Chapter 18

0Shares

பிரம்மாண்டமான அந்த ஹோட்டல் வளாகத்திற்குள் கார்கள் வரிசையாக நுழைந்து நின்றன.. ஹோட்டல் வாசலில் முதலில் தனிக் காரிலிருந்து இறங்கிய சந்தோஷ் நின்று.. வாசவியைப் பார்த்தான்..

‘அடேங்கப்பா.. பெரிய மகாராஜா போல் லுக் விடுவதைப் பார்.. இவன்.. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எனக்கு என்ன ஆகப் போகிறதாம்..’

அவள் அலட்சியமாய் அவனுடைய ஹோட்டலைப் பார்த்தபடி இறங்கவும்.. அவன் மனம் மலர்ந்தது… அவள் மட்டும்.. பிரமிப்பாய் அவனை ஒரு பார்வை பார்த்திருந்தால்.. அந்த நிமிடமே அவளுக்கு ‘குட்பை’ சொல்லி விட்டுப் போயிருப்பான் அவன்..

மாறாக அவளுடைய அலட்சியம் அவள் அவனது பணத்தை ஒரு பொருட்டாகவே நினைக்காததைத் தெரியப்படுத்த அவன்.. அவள் மேல் மையலானான்..

காளிதாஸும் திலகாவும்.. ஒரு புறம் அமர.. அவர்களுக்கு எதிரில் மயில்வாகனமும்.. பரிமளமும் அமர்ந்தனர்..

பிரசன்னா.. சுகந்தியின் அருகே அமர.. அவர்களுக்கு எதிரே வந்து அமர்ந்தாள் சுமதி..

“வாசவி.. சுமதியின் பக்கத்தில் உட்காரம்மா..” என்று பரிமளம் ஆதரவாய்க் கூற..

“இந்தப் பீப்பாயின் பக்கத்தில் உட்கார்ந்தால் எனக்குச் சாப்பாடு தொண்டையில் இறங்காது..” என்று பிரசன்னாவின் காதருகே குனிந்து கூறி விட்டு.. பரிமளம் கூறியது காதில் விழாதது போல்.. தனியாகச் சென்று அமர்ந்தாள் வாசவி..

“என்ன சுகந்தி இது.. உன் அக்காவிற்குக் கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாதா..” பிரசன்னா குனிந்து சுகந்தியின் காதோரமாய் முணுமுணுத்தான்..

“நீங்க வாய்விட்டுச் சொல்லிட்டிங்க.. என்னால் சொல்ல முடியவில்லை..” பதிலுக்கு முணுமுணுத்தாள் சுகந்தி..

அவர்கள் இருவரும் குனிந்து பேசிக் கொள்வதைப் பார்த்த சுமதிக்கு உள்ளுக்குள் எரிந்தது..

‘ஒருநாள்.. ஒரு பொழுது.. அந்த மனுசன் என்னிடம் இப்படிக் கொஞ்சிக் குலாவியிருப்பாரா..? ம்ஹூம்.. இந்தச் சுகந்திக்கு.. எல்லாத்திலும் யோகம்தான்..’ என்று மனதிற்குள் குமைந்தாள்..

“சுகந்தி.. இன்னும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகவில்லை.. நினைவிருக்கிறதா..?” என்று கேட்டாள்..

சுகந்தி செய்வது அறியாமல் பிரசன்னாவைப் பார்க்க.. பிரசன்னா.. கைக்கடிகாரத்தில் மணி பார்த்தான்..

“என் வீட்டுக்காரர் கல்யாணம் ஆகி ஒரு வருடம் மத்தவங்க பார்க்கிறபோது என்கிட்ட பேசக்கூட மாட்டார்.. அப்படி.. கட்டு திட்டமாய் இருந்தவங்க நாங்க..”

“ஊஹூம்.. இது தாங்காது..” என்று சுகந்தியின் பக்கம் சரிந்து முணுமுணுத்த பிரசன்னா.. வாசவியின் பக்கம் திரும்பி..

“வாசவி.. வாசவி..” என்று கூப்பிட்டான்..

“என்ன அண்ணா..?”

“இங்கே வா..”

வாசவி.. சுமதியை முறைத்துக் கொண்டே எழுந்து வர.. “நீ சுகந்தியின் அக்கா பக்கத்தில் உட்காரும்மா.. பாவம்..! அவங்களுக்கு கம்பெனி கொடுக்க ஆள் வேண்டாமா..?” என்று கூறினான்..

‘அதற்கு நான்தான் கிடைத்தேனா..’ என்று பார்வையாலேயே.. தமையனை வாசவி எரிக்க.. அவன் சுமதிக்குத் தெரியாமல் கையெடுத்துக் கும்பிட்டு..

‘காப்பாற்று..’ என்று சைகை செய்தான்..

‘ஓ..ஹோ.. அப்படியா சேதி..’ என்று சுமதியைப் பார்த்த வண்ணம் அவளருகில் உட்கார்ந்து கொண்டாள் வாசவி..

சுமதி விட்ட இடத்திலிருந்து பேச ஆரம்பித்தாள்..

“மத்தவங்க முன்னால்.. என் பக்கத்தில்கூட உட்கார மாட்டார்..”

வாசவி.. விசித்திரமாய்ச் சுமதியைப் பார்த்துவிட்டு..

“இவங்க யாரைச் சொல்கிறாங்க அண்ணி..?” என்று வினவினாள்..

“அவளைத்தான் சொல்லிக் கொள்கிறாள்..”

“ஏன் இவங்களோட ஹஸ்பென்ட் இவங்க பக்கத்தில் உட்கார மாட்டாராம்..? இவங்களை அவருக்குப் பிடிக்காதா..?”

வாசவி கேட்ட விதத்தில் சுகந்திக்குச் சிரிப்பு வந்து விட்டது.. பிரசன்னா.. மரியாதையின் பொருட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டு.. முகம் மாறாமல்.. சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.. சுமதியின் முகம் விழுந்து விட்டது..

“ம்ஹூம்.. காலம் ரொம்ப மாறிப் போச்சு..” என்று பெருமூச்சு விட்டாள்..

“பார்த்து.. நீங்கள் விடும் பெருமூச்சில் உங்கள் முன்னால் இருக்கும் தட்டு பறந்து விடப் போகிறது..!” என்று வாசவி கிண்டலடித்தாள்..

அடுத்த அரை மணி நேரமும்.. சுமதியும்.. வாசவியும் வாக்குவாதத்தில் மூழ்க.. சுமதியின் கண்காணிப்பிலிருந்து தப்பிய பிரசன்னாவும்.. சுகந்தியும்.. காதல் கடலில் மூழ்கினார்கள்..

0Shares

Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link