Chapter 01
பச்சை வர்ணம் அடித்த காம்பவுண்டு கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் பிரசன்னா.. வீட்டின் முன்னால் இருந்தா கொய்யா மரத்தின் மீதிருந்து..
“அண்ணா.. என்னைக் கீழே இறக்கி விடேன்..” என்ற குரல் கேட்டது..
அண்ணாந்து பார்த்தான்.. கொய்யா மரத்தின் கிளையில் பாவாடையின் விளிம்பில் கொலுசு அணிந்த பாதங்கள் மட்டும் தெரிந்தன..
“எங்கே இருக்கிறாய் வாசவி..” என்று கொய்யா மரத்தின் இலைகளுக்கு இடையே பார்வையால் துழாவிய வண்ணம் அவன் வினவினான்..
“இதோ.. இங்கே..” மரத்தின் இலைகளுக்கு இடையே இருந்து ஒரு நிலவு முகம் வெளிப்பட்டது..
அழகிய பெரிய விழிகளுடன்.. இரட்டைப் பின்னலை முன்னால் போட்டு.. தாவணியை இழுத்துச் செருகி.. கொய்யா மரத்தின் கிளையினில் அமர்ந்திருந்தாள் வாசவி..
பிரசன்னாவிற்கு அவளைக் கண்டதும் சிரிப்பு வந்து விட்டது.. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.. அவளைப் பார்த்து அரட்டினான்..
“ஏய்.. வானரம்.. எப்படி மரத்தினில் ஏறின..?”
“ஸ்டூலைப் போட்டு ஏறினேன் அண்ணா..”
“அந்த ஸ்டூல் எங்கே..?”
“நான் ஏறிய வேகத்தில் காலால் உதைத்தேனா.. அது.. அதோ.. அங்கே விழுந்து கிடக்குது..”
வாசவி சுட்டிக் காட்டிய திசையில் ஒரு ஸ்டூல் படுக்கைவாக்கில் கிடந்தது..
“மரத்தில் ஏறிட்ட… சரி.. எப்படி இறங்குவதாக உத்தேசம் பண்ணியிருந்த..?”
“நான் எந்த உத்தேசமும் வைத்துக்கிட்டு மரமேறலை அண்ணா..”
“வெரிகுட்.. இறங்குகிற ஐடியாவே இல்லைன்னு சொல்லு.. ஆக்சுவலா வாசவி.. நீ இருக்க வேண்டிய இடம் மரம்தான்.. கரெக்டாகத்தான் உன் இடத்தை நீ செலக்ட் செய்திருக்கிற… அங்கேயே இரு..”
“அண்ணா.. ப்ளீஸ்.. என்னை இறக்கி விடேன்..”
“நீ இறங்கி வந்து ஆகப் போவதென்ன சொல்லு..”
“ஏன் இல்லை..? நாளைக்கு உனக்குக் கல்யாண மானா நாத்தனார் முடிச்சைப் போட நான் உனக்கு வேண்டாமா..?”
பிரசன்னாவிற்குத் தங்கையின் சாதுர்யத்தைக் கண்டு இன்னும் சிரிப்பு அதிகமாகியது.. ஆனால்.. சிரிப்பைக் கொஞ்சம்கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல்.. முகத்தைக் கடுமையாக வைத்துக் கொள்ள முயன்றான்..
“நான் சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்கேன்.. அதனால் இந்த நாத்தனார் முடிச்சைப் போட நீ ஒன்னும் சிரமப்பட்டுக் கீழே இறங்கி வர வேண்டாம்.. மரத்தின் மேலேயே வாசம் செய்..”
“அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவிற்கு வந்து விடாதே அண்ணா.. ஒழுங்காய் உன் பெண் டாட்டியின் கழுத்தில் தாலியைக் கட்டி விடு..”
“ஏனாம்..?”
“அப்போதுதான் அவள் நீ எது செய்தாலும்.. நீ கட்டிய தாலியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டு.. ஆயிரம் தான் இருந்தாலும்.. இவர் எனக்குத் தாலிகட்டிய புருசன்னு பொறுத்துப் போவாள்..”
“இல்லைன்னா..”
“நீ சீர்திருத்தம் பேசுவதைப் பார்த்துவிட்டு… அவள் உனக்குச் சம உரிமை தரலாமா.. இல்லை வேண்டாமான்னு யோசிக்கப் போகிறாள்.. அப்புறம்.. உன் கதை கந்தல்தான்..”
“இதைப் பாருடா.. எனக்கு அவள் சம உரிமை தருவாளாமா..? இது எங்கே நடக்குது..?”
“நிறைய இடங்களில் நடக்குது.. நீ முதலிலேயே மூன்று முடிச்சைப் போட்டு.. நன்றாக நினைவில் வை அண்ணா.. அந்த நான்காவது முடிச்சான நாத்தனார் முடிச்சை நானும் போட்டு.. கைக்குள் அடக்கி வச்சிக்கிட்டேன்னு வை.. நிம்மதியாக வாழ்வாய்.. இல்லையின்னா..”
“இல்லையின்னா..?”
“ம்ஹூம்.. உன் பாடு திண்டாட்டம்தான்.. நீ சிகரெட் பிடித்தால் அவளும் சிகரெட் பிடிப்பாள். ஏன்னா.. நீதான் சம உரிமை தந்திருக்கிறாயே..”
“நான்தான் சிகரெட் பிடிக்க மாட்டேனே..”
“ஒருவேளை.. உனக்குப் பிடிக்கணும்னு தோணினால்.. என்ன செய்வே..?”
“எதுவும் செய்ய மாட்டேன்..”
“நீ சுத்த வேஸ்ட் அண்ணா.. சிகரெட் பிடிக்க மாட்ட.. தண்ணி அடிக்க மாட்ட.. என் பிரெண்ட்ஸை சைட்டும் அடிக்க மாட்ட.. இப்படி சைவப் பட்சியாய் நீ இருப்பது எனக்குத்தான் ஷேமாக இருக்கிறது..”
“நான் யோக்கியனாய் இருந்தால்.. உனக்கென்ன வருத்தம் வாசவி..?”
“பின்னே.. இருக்காதா..? என் பிரண்ட்ஸ்களில் யாரை யாவது நீ கவிழ்த்தால்.. அவள் என்னிடம்.. உனக்காகத் தாஜா செய்வாள். நானும் பிகு பண்ணிக்கிட்டு அவளை வேலை வாங்குவேன்.. ம்ஹூம்.. எனக்கொரு அடிமை உன் புண்ணியத்தால் கிடைத்திருப்பாள்.. அதற்கு ஒரு வழியும் இல்லாமல் பண்ணிக் கொண்டிருக்கிற.. நீ இவ்வளவு ஹேண்ட்சம்மான ஹீரோவாக இருந்து எனக்கு என்ன பிரயோஜனம்..? ஒன்னும் யூஸ் இல்லை..”
“உன் வாய்க்கு.. உன்னைக் கீழேயே இறக்கி விடக்கூடாது.. வாயாடி.. கொஞ்சமாவது அண்ணன்கிற பயம் இருக்கா உனக்கு..?”
“பயமா..? உன்னிடமா..? எதுக்கு..? ஹா.. ஹா..”
தங்கையின் மலர்ந்த சிரிப்பு பிரசன்னாவையும் ஒட்டிக் கொள்ள.. அவன் வாய்விட்டுச் சிரித்தான்.. பின் தங்கையை இறக்கிவிடக் கை நீட்டினான்..
“கீழே இறங்கு..”
“முதலில் நீ இந்தக் கொய்யாப் பழங்களைப் பிடி..”
வாசவி.. தன் தாவணி முந்தானையை விரித்து நீட்டினாள்.. அதை எப்படி வாங்கிக் கொள்வது என்று தெரியாமல் பிரசன்னா திகைத்தான்..
“அம்மா.. அம்மா..” வீட்டுக்குள் திரும்பிப் பார்த்துச் சத்தம் கொடுத்தான்..
“அடடா.. ஒரு நிமிசம்.. உள்ளே சமையல் வேலையை நிம்மதியாய்ப் பார்க்க முடியல.. என்னடா..” என்றபடி திலகம்.. தலையை மட்டும் வெளியே நீட்டிக் குரல் கொடுத்தாள்..
“இங்கே கொஞ்சம் வாங்க..”
“அடுப்பில் எண்ணெய்ச் சட்டி இருக்குடா..”
“இங்கே மரத்தில்.. நம்ம வீட்டுக் குரங்குக் குட்டி இருக்கும்மா..”
“குரங்குக் குட்டியா..? எங்கேயிருந்துடா வந்திருக்குது..?”
திகலம் ஆச்சரியத்துடன் வினவியவாறு.. மரத்திற்குக் கீழே வந்து நின்று அண்ணாந்து பார்த்தாள்.. அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது..
“அடிப்பாவி.. வாசவி.. மரத்திற்கு மேலே என்னடி பண்றே..?”
“கொய்யாப் பழம் பறித்தேன் அம்மா..”
“ஏன்டி.. யாராவது உன்னை இப்படி மரத்துக்கு மேலே பார்த்தா என்ன நினைத்துக்குவாங்க..?”
திகலம் அங்கலாய்க்க.. பிரசன்னா சாவதானமாய்ப் பதில் கூறினான்..
“என்ன நினைத்துக்குவாங்க..? நான் சொன்னது போல.. குரங்குக் குட்டி வந்திருக்குதுன்னு நினைச்சுக்கு வாங்க..”
“அண்ணா.. வேண்டாம்.. என்னிடம் வைத்துக் கொள்ளாதே..”
“எப்படி மிரட்டுகிறா பாருங்கம்மா.. அப்படியே சொர்ணாக்காதான்..”
“ஆமாம்டா.. ரவுடி ராக்கம்மா ரேஞ்சிற்குத்தான் மிரட்டுகிறா..”
“என்னம்மா நீங்க.. அண்ணனுக்கே சப்போர்ட் பண்ணுகிறீங்க..?”
“அவன் என்ன உன்னைப் போல.. மரத்தின் மேலேயா ஏறி உட்கார்ந்திருக்கிறான்..?”
“அப்படி ஏறினால்தான் தேவலையே..”
“என்னடி சொன்னாய்..?”
“பின்னே என்னம்மா.. இப்படி ஓவராய் நல்லபிள்ளை போல் பிலிம் காட்டினால் எப்படி..? என் பிரண்ட்ஸெல்லாம் இவனை.. அதோ உன் அண்ணன் விவேகானந்தர் வருகிறார் பாருன்னு கிண்டலடிக்கிறாங்க..”
“என்னது.. விவேகானந்தரா.. டேய் பிரசன்னா.. கடைசியில் வயசுப் பெண்கள் எல்லாம் உன்னைப் பார்த்து இப்படிக் கிண்டலடிக்கிறது போல ஆகிவிட்டாயேடா..”
திலகம் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.. பிரசன்னா பொய்க் கோபத்துடன் தங்கையை முறைத்தபடி.. வீட்டுக்குள் செல்லப் போவது போல் பாவனை காட்டினான்.
“என்னையா கலாய்க்கிறாய்.. இரு.. உன்னைக் கீழே இறக்கி விடப் போவது யாருன்னு பார்க்கறேன்..”
“அப்போ நீ இறக்கி விட மாட்டாயா..?”
“ஊஹூம்.. விவேகானந்தர் பாறை மேல் உட்கார்ந்து கொண்டு தியானம்தான் பண்ணுவார்.. மரத்திலிருந்து இறக்கியெல்லாம் விடமாட்டார்..”
“பாரு அண்ணா.. உனக்கு என் தயவு அவசியம் தேவை..”
“ஏனாம்…?”
“நாளைக்கு உனக்குப் பெண் பார்த்தால் உன்னைப் பற்றி நல்ல விதமாக நான்கு வார்தைகள் பேச.. உனக்கொரு தங்கை வேண்டாமா..?”
“எதற்கும்மா.. நீ அவங்களிடமும் வந்து என்னை விவேகானந்தர்ன்னு சொல்வதற்கா..? ஆளை விடு தாயே..”
“அப்படியெல்லாம் விட முடியாது.. அட நல்ல வார்த்தை சொல்லத்தான் நான் உனக்கு வேண்டாம்.. மொட்டைக் கடுதாசி போடாமலிருக்கவாவது நான் வேண்டுமில்லையா..?”
“உன்னை..! அண்ணனை என்னடி சொல்லி மிரட்டு கிற..?”
திலகம் கையை ஓங்கி மகளை அடிக்கப் போனாள்.. பிரசன்னா சிரித்துக் கொண்டே தாயைத் தடுத்தான்..
“முதலில் அவள் தாவணி முந்தானையில் இருக்கிற கொய்யாப் பழங்களை வாங்குங்கம்மா..”
திலகம்.. தன் சேலை முந்தானையை விரிக்க.. வாசவி.. தன் தாவணி முந்தானையில் இருந்த கொய்யாப் பழங்களைக் கொட்டினாள்..
“அண்ணா.. இப்போது இறக்கிவிடு..”
பிரசன்னாவின் தோள் பிடித்து.. கீழே குதித்த வாசவி.. ஐந்தே கால் அடி உயரத்தில்.. ஒல்லியான உடல் வாகோடு இருந்தாள்.. ஆறடி உயரத்தில் இருந்த தமையனின் தோளில் செல்லமாய்த் தலை சாய்த்தும் கொண்டாள்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.