Chapter 22
“அப்போ.. நாங்க கிளம்புகிறோம், சம்பந்தி..”
காளிதாஸ் விடைபெற்றார்.. பிரசன்னா டிரைவர் சீட்டில் உட்கார.. திலகமும்.. வாசவியும் பின் சீட்டில் அமர.. காளிதாஸ் பிரசன்னாவின் அருகே அமர்ந்து கொண்டார்..
“போய் வருகிறேன் அண்ணி..”
வாசவி.. சுகந்தியிடம் கையாட்டியபோது.. சுகந்தியின் பின்னால் நின்று கொண்டிருந்த சந்தோஷ்.. மற்றவர்கள் அறியாமல் வாசவியைப் பார்த்து.. ரகசியமாக.. கண் சிமிட்டினான்..
சுகந்திக்காக அசைத்த கை அப்படியே இருக்க.. வாசவி.. அசைவற்று அமர்ந்து விட்டாள்.. கார் கிளம்பி விட்டது..
‘எவ்வளவு தைரியம்.. சொல்லச் சொல்லக் கேட்காமல்.. திரும்பவும் கண் சிமிட்டுகிறானே..’
வாசவிக்கு மனமே ஆறவில்லை.. அடுத்து வந்த நாட்களில் இருபத்து நான்கு மணி நேரமும்.. விழி சிமிட்டிய அவனது நினைவே.. அவளது மனதில் நின்றது..
பிரசன்னாவின் திருமண நாள் நெருங்கி வந்தது.. திருமண வீட்டின் பரபரப்பு அவளையும் தொற்றிக் கொள்ள.. மெல்ல.. சந்தோஷின் நினைவு அவளை விட்டு அகன்று விட்டது..
உறவினர்களின் வருகையால் வீடே நிறைந்திருக்க வாசவி.. வீட்டிற்குள் ஓடி.. ஆடி.. வேலை செய்து கொண்டிருந்தாள்..
“வாசவி.. மண்டபத்திற்குக் கொண்டு போக வேண்டிய சாமான்களின் லிஸ்ட் எங்கே..”
“இதோம்மா..”
“அண்ணனின் பெட்டியில் அவனுடைய புது டிரெஸ்பட்டு வேட்டி.. சட்டை.. கோட்.. சூட்.. எல்லா வற்றையும் எடுத்து வைத்து விட்டாயா..?”
“ஆச்சு..”
“பெண்ணுக்கு எடுத்த பட்டுப் புடவைகள்.. நகை.. தாலி எல்லாம் எந்தப் பெட்டியில் வைத்திருக்கிறாய்..?”
“அதை என் கையிலிருக்கும் பெட்டியிலேயே வைத்திருக்கிறேன்..”
“என் சமர்த்துக் குட்டி..”
“ஆமாம்.. இன்னும் சர்க்கரைக் கட்டி.. வெல்லக் கட்டின்னு கொஞ்சுங்க.. கல்யாண மண்டபத்திற்குக் கிளம்ப நேரமாகி விட்டது.. இப்படியா.. மசமசன்னு நிற்பீங்க..?”
“நான் ரெடியாகத்தான்டி நிற்கிறேன்.. நீதானே இன்னும் சேலையைக் கட்டிக் கொள்ளாமல் இப்படி அலங்கோலமாக நிற்கிற..”
“ஏம்மா.. இது அலங்கோலமா..? எவ்வளவு அழகான சுடிதார் செட் இது..”
“போய்.. முதலில் சேலையைக் கட்டு..”
“எனக்குத்தான் சேலை கட்டத் தெரியாதே..”
“நான் கட்டி விடுகிறேன்.. வா..”
“தப்பிக்க விடவே மாட்டேன்கறீங்களே..”
வாசவியைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாய் அழைத்துக் கொண்டு போனாள் திலகம்..
சற்று நேரத்தில் அறைக்குள்ளிருந்து வெளியே வந்த வாசவியைப் பார்த்த பிரசன்னா ஆச்சரியப்பட்டுப் போனான்..
“ஏம்மா.. நம்ம வாசவி எங்கேம்மா.. காணோம்..”
“அண்ணா.. வேண்டாம்.. நாளைக்குக் கல்யாணம் ஆகப் போகிற கெத்தில் என்னிடம் வம்புக்கு வராதே..”
“அட.. இது நம்ம வாசவியா.. என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லையே.. பெரியப்பா.. பெரியம்மா.. சித்தி.. சித்தப்பா.. அத்தை.. மாமா.. எல்லோரும் வாங்க.. இது வாசவியாம்.. உங்களில் யாருக்காவது அடையாளம் தெரிகின்றதா..?”
பிரசன்னா அழைத்ததில்.. ஆங்காங்கே நின்று கொண்டிருந்த உறவினர்கள் வீட்டுக்குள் வந்து கூடினார்கள்.. வாசவியைப் பார்த்து முகவாயில் கை வைத்தார்கள்..
“என்னமாய் அழகா இருக்கேடி ராஜாத்தி.. இத்தனை அழகையும்.. இத்தனை நாள் எங்கே ஒளித்து வைத்திருந்தாய்..?” வாசவியின் பெரியம்மா.. அவளின் கன்னம் தொட்டு வழித்து.. திருஷ்டி கழித்தாள்..
அழகாய்.. தழையத் தழையப் பட்டுப் புடவை கட்டி.. தலை முடியைப் பின்னலிட்டு.. அதில் மொட்டாக இருந்த மல்லிகைச் சரத்தை இரு பக்கமும் தோளில் வழியுமாறு வைத்து.. கண்களுக்கு மையும்.. நெற்றியில் கல் பதித்த ஸ்டிக்கர் பொட்டும்… காதுகளில் கல் ஜிமிக்கியும்.. உள்ளங்கழுத்தில் கல் அட்டிகையும்.. கைகளில் கல் பதித்த பொன் வளையல்களுமாக நின்ற வாசவி.. அன்று புதிதாகத்தான் தெரிந்தாள்.. எல்லோரும் விழி விரியத் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த வாசவி வெட்கப் பட்டாள்.. அதுவே.. சந்தோஷ் கண்கள் பளிச்சிட அவளை விழுங்குவது போல் பார்த்தபோது எரிச்சல் பட்டாள்..
‘ம்ஹூம்.. இத்தனை நாள் இவன் நினைவில்லாமல் நிம்மதியாக இருந்தாயிற்று.. இப்போது கல்யாணம் நடந்து முடியும் வரை இவனுடைய பார்வையில் நான் பட்டுத் தொலைப்பேனே.. என் பார்வையில் இவனும் பட்டுத் தொலைப்பானே..’
அவள் முகம் மாறுவதை உணராதவன் போல் அவன் அவளுக்கு மட்டும் புரியும்படியாகக் கண் சிமிட்டினான்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.