது உன் அப்பாவிற்குப் புரிந்தால் ஏன் இப்படி அன்மெச்சூர் தனமாய் வில்லத்தனம் செய்யப் போகிறார்..” என்ற குரலைக் கேட்டு ஆனந்தத்துடன் திரும்பிப் பார்த்தாள் ரூபிணி.. ஹரிஹரன் நின்று கொண்டிருந்தான்.. அவன் கையில் துப்பாக்கி இருந்தது.. வாசலில் நின்று கொண்டிருந்த முரடர்களை ஹரிஹரனின் ஆட்கள் கட்டி வைத்திருந்தனர்.. கோவில் முழுவதும் ஹரிஹரனின் ஆட்களால் சூழப்பட்டிருந்தது..

ஹரிஹரன் மணமேடைக்கு வந்தான்.. பலி ஆடு போல் நடுங்கிக் கொண்டிருந்த ரெங்கநாதனின் அக்காள் மகனைப் பார்த்து,

“எழுந்திருடா..” என்று அதட்டினான்.. அவன் தப்பித் தேன்.. பிழைத்தேன் என்று ஓடி விட்டான்.. ஹரிஹரன் மணவறையில் அமர்ந்து மாலையைப் போட்டுக் கொண்டான்.. ரூபிணியை பார்வையால் அழைத்தான்.. அவள் தயங்காமல் வந்த அவன் அருகே அமர்ந்து கொண்டாள்..

ரூபிணியின் ஆசைப்படி அவளது ஊரில்.. பெருமாள் கோவிலில்.. அவளைப் பெற்றவர்கள்.. அவளுடன் பிறந்தவர்கள்.. அவளது சொந்தக்காரர்கள் முன்னிலையில் ஹரிஹரன் ரூபிணியின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டு தாலியைக் கட்டினான்..

விழுப்புரத்தில் அவனது மாளிகை போன்ற வீட்டில் முதலிரவில் அவனது மனைவியாக அவன் கரங்களுக்குள் அடங்கினாள் ரூபிணி.. போராட்டத்தை மட்டுமே அதுவரை அறிந்த ஹரிஹரன்.. அவனைக் காதலித்தவளை அன்று அறிந்து கொண்டான்.. போர்க்குணம் கொண்டவனை தன் நெஞ்சத்திலே கொண்டாடிய அந்தப் பேதை அவனது நெஞ்சத்தை மஞ்சமாக்கி துயில் கொண்டாள்.. இனி அவன் அவளது பொறுப்பு.. தாயாய்.. தோழியாய்.. காதலியாய் மனைவியாய் அவனை மடிதாங்க அவள் வந்து விட்டாள்.. ஹரிஹரன் என்னும் சிங்கம்.. சிறுமயிலின் கண்ணசைவில் கட்டுண்டு விட்டது..

அவனது நெஞ்சம் அவளுக்கும்.. அவளது நெஞ்சம் அவனுக்கும்.. நிரந்தரமாய் சொந்தமாகி விட்டது..

– முற்றும் –

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link