Chapter 12
அவனது முகத்தில் தோன்றிய ஆச்சரியக் குறியைக் கண்டதும்.. வாசவி அவசரமாய்ப் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்..
‘அடக் கடவுளே.. நான் அண்ணியைப் பார்த்துக் கண்ணடிப்பதாக நினைத்துக் கொண்டு இவனைப் பார்த்துக் கண்ணடித்து வைத்து விட்டேனே.. இவன் என்னை.. என்னவென்று நினைத்துக் கொள்வான்..’
வாழ்க்கையிலேயே.. முதல் முறையாக வாசவி மனதிற்குள் நாணப்பட்டாள்.. பிறந்ததிலிருந்து.. வெட்கம் என்ற உணர்வை அனுபவித்து அறியாதவள் முதல் முறையாக வெட்கப்பட்டாள்..
திலகம் எதையோ வினவ.. அதற்குப் பதில் சொல்லிக் கொண்டே லேசாகப் பார்வையை ‘அந்த அவனி’ன் பக்கம் செலுத்தியவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது..
‘அந்த அவன்..’ அப்போது அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.. இவளது பார்வையை எதிர்பார்த்தவன் போல அவன் விழிகளில் ஒரு மின்னல் தோன்றியது.. உதடுகளில் இளநகை அரும்பியது..
வாசவி அவசரமாய்ப் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.. அவளது உடல் நடுங்கியது..
‘இது என்ன.. இவன் இப்படிப் பார்த்துத் தொலைக் கிறான்..’
அதன் பின்னால் அவள் சுகந்தியின் பக்கம் திரும்ப முனையாமல்.. கன காரியமாகத் திலகத்திடம் பேசிக் கொண்டிருந்தாள்.. மகள் ஒரு இடத்தில் அமைதியாக நின்று கொண்டு குணசாலியாய்ப் பேசிக் கொண்டிருப் பதைக் கண்ட திலகத்திற்கு வியப்பு மேலிட்டது.
‘என்னடா இது.. நம்ம வீட்டு வாலு.. வாலைச் சுருட்டிக் கொண்டு.. அடங்கி ஒரு இடத்தில் நிற்கிறதே.. அதைவிட அதிசயமாய்.. ரொம்பக் குணசாலியாய்ப் பேச வேறு செய்கிறதே… இது வாயைத் திறந்தால் அணு குண்டுதானே வெளியே வந்து விழும்..’
திலகம் பெற்ற பெண்ணை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.. அதை உணராதவளாக வாசவி.. கடைக் கண்ணால்.. சுகந்தி இருந்த திசைப் பக்கம் பார்த்தாள்.. அவன் இங்கேயேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.. வாசவிக்கு.. அந்த ஏஸி செய்யப்பட்ட ஹாலிலும் வேர்த்து விட்டது..
‘இவன் என்ன என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்..!’ என்று அவளது வெளிமனது எண்ணமிடும் போதே..
‘அப்புறம்.. சும்மா வந்து நின்றவனைப் பார்த்து.. நீ கண்ணடித்து வைத்தால்.. அவன் உன்னையே பார்க்காமல்.. வேறு யாரைப் பார்ப்பான்..?’ என்று அடிமனது இடித்துரைத்தது..
சீக்கிரமாய் அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டால் தேவலை.. என்று அவளது அடிமனதில் பரபரப்பு தோன்றியபோதே.. அனைவரும் ஒரு வழியாய் ஜவுளி எடுத்து முடித்து விட்டு எழுந்து கொண்டனர்..
“வாசவி..” என்று சுகந்தி அழைக்கவும்.. வாசவிக்குத் திக்கென்றது..
‘இந்த அண்ணி வேறு நேரம் காலம் தெரியாமல் இப்போது போய்க் கூப்பிட வேண்டுமா.. அண்ணியைப் பார்த்தால்.. அண்ணியின் பக்கத்தில் நிற்கும் அவனையும் சேர்த்துத்தானே பார்த்தாக வேண்டும்.. என்ன செய்வது..’
சுகந்தி அழைப்பது காதில் விழாததுபோல் வாசவி திலகத்திடம் மும்முரமாய்ப் பேசிக் கொண்டிருக்க.. சுகந்தி மீண்டும் அவளை அழைத்தாள்..
“வாசவி..”
‘தப்பிக்க முடியாது போல இருக்கே..’ வாசவி பதட்டத்துடன் காளிதாஸின் அருகே நகர முயல.. பிரசன்னாவின் கண்டிப்பான குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது..
“வாசவி.. உன் அண்ணி கூப்பிடுகிறாள் பார்..”
‘ம்ஹூம்.. இவனுக்கு வருங்கால மனைவியிடம் பிலிம் காட்ட இது ஒரு சாக்காகக் கிடைத்து விட்டது.. என்னமாய் அதட்டுகிறான்..!’
பல்லைக் கடித்துக் கொண்ட சுகந்தியின் பக்கம்.. அந்த உயர்ந்த மனிதன் தன்னைப் பார்க்கக் கூடாதே என்ற தவிப்புடன் பார்த்தாள் வாசவி..
ஆனால் அவனோ.. ‘உன்னை விட மாட்டேன்..’ என்ற சவாலுடன் அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்..
‘இவனுக்கு மனதில் பெரிய மன்மதன்னு நினைப்பா..? பெரிதாய்க் காதல் கணைகளை வீசிக் கொண்டிருக் கிறானே.. என்னமாய் லுக் விடுகிறான் பார்..’ என்று எரிச்சலுடன் நினைத்துக் கொண்ட வாசவி..
“என்னங்கண்ணி..” என்று மரியாதையுடன் கேட்டாள்..
“இங்கே வா..” என்று சுகந்தி அன்புடன் அழைக்கவும், வாசவி அரண்டு போய் விட்டாள்..
சுகந்தியின் அருகே போனால்.. அவனருகில் போவது போல் ஆகி விடுமே.. இதை எப்படித் தவிர்ப்பது என்று அவள் யோசிக்க ஆரம்பிக்கும் போதே.. அதற்கு இடமே கொடுக்காமல்..
“வா.. வாசவி..” என்று அழுத்தாமாய் மீண்டும் அழைத்து வைத்தாள் சுகந்தி..
அதற்கு மேல் அங்கு நின்றால் மரியாதையாக இருக்காது என்பதால்.. சுகந்தியின் அருகே சென்று நின்றாள் வாசவி..
“அண்ணா.. இவள்தான் என் நாத்தனார் வாசவி..” என்று பெருமையாக அந்த உயர்ந்த மனிதனிடம் சுகந்தி அறிமுகம் வேறு செய்து வைக்கவும்.. வாசவிக்கு உள்ளுக்குள்.. குளிர் காய்ச்சலே வந்து விட்டது..
‘அண்ணனா.. யாருக்கு யார் அண்ணன்..? அண்ணிக்கு அந்தப் பீப்பாய் மட்டும்தானே கூடப் பிறந்த ஒரே உடன் பிறப்பு..? இந்த உயர்ந்த மனிதன் எங்கிருந்து வந்தான்..?’
வாசவி விழித்துக் கொண்டிருக்கும்போதே..
“வாசவி.. இவர்தான் என் பெரியப்பாவின் மகன் சந்தோஷ்.. எனக்கும்.. சுமதிக்கும் அன்பான அண்ணன்..” என்று அறிமுகம் செய்து வைத்தாள் சுகந்தி..
‘ஓ.. கதை அப்படிப் போகிறதா..’ என்ற நினைவுடன் அவனை வேறு வழியின்றி ஏறிட்டுப் பார்த்தாள் வாசவி..
“ஹலோ..” என்றபடி கரம் குவித்தான் அவன்.. விழிகளில் மின்னல்.. இதழ்களில் அதே குறுநகை..
“வணக்கம்..!” என்று பதிலுக்குக் கரம் குவித்த வாசவி.. அவனைப் பார்க்காமல் வேறு திக்கில் பார்த்தாள்..
“பரவாயில்லையே சுகந்தி.. உன் நாத்தனார் மகா புத்திசாலியாக இருக்கிறாங்களே..” அவன் பாராட்டுதலாகக் கூறினான்..
“அது உனக்கும் தெரிந்து விட்டதா அண்ணா..?” என்று மகிழ்ந்து போனாள் சுகந்தி..
“ம்ம்.. அது அப்போதே எனக்குத் தெரிந்து விட்டது..!” என்றபடி வாசவியைப் பார்த்த சந்தோஷின் கண்களில் சிரிப்பு இருந்தது..
அவன் தன்னைப் பார்த்துத்தான் சிரிக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட வாசவியின் முகத்தில் எள்ளும்.. கொள்ளும் வெடித்தது..
‘இவன் பாட்டுக்கு இதை அண்ணியிடமும்.. அந்தப் பீப்பாயிடமும் சொல்லி வைத்தால்.. என் இமேஜ் என்னாவது..?’ வாசவி கவலைக்குள்ளானாள்..
அந்தக் கவலையுடன் அவளிருக்க.. அவனோ அவளைப் பார்த்து நேரடியாய்ப் பேச ஆரம்பித்து விட்டான்.
“என்ன படிக்கறீங்க..?” என்று அவன் ஆரம்பிக்க, வேறு வழியின்றிப் பதில் சொல்லலானாள் வாசவி..
“பி.எஸ்ஸி.. தேர்ட் இயர்..”
“என்ன மேஜர்..”
“கம்ப்யூட்டர் சயின்ஸ்..”
“டிகிரி முடித்ததும் என்ன செய்வதாக உத்தேசம்..?”
‘உனக்கு முதலில் கேள்விகளைக் கேட்பதை நிறுத்தும் உத்தேசம் இருக்கிறதா இல்லையா..’ என்ற எரிச்சலுடன்..
“நிச்சயமாய்க் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் உத்தேசமில்லை..!” என்று சொல்லி விட்டாள்..
அவனது விழிகளில் மீண்டும் மின்னல் தெறித்தது..
“அப்புறம்.. வேறு என்னதான் செய்வதாக உத்தேசம்..?”
“மேலே படிக்கப் போவதாக உத்தேசம்..”
“என்ன படிக்கப் போறீங்க.. எம்.எஸ்ஸி.யா..?”
“இல்லை.. எம்ஸிஏ..”
“ஓ.. எம்ஸிஏ படித்துவிட்டு என்ன செய்யப் போகிறீங்க..?”
“வேலைக்குப் போவேன்..”
“என்ன வேலைக்குப் போவீங்க..”
‘ஊஹூம்.. இவன் இப்போதைக்குப் பேச்சை நிறுத்தவே மாட்டான்..!’ என்ற எரிச்சலுடன்..
“ஏன் சார்.. நீங்கள் என்ன.. என்னைப் பேட்டி எடுக்க வந்திருக்கிறீங்களா..?” என்று கேட்டாள் வாசவி..
அவள் ஏதோ.. உலக மகா ஜோக்கைச் சொல்லி விட்டது போல் சுகந்தி.. கலகலவென்று சிரிக்க.. சந்தர்ப்பம் கிடைத்து விட்ட சந்தோஷத்தில் பிரசன்னாவும் அவளுடன் இணைந்து நகைத்தான்..
அவன் முகம் மாறும் என்ற எதிர்பார்ப்புடன் அவனது முகத்தை ஏறிட்டுப் பார்த்தவளுக்கு ஏமாற்றம்தான் காத்திருந்தது.. அவன் முகம் சிறிது கூட மாறாமல்.. சிரித்துக் கொண்டு இருந்தான்.. வாசவி ஆச்சரியப்பட்டுப் போனாள்..
‘என்னடா இது.. இவன் இதற்கும் அசைய மாட்டேன் என்கிறானே..’
சுகந்தியோ.. வாசவியின் தோள் மேல் கை போட்டு அன்புடன் அணைத்துக் கொண்டு..
“நான் சொன்னபோது நீ நம்பவில்லையே.. இப்போது.. தெரிகின்றதா..?” என்று வினவினாள்..
“அது எப்போதோ தெரிந்து விட்டது..” என்று அவன் வாசவியை ரகசியப் பார்வை பார்த்தபடி கூறினான்..
“என்ன அண்ணி.. நீங்கள் இவரிடம் என்னைப் பற்றி என்ன சொன்னீர்கள்..?” பொறுக்க மாட்டாமல் வாசவி கேட்டாள்..
“அது.. வேறு ஒன்றுமில்லை வாசவி.. என் வுட்பியின் தங்கை ரொம்ப புத்திசாலி.. அவளிடம் வாய் கொடுத்து யாரும் மீண்டு வர முடியாதுன்னு என் அண்ணனிடம் சொன்னேன்.. அவர் நம்பவில்லை.. அதைத்தான் இப்போது நினைவு படுத்தினேன்..!” என்று சுகந்தி சிரித்தாள்..
“ஓஹோ.. இவரிடம் ஏன் என்னைப் பற்றிச் சொன்னீங்க..?”
“கோபமா..? அண்ணன்.. என் வருங்கால மாமனார் வீட்டைப் பற்றி விசாரித்தார்.. நான் விவரம் சொன்னேன்..”
“அடேங்கப்பா.. அவ்வளவு அக்கறையிருக்கிறவர்.. நாங்கள் உங்களைப் பெண் பார்க்க வந்தபோது உங்கள் வீட்டிற்கு வந்திருக்க வேண்டியதுதானே.. முக்கியமான சமயத்தில் ஆஜராகாமல் எங்கே போனாராம்..?”
வாசவி மெலிதான கோபத்துடன் கேட்டாள்.. அவன் அதற்கும் முகம் மாறாமல்.. புன்னகையுடனே அவளைப் பார்த்தான்.. அவனது விழிகளில் ஏதோ இருந்தது.. அது புரியாதவளாய் வாசவி இதயம் படபடக்க.. மீண்டும் அவனைப் பார்த்தாள்…
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.