Chapter 09
மழை விட்டிருந்தது.. மழைக்குப் பின் வந்த சூரிய வெளிச்சம் ஈரமான பூமிக்கு வெதுவெதுப்பை அளித்துக் கொண்டிருந்தது.. ஹாலில் இருந்த சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு காளிதாஸ் சொல்லச் சொல்ல.. தரையில் அமர்ந்து.. மடியில் ஒரு நோட்டை வைத்துக் கொண்டிருந்த வாசவி குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தாள்.. திலகம் சற்று நேரம் காளிதாஸிற்கு அருகே அமர்ந்து யோசனை சொல்வதும்.. ஊடே எழுந்து சமையலறைக்குள் சென்று சமையலைக் கவனிப்பதுமாக இருந்தாள்..
“அப்புறம்..?”
“அப்புறம்.. ம்ம்.. கோயம்புத்தூரில் இருக்கிற உன் பெரியம்மா வீட்டை எழுதி விட்டாயா..?”
“ஆச்சு..”
“ஒட்டன்சத்திரத்தில் இருக்கிற உன் மாமா வீடு..?”
“எழுதி விட்டேன்..”
“திலகம்.. திலகம்..”
“என்னங்க..”
“இன்னும் வேறு யார்.. யாருக்குத் துணிகள் எடுக்கணும்..?”
“கொஞ்சம் பொறுங்க.. வந்து சொல்கிறேன்..”
திலகா சமையலறைக்குள் இருந்து குரல் கொடுக்க.. தற்காலிகமாய் எழுதுவதை நிறுத்திய வாசவி.. திருமண அழைப்பிதழ்களில் ஒன்றைக் கையில் எடுத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தவள்.. வாசலில் வண்டிச் சத்தம் கேட்கவும்.. தலையைத் திருப்பி வாசல்புறம் பார்த்தாள்..
“அப்பா.. அண்ணன் வந்துவிட்டான்..”
“ஏன்டி.. அவனுக்குக் கல்யாணமாகப் போகிறது.. இன்னும் மரியாதை இல்லாமல் அவன்.. இவன்னு பேசுகிறாயா..? வாயிலேயே கரண்டியால் ஒரு போடு போட்டு விடுவேன்..”
திலகம் சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்து அதட்டினாள்.. பிரசன்னா சிரித்தபடி வாசவியின் அருகே யிருந்த சோபாவில் அமர்ந்து.. தங்கையின் தலையைப் பாசமாய்த் தடவிக் கொடுத்தான்..
“விடுங்கம்மா.. அவள் எப்போதும் போலவே இருக்கட்டும்..”
“இல்லைடா பிரசன்னா.. இன்றைக்குப் பேசும் வாய் தான் நாளைக்கும் பேசும்..”
“பேசினால்தான் என்ன..?”
“வரப் போகும் மருமகள் என்னடா நினைத்துக் கொள்வாள்..?”
“எதுவும் நினைத்துக் கொள்ள மாட்டாள்.. அவளுக்கு வாசவியை ரொம்பப் பிடிக்கும்..”
“இருந்தாலும் பிரசன்னா..”
“அம்மா.. வேண்டாம்.. வாசவி பிறந்ததிலிருந்து எப்படி என்னிடம் பேசுகிறாளோ.. அப்படியே பேசட்டும்.. புதிதாய் மரியாதை அது… இதுன்னு அவளுடைய மண்டையைப் போட்டுக் குழப்ப வேண்டாம்.. அண்ணன்.. தங்கைக்குள்ளே மரியாதை என்னம்மா வேண்டிக்கிடக்கு..?”
“நீயே செல்லம் கொடுத்து அவளைக் கெடுக்கப் பார்க்கிறாயே..”
திலகம் மனத்தாங்கலுடன் சமையலறையை விட்டு வெளியே வந்து அவர்களுடன் அமர்ந்தாள்..
“சொல்லு திலகம்.. இன்னும் யார்.. யாருக்கு ஜவுளி எடுக்கணும்..?”
“அந்த ஸிஸ்டை இப்படிக் கொடுங்க..”
காளிதாஸும்.. திலகமும் விவாதித்துக் கொண்டிருக்க.. வாசவி பிரசன்னாவின் பக்கம் நகர்ந்து உட்கார்ந்து ரகசியக் குரலில் கேட்டாள்..
“அண்ணா.. அண்ணியிடம் இன்றைக்கு எவ்வளவு நேரம் பேசினாய்..?”
“ஸ்ஸ்.. வாசவி.. அப்பா இருக்கிறார்..”
“அவர் கல்யாண ஜவுளிக் கணக்கில் இருக்கிறார்.. நீ சும்மா சொல்லு..”
பிரசன்னா பதில் சொல்லாமல் அவளுடைய தலையில் ஒரு கொட்டு வைத்தான்..
“ஆ.. வலிக்குது அண்ணா..”
“வலிக்குதில்ல.. அப்பா முன்னால் அடக்கி வாசி..”
காளிதாஸும்.. திலகமும்.. திருமண ஜவுளி லிஸ்டை ஒரு வழியாய் முடித்து விட்டுப் பிரசன்னாவின் பக்கம் திரும்பினார்கள்..
“உனக்கு எத்தனை இன்விடேசன் வேண்டும் பிரசன்னா..?”
பிரசன்னா பதில் சொல்வதற்கு முன்னால்.. வாசவி முந்திக் கொண்டு சிரித்தாள்..
“ஏன் சிரிக்கறம்மா..?”
“அப்பா.. அண்ணன் இன்விடேசன் அடித்து.. அவனுடைய ஆபிஸ் பிரண்ட்ஸுக்கும் மற்ற பிரண்ட்ஸுக்கும் ஏற்கெனவே கொடுத்தாகி விட்டது..”
“என்னது.. தனியாக இன்விடேசன் அடித்தானா..?”
“பின்னே.. நிகழும் மங்களகரமான தைத்திங்கள் பதினைந்தாம் நாளில்.. திருவளர் செல்வன் பிரசன்னா விற்கும்.. திருவளர் செல்வி சுகந்திக்கும்.. விவாஹம் செய்யப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு.. சுபமுகூர்த்த சுபநாளில் அறந்தாங்கியிலிருக்கும் திருமண மண்டபத்தில் நடக்கும்.. அந்தத் திருமணத்திற்குத் தங்கள் நல்வரவை விரும்பும்.. காளிதாஸ்ன்னு நீங்கள் அடித்து வைத்திருக்கும் இந்த இன்விடேசனையா அண்ணன் அவனுடைய பிரண்ட்ஸுக்குக் கொடுப்பான்.. அதோட டைப்பே வேறு அப்பா..”
“அப்படி என்னடா அது புது டைப்..?”
“அது வந்துப்பா..”
பிரசன்னா தடுமாற.. வாசவி மீண்டும் சிரித்தாள்..
“அதையேன்ப்பா அவனிடம் கேட்கறீங்க.. என்னிடம் கேட்டால் நான் சொல்ல மாட்டேனா..?”
“சொல்லும்மா..”
“உங்கள் வீட்டு நாட்காட்டியில் குறித்து வையுங்கள்.. உங்கள் கையிலிருக்கும் கைபேசியில் பதிந்து வையுங்கள்.. உங்களது ஜன்னலில் வெளிச்சக் கீற்றைப் பரப்பும் விடியலின் சூரியனிடம் சொல்லி வையுங்கள்.. வரும் பதினைந்தாம் தேதி.. அதிகாலையில்.. பிரசன்னாவிற்கும்.. சுகந்திக்கும் கல்யாணம் என்று..”
“அட.. இது கூட நல்லாயிருக்கே.. என்னடி திலகம்..?”
“ஆமாமாம்.. இந்தக் காலத்துப் பிள்ளைகள்.. வாழ்க் கையை ரசித்து வாழ்பவர்கள்..”
“அப்போ.. நாம் ரசித்து வாழவில்லைன்னு சொல் கிறாயா..?”
“நான் எப்போதுங்க அப்படிச் சொன்னேன்..”
“இப்ப நீ சொன்னதுக்கு அதுதானே அர்த்தம்..”
“ராமா.. வீட்டுக்கு மருமகள் வரப்போகிற சமயத்தில் என் புருசனுக்குப் புத்தி போகும்.. போக்கைப் பாரு.. இத்தனை நாளும் வாயைத் திறக்காமல் இருந்து விட்டு.. காலம் போன கடைசியில் பெண்டாட்டியோடு சண்டை போட அலைகிறாரே..”
காளிதாஸ் சப்தமாய்ச் சிரிக்க.. திலகவதி தோள்ப் பட்டையில் முகவாயை இடித்துக் கொண்டாள்..
“மெல்லடி.. தோள்ப்பட்டை பிய்ந்து விடப் போகிறது..”
“ரொம்பத்தான் அக்கறை..”
“பின்னே.. நாளைக்கு நம் பிரசன்னாவின் கல்யாணத் தப்போ.. மாப்பிள்ளையைப் பெத்தவங்க மேடையில் நிற்கணுமே..”
“அதனால்தான் அக்கறையாக்கும்..”
“ஆமாம்.. நீ வேறு என்னன்னு நினைத்தே..”
திலகவதி பொய்க் கோபத்துடன் எழுந்து கொள்ள முயன்றாள்.. காளிதாஸ் கடகடவென்று சிரித்தபடி.. அவளது கைப் பிடித்து அமர வைத்தார்..
“விடுங்க என்னை..”
“உட்காருடி.. அட உட்காருன்னு சொல்கிறேனில்ல..”
“உள்ளே எனக்கு வேலையிருக்கு..”
“இங்கேயும் வேலையிருக்கு.. சொல்லு.. உனக்கு எத்தனை பட்டுப் புடவை வேண்டும்..?”
திலகவதியின் கோபம் பறந்து விட்டது.. வீட்டிற்குத் தேவையானதை அவள் சொல்லி முடிக்க.. காளிதாஸ் வாசவியிடம் வினவினாள்..
“உனக்கும்மா..?”
“எனக்குப் பட்டுப் புடவையெல்லாம் வேண்டாம்ப்பா..”
“ஏன்ம்மா.”
“எனக்குப் புடவை கட்டிக்கவே தெரியாதுப்பா.. அழகாய் இரண்டு சுடிதார் எடுங்க..”
“என்ன திலகம்.. வாசவி இப்படிச் சொல்கிறாள்..”
“அவளுக்கென்ன.. பைத்தியம் போல் உளறுவாள்.. அவளுக்கு நான்கு பட்டுப் புடவைகள் எடுத்து விடுங்க..”
“நான்கா..? ஏம்மா ஒன்றைக் கட்டவே நான் யோசிக்கிறேன்.. இதில் நான்கு புடவைகளா..? அப்பா..! அதெல்லாம் வேண்டாம்..”
“முட்டாள் போலப் பேசாதே வாசவி.. கல்யாணத்திற்கு நம்ம சொந்த பந்தம் அத்தனையும் வந்து நிற்கும்.. அதில் பட்டுப் புடவை கட்டி. ஒழுங்காய் நகை போட்டு நில்லு..”
“ஏம்மா.. கல்யாணம்.. எனக்கா.. இல்லை, அண்ணனுக்கா..?”
“உன் அண்ணன் கல்யாணத்தில் உன்னைத்தான் எல்லோரும் பார்ப்பார்கள்..”
“மற்றவர்கள் பார்ப்பதற்காக நான் ஷோகேஸ் பொம்மை போல நடமாட வேண்டுமா..?”
“இப்படிக் குதர்க்கமாகவே பேசிக் கொண்டிருக்காமல் சொன்னதைக் கேள் வாசவி..”
“எனக்குச் சுடிதார்தான் வேணும்..”
“நீ பட்டுச் சேலைதான் கட்டனும்..”
“ஏன்..?”
“சுடிதார் போட்டால் நகை போட்டதே தெரியாதுடி..”
“நகை போடுவது அழகுக்காகத்தான்.. மற்றவர்கள் பார்ப்பதற்காக இல்லை..”
“உன்னைப் போல ஒருத்தியைப் பெற்றுக் கொண்டு நான் படுகிற பாடு இருக்கிறதே.. பெருமாளே..!”
“அடிக்கடி ஏம்மா அவரையே தொந்தரவு பண்ணுகிறீங்க..”
“வேறு யாரிடம் உன்கிட்ட நான் படும் பாட்டைச் சொல்லிப் புலம்புவது..? உன் அப்பா உன்னைப் பற்றி நான் என்ன சொன்னாலும்.. இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுவார்.. உன் அண்ணனோ.. உன் அப்பாவிற்கும் மேலே உனக்குச் செல்லம் கொடுத்துக் கெடுக்கிறான்.. என் குறையை நான் சொன்னால் இவங்க இரண்டு பேரும் காதில் போட்டுக்கிறாங்களா..?”
திலகம் மனத்தாங்கலுடன் புலம்பவே ஆரம்பித்து விட்டாள்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.