Chapter 07

0Shares

சுகந்தியின் பார்வை தன் தங்கை மேல் விழுவதைக் கவனித்த பிரசன்னாவிற்கு.. அது ஒன்றும் ஆச்சரியத்தை அளிக்கவில்லை.. வாசவியின் குணம் அனைவரையும் ஆகர்ஷிக்கும் தன்மை கொண்டது என்பதை அவன் அறிந்தவன்தானே..

“என்ன அண்ணி அப்படிப் பாக்கறீங்க.. என் பெயர் வாசவி.. பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்.. தேர்ட் இயர் படிக்கிறேன்.. மேலே எம்.ஸி.ஏ. படிக்கணும்னு ஆசை.. நீங்க என்ன அண்ணி படித்திருக்கீங்க..” வாசவி ஆவலுடன் சுகந்தியைப் பார்த்து வினவினாள்..

வாசவியின் இயல்பான பேச்சில் தயக்கம் விலகிய சுகந்தி புன்சிரிப்புடன் பதில் கூறினாள்..

“பி.எஸ்ஸி. மேத்ஸ்..”

“வாவ்.. நீங்களும் எம்.ஸி.ஏ. படிக்கலாமே..”

வாசவியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று சுகந்தி யோசித்துக் கொண்டிருக்கையில்.. பிரசன்னா சுகந்தியை விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டே வாசவியிடம்,

“ஏய்ய்.. வாலு.. நீ என்ன உன் அண்ணியை டைவர்ட் பண்ணுகிற..? என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லிச் சொல்வாய்ன்னு உன்னைத் துணைக்குக் கூப்பிட்டுக்கிட்டு வந்தால்.. நீயானால்.. எம்.ஸி.ஏ. படிக்கப் போகச் சொல்கிறாயே.. இதுதான் நீ என் வாழ்க்கையைப் பார்க்கும் லட்சணமா..?” என்று கேட்டான்..

சுகந்தியின் முகம் குங்குமமாய்ச் சிவந்து விட்டது.. அவள் கால் கட்டைப் பெருவிரலால் தரையைக் கீறிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.. வாசவி.. ‘களுக்’ கென்று வாய் பொத்திச் சிரிக்க அவள் விழியுயர்த்தி.. வாசவியிடம் பார்வையாலேயே ‘என்ன’வென்று வினவினாள்..

“அண்ணி.. நீங்க மட்டும்.. வாசலில் நின்று இப்படித் தரையை உங்கள் கால் பெருவிரலால் தோண்டியிருந்தால் இந்நேரம் இங்கே ஊற்றுக் கிளம்பியிருக்கும்.. அது ஏன் அண்ணி.. பெண்கள் மட்டும் வெட்கம் வந்தால்.. தரையில் ஊற்றுத் தோண்டுகிறார்கள்..”

சுகந்திக்கும் இப்போது சிரிப்பு வந்துவிட.. அவர்களது ஒற்றுமையையும்.. நெருக்கத்தையும் கண்டு சுமதிக்குப் பொறாமை வந்து விட்டது.. அவள் வாசவியை ஏற இறங்கப் பார்த்தாள். பின் கழுத்தை ஒரு நொடிப்பு.. நொடித்து விட்டுக் கூறினாள்..

“ஊம்.. அதை நீ நாளைக்கு யாரிடமாவது வெட்கப் பட்டு நின்று கொண்டு தரையில் பள்ளம் தோண்டு வாயில்லையா..? அப்போது தெரிந்து கொள்ளலாம்..”

“அப்படியா.. என்னை வெட்கப்பட வைக்கவும் ஒருவன் பிறந்து வருவானா..?”

“இனிப் பிறந்து வந்தால்.. அவன் குழந்தையாக இருப்பான்ம்மா.. ஏற்கெனவே எங்காவது பிறந்திருப்பான்..”

“இன்ட்ரெஸ்டிங்.. இதைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கலாம்.. அண்ணா.. நான் எனக்கென்று பிறந்தவன் எங்கே இருக்கிறான்.. எப்போது வருவான்.. என் பதைப் பற்றி இவங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறேன்.. நீ அண்ணியுடன்.. அந்த பால்கனிக்குப் போய் நின்று.. நீ கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு வா.. எங்களுக்கொன்றும் அவசரமில்லை.. நாங்கள்.. பொறுமையாகக் காத்திருப் போம்.. நீங்க சொல்லுங்க.. எனக்கென்று பிறந்தவன் எப்படி இருப்பான்..?”

வாசவி பிரசன்னாவின் கையைப் பிடித்து எழுப்பி விட்டு.. சுமதியின் அருகே போய்ச் சட்டமாக அமர்ந்து கொண்டாள்.. பிரசன்னா.. சுகந்தியின் முகத்தைப் பார்க்க சுகந்தி.. தன் உடலில் மின்சாரம் பாய்வதை உணர்ந்தாள்.. கை நடுங்க அவள் தலை குனிந்து.. கொள்ள..

“ஐயே.. என்ன அண்ணி இது.. நான் சொன்னது உங்கள் காதுகளில் விழுகவில்லையா..? அண்ணன் நின்று கொண்டிருக்கிறான்.. நீங்கள் என்னடாவென்றால்.. அசைய மாட்டேன்னு அடம் பிடிக்கிறீர்களே.. எழுந்திருங்க.. அட எழுந்திருங்க அண்ணி, சொல்கிறேன்..” என்று வாசவி சுகந்தியின் கையைப் பிடித்து எழுப்பினாள்..

அத்தோடு நிறுத்தாமல்.. சுமதியைப் பார்த்து..

“ஒரு நிமிசம் இருங்க.. இவங்க இரண்டு பேரையும் பால்கனிக்குப் பார்சல் பண்ணி விட்டு வந்து விடுகிறேன்.. எனக்கு வரப் போகும் ஹீரோவைப் பற்றிய கதையை நாம் கன்டினியூ பண்ணலாம்..” என்று சொல்லி விட்டு.. சுகந்தியின் கையைப் பிடித்து.. ஏறக்குறைய இழுத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றாள்..

தங்கையின் செய்கையை மனதிற்குள் ரசித்துப் பாராட்டிய வண்ணம் பிரசன்னா அவர்களைத் தொடர்ந்தான்..

பால்கனியில் எதிரும்.. புதிருமாகப் போடப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் ஒன்றில் சுகந்தியை அமர வைத்த வாசவி.. பிரசன்னாவைப் பார்த்து ரகசியமாய்க் கட்டை விரலை உயர்த்திக் காண்பித்து விட்டுச் சென்று விட்டாள்..

பிரசன்னா.. சுகந்தியையே பார்த்த வண்ணம் அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.. சுகந்தி தலை நிமிரவில்லை..

“சுகந்தி..” மென்மையாக அழைத்தான் பிரசன்னா..

“ம்ம்..” அவள் தலை நிமிராமல் முணுமுணுத்தாள்..

“என்னை நிமிர்ந்து பார்..”

அவள் தலை நிமிரவில்லை.. அவளுடைய அந்த வெட்கம் பிரசன்னாவைக் கவர்ந்தது..

“இப்போது நாம் போனதும்.. நம்மிடம்.. பிடித்திருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்பார்கள்.. நான் பிடித்திருக்கிறது என்று சொல்லு முன்னால்.. உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்..”

சுகந்தி அப்போதும் தலை நிமிரவில்லை..

“அப்படியானால்.. உனக்கு என்னைப் பிடிக்கவில்லைன்னு நான் எடுத்துக் கொள்ளட்டுமா..?”

அவள் அவசரமாகத் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.. அவளுடைய அந்தப் பதட்டம்.. அவளுடைய மனத்தை உணர்த்தி விட.. பிரசன்னாவின் ஆண்மை கர்வம் கொண்டது..

“நான் அப்படிச் சொன்னேனா..?”

“வாய்விட்டுச் சொன்னால்தானா..? உன் மௌனம் அப்படித்தானே எனக்கு உணர்த்துகிறது..”

“மௌனமாக இருந்தா.. சம்மதமில்லைன்னு அர்த்தம் கொள்வார்களா.. என்ன..?”

“அப்படின்னா மௌனம் சம்மதம்ன்னு அர்த்தம் எடுத்துக் கொள்ளவா..?”

சுகந்தி வெட்கத்துடன் விரல் நகத்தை ஆராய்ந்தாள்..

“ஆனால்.. எனக்கு ஒன்றுதான் விளங்கவில்லை சுகந்தி..”

“என்ன..?”

“என் முகத்தைப் பார்க்காமலேயே என்னைப் பிடித்திருக்கிறதுன்னு எப்படிச் சொன்னாய்..? ஏன் சொல் கிறேனென்றால் நீ என்னைப் பார்த்ததைவிட.. வாசவியைத் தான் அதிகமாகப் பார்த்துக் கொண்டிருந்தாய்..”

“அது நிஜம்தான்.”

“பரவாயில்லை.. ஒப்புக் கொண்டாய்..”

“நீங்கள் உங்கள் தங்கையிடம் அடிக்கடி ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தீங்களே.. என்ன அது..?”

“உண்மையில் அதைப் பற்றிச் சொல்ல வேண்டு மானால் ஒன்றுமே யில்லைன்னுதான் சொல்லனும்.. வாசவி ரகசியம் பேசுவதற்குக் காரணமே தேவையில்லை.”

பிரசன்னா வாத்சல்யத்துடன்.. பால்கனியிலிருந்து திரும்பி ஹாலில் அமர்ந்து சுமதியிடம் பேசிக் கொண்டிருந்த தங்கையைப் பார்த்தான்..

“உங்களுக்கு உங்கள் தங்கை மேல் பாசம் அதிகமா..?”

பிரசன்னா.. சட்டென்று திரும்பி.. சுகந்தியை நேராகப் பார்த்தான்.. அவன் விழிகளில் வியப்புத் தெரிந்தது..

“ம்ம்.. பாசம் அதிகம்தான்.. ஏன்.. உனக்கு உன் அக்காவின் மேல் பாசம் இல்லையா..?”

“அது.. அது வந்து..”

சுகந்தி தடுமாறினாள்.. பிரசன்னா மென்மையுடன் அவளைப் பார்த்துச் சிரித்தான்..

“சுகந்தி.. நீ ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்..”

“என்ன..?”

“நான் என் பெற்றவர்களுக்கு மகன்.. என் தங்கைக்கு அண்ணன்.. இவர்களின்மேல் எனக்குப் பாசம் அதிகம்..”

“ம்ம்…”

“அதே சமயம்.. என் மனைவியின் மேல் கொட்டு வதற்குக் கடலளவு காதல் எனக்குள் உண்டு..”

சுகந்தி சட்டென்று விழியுயர்த்தி அவன் முகம் பார்த்தாள்.. அவளுக்கு எதுவோ புரிவது போல் இருந்தது.. அவன் அவளுக்கு மட்டும் புரியும்படி.. அமைதியாகக் கண்களை மூடித் திறந்தான்..

“வாசவியின் மேல் எனக்கிருப்பது பாசம்.. அதே சமயம் வரப் போகும் மனைவியின் மேல் எனக்கிருக்கப் போவது காதல்.. இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு..”

“வரப்போகும் மனைவி.. வரப் போகும் மனைவி யென்றே சொல்கிறீங்களே.. அது நான் இல்லையா..?”

“அந்த நம்பிக்கை எனக்கு உண்டு.. அதே சமயம் உன் மனதிலிருக்கும் இது போன்ற குழப்பங்களைக் கடந்து வந்து நீயும் முழு மனதாய்ச் சம்மதம் சொல்ல வேண்டு மில்லையா..?”

“என் கணவர் எனக்கு மட்டும்தான் என்று பொஸஸிவ்வாய் இருப்பதும் நினைப்பதும் தவறா..?”

“கொஞ்சம் கூடத் தவறில்லை.. அது உனக்கு என் மேலிருக்கும் காதலை உணர்த்தும் விசயம்.. உன் கணவன் உனக்கு மட்டும்தான் கணவன் மற்றும் காதலன் என்ற முறையில் சொந்தமானவன்.. அதே கணவன் உனக்கு வேறு சொந்தமாக முடியுமா..?”

சுகந்தி உதட்டைக் கடித்துக் கொண்டு தலையை அசைத்தாள்..

“இல்லையல்லவா..? நான் என் அம்மாவிற்குத்தானே மகனாக இருக்க முடியும்..? என் தங்கைக்குத்தானே அண்ணனாக இருக்க முடியும்..? அதேபோல் உன்னிடம் மட்டும்தானே கணவனாகவும், காதலனாகவும் இருக்க முடியும்..? இன்னும் சொல்லப் போனால்.. உன்னை மட்டும்தானே என்னால் காதலிக்க முடியும்..?”

“ஐ ஆம் ஸாரி.. நான் புரியாமல் பேசி விட்டேன்..”

“இதில் ஸாரி கேட்க வேண்டிய அவசியமேயில்லை.. உன் மனதில் எது இருந்தாலும் தயக்கமில்லாமல் என்னிடம் பேசித் தெளிவு பண்ணிக் கொள்ளலாம்.. உனக்கில்லாத உரிமையா..?”

“உங்கள் அம்மாவையும் விட.. உங்களின் தங்கையையும் விட.. எனக்கு அதிக உரிமையிருக்கிறதா..? ஏன் கேட்கிறேனென்றால்.. உனக்கில்லாத உரிமையான்னு  நீங்கதான் சொன்னீங்க..”

பிரசன்னா சுகந்தியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.. அவளது மனம் சிணுங்குவது.. அவனுக்குப் புரிந்தது..

0Shares

Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link